அன்றொரு நாள்: ஏப்ரல் 8
பட்டாக்கத்தியும் ‘சதக்’கத்தியும்?
இந்திய தலைநகரமாகிய டில்லி மாநகரத்தில் பஹதூர் ஷா ஸஃபர் மார்க் என்ற ராஜபாட்டை ஒன்று இருக்கிறது. என்ன சாதனை செய்ததற்கு இந்த மரியாதை? மொகலாய வம்சாவளியின் இறுதி வாரிசாக, பிரிட்டீஷ் ஆளுமையின் கால் கட்டை விரலுக்கு அடியில் சும்மா கிடந்த இந்த இஸ்பேட் ராஜா, புரட்சியாளர்கள் வற்புறுத்தினதால், அவர்களின் கூட்டத்துக்கு, விருப்பமில்லாமல் தலைமை தாங்கினார். தண்டிக்கப்பட்டார். ஆனால், அக்டோபர் 5, 1984லியே தபால் தலை மூலம் சிறப்பிக்கப்பட்ட மங்கள் பாண்டே பெயரில் வீதி சமைக்க, அரசு சம்மதிக்கவில்லை. அவன் ஒரு பாமரன்.
மெய்கீர்த்தி பாடுபவர்களும், தற்புகழ்ச்சி தம்பிரான்களும் வரலாறு எழுதுவதின் பலிகடா, நிஜமாகவே நடந்தேறிய சம்பவங்களும், அவற்றின் படிப்பினைகளும். சான்றாக, வேலூர் சிப்பாய் கலகம் தான் முதல் சுதந்திர போராட்டம் என்று கொதித்தெழுபவர்கள் மறந்தும் உரைக்காத சம்பவங்கள்: அந்த சிப்பாய்கள், கோட்டையை பிடித்தும், அசட்டுத்தனமாக அதை கோட்டை விட்டதும், கருவூலக்கொள்ளையில் திசை திரும்பியதும். எம்டன் கப்பிலில் வந்திருந்தால் தான் டாக்டர் செண்பகராமன் பிள்ளை அவர்களில் நாட்டுப்பற்று உறுதியாகுமா? அல்லது வீரபாண்டிய கட்டபொம்மன் ஜேக்ஸன் துரையிடம் கிஸ்தி மறுக்கவில்லை என்பது பொய்த்து விடுமா? அந்த மாதிரி, மங்கல் பாண்டே தான் இந்திய விடுதலை வேள்வியின் எஜமானன் என்பதும் சற்று மிகையே. அதற்காக, அவருக்கு மீரட்டில் சிலை எழுப்பியதில் குறை காணவேண்டிய தேவையும் இல்லை.
மங்கல் பாண்டே 19 வயதில் கம்பெனியின் படையில் சேர்ந்த சிப்பாய். ஏழு வருடங்கள் அப்பழக்கு இல்லாமல் பணி புரிந்தவர். ஆனால் மாட்டு/பன்றி கொழுப்பு தடவிய துப்பாக்கியின் பொறியை கடிக்க மறுத்தார். தன்னுடன் இருந்த சிப்பாய்களை உசுப்பினார். யாரும் பொருட்படுத்தவில்லை. அவர் அணிந்திருந்த்து ராணுவ சீருடையல்ல. மேலணி ராணுவ கோட்டு. கால் சராய்க்கு பதிலாக, வேஷ்டி. பங்க் ( கஞ்சா) அடித்து விட்டு உளருகிறான் என்று வாளாவிருந்தனர். போதாக்குறைக்கு, இவருடைய கலகத்தை அடக்க வந்த பிரிட்டீஷ் அதிகாரிகளை சுட்டுக்காயப்படுத்தினார். ஆளை சுடாமல், குதிரையை வீழ்த்தினார். அத்துடன் நிற்காமல், தற்கொலை செய்து கொள்ள முனைந்து, அதிலும் தவறி, பிடிப்பட்டார். மேஜர் ஜெனெரல் ஹெர்சே இவரை நிராயுதபாணியாக்கினார். ஏபரல் 8, 1857 அன்று அவரை தூக்கிலிட்டார்கள். இந்த சம்பவத்துக்கு தொடர்பு இல்லாமல், ஆங்காங்கே கலகங்கள் நடந்ததும், டில்லியில் மும்முரமான ஆங்கிலேய முற்றுகை துவக்கப்பட்ட தினம் ஜூலை 1, 1857.
முதல் சுதந்திரயுத்தம் அல்லது பெரிய சிப்பாய் கலகம் என்று பெயர் எது வைத்தாலும், அதில்,மங்கல் பாண்டேயின் பங்கு உண்டு. ஆனால் அதை மிகைப்படுத்துவது, அவருக்கு நியாயம் வழங்காது.
தலைப்பின் தாத்பர்யம் என்ன? பெர்சிவல் ஸ்பியர்ஸ் பிரபல வரலாற்று ஆசிரியர். அவர் உரைத்தது: ‘இந்த சிப்பாய் கலகம் பழமை இந்தியாவின் இரங்கல் இசையாக அமைந்து விட்டது. இடைக்கால பட்டாக்கத்திக்கும் இறக்குமதியான சனியனுக்கும் (‘சதக்’ கத்தி) ( பயனெட்டுக்கு சனியன் என்று பெயர் என்று சின்ன வயதில் படித்திருக்கிறேன். ‘தேவ்’ அகராதி விளக்கம் அளிப்பாராக.) நடந்த சண்டை, இது. தோல்வி அடைந்தவர்களின் மரணம் வீணாகி விடவில்லை. ஒரு புதிய தலைமுறை விடுதலை வீரர்கள் தோன்றினர்.
இவ்வாறு எழுதும் முன், ஆதாரங்கள் தேடினேன், விழுந்து, விழுந்து. நுணுக்கமாக, முன்பின் தெரியாத விஷயங்களை ஆராய்ந்து, பத்து அருமையான வரலாற்று நூல்களை படைத்த திரு. ஆர்.வி.ஸ்மித் அவர்கள் ஹிந்து இதழில் டிசெம்பர் 8, 2003 எழுதிய கட்டுரை கிடைத்தது. அது தான் உசாத்துணை.
இன்னம்பூரான்
08 04 2012
|
No comments:
Post a Comment