அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!
தலைப்பின் பெண்ணியம் தலை நிமிர்ந்தது; துணிச்சல் மிகுந்தது; அஞ்சாநெஞ்சத்தின் உறைவிடம்; ஒளி படைத்த கண்ணினாள்; துள்ளி வரும் வேலாக, பகையை அள்ளி, அலக்கழித்து விளையாடும் பெண்ணியம் எனலாம். ‘ஆணவம்’ என்ற சொல் ஆண்பாலின் ஏகபோக உரிமை என்றால், கோல்டா மீயர் (இஸ்ரேல்), இந்திரா காந்தி (இந்தியா), மார்கரெட் தாச்சார் (பிரிட்டன்) ஆகிய அல்லி ராணிகள், ஆண்மக்களே, முபாரக் அலி சொன்ன மாதிரி. யார் அந்த முபாரக் அலி?
நவம்பர் 19, 1917 அன்று பிறந்த ஸ்திரீ பிரஜையை, அவளுடைய ‘தலை நிமிர்ந்த’ பாட்டியே சூள் கொட்டித்தான், அரைமனதுடன், வரவேற்றாளாம். அந்த மாளிகையின் முதிய மாஜி ஊழியர் முபாரக் அலியிடம், வழக்கம் போல், எடுத்துச்சென்றால், அவர் குழவியை ஆணாக பாவித்து ‘சுபிக்ஷம் உண்டாகட்டும்’ என்று ஆசி வழங்குகிறார், சொன்னதை காதில் போட்டுக்கொள்ளாமல். இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்தி அவர்களை பற்றி நேற்றைய (18 11 2011) எகனாமிக்ஸ் டைம்ஸ் இவ்வாறு கட்டியம் கூறுகிறது. இன்று எதிர்க்கட்சியும் புஷ்பாஞ்சலி செய்கிறது. தீர்க்க தரிசி தான் அந்த முபாரக் அலி, பத்தாம் பசலியாக இருந்தாலும்.
இந்த கட்டுரைக்கான ஆய்வில் பல மணி நேரம் வீணாயின, எனக்கு. கட்டுரைத்தலைவியை பற்றி அதிகம் கிடைத்தவை: பொய் மிகு மெய் கீர்த்திகள் & பொய் மிகு பொய் அபகீர்த்திகள். அது போகட்டும். மோதிலால் நேருவின் செல்ல பேத்தி இந்திரா பிரியதர்ஷிணி தனக்கே இழைத்துக்கொண்ட அநீதி: எமெர்ஜென்சி. எடுத்தவுடன் அது தான் பேச்சு, வாதம், விவாதம், விதண்டாவாதம், நிந்தனை. அவருடைய மற்ற சிறந்த பணிகள் மறக்கடிக்கப்படுகின்றன. அதை பற்றி நான் சொல்ல வேண்டியதெல்லாம், ‘அன்றொரு நாள்’ தொகுப்பில், ஜூன் 25 & 26 ஏற்கனவே சொல்லி விட்டேன். இங்கு அது பற்றி பேசப்போவதில்லை. ‘மின் வேலி’ என்ற கட்டுரையில் நான் எழுதியதிலிருந்து ஒரு துளி மட்டும் இங்கே.
