Monday, April 8, 2013

நோபெல் திருவிழா பகுதி-3


Innamburan Innamburan 
10/10/12
to vallamaimintamilthamizhvaasalvallamai
நோபெல் திருவிழா
பகுதி-3
இன்னம்பூரான்
10 10 20121
Inline image 2
ரசாயனமா? ரசவாதமா? இதெல்லாம் ஒரு ரசவாங்கியா?என்ற வினாவுக்கு விடை எளிதில் கிடைக்காத அளவுக்கு, வேதியல் பீடுநடை போட்டு வருகிறது. அன்றொரு நாள், பேராசிரியர் லெஸ்லி லியெவ் (Leslie Loew) தீர்க்கதரிசியாக சொன்னமாதிரி: 
மைதானம் பெரியது அப்பனே. கால்பந்தும் விளையாடலாம்; எறிபந்தும் வீசலாம்; கூடை பந்தையும் எறியலாம்; பஞ்சுப்பந்தையும் ஆசையாக ஆடலாம். வசதியிருக்கு. இனி உன் வசதி.  மேற்படி உபமானம் என் சொந்த சரக்கு. லெஸ்லி லியெவ்: ‘விஞ்ஞானத்தின் இயற்பியலும், பெளதிகமும், வேதியலும், எல்லா இயல்களும் தனித்து இயங்காமல், கலந்து ரசவாதமாகத் தான் (என்ன தான்? கத்திரிக்காய் தான்!) இயங்குகின்றன; இயங்கவேண்டும். அதற்கான பாலங்களை சமைப்போம்’. பாரதியாரின் கனவை போல லெஸ்லி லியெவ் அவர்களின் ஆரூடம் பலித்ததை இன்று கண்கூடாகக்கண்டு மகிழ்கிறோம்.
வேதியலுக்கு ஆன நோபெல் பரிசு, இரு அமெரிக்கர்களுக்கு, சமமாக, பகிர்ந்து கொடுக்கப்பட்டது, இன்று: ட்யூக் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தைச் சார்ந்த ராபர்ட்.ஜே.லெஃப்கோவிட்ச் (Robert J. Lefkowitz) & ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தைச் சார்ந்த பிரயன்.கே.கொபில்கா (Brian K. Kobilka). இருவரும் ‘ஜி-புரதம்-தம்ம்மாத்தூஊஊண்டுத் தும்பிக்கை’ ("for studies of G-protein–coupled receptors") என்ற வேதியல் ஆராய்ச்சி கண்டுப்பிடிப்புக்கு பரிசளிக்கப்பட்டனர். நான் ‘ரசவாங்கியை’ கொண்டுவந்ததின் காரணம் புரிகிறதா? பரிசு, வேதியலுக்கு. இருவரும் ஆராய்ச்சி செய்தது சமைத்தது, மருத்துவ மையங்களில் !!! ராபர்ட்.ஜே.லெஃப்கோவிட்ச், ஹோவர்ட் ஹ்யூஸ் மருத்துவ மையத்திலும், பணி ஆற்றினார். அந்த ஹோவர்ட் ஹ்யூஸ் உலக பெரிய கில்லாடி. ஒரே நாளில் உலகத்தின் வெள்ளி உலோக ஸ்டாக்கைக் கைப்பற்றி, புவனி முழுதும் (ஐயங்கார் வீடுகள் உள்பட) பரபரப்பு உண்டாக்கிய பிருகிருதி. போய்ட்டுப்போறான். அமெரிக்க மரபுக்கு ஒத்துப்போய் தன் ஆஸ்தியை முழுதும் நன்கொடையாக அளித்து விட்டார், அவர். உலகை ஆட்டிப்படைத்ததற்கு நோபெல் பரிசு கொடுத்தால் அவருக்குத் தான் முதலில்.
