அன்றொருநாள்: மார்ச் 5:3
அவளும், அவனும்... :பொழிப்புரை
இவ்விழையின் முதல் பகுதி இலை மறைவாக, காய் மறைவாக அமைந்தது என்றும், இரண்டாம் பகுதி,மறு சாவி தேடும் அளவுக்கு, இலையையும், காயையும் மறைத்து, ‘திக்குத்தெரியாத காட்டில் அலையவிட்டது’ என்றும் வாசகர் கடிதங்கள் கூறுகின்றன. மனம் தளர்ந்து போயிற்று; ஏனெனில் உள்ளது உள்ளபடி அல்லவா எழுதியிருந்தேன்! தமிழ் இலக்கிய மரபுக்கு வழு ஏதும் ஏற்படலாமோ! எனவே, பொழிப்புரை எழுதத் துணிந்தேன்.
அம்பிகாபதியும், அரசிளங்குமரியும் என்று சொன்னவுடன், கம்பராமாயணத்தை கீழே வைத்துவிட்டு, தீட்டிய செவியுடன் நிற்கிறார்கள், கல்லூரி மாணவர்கள் (மாணவிகள் உள்பட). ரோமியோ-ஜூலிய்ட் தெய்வீகக்காதலை பற்றி புரிந்து கொள்ள,அடுத்தாத்து அம்புஜம் ஆங்கிலம் படித்தாள். லைலா மஜ்னு என்றால் எம்.வி.ராஜம்மாவும், டி.ஆர்.மகாலிங்கமும் (1950) நினைவில் வருகிறார்கள். ஆதாமும், ஏவாளும் ‘காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்...’ இருந்ததை விவிலியம் கூறும். எனவே, அவளும் (கே. கெண்டால்) அவனும் (ரெக்ஸ் ஹேரிஸன்) பஞ்சும் பொறியுமாக தழுவிக்கொண்டதில் வியப்பு ஒன்றுமில்லை, அந்த ஸ்டில் ஃபோட்டோ சொல்றமாதிரி.
எருவும், உரமுமின்றி என்ன வேளாண்மை! இலக்கிய மாடங்களும், நந்தவனங்களும் இல்லையினில் சுவை ஏது? அதான் பில்ட்-அப். திறவுகோலில் ஒப்புக்கொண்ட கற்பனைகள். மற்றபடி, பாய்ஸ் கம்பெனி, முத்துலக்ஷ்மி, மோஹன் எல்லாம், கோலிவுட்டாக்கம் செய்யப்பட்ட ஹாலிவிட். உடனே, ஆவணச்சான்றுகளுடன், யூ.ட்யூப் சகிதமாக எதிர் முரசு கொட்டுவார், வாவன்னா.நாவன்னா. இத்தனைக்கும் வடக்கே போய், கிழக்கே திரும்பி, அரசிளங்குமரி பரிணயம் செய்தவர் தான், அவர். சரி. ஹாலிவுட் இல்லெ.இங்க்லீஷ்வுட். போறுமா?
பூடகமாக எழுதறான் என்று சொல்லிவிடப்போகிறார்களோ என்று அஞ்சி சங்க இலக்கிய மரபை பின்பற்றினேன்.
‘... இன்பப்பொருளாகிய காதல் பற்றி நிகழும் அகப்பொருள் ஒழுகலாறுகளைக் கூறுமிடத்துச் சுட்டி ஒருவர் பெயர் கூறாமல்
நானிலத்தில் உள்ள ஆடூஉ மகடூஉ யாவர்க்கும் ஒப்ப எக்காலத்தும் பொருந்துமாறு கூறல் முறைமை என்பது உணர, ‘அவளும், அவனும்’ என அமைத்து அவர்தம் ஒழுகலாற்றிற்குத் துணைமாந்தராக, ஸ்த்ரீ பார்ட் முத்துலக்ஷ்மிகள், மோஹன், அல்லி முதலானோரையும் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’: Cleopatra,‘செந்தமிழ் கலைஞன்’: My Fair Lady (1964),‘இரட்டை நாயனமும், ஒத்தும்’: Fiddlers Three,‘ராஜா ஹரிச்சந்திரா’: The Constant Husband (1955) முதலான அஃறிணைகளையும் இணைத்து அவரவர்க்குரிய இலக்கணங்களையும் ஒளித்தோதினோம்...’ (பயங்கர இடைச்செருகல்:மூலம், பி.கு.வில்.)
க்ளியோபாட்ரா பல தலைகளை கொய்தவள் என்பதால், ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ My Fair Ladyயில் நம்ம ரெக்ஸ் ஒரு பாமரக்கன்னிக்கு மேல்மட்ட ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பார். மேல்மட்ட ஆங்கிலம் செந்தமிழாச்சுதடி,பாங்கிமாரே! Fiddlers Three மூன்று குழலாக்கப்பட்டது. சந்திரமதிக்கு Constant Husband ஹரிச்சந்திரா. அதான்.
இதையெல்லாம் விடுங்கோ. தீராத நோயில், அது தெரியாமல் துடிக்கும், அல்பாயுசு பொண்ணோடெ குடித்தனம் போட்டானே இந்த வாலென்டினோ. அதை பாராட்டத்தானே வேண்டும். தமிழுக்கு இழுக்கில்லா இழை இந்த சேவை என்று கலித்தொகை கட்டியம் கூறும்.
இன்னம்பூரான்
07 03 2012
பி.கு.
“...மேலும் இன்பப்பொருளாகிய காதல் பற்றி நிகழும் அகப்பொருள்
ஒழுகலாறுகளைக் கூறுமிடத்துச் சுட்டி ஒருவர் பெயர் கூறாமல்
நானிலத்தில் உள்ள ஆடூஉ மகடூஉ யாவர்க்கும் ஒப்ப எக்காலத்தும்
பொருந்துமாறு கூறல் முறைமை என்பது உணர அவரைக் கிழவன் கிழத்தி
என அமைத்து அவர்தம் ஒழுகலாற்றிற்குத் துணைமாந்தராகப் பாங்கன்,
தோழி, செவிலி, பரத்தை முதலானோரையும் பார்ப்பார் அறிவர் பாணர்
கூத்தர் பாடினி இளையோர் முதலானோரையும் வகுத்து அவரவர்க்குரிய
இலக்கணங்களையும் விரித்தோதினார்...”
Retrieved with thanks on March 7, 2012 from
No comments:
Post a Comment