“...இந்திரா காந்தியின் கொடுப்பினை: பாலப்பருவத்திலேயே அரசிலயர்களின் அவலக்ஷணத்தை கண்கூடாகப் பார்க்கும் தருணங்கள்; பலரின் தனிமொழிகளையும், உரையாடல்களையும், தள்ளி நின்று கேட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்; அவர்கள் சொல்வதை செய்யாததையும், செய்ததை சொல்லாததையும் வைத்து அவர்களை எடை போடும் வாய்ப்பு. தாயை சிறுவயதில் இழந்த அபலையான இந்திராவின் தந்தையோ அரசியலில் மும்முரம்; பெண்ணுக்கு தனிமை தான் துணை. சிந்தனையும், சூழ்ச்சி செய்யும் திறனும் இந்திராவுக்கு வலுத்தன. கண்ணசைகளையும், சங்கேதங்களையும், நுட்பங்களையும் இனம் காணுவதில் பெண்ணினம் இணையற்றது. அந்த குணாதிசயம் இந்திராவுக்குக் கை கொடுத்தது. கூடப்பிறந்த பிடிவாதமும், துணிச்சலும், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட கை வந்த கலைகளும், ஆணினத்தை அடி பணிய வைத்தன. தேவ்காந்த் பரூவா என்ற அசடு ‘இந்திரா தான் இந்தியா’ என்று எக்காளமிட்டது. பாபு ஜகஜீவன் ராமே அச்சத்தில், என்கிறார், குல்தீப் நய்யார். ஓடோடி வந்து உடுக்கு அடித்தனர், சித்தார்த் ஷங்கர் ராயும், வித்யா சரண் சுக்லாவும். பூம் பூம் மாடு, ஓம் மேஹ்தா. ஜக் மோஹன் போன்ற அதிகாரவர்க்கம் தலை வணங்கிற்று. ஜனாதிபதி ஃபக்ருத்தீன் அகமது அடித்துப் பிடித்துக்கொண்டு கையொப்பமிட்டார். (அந்த கெஜட் பிரதி ஒன்று என்னிடம் உளது.) தடாலடிக்கு பிள்ளாண்டான் சஞ்சய்யும் அவனது கூஜாக்களும். இந்த ஆணடக்கம் பெரிய சாதனை. இந்திராவின் வாழ்க்கைப்பாடங்களும், குணாதிசயங்களும் ஒருசேர, வரலாற்றில் வேறெங்கும் புலப்படவில்லை. இந்த 1975 ~1977 இந்திய எமெர்ஜென்சிக்கு வித்து, உரம், பாசனம், வேளாண்மை எல்லாம் இந்திரா காந்தி அவர்களின் பின்னணி என்பது என் கருத்து...”
நான் அவரை முதலில் பார்த்தது 1962/63. குடியரசு தின ஜனாதிபதியின் தேனீர் விருந்தில். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பலவருடங்களுக்கு பிறகு அமெரிக்க அதிபர் நிக்சனுடன் ஒரு புகைப்படம். நிஜமா சொல்றேன். மாமியாரிடம் அஞ்சும் மருமகப்பெண் போல நிக்ஸனார். அம்மையோ லண்டன் எகானமிஸ்ட் வரைந்த காளிப்படம் போல, சீற்றமான முகத்துடன், அதில் ஒரு புன்முறுவலுடன் . நிக்சனும், அவருடைய சகுனி கிஸ்ஸிங்கரும், திரைக்கு பின்னே வசை பாடுகின்றனர்.தந்தைக்கும் அருமந்த புத்திரிக்கும் ஒரு வித்தியாசம். முக்கியமான பொறுப்புகளில், முழுதும் பொருந்தாதவர்களை, அமர்த்திவிட்டு திண்டாடிய நல்ல மனிதர், நேரு. ~ சர்தார் கே.எம். பணிக்கர் ஒரு உதாரணம். உரிய நேரத்தில் சர்தார் படேல் எச்சரித்தார். நேரு கேட்கவில்லை. அசடோ, சமத்தோ, ஜகதல பிரதாபனோ, அபூர்வ சிந்தாமணியோ, அதற்கதற்கு ஆளை பொறுக்குவதில், அம்மணி நிகரற்றவரே. காமராஜரும், மொரார்ஜி தேசாயும் லகுவாக உதறப்பட்டனர்.
