அன்றொரு நாள்: நவம்பர் 14:
வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!
ஜவஹர்லால் நேரு (14 11 1889 ~27 05 1964)
விடுதலை வீரர். மஹாத்மா காந்தியின் அரசியல் வாரிசு. இந்தியாவின் நீண்டகால முதல் பிரதமர். குழந்தைகளின் நண்பர். இன்று குழந்தைகள் தினமாக விழா எடுப்பது முற்றிலும் பொருத்தமே. குமரியிலிருந்து லடாக் வரை, மேற்குக்கோடி ‘ரன் ஆஃப் கட்ச்’ லிருந்து கிழக்குக்கோடி24 பர்காணா வரை பெரும்பாலான இந்திய குடும்பங்கள் இவரை உறவினராகப் பாவித்தன. அவரை பற்றி எதை எழுதுவது? எதை விடுவது? எது தான் உங்களுக்கு தெரியாதது! அக்காலம் அறியா தற்காலத்தவர்கள் சிலர் அவரை கடுமையாக விமரிசிப்பது உண்டு. ஒரு காலகட்டத்தில் இதழியல் மேதை ராமானந்த சட்டர்ஜி ( அவர் மூன்று தலைமுறைகளின் விழிப்புணர்ச்சியை உரம் போட்டு வளர்த்தவர்) பிரசுரித்த மாடர்ன் ரிவ்யூவில் நேருவை கண்டிக்கும் போக்கில் ஒரு கட்டுரை வந்தது; ஒரே எதிர்ப்பு. பிறகு தான் தெரியவந்தது, அது அவரே எழுதியது என்று. அந்த நேரு தற்கால விமர்சனங்களை, அவை உரிமை பிரகடனங்கள் என்று அனுமதித்து விடுவார்.
மனதில் இத்தருணம் தோன்றும் சில நினைவுகளை மட்டும் அசை போடுகிறேன்.
என்றோ படித்தது: ஜவஹர் கல்யாணத்திற்கு, அலஹாபாதிலிருந்து ஒரு பிரத்யேக ரயில் வண்டியில் மாப்பிள்ளை வீட்டார் டில்லி சென்றார்கள் என்று.
மெளண்ட்பேட்டனிடம் நேருஜி அமைச்சர்கள் பட்டியல் இருந்த கவரை கொடுத்தார். பிரித்தால் வெத்துப்பேப்பர்! அத்தனை நெருக்கடி. ஞாபகமறதி. இந்த மாதிரி 500 பக்கங்கள் எழுதலாம், இன்றே.
அப்பா சொன்னது: மோதிலால் நேருவின் மாளிகை ‘ஸ்வராஜ்பவன்’ அவரால் ஒரே மகன் ஜவஹர் பேரில் கிரயம் செய்யப்படுகிறது. மகனாக அல்ல. காங்கிரஸ் கட்சியின் அக்ராசனராக.
பார்த்தது: நான் நேருஜியை ஆவடி காங்கிரஸ்ஸில் முதல் முறையாக பார்த்தேன். ஜன வெள்ளம். ஜிப்பா ஜேபியில் இருந்த மூக்குக்கண்ணாடியை தேடி, அமர்க்களப்படுத்தி விட்டு, அது கிடைத்தவுடன் அவர் சிரித்த அசட்டுச்சிரிப்பின் வசீகரம் அபரிமிதம், போங்கள்!. பிறகு, 1961-2 என்று ஞாபகம். ஆம். சொன்னதை எல்லாம் மறுபடியும் சொல்கிறேனோ? வயசு ஆயிடுத்தோல்லியோ! மின் தமிழில் புதியவர் வருகையும் உளது. சித்தரஞ்சன் ரயில் இஞ்சின் தொழிற்சாலைக்கு வந்திருந்தார். தேனீர் விருந்தின் போது என் மகனை தூக்கிவைத்துக்கொண்டார். இருவரும் ஒரே சமோசாவை சுவைத்தனர். இரவு விருந்தில் ரொம்பவும் சகஜமாகப் பழகினார். அப்பாவும் பொண்ணுமாக, அவரும் வஸந்தாவும் பேசி மகிழ்ந்தனர். என் கையில் கட்டு. கேலி செய்தார். மறு நாள், அசன்சால் ரயில் நிலையத்தில், வரும் ரயில் வண்டியில், கதவைத் திறந்து கொண்டு நிற்கிறார்! செக்யூரிடியாவது! மண்ணாங்கட்டியாவது! ஒரே ஆரவாரம். மக்களுக்கு அவர் வண்ணாத்தி. அவருக்கு மக்கள் வண்ணன். அப்படி ஒரு ஆசை.
அடுத்த வருடமே, அவர் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் எனக்குப் பணி. அடிக்கடி தரிசனம் கிடைக்கும். வழி விட்டு, நமஸ்தே சொன்னால், அவரும் பதில் மரியாதை தெரிவிப்பார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக பார்த்துக்கொண்டபோது, அவருடைய சிவந்த முகம், கருப்பாக, குழம்பிக்கிடந்தது. அத்வானத்தைப்பார்த்து நடந்தார். மரியாதையுடன் தள்ளி நின்ற நாங்கள் யாருமே அவர் கண்ணில் படவில்லை. பிறகு தான் தெரிந்தது, ராணுவ அமைச்சர் வீ.கே.கிருஷ்ணமேனனிடன் ராஜிநாமா கடிதம் வாங்கச்சென்றார், என்று. வீ.கே.க. அவருடைய நண்பர். சைனா யுத்தம் உச்சகட்டம். யாருக்கும் வீ.கே.கே. மீது நம்பிக்கை இல்லை. இருந்தும், பண்புடன் நண்பரை நடத்தினார், பிரதமர்.
