அன்றொரு நாள்: டிசம்பர் 28:
‘வர வர கழுதை மாமியாராகி, மறுபடியும் கழுதையாகி’வரும் காதை: சுருக்கம்.
ஆலமரம் ‘ஓஹோ’ என்று வளர்ந்து விட்டது, உயரத்திலும் சரி, பருமனிலும் சரி. ஏகப்பட்ட கிளைகள், விழுதுகள். சில துளிர் விடுகின்றன. சில பட்டுப்போயின. முதுமையின் வாட்டம் தெரிகிறது. அடேயப்பா! எத்தனை ஊடுருவிகள்! மெய்யும் பொய்யும் கலந்த அசட்டு தித்திப்பு அதன் குட்டிப்பழங்களில். வஸந்த ருதுவில் இலை உதிர்கிறது! 1996லிருந்து அசையா அக்ராசனம் அன்னை ஸோனியாவுக்கு. அந்த அளவுக்கு உள்கை ஜனநாயகம் கொடி கட்டி பறக்கிறது. தாதாபாய் நெளரோஜி கூட, யூ,என். தேபர் கூட இப்படி டபிள் மாமாங்க ராஜாங்கம் செய்யவில்லை. மோதிலால் நேரு ஒரு வருடம். அடுத்தும், பிறகும், ஜவஹர்லால் நேரு எட்டு வருடங்கள், இந்திரா காந்தி ஏழு வருடங்கள், ராஜீவ் ஒரு வருடம்: ஒரு ஒப்புமைக்கு! மஹா கனம் பொருந்திய இந்திய நேஷனல் காங்கிரசின் இணைய தளத்துக்கு போனால், ஒரேடியாக தற்கால தற்புகழ்ச்சி. அச்சான்யமாக,நேற்றைய ஹிந்து இதழில் ஒரு சொற்றொடர்; அதுவும் நமது தேசீய கீதமான ;ஜன கண மன...‘வின் நூற்றாண்டு விழாவை பற்றிய கட்டுரையில்: “இந்திய நேஷனல் காங்கிரஸ் என்று இந்த அமைப்பு (‘outfit’!: ஏளனமான சொல்) விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில்...!” (அசல் காங்கிரஸ் கடந்த காலமாயிடுத்தே; அர்த்தஜாமம் ஆயிடுத்தே என்ற தொனி!?ஹே ராம்!).இது நிற்க.
‘அதிகார பூர்வமாக’ என்றொரு சொல் உண்டு. ஆம், இன்று தான் இந்திய நேஷனல் காங்கிஸ்ஸின் ‘அதிகார பூர்வமாக’ ஜன்ம தினம். மும்பையில் 28 12 1885 அன்று, வைஸ்ராய் ரிப்பன் பிரபுவின் நண்பரான ஏ.ஓ.ஹ்யூம் என்ற ஆங்கிலேயர் தலைமையில், அவருடன் தாதாபாய் நெளரோஜி, தின்ஷா மேத்தா, உமேஷ் சந்திர பானர்ஜி, (‘இடி முழக்கம்’)ஸுரேந்திரநாத் பானர்ஜி, மன்மோஹன் கோஷ், மஹாதேவ் கோவிந்த ரானடே, வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோர் அடங்கிய சான்றோர் அவை கூடி இந்திய நேஷனல் காங்கிரஸ் என்ற அமைப்பை துவக்கியது. உமேஷ் சந்திர பானர்ஜி முதல் அக்ராசனர். இந்த அமைப்பு பிரிட்டீஷ் துரைத்தனத்தாரை எதிர்க்கவில்லை. வார்த்தைக்கு வார்த்தை ராஜவிஸ்வாசம். பணிந்து, தணிந்த சொற்பொழிவுகள். எனினும், விடுதலை வேட்கையின் சுவாசம் இருந்தது. 1885ம் வருட காங்கிரஸ், சற்றே அடக்கத்துடன் கற்றுணர்ந்த இந்தியர்களுக்கு அரசாங்கத்தில் பங்கு இருக்கவேண்டும் என்று தான் பிரதான கோரிக்கை வைத்தது.
