அன்றொரு நாள்: நவம்பர் 29
தேசமில்லா நேசம்!
கொச்சினில் இருக்கும் 1568ல் கட்டப்பட்ட யூதர்களின் தேவாலயத்தை பராமரிக்க ஆட்களில்லை, பல குடும்பங்கள் கூண்டோடு இஸ்ரேலுக்கு ஏகியதால். உலகெங்கும் பரவி வாழும் யூதர்களின் இனம் பழமை வாய்ந்தது. ஆற்றலால் ஆளுமையும், ஒதுங்கி/ ஒதுக்கப்பட்டு வாழ்வதல், பலவீனமும் வாய்த்த மெனாரிட்டி. பல நூற்றாண்டுகளாக, ‘இல்லாத நாட்டின்’ மீது அபார பற்று. நவம்பர் 29, 1947ல் ஐ,நா.பொது மன்றம் இயற்றிய தீர்மானம் 181னின் வருகையாக,‘எரெஸ் இஸ்ரேல்’ (The Land of Israel:ஹூப்ரூ: אֶרֶץ יִשְׂרָאֵל ʼÉreṣ Yiśrāʼēl, Eretz Yisrael) எனப்படும் புதியதொரு நாடு உயிர்ப்பிக்கப்பட்டது. உடன் பிறந்தவை பாலஸ்தீனம் என்ற அரேபிய நாடும், ஐநா ஆளுமைக்கு உட்பட்ட நோஞ்சான்: ஜெருசலம் நகராட்சியும். இது ஏவல்.
ஆங்கிலேய கலோனிய ஆட்சிக்கு உட்பட்டு, அரேபியர்கள் வாழ்ந்த பாலஸ்தீனம் என்ற புனித பூமி (யூதர்களுக்கும், கிருத்துவர்களுக்கும், இஸ்லாமியருக்கும்) தான் இடம். ஆனால்,வரலாறு ஒரு குறிப்பிட்ட தினத்தில் துவங்குவதில்லை. மங்கிப்போன எழுத்தில் மறந்தவையும், மறைத்தவையும், நிழலும், நிஜமும், முரணும் இருக்கும். பால்ஃபோர் பிரகடனம் 1917ல் பிரிட்டன் யூதர் நாடு இது என்று சொன்னதும், அதே சமயம் அரேபியர்களுடன் அவர்களின் உரிமைக்குரலுக்கு சம்மதம் தெரிவித்து மடலாடியது முரணா? அல்லது ராஜதந்திரமா? என்ற விவாதம் இன்னும் ஓயவில்லை. ஆக மொத்தம் மத்தியஸ்த வானரமான பிரிட்டீஷ் கலோனிய ஆளுமை நிறுவப்பட்டது. 1922 சர்வ தேச அமைப்பு ( லீக் ஆப் நேஷன்ஸ்) அதை ஏற்றுக்கொண்டது. 1947ல் ஐ,நா.பொது மன்றம் இயற்றிய தீர்மானம் 181னின் படி அது கலைக்கப்படவேண்டும். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். ஆனால், இந்த விஷயத்தில் அபார ஒற்றுமை. இந்தியா அரேபிய நாடுகளுடன் ஈஷிக்கொள்ளும் ‘நன்னடத்தையில்’ இருந்ததால், இந்த தீர்மானத்தை எதிர்த்துக் கேலிக்கு உள்ளானது. ஆனால், யூதரினம் இந்தியாவுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது; விஜயலக்ஷ்மி பண்டிட்டை மிரட்டியது என்ற நேருவின் குற்றச்சாட்டையும் பதிக்கத்தான் வேண்டும். ராஜ தந்திர கலோனிய பிரிட்டன் வாக்களிக்கவில்லை. அத்தனை நடு நிலைமை! அந்த நோஞ்சான் ஜெருசலெம் நகராட்சிக்கும் ஒத்துப்போகவில்லை. இது பொருள்.
மேற்படி தீர்மானம் தேவருலகத்தில் ஜனித்ததோ? என்று ஒரு ஐயம். சிக்கல் மயமான ராஜ தந்திர/மந்திர சூழலில், ஏகப்பட்ட தாதிகள் வலம் வர, பிரசவமான இந்த தீர்மானம் பரம்பரை வைரிகளான யூதர்களும் அரேபியர்களும் ஒரு கூட்டு பொருளியல் திட்டமும், மத உரிமைகளையும், சிறுபான்மை உரிமை பாதுகாப்பு திட்டமும், இணைந்து, ஒருமுகமாக, ஒப்பேற்ற வேண்டும் என்று பிரகடனித்தது! இந்த தீர்மானத்தின் படி பிரிட்டன் ஜாகை காலி செய்த தினம், மே 14/15 1948 நடு நிசி. மே 15 1948 இஸ்ரேல் சுப ஜனனம். இந்த தீர்மானத்தை எதிர்த்த அரேபிய நாடுகள் இஸ்ரேல் மீது அன்றே படையெடுத்தன. இந்த விரோதம் நவம்பர் 19, 2011 வரை ‘அவள் ஒரு தொடர் கதை’யாக நீண்டு வருகிறது. அப்பப்போ அணைத்துக்கொண்டு நோபெல் பரிசு அடிச்சதும் உண்டு.
இது பாதி கதை. இப்பவே அலுத்துப்போயிருக்கும், வாசகர்களுக்கு. அதை மதித்து, பின் பாதிக்கதையை மே 15, 2012 அன்று எழுதலாமா? என்று ரோசனை.
இன்னம்பூரான்
29 11 2011
"The birth of Israel is one of those epoch-making events in history, ...
உசாத்துணை:
No comments:
Post a Comment