இந்த தீன் தேவிகளை சீனியாரட்டிப்படி ஒருகண் பார்த்து விடுவோம்.1898ல் பிறந்த கோல்டா மீயர் ஒப்பற்ற பிரதமர். இஸ்ரேல் பிறக்கும் முன்னரே தேசாபிமானத்தின் உருவகம், அன்னை கோல்டா மீயர். தன்னினம் ஈவிரக்கம் நாடலாகாது என்பதில் தீவிரமாக இருந்தார். ஏழு மிலியன் டாலர் நிதியுதவி புரட்டமுடியாத இடத்தில் 50 மிலியன் திரட்டினார். மூஞ்சியில் அடித்த மாதிரி பேசும் கறார் குணம். இஸ்ரேல் உருவாக்கத்துக்கு நான்கு நாட்கள் முன்னால், மாறுவேடத்தில் சென்று அப்துல்லா மன்னரிடம், ‘எம்மை எதிர்க்கவேண்டாமே’ என்று வேண்டுகோள் விடுவிக்க, அவரும் ‘அவசரப்படேல்’ என்றார், ஏதோ ஞானியை போல. பதில்: ‘அவசரமா? நாங்கள் இரண்டாயிரம் வருடம் காத்திருக்கிறோமே.’ ஒரே வார்த்தையில் கோல்டாமீயரின் புருஷலக்ஷணம். ம்யூனிச் நகர படுகொலை பற்றி, ‘அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 5’ இழையில் எழுதியிருந்தேன். கோல்டா மீயர் எதிர்ப்பார்த்த அளவுக்கு சர்வ தேச ஆதரவு கிட்டவில்லை. அந்த கொலைகாரர்களை இருபது வருடங்களாகத் தேடி பிடித்து ஒழித்து விட ஆணை பிறப்பித்து, அதை செய்து காட்டியது கோல்டா மீயர். தேவி நம்பர் 1.
இந்திய பிரதமர் இந்திரா காந்தி நம்பர் 2 சீனியாரிட்டியில். பல விஷயங்களில் நம்பர் 1. அவருடைய குணாதிசயங்களை புரிந்து கொள்ள, சில் மேற்கோட்கள்:
~ என் தந்தை ராஜாங்கம் ஆளுபவர்; நான் அரசியல் வாதி பெண். அவர் ஒரு ஸைண்ட். நான் அப்படியில்லை.
~ நான் செய்வதெல்லாம் அரசியல் விளையாட்டுக்கள். ஜோன் ஆஃப் ஆர்க் மாதிரி நான் அவ்வப்பொழுது பலிகடா ஆகிறேன்.
~ என் தாத்தா சொல்லுவார்: உழைப்பவர்கள் ஒரு இனம்; பேர் தட்டிச் செல்பவர் மற்றொரு இனம். முதல் இனத்தில் சேரு. போட்டி கம்மி.
உங்களுக்குத் தெரியாதது என்ன எனக்கு தெரிந்து இருக்கப்போகிறது? இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் அவரது புகழை நிலை நாட்டுகிறது. அதனுடைய முதல் துணை வேந்தர் டாக்டர் ராமி ரெட்டி எனது நண்பர். அடிக்கடி அந்த நிறுவனத்துக்காக, அவருடன் அநாமதேயமாக உழைத்தது உண்டு. அப்படி வேலை வாங்குவது இந்திரா காந்தி ஸ்டைல். டாக்டர் ராமி ரெட்டியை, தீவிர ஆய்வுக்குப் பிறகு தேர்ந்தெடுத்த பிரதமர் இந்திரா காந்தி சொன்னது, ‘உம்மை இங்கு அமர்த்தியதுடன் என் வேலை முடிந்தது. இனி வெற்றியோ தோல்வியோ,உம் கையில். யாரும் குறுக்கிடமாட்டோம்.’
இனி தேவி நம்பர் 3: 1925 ல் பிறந்த மார்கெரட் தேட்சர். இங்கிலாந்தின் பிரதமர் 1979 -1990. கன்செர்வேட்டிவ். அவரது ஆட்சி பல விதங்களில் ஒரு எதிர்நீச்சல். விலாவாரியாக பேச இது இடமில்லை. ஆனால், இரண்டு விஷயங்கள். 1. அவருக்கு இந்திரா காந்தி மாடல் எனலாம். 2. குடிசை மாற்று வாரியம் போல், இங்கிலாந்தில் முனிசிபாலிட்டிகளுக்கு சொந்தமான மலிவு குடியிருப்புகளில் ஏழை பாழை வாழ்வார்கள். அவற்றை பாதி விலைக்கு அவர்களுக்கு விற்கப்போவதாக இன்று (19 11 2011) அறிவிப்பு. இதற்கு நன்றி மார்கெரெட் தாட்சருக்கு சொல்ல வேண்டும்.
அதே போல், நாமும் இந்திரா பிரதர்ஷிணி காந்திக்கு பல விஷயங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். பல விஷயங்களை நினைத்து திருந்தவும் வேண்டும்.
இன்னம்பூரான்
19 11 2011
உசாத்துணை:
18 NOV, 2011, 12.10PM IST, IANS
No comments:
Post a Comment