கட்சியில் இரு தரப்பு உருவாகியது, 1907 சூரத் காங்கிரஸ்ஸில். தலைமை: ராஷ்பிஹாரி கோஷ். ~சூடான தரப்பு (திலகர் கட்சி) & மிருதுபாஷிணிகள்(கோகலே கட்சி).‘செருப்புகள் பறந்தன’ என பொருட்பட மஹாகவி பாரதியாரின் கட்டுரை படித்து 70 வருடங்களானாலும், மறக்கவில்லை. அந்த கட்டுரையை எல்லாரும் படிக்கவேண்டும். விக்கிப்பீடீயா மிருதுபாஷிணிகளை மட்டும் படித்தவர்கள் என்று சொல்வதின் மர்மம் எனக்கு புரியவில்லை. பகவத்கீதைக்கு உரை எழுதியவரும், வீரகேசரி இதழாசிரியரும், ‘சுதந்திரம் என் பிறப்புரிமை’ என்று கோஷமிட்ட லோகமான்ய திலகர் நிரக்ஷரகுக்ஷியா என்ன ஓய்?
காந்தி வந்தார், ஐயா, 1915ல். தென்னாஃப்பிரிக்கா வந்திருந்த கோகலே அவர்களின் சட்டைக்கு பொட்டி போட்ட தொண்டன் காந்தியை, இந்தியாவுக்கு இழுத்து வந்து, நாட்டை சுற்றிப்பார்க்க வைத்த உபயம், கோகலே அவர்களது. அதன் பிறகு அக்ராசனம் யார் வகித்தாலும், காந்திஜி வைத்தது சட்டம் ஆயிற்று. 1924ல் அக்ராசனமும் வகித்தார். ஆனால், அவர் கிலாஃபத் இயக்கத்துடன் இணைந்து திசை மாறியதை கண்டு வெகுண்டு, சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு, அன்னி பெஸண்ட் ஆகியோர் காங்கிரஸ்ஸிலிருந்து ராஜிநாமா செய்து, ஸ்வராஜ் கட்சி ஆரம்பித்தனர். இந்த கிலாஃப்த் உறவும் நொடித்துப்போனது. இதையெல்லாம் லாகவமாக காந்திஜி கையாண்டதையும், அவர் நேதாஜியை அரியணையிலிருந்து இறக்கியதையும், மற்றும் பல சுவையான தகவல்களையும் பிறகு தான் சொல்லவேண்டும். இப்போதைக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் பெருமை/சிறுமை பற்றி ஒரு வரி. ராஜாஜி, திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, ஈ.வே.ரா. போன்றவர்கள், ‘ஆளை விடு சாமி’ என்று ராஜிநாமா செய்து விலகிய மாபெரும் கட்சி, இது. அது போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.
‘அதிகார பூர்வத்தை’ விட ‘ஆதிமூலம்’ முக்கியமானது. இந்திய நேஷனல் காங்கிரஸ் உருவாகுவதற்கு முன்பே, பிரம்மோ சமாஜ், ஆர்ய சமாஜ், பிரம்மஞான சபை (தியசாஃபிகல் சொஸைடி, அடையார்) ஆகியவை தேசாபிமானத்தை வளர்த்து வந்தன. இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸின் ஆதிமூலம் பிரம்மஞான சபை என்றும், அதன் அங்கத்தினர்கள் 17 பேர்கள் டிசம்பர் 1884 வருடம் இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸுக்கு வித்திட்டனர் என்ற கருத்து உலவுதை, திரு.வி.க. அவர்களை பற்றிய ‘அன்றொரு நாள்’ கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அத்தருணம், திருமயிலை முனிபுங்கவர் ‘ஸர்’ உதறிய சுப்ரமண்ய ஐயரை பற்றியும், அவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு மடலெழுதி, மாண்பு மிகு இந்திய சர்க்காரை மடலேற்றியதை பற்றி எழுதியிருந்தேன். இந்த ‘ஆதிமூலக்குழுவின்’ தலைவர் அவர் எனலாம். கணேஷ் வாசுதேவ் ஜோஷி அவர்களையும் மறக்கலாகாது. படித்தறிந்த இந்தியர்கள் பலர் இங்கிலாந்தின் சுதந்திரப்போக்கையும், நியாய நியதிகளையும் போற்றினர்.