எனக்கோ பார்லிமெண்ட் ட்யூட்டி. ஓடினேன். ஒய்.பி.சவான் புதிய ராணுவ அமைச்சர் என்று பிரதமர் அறிவித்தவுடன் கரகோஷம் வானை பிளந்தது. அருகில் இருந்தேனா! அவருடைய அகத்தில் மகிழ்ச்சி இருந்ததாக, முகத்தில் தெரியவில்லை. குடியரசு தினவிழா. சைனா யுத்தம். உச்சகட்டம். பிரதமரின் தலைமையில் ராஜ்பத் ராஜபாட்டையில் நடை ஊர்வலம். இப்படியெல்லாம் தற்காலத்தலைமுறையால் கற்பனை கூட செய்யமுடியாது. ஜான் லால் ஐ.சி.எஸ். தலைமையில் ஒரு இருவர் குழு, பிரதமரை அடை காத்து, மேடைக்கு அழைத்து வர. அடியேன் இரண்டாமவன். அந்தக்காலத்தில் தடால் புடால் ஏற்பாடுகள் கிடையாது. துணியாய் துவண்டு வந்து சேர்ந்தார், நேருஜி. கவலையுடன் டாக்டர்கள். அவருடைய பழைய கேடிலக் காரில் ஏற்றி செல்ல வேண்டும் என்று திட்டம். அது வசமாக கேட்டுக்கதவில் சிக்கிக்கொண்டது. ஏதோ குருட்டு அதிர்ஷ்டம், என் வசம் ஒரு ஜீப் ரகஸ்யமாக இருந்தது. காரிலிருந்து இறக்கி, இவரை ஜீப்பில் ஏற்றிக்கொள்வதற்குள் அவசரம். ஜனாதிபதியின் சாரட் மேடையை நெருங்கிவிட்டது. பிரதமர் அவரை வரவேற்கவேண்டும். கைபேசியாவது, கால் பேசியாவது! எப்படியோ சங்கேதம் செய்து சாரட் புரவிகளை சற்றே தாமதப்படுத்தினோம். ஜீப்பில் ஏறியவுடன் புன்முறுவல். களைத்த புன்முறுவல். அந்தக்காலத்து அதிகாரிகளின் பண்பு போற்றத்தக்கது. திரு.ஜான் லால் என்னை அறிமுகப்படுத்தி, ஜீப் ரகசியத்தை உடைத்தார். ‘ஹோஷியார் லட்கா ஹை’ என்றார், நேருஜி. எனக்கு உச்சி குளிர்ந்தது.
பிறகு ஒரு நாள், நேருஜி மீது திரு.ராம் மனோஹர் லோஹியா நம்பிக்கையில்லா தீர்மானம் கொணர்ந்தார். உத்தியோகஸ்தர் வரிசையில் எக்கச்சக்ககூட்டம். முண்டியடித்துக்கொண்டு , ஒத்தைக்கால் தவத்தில் நின்று குறிப்பு எடுத்தேன். கடுமையான தாக்குதல். லோஹியாவும் நேருவும், விடுதலைப்போரில் தோளுக்குத் தோள் கொடுத்த நண்பர்கள். லோஹியா வீசிய கடுஞ்சொற்களின் சூடு தகித்தது. நேருவின் முகத்தில் உணர்ச்சி கொப்பளித்தது. ஆனால், பாருங்கள். தேதி/தொடர்பு நினைவில் இல்லை. லோஹியா சிறையில். ஜன்ம தினம். ஒரு கூடை அல்ஃபான்சா மாம்பழம். அனுப்பியது, அவரை சிறையிலிட்ட நேருஜி.
ஒரு நாள் வசமாக மாட்டிக்கொண்டோம். ஒரு ஆவணத்தில், வரிசையாக, மூன்று ஸெளந்தரராஜன்கள்! பிரதமரின் வியங்கோள் வினா: Who are these Soundararajans?. எங்கள் உயரதிகாரி ஹரீஷ் ஸரீன் ஐ.சி.எஸ் அவர்கள் பிரதமரிடம் நல்ல பரிச்சியம் உள்ளவர். அவர் ஒரு நாள், ஏதோ ஒரு பிரமேயமாக, இவர்கள் தான் அந்த திரிமூர்த்திகள் என்று சொல்லி வைத்தார். கொள்ளை சிரிப்பு.
நான் 1964ல் மாற்றல் செய்யப்பட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டேன். 25 வருடங்கள் கழித்து நேருபூமியான அலஹாபாத்தில் வேலை. அக்காலம் ஸ்வராஜ் பவனில் ஏலம். நேருஜியின் உடைமைகள் சில ஏலம் போடப்பட்டன. எனக்குக் கட்டுப்படியாகாத விலையில் போன அங்கவஸ்திரம் ஒன்றை அலுவலக செலவில், முறையான விதிகள் படி, வாங்கி, கண்ணாடி போட்டு வைத்தேன். என் செலவில் ஒரு கம்பிளைச்சால்வை வாங்கிக்கொண்டேன். இப்போது நல்ல குளிர், இங்கே. போத்திக்கொண்டு இருக்கிறேன், இப்போது.
இன்னம்பூரான்
14 11 2011
No comments:
Post a Comment