நமது உடலின் கோடிக்கணக்கான நுண்ணயவயங்கள் (திசு) (cells) ஒன்றுடன் ஒன்று உறவாடியவண்ணமே இருக்கின்றன. அவற்றில் ராஜா பார்ட், ஸ்திரீபார்ட், ராஜகுரு, பஃபூன் எல்லாம் உண்டு. கதாபாத்திரங்கள் எக்கச்சக்கம். அந்த ‘நாடகமே உலகம்’ பிரபஞ்சத்தில் எல்லாம் நுட்பமாக திட்டமிட்டபடி,லகுவாக, இயங்குகின்றன. அவை ஒவ்வொன்றிலும் ஒரு தம்ம்மாத்தூஊஊண்டுத் தும்பிக்கை எட்டிப்பார்க்கிறது. அவை சுற்றுவட்டாரத்தை அருமையாக நுகர்ந்து, ஸீன் எப்படி மாறினாலும், தடுமாறாமல், சமயோஜிதமாக நடந்து கொள்கின்றன. ஒவ்வொரு வினாடியிலும் நம் ஒவ்வொருவரின் உடலில் இம்மாதிரியான சவால்களும், சமாளிப்புகளும் கோடிக்கணக்கில் நடந்து வருகின்றன. அவை எவ்வாறு இந்த இந்திரஜாலத்தை செய்து நம்மை, சமயோஜிதமாக, காப்பாற்றி வருகின்றன என்பதை நாம் இது வரை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பது விஞ்ஞானத்தின் வரலாறு. அந்த புதிரை அவிழ்த்து, ‘ஜி-புரதம்-தம்ம்மாத்தூஊஊண்டுத் தும்பிக்கை’( G-protein–coupled receptors) மிகவும் நேர்த்தியாக, இடைவிடாமல், நடத்தி வரும் உள்கை நடப்பை ஆராய்ந்தறிந்து உலகுக்கு பிரகடனம் செய்தவர்கள்: ராபர்ட்.ஜே.லெஃப்கோவிட்ச் & பிரயன்.கே.கொபில்கா. ஐயாமார்களே! வாழ்க நீவிர்.
1968ல் அட்ரெலினின் திசுவின் தும்பிக்கையை, அதன் ‘குகை’யிலிருந்து வெளிக்கொணர்ந்தார், லெஃப்கோவிட்ச். கிஞ்சித்துப் புரிந்தது. 1980ல்கொபில்கா மேலும் பற்பல நகாசு வேலைகளிலும், புத்தம்புதிய வழிகளிலும் ஆராய்ந்து, ‘பீறாய்ந்து’ அட்ரெலினின் திசுவின் தும்பிக்கை, ஒளியை கண்கள் நுகரும் தும்பிக்கை போன்றது என்றார். அதற்குத்தான் G-protein–coupled receptors என்று நாமகரணம் செய்யப்பட்டது. பஞ்சேந்திரியங்களின் நுட்பமான ‘புரிதலை’ புரிந்து கொண்டோம். இன்று தரணிதனில் உலவி வரும் மருந்து, மாயம், ஒளஷதாதி வகைகள், மூலிகைகள் எல்லாம் இந்த G-protein–coupled receptors மூலமாக தான் வேலை செய்கின்றன.
அதா அன்று.பலே! பலே! போன வருடம், கொபில்கா, G-protein–coupled receptors மிகவும் நேர்த்தியாக, இடைவிடாமல், நடத்தி வரும் உள்கை நடப்பின் காட்சியை படம் பிடித்து விட்டார். மன்னிப்பீர்களாக. ரொம்பவும் சுருக்கி விட்டேன். இல்லாவிடின், எனக்கு புரியாதது என்னவென்ற தம்ம்மாத்தூஊஊண்டுத் தும்பிக்கைகளை ஆராய தொடங்கிவிடுவார்கள், சிலர்.
(தொடரும்)
இன்னம்பூரான்
10 10 2012

No comments:

Post a Comment