அன்றொரு நாள்: ஏப்ரல் 9:
நன்னெஞ்சே!
பகைவன் யார்? என்றென்றும் நிரந்தரமான பகைவன் யார்? அவனை என் செய்ய வேண்டும்? பதிற்றுப்பத்து இரண்டாவது பத்தில் முதல் பாடலாக, புலவர் குமட்டூர்க் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைச் சிறப்பித்துப் பாடியுள்ள வகையில்,
‘... அருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்/ மணிநிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து/மனாலக் கலவை போல வரண்கொன்று/ முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை/ பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்/கடியுடை முழுமுத றுமிய வேஎய்/வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்...’ என்று வீரவணக்கம் செய்வதா? (பொருள்: முனைவர் மு.இளங்கோவன் அளித்தது: ‘... பகைவரின் மார்பைப்பிளந்து,அக்குருதி பெருக்கெடுத்து ஓடி,நீர்நிலையில் உள்ள நீலநிறம் குங்குமநிறமாக மாறியது.பகைவர்களின் அரண்களை அழித்தாய்.பகைவர்களின் கடப்பமரத்தை வெட்டி அழிக்கும்படி வீரரை ஏவியவன்.அம்மரத்தில் முரசம் செய்தாய்.இவ்வாறு போர் செய்யும் ஆற்றலும்,மாலை அணிந்த மார்பும் அறப்போர் செய்யும் படையையும் உடைய சேரலாதனே!) அல்லது அத்தகைய கொடுமைகளை மறந்து,மஹாகவி பாரதியாரின் நன்னெஞ்சை துணைக்கு அழைப்பதா? மஹாகவி பாண்டிச்சேரியில் தஞ்சம் புகுந்த காலகட்டத்தில் அவரை நைச்சியமாக பிரிட்டீஷ் எல்லைக்குள் அழைத்து வந்து விடலாம் என்று ஒரு சதி நடந்ததாம். ‘அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே! உச்சி மீது வானிடிந்த போதிலும்..’ என்று வீரமுழக்கம் செய்த பாரதியார் மிருதுவான ஸ்வபாவம் கொண்டவர் என்றும், அவரை ஏமாற்றுவதும், பயமுறுத்துவதும் எளிது என்றும், அதனால் தான் அந்த சதிகாரனிடம் மாட்டிக்கொண்டாராம். விஷயம் அறிந்த வவேசு ஐயர் அவர்களும், அரவிந்தரும் ஓடோடிப்போய், அவரை மீட்டு, அந்த சதிகாரனை நைய புடைக்கத் தொடங்கினராம்.அத்தருணம், கருணை மேலிட, பாரதியார்,
‘பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்!....
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!...’
என்று பாடி அவனை காப்பாற்றினாராம்.
இது பாலபருவத்தில் படித்தது. ஆதாரம் தேடி வைத்துக்கொள்ள தெரியாத வயது.நினைவில் இருப்பதைச் சொன்னேன்.April 9
இது நினைவில் வர காரணம், ஏப்ரல் 9, 1865 அன்று நடந்த ஒரு நிகழ்வு. அமெரிக்காவில் அடிமை தளையை நீக்கவேண்டும் என்று அப்ரஹாம் லிங்கன் விடாக்கொண்டனாக இருக்க, தெற்கத்திய அமெரிக்க மாநிலங்கள் கொடாக்கண்டனாக இருக்க, உள்நாட்டுப்போர் கடுமையாக நடந்தது. ஏப்ரல் 9, 1865 அன்று தெற்கத்திய படைகளின் ராணுவத்தலைவர் ஜெனரல் ராபர்ட் லீ, ஐக்கிய அரசின் படைகளின் தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் உலிஸீஸ் க்ராண்ட் அவர்களிடம், தோல்வியை ஒப்புக்கொண்டு, சரணடைந்தார். இருபக்கமும் பகை அதிகம் தான். நடந்த போரும் கடுமையானது தான். இருந்தும் அன்றைய தின சரண் சம்பந்தமான ஆவணங்களில், நாகரீகம், பண்பு, பெருந்தன்மை, அளவு கடந்த பரிவு ஆகியவை இடம் பிடித்துள்ளன. இரு ராணுவத்தலைவர்களும் பல மடல்களை பரிமாறிக்கொண்டனர். ஒன்றிலாவது விரோத மனப்பான்மை இல்லை. இருவரும், ‘Yours respectful Obedient Servant’ என்று தான் எழுதி, கையொப்பம் இட்டுள்ளனர்.ஒவ்வொரு சிப்பாயின் தளவாடங்கள், ஆயுதங்கள், சொத்து, பத்து ஆகியவற்றை பேணுவதை பற்றி,சமாதானம் நாடும், புண்களை ஆற்றும் உடன்பாடுகள். அதிகம் சொல்ல என்ன இருக்கிறது. நன்னெஞ்சு வேண்டும் தாயே!
இன்னம்பூரான்
09 04 2012
உசாத்துணை:
|
No comments:
Post a Comment