சமச்சீர் போஜனசாலை
இடம்: சாப்பாட்டுராமன் மேன்ஷன்ஸ் அனெக்ஸ், கடங்காரன் தெரு, திருவல்லிக்கேணி.
நேரம்: வைகறை 5 மணி (அளவில்) - நடுநிசி 12 மணி வரை
நல்வரவு: கட்டைபிரம்மசாரிகள் (முன்னுரிமை, மேன்ஷனாருக்கு), வழிப்போக்கர்கள், கிழம்ஸ், கிருஹஸ்தாள் (அவர்கள் மட்டும் ஸ்திரீஜனங்களை கூட அழைத்து வரலாம்; குடும்ப அறை கட்டாயம்: கட்டணம் உண்டு. அதை கட்டிவிட்டால், திருமணச்சான்றுகள் கேட்கப்படமாட்டா. )
மெனு:
- காலை 5 மணி (அளவில்): ஏலக்காய், கிராம்பு, ஜாதிபத்திரி, பட்டை தட்டிப்போட்டு காய்ச்சி, அஸ்ஸாம் தேயிலை (தூள் அல்ல) தோய்த்து, பசும்பாலில் கலந்த கொதிக்கும் தேனீர். ரேடியோவில் ருத்ரம். எனவே நீவிர் மெளனம்; சத்தமில்லாமல் பிராணாயமம் செய்யலாம்
- காலை 8 17 மணி (அளவில்): பரங்கி, காரட், வெள்ளரி, முருங்கை, பட்டாணி, தக்காளி ஆகியவை பொடி, பொடியாக துண்டடித்து கசக்கிய கருகவேப்பிலையும், நசுக்கிய இஞ்சியும், (வெங்காயம், பூண்டு ஆப்ஷனல்), ஒரு கரணைமுட்டை நல்லெண்ணையில் கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு வெடித்து, சீரகம், பெருங்காயம், மல்லிபவுடர், சிறிது மஞ்சள் பொடி, மிதமாக கல்லுப்பு ஆகியவையுடன் ஸூப்பர் தாளிகை செய்து, கலவையை அரைவேக்காடு செய்து, கொத்தமல்லி தழையை தூவி, பொடித்த மிளகு சேர்த்து, கொஞ்சம் எலுமிச்சை பிழிந்து, இரு ப்ரெளன் ப்ரெட் பலகைக்குள் இட்டு சாண்ட்விச் செய்து தரப்படும். மென்று சாப்பிட்டால், ஆனை பலம் உத்தரவாதம்.
- அத்துடன் ஃபில்டர் காஃபி.
- மதியம் உச்சி வேளை (அளவில்) ஒரு பிடி பாசுமதி அரிசியில், முறைக்கும் சாதம், சாம்பார், ரஸம் (ஐயங்கார் ஸ்டைல்), கறியமுது, கூட்டு, சுட்ட அப்பலம், கடைந்த தயிர். சில தினங்களில் டாங்கர் பச்சடி அல்லது கோசுமல்லி.
- மாலை 4 49 (அளவில்) சுண்டல், ஹெர்பல் டீ.
- இரவு 8 03 (அளவில்) மல்லிப்பூ இட்லி 3 வித் தேங்காய்/வெங்காய சட்னி/ எள்ளு மொளகாய் பொடி
- நடு நிசி என்று சும்மா போட்டோம். கதவு 8 57க்கு அடைக்கபடும்.
- விலை பட்டியல்:; நாள் கணக்கு, தொட்டாலும், தொடாவிட்டாலும். வரவுக்கு ஏற்றபடி வேறுபடும். உள்ளே விசாரிக்கவும். மாதாந்திர அச்சாரம்: பத்தாயிரம் ரூபாய் (துல்லியமாக அட்ஜஸ்ட் செய்யப்படும்).
- டயபட்டீஸ்காரர்கள் குறைத்து சாப்பிட்டாலும், சலுகை கிடையாது.
- விளக்கம்: எங்கள் விலை அதிகமாகப்பட்டாலும், இந்த உயர் தரம் எங்கும் கிடைக்காது.
- பிரத்யேக கெளரவ ஆலோசகர்: நளமாமணி திருமதி கீதா சாம்பசிவம்.
- ஏகபோக உரிமையாளர்: இன்னம்பூரான்.
|
|
No comments:
Post a Comment