அன்றொருநாள்: மார்ச் 9
‘பாரு! பாரு! பயாஸ்கோப் பாரு!’
நாளிதழ்கள் படிப்பது குறைந்து விட்டது. தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் 24/7 செய்தி வாசித்தபடி, அலசியபடி, உற்பத்தி செய்த படி. அவற்றின் செயல்பாடுகளை பற்றி முடியா வழக்குகளும் உலா வந்த வண்ணம். உலக அளவிலேயே, தொலைக்காட்சியின் ‘ பேரெழில் நேரம்’ (the finest hour) என்று பெருமளவுக்கு பாராட்டப்பட்ட காட்சி திரையிட்ட தினம், மார்ச் 9, 1954. அதை இணைத்திருக்கிறேன். பார்க்கலாம்;கேட்கலாம்.படிக்கலாம். அது ஒரு கல்வெட்டுக்கு சமானம். அது பற்றி ஒரு சிறிய குறிப்பு.
‘அன்றொரு நாள்: ஜனவரி:13 நீயோ அரசு! நீயே கள்வன்!’ என்ற இழையில் கூறப்பட்ட அநீதியை போல, ஆனானப்பட்ட அமெரிக்காவில், மைலோ ரடுலோவிச் என்ற ராணுவ அதிகாரியை ‘கம்யூனிஸ்ட்’ என்று கரும்புள்ளி/செம்புள்ளி குத்தி,ஆதாரமே இல்லாமல், தண்டிக்க வைத்தது ஒரு பேயாட்டம். CBS தொலைக்காட்சியில், அதை எதிர்த்து போராட்டம். நியாயமான தீர்ப்புக்காக வாதாடியது, மர்ரோ & ஃப்ரெண்ட்லி என்ற இருவர், விடாப்பிடியாக. ஆவணச் சான்றுகளுடன், அவர்கள் தங்கள் தரப்பின் வாய்மையை நிரூபிக்கவே, மைலோ ரடுலோவிச் விடுவிக்கப்பட்டார். இந்த பேயாட்டத்தினால், மைலோ ரடுலோவிச் மட்டுமன்று; நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் குடும்பங்களின் வாழ்வு குலைந்தது.பெரும்பாலும், அதர்மம் தான் நிலைத்தது. அமெரிக்கா சமுதாயமே, இந்த ஹிஸ்டீரியா வலையில் சிக்கித்தவித்தது. பல வகைகளில் நற்பெயர் எடுத்து வரும் அமெரிக்க நாட்டுக்கு நீங்காத கறையாக, தனது பைசாச வேட்டையை நடத்தியது, மக்கார்த்தி என்ற ரிபப்ளிகன் செனெட்டர். ஆங்கில மொழியின் புதிய சொற்களில், அவருடைய பெயர், மதி கெட்ட ஆட்கொல்லி வேட்டைக்கு, முத்திரையாக அமைந்து விட்டது. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘அண்ணாச்சி’ ஸ்டாலினை குறித்தது என்பது உண்மையானாலும்,மக்கார்த்தியை ‘அமெரிக்கன் அண்ணாச்சி’ என்று இகழலாம். மர்ரோ & ஃப்ரெண்ட்லி, ‘அண்ணாச்சி’ சாக்ஷி விசாரணையிலும், ஆங்காங்கே உரைத்த சொற்கழிவுகளிலும் பதிவு செய்ததையே ஆதாரமாக வைத்து, அவருடைய கூளிச்சூழலை எதிர்த்தார்கள். ஆயிரக்கணக்கான கடிதங்களும், தந்திகளும், தொலைபேசி அழைப்புகளும் பாமரமக்களிடமிருந்து வந்து குவிந்தன, இருவருக்கும். ராஸ்தாவில் காரை நிறுத்தி, லாரி ஓட்டுனர்கள் கூட ஊக்கமளித்து வாழ்த்துக்கூறினார்கள். பொது நலம், மக்கள் கருத்து எல்லாம் தான் தோன்றி தெய்வங்கள் அல்ல. வால்டர் லிப்மென் சொன்னது போல, அவற்றை படைக்க ஊடக பிரம்மாக்கள் வேண்டும். ‘பாரு! பாரு! பயாஸ்கோப் பாரு!’ (See It Now!) என்ற அப்பட்டமான தொடரில், அண்ணாச்சியின் கைங்கர்யங்களை விமரிசித்த மர்ரோவின் பன்ச்-லைன்:
“...நாடாளுமன்ற கமிட்டிகளின் உபயோகத்தை, வரலாற்றை புரிந்து கொண்ட எவராலும் மறுக்க முடியாது. சட்டம் இயற்றும் முன் தீர்க்கமான விசாரணை தேவை தான்.ஆனால், விசாரணைக்கும், விரட்டி, விரட்டி அடிப்பதற்கும் இடையில் உள்ள தடுப்பு, செயலற்று போகலாம். விஸ்கன்சினிலிருந்து வந்துள்ள இளைய செனெட்டர் (அமெரிக்கன் அண்ணாச்சி) அந்தத் தடுப்பை ஏறி மிதித்த வண்ணம் இருக்கிறார்...”
அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களின் சுயேச்சை அபரிமிதமானது. நம் நாட்டில் இருப்பது போல் அரசியலருக்கும் அவற்றிற்கும் காசு பண ரத்த பந்தமும் கிடையாது. இந்திய பல்கலைக்கழகங்கள் அடிமைகள், அன்றாடங்காய்ச்சிகள், அரசியலருக்கு ‘புகழ்’ஏந்திகள். பேராசிரியர்களை தலை குனிய வைத்தவர்கள், நம் அரசியல் தலைவர்கள். இந்த அவலம் ஒழிந்தால் தான், நம் கல்வித்தளங்கள் உருப்படும். சில வருடங்களுக்கு முன்னால், லாஸ் ஏஞ்ஜெலிஸில் இருக்கும் University of Southern California வின் நடை பாதைகளில் நான் உலாவப்போவது உண்டு. அங்கு BlackList என்ற சலவைக்கல்வெட்டுகள் நிறைந்த நந்தவனமொன்று. அவற்றில் எழுதப்பட்ட வாசகங்களை படித்தால், கண்களில் ரத்தக்கண்ணீர் பெருகும். அந்த படைப்பை அமைத்தவர்கள், பேராசிரியர்களே. அவர்கள் என்றும் மறவாத பாமரகீர்த்தியாக படைத்தது, இந்த ‘அண்ணாச்சியின்’ துர்போதனையால், 1940/50 களில் கணக்கில் அடங்காத அளவுக்கு கலைஞர்களும், ஆசிரியர்களும், சராசரி மனிதர்களும் கொடுமை படுத்தப்பட்ட சமாச்சாரம். உசாத்துணைகளில் வேண்டிய தகவல்கள் கிடைக்கும். மக்கார்த்தி ‘அண்ணாச்சியை’ பற்றி ஒரு சிறிய குறிப்பே இன்று. அவருடைய ‘மயில் ராவணன் கதையை’ மற்றொரு நாள் தான் பார்க்கவேண்டும்.
இன்றைய இழை, உலக அளவிலேயே, தொலைக்காட்சியின் ‘ பேரெழில் நேரம்’ (the finest hour) என்று பெருமளவுக்கு பாராட்டப்பட்ட காட்சியை பற்றி. அதை முன்வைப்பதின் பின்னணி, இந்தியாவுக்கு, இதில் உள்ள படிப்பினை: சகிப்புத்தன்மை. செனெட்டர் மக்கார்த்தியின் குறை: சகிப்புத்தன்மையை அறவே இழந்தது. அதனால்,அவர் அமெரிக்க அரசியல் சாஸனம் அளித்த மக்கள் உரிமையை புறக்கணித்தது. இந்திய அரசியல்/சமுதாய சூழலில் சகிப்புத்தன்மைக்குத்தான் பஞ்சம். உஷார்!
இன்னம்பூரான்
09 03 2012
உ சாத்துணை:
No comments:
Post a Comment