துரைத்தனத்தாரின் மெத்தனமற்ற போக்கை வரவேற்றனர். ஆனால், ‘இங்கிலாந்தில் சொல்வது ஒன்று, இந்தியாவில் செய்வது அதற்கு முரண்’ என்ற போக்கைக் கண்டித்தனர். ஹிந்து மதத்தின் மறுமலர்ச்சியும், மேற்கூறிய ‘முரண்’ நெருடலும், ஆங்கிலேயர்களில் சிலரின் முற்போக்கு அணுகுமுறையும் தான், இந்திய நேஷனல் காங்கிரஸ் உருவாக ஹேதுவாயின என்றால், அது மிகையல்ல. பிரம்மஞானசபையின் ஈடுபாடு புரியவருகிறது. இத்தனைக்கும் அச்சபை ஆவிகளுடன் உறவாடுதல், ‘மஹாத்மா’ என்ற சொல்லை முதலில் உருவாக்கி, இரு’மஹாத்மாக்களிடம்’ அன்றாட ஆலோசனைகளும், அறிவுரைகளும் பெற்றது, நெருடலான விஷயம் தான். அது பற்றி பேச இது இடமில்லை.
1875லிருந்தே விடுதலை விழிப்புணர்ச்சி தலையெடுத்தது. 1876ம் வருட தர்பாரிலேயே, துல்லிய கதராடை அணிந்திருந்த கணேஷ் வாசுதேவ் ஜோஷி அவர்கள், ‘மஹாராணியிடம் நாங்கள் கேட்பது எல்லாம், உங்களுடைய பிரிட்டீஷ் மக்களுக்கு இருக்கும் அரசியல்/சமூக அந்தஸ்து இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதே...’.என்று கேட்டது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ‘இடிமுழக்கம்’ ஸுரேந்திரநாத் பானர்ஜி ‘கல்கத்தாவின் இந்திய சங்கம்’ 1876ல் அமைத்தார். அதை சார்ந்த இதழாளர் நரேந்திரநாத் ஸென், பிரம்மஞான சபையிலும் அங்கத்தினர். அவர் தான் ஒரு அகில இந்திய அமைப்பு அமைக்க விழைந்தார். அதன் பின்னணி 1884ம் வருடம் சென்னையில் நடந்த பிரும்மஞான சபையின் வருடாந்திர கூட்டம். மற்றொரு அங்கத்தினரான ரகுநாத் ராவ் பிரும்மஞான சபை அரசியல் களத்தில் இறங்கவேண்டும்; சமயம் பற்றிய கவனம் மட்டும் போறாது என்று பிரஸ்தாபித்தார். அந்த கருத்தை அவர் மேலும் எடுத்து செல்ல இயலவில்லை. அவரது இல்லத்தில் மறுபடியும் கூடி, திருவாளர்கள். எஸ்.சுப்ரமண்ய ஐயர், அனந்தாசார்லு, வீரராகவாச்சாரியர், ரகுநாத் ராவ், ஹ்யூம் துரை, நரேந்திர்நாத் ஸென் ஆகியோர் எடுத்த முடிவு தான் இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸின் வித்து என்றும் சொல்லப்படுகிறது. மதராஸ் மஹாஜனசபையும் அங்கு தான் உருவானது. தலைமை வகித்தது திரு. எஸ்.சுப்ரமண்ய ஐயர் என்று எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது. அதற்கான உசாத்துணை கிடைக்கவில்லை. சுருங்கச்சொல்லின், இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸின் மூலஸ்தானம் என்று அடையார் ஆலமரத்திற்கடியில் போர்டு வைத்து விடலாம்!
இன்னம்பூரான்
28 12 2011
உசாத்துணை:
Bevir,M.(2003) Theosophy and the Origins of the Indian National Congress in International Journal of Hindu Studies: Volume 7, Number 1-3, 99-115, DOI: 10.1007/s11407-003-0005-4
No comments:
Post a Comment