அன்றொரு நாள்: நவம்பர் 21
லாசரேஸ்ஸும் குரேஷியும்
அண்ணன் தம்பி சண்டை அண்டை வீட்டுக்காரன் சண்டையானால், காழ்ப்புணர்ச்சிக்குக் கொண்டாட்டம். ராஜாங்கங்கள் போர் புரிந்தாலும், அவர்களுக்கு கீழ்ப்படிந்த ராணுவம் கத்தி வீசி, வேலெறிந்து, தோட்டா பறக்க, அடி தடியில் இறங்கினாலும், மக்களிடையை பகையில்லை. சிப்பாய்களும் மக்களின் உறவினர் தான். என்னை கேட்டால், சாந்தி நிலவவேண்டுமெனில், ராணுவம் தகுதி பெற்ற சமாதான தூதுவர்களை தரக்கூடும். உங்களுக்கு நவம்பர் 21, 1971 அன்று கரீப்பூரில் நடந்த ‘பொய்ரா’ முள்ளுப்பொறுக்கி சண்டையை பற்றி தெரியுமோ? பங்களா தேஷ் பிரசவம் சிஸேரியன்; சிக்கலான சிஸேரியன்; உதிரபோக்கு அதிகம்; எத்தனை தடவை பாசாங்கு இடுப்பு வலி! முக்தி பாஹிணி, பிரசவம் பார்க்க வந்த அத்தைக்காரி மாதிரி. செவிலியவதாரம் இந்தியாவுக்கு. சூத்ரதாரி, இந்திரா காந்தி. முடிஞ்சா, அடுத்த மாதம் அது பற்றி எழுதலாம்!
இந்த முள்ளுப்பொறுக்கி சண்டையின் மகத்துவம், இந்தியா விமானப்படையின் சாகசம்; தக்கதொரு தருணத்தில் தூசிப்படைக்கு கவசமாக இயங்கிய வெள்ளோட்டம். ஸேபர் (sabre) என்றால் பட்டாக்கத்தி. அது பாகிஸ்தான் விமானம். நாட் (gnat) என்றால் சில்வண்டு. அது இந்திய விமானம். கடுமையான டாங்கி போர், தரையில். பாகிஸ்தான் ஆகாயத்துணை கொணர்ந்தது, பட்டொளி வீசி. இந்தியா ‘ஞொய்ங்க்’ என்று தாக்கியது. ‘ஞொய்ங்க்’ வாகை சூடியது.
மணி14 48: சேபர் டைவிங்க். மணி14 53: வண்டுகள் ‘ஞொய்ங்க்’. போர்விமானிகள் பக்ச்சி, மேஸ்ஸே,ஸோரஸ், கணபதி, லாசரேஸ் ஆகியோரின் தாக்குதலை பட்டாக்கத்திகள் தாங்க முடியவில்லை. இரண்டு பாகிஸ்தானிய விமானிகள் சிறைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவரான ஃப்ளைட் லெஃப்டினெண்ட் பர்வேஸ் மேஹ்டி குரேஷி பிற்காலம் பாகிஸ்தானின் விமானப்படை தலைவரானார். அவருடைய விமானத்தை வீழ்த்திய லாசரேஸ் க்ரூப் கேப்டன் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, குன்னூரில் ஒரு கிருத்துவ மையத்தில், தன்னார்வத்தொண்டு செய்து வந்தார். ஏர் மாஷல் குரேஷி 1996ல் தலைமை பதவி பெற்றதுக்கு வாழ்த்து அனுப்ப, அவரும் கனிவுடன், தான் நேரில் பார்த்த, இந்திய விமானப்படையின் சாகசங்களை வானளாவ புகழ்ந்து பதில் அனுப்பினார். அது கண்டு என் நினைவுக்கு வந்தது ‘அன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971‘. அதிலிருந்து ஒரு பகுதி:
‘...பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர்: ஐயா! எப்படி சொல்வேன்? விதி விளையாடுகிறது! நாமோ அன்யோன்யாமாகிவிட்டோம். சொல்லமுடியாமல் என் நெஞ்சு அடைக்கிறது. அருண் மாவீரன். அன்று (டிசம்பர் 15, 1971) தன்னுடைய டாங்கியுடன், அச்சம் தவிர்த்து, ஆவேசம் மூண்டு, இம்மை மறந்து, ஈட்டி போல் பாய்ந்து, எங்கள் படைகளை அதகளமாக்கினான். இருபக்கமும் பயங்கர உயிர்ச்சேதம். தளவாடங்கள் நொறுங்ககிக்கிடந்தன. நாங்கள் இருவர் மட்டும். எதிரும் புதிருமாக. பகையாளி. ஒரே க்ஷணத்தில் இருவரும் சுட்டோம். நான் இருக்கிறேன். அதான் பார்க்கிறீர்களே.
இது உரையாடலோ? உருக்கமான இரங்கலோ? அது பற்றி பேச நான் தயாராக இல்லை. பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரின் வீடு, ஜனங்கள், ஏன் ஜன்னல்கள்!, பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலின் மனோநிலை (‘பரம வீர் சக்ரா’ ஷஹீத் அருண் க்ஷேத்ரபால் (21) அவர்களின் தந்தை என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா?, இந்தியனே!) எல்லாமே ஒரு ஒளிவட்டத்தில், ஒரு சூன்யத்தில். இதை விலாவாரியாக விமரிசிக்க மானிட ஜன்மங்களால் இயலாது. அவரவருக்கு, அவரவர் கற்பனாசக்தி, மனோதர்மம்!...’
நான் சொல்ல மேலே என்ன இருக்கிறது?
இன்னம்பூரான்
21 11 2011
... border in the Battle of Garibpur, and hostilities commenced.
உசாத்துணை:
No comments:
Post a Comment