அன்றொரு நாள்: நவம்பர் 22
கொலை வழக்கில் குடை மர்மம்!
பட்டபகலில் நடு ரோட்டில் படுகொலை! சுட்டது யாரு? அவனையும் சுட்டது யாரு? முதல் கொலையை படம் பிடித்தது யாரு? கொலைக்களத்தில் குடை பிடித்து நிற்பது யாரு? நேற்றைய ந்யூ யார்க் டைம்ஸில் கேள்வி, சம்பவம் நடந்து 48 வருடங்கள் ஆன பிறகும்! ஆம். நவம்பர் 22,1963 அன்று அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னெடி டல்லஸ் நகரில், ஊர்வலம் வரும்போது இப்படி கொல்லப்பட்டார். மர்மம் நீடிக்கிறது. விடை காணா வினாக்கள். கணக்கற்ற வாதங்கள்.
ந்யூ யார்க் டைம்ஸில் சொன்ன மாதிரி நிஜம் என்பது சிக்கலான சமாச்சாரம். அதை கொஞ்சம் பார்ப்போம்.
சுட்டது லீ ஹார்வெர்ட் ஆஸ்வால்ட். அவனை சுட்டது ஜாக் ரூபி. தற்செயலாக ஃபிலிம் (26.6 விநாடி) பிடித்தது அப்ரஹாம் ஸேப்ரூடர். அது முக்கிய சாக்ஷியம் ஆனது. அதற்கு தீர்க்க ஆய்வுக்கு பிறகு கொடுத்த விலை 16 மிலியன் டாலர். விசாரணை செய்த வாரன் கமிஷன் (1963-64) இரு கொலையாளிகளும் தன்னிச்சையாக செயல்பட்டனர்; சூழ்ச்சி யாதும் இல்லை என்றது. முதலில் மக்கள் நம்பினார்கள்; நாளடைவில் வினா எழுப்பினார்கள், நம்பிக்கையிழந்து. இது எதிர்ப்பார்த்த விளைவு தான். தலைமை நீதிபதி வாரன் தலைமையில் அமைக்கப்படும் இந்த கமிஷன் ‘கிணறு வெட்டி பூதத்தை’ கிளப்புமோ என்று உயர் அதிகாரிகள் கவலைப்பட்டார்கள். ஆக மொத்தம், 1979ல் அமெரிக்க நாடாளுமன்ற உயர்நிலை கமிட்டி (HSCA) ஒன்று மறு விசாரணை நடத்தியது. சூழ்ச்சி தான் என்று அது கூறியது. யார் செய்த சூழ்ச்சி என்று சொல்ல இயலவில்லை, அந்த கமிட்டிக்கு. இத்தனைக்கும்,நேரில் பார்த்த சாக்ஷிகளுக்கு பஞ்சமில்லை. எல்லாரும் வி.ஐ.பி. வேண்டப்பட்டவர்கள். பாதுகாப்புத்துறை திட்டமிட்ட பாதை. சேப்ருடர் ஃபில்மோ நடந்ததை காட்டியது. இன்று வரை குடை பிடித்து நின்றவன் யாரு என்று தெரியவில்லை. கிட்ட்த்தட்ட பெரும்பாலான ஆவணங்கள், பொது மன்றத்தில். எனினும் 2017 வரை சில ஆவணங்கள் ரகசியம். பார்க்கலாம். 2017க்கு பிறகு மர்மம் தீருகிறதா என்று.
அந்தக்காலம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. வில்லியம் மான்செஸ்டர் என்பவர், கென்னடி குடும்ப அனுமதியுடன், ஆய்வு பல செய்து, பஞ்சாயத்து பல நடந்த பின், ஆய்விறக்கமும் செய்து எழுதிய நூல் தான் எங்களுக்கு எஃப்.ஐ.ஆர். அதிபரை ஆஸ்பத்திரி எடுத்து சென்றதும், அவரது அகால மரணம் சுற்றியிருந்தோரையும், அமெரிக்க மக்களையும் படுத்திய பாடும், கத்தோலிக்கரான அவருக்கு கர்ணமந்திரம் ஓதியதும், இரக்கத்தின் உருவகமான புரவிகள் இழுத்து சென்ற சவ ஊர்வலமும், அவருடைய மூன்று வயது பையன் ஜான் ஜான் தந்தைக்கு சலாம் வைத்த காட்சியும், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதும் உருக்கமான காட்சிகள். முதல் முதலாக இந்த செய்தியை அறிவித்த ரேடியோ நிருபர் அழுதார். உளறினார். அவரால் பேச இயலவில்லை. நமது பிரதமர் நேருவின் இறுதி ஊர்வலத்தின் போது அகில இந்திய ரேடியோவின் டிசூஸா மனம் கலங்கிய மாதிரி.
ஆம். நாங்களும் இரங்கல் தெரிவித்தோம். நான் டில்லியில் இருக்கும் அமெரிக்கன் தூதரகத்துக்கு இருமுறை சென்றிருக்கிறேன். ஒரு முறை அமெரிக்க தூதரும், சான்றோனும் ஆன ஜான் கென்னெத் கால்ப்ரைத் என் நான்கு வயது பையனுக்கு பேட்டி அளித்த போது, அவனுடைய காரோட்டியாக! அது வேறு கதை. மற்றொரு முறை அதிபர் கென்னடி மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து கையொப்பமிட, குறித்த நாளில், நானும், வஸந்தாவும் சென்றபோது, ஒரு பெரியவருக்கு வழி விட்டு, தள்ளி நின்றோம். அவர் தான் ராஜாஜி. சிறிது நேரம் முன்னால், நேரு வந்திருந்தார். அந்த காலத்தில் அனாவசிய கெடுபிடிகள் கிடையாது.
இன்னம்பூரான்
22 11 2011
உசாத்துணை:
No comments:
Post a Comment