நோபெல் திருவிழா
பகுதி-4
இன்னம்பூரான்
11 10 2012
இலக்கியத்துக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்படும் முன்னதாகவே, ஊடகங்களில் பல பெயர்கள் அடிபடுகின்றன. கூர்மையாக விவாதிக்கப்படுகின்றன, ஆங்காங்கு பட்டி மன்றங்களில். அவற்றில், ஹரூகி முரகாமி (Haruki Murakami) என்ற ஜப்பானிய நாவலாசிரியர் பெரிதும் பேசப்படுகிறார். இஸ்மாயில் காதரே என்ற அல்பேனியரும், மோ யான் என்ற சீனரும், சீஸ் நூடெபூம் என்ற டச்சுக்காரரும், ஐயான் மக்வான் என்ற ஆங்கிலேயரும், பாப் டைலான் என்ற பிரபல பாடலாசிரியரும், ஃபிலிப் ரோத் என்ற தடிமன் நாவல் புகழ் அமெரிக்கரும், கார்மெக் மெக்கர்த்தி என்ற மற்றொரு அமெரிக்கரும், அமேஜ் ஓஸ் என்ற இஸ்ரேலியரும், மிகவும் அதிக ஊதியம் பெற்று வரும் டாஸிய மெரைனி என்ற இத்தாலிய பெண்மணியும், களத்தில் இருப்பதாக அசரீரிகள் அங்குமிங்கும் ‘விர்’ ‘விர்’ என பறந்த வண்னம் உள்ளன.
இந்த விநாடி. ஓடி வந்த ஃப்ளாஷ்: மோ யான் என்ற புனைப்பெயரில் பல மொழிகளில் எழுதி வரும் திரு குவான் மோயே (Guan Moye) பரிசை தட்டிச்செல்கிறார். ஒரு வேளாண்மை குடும்பத்தில் 1955ல் வடகிழக்கு சைனாவில் பிறந்து வளர்ந்த மோயே, 12 வயதில் பள்ளிப்படிப்பை உதறிவிட்டு, விவசாயம், தொழிற்சாலையில் ஊழியம் என சென்று விட்டார். 1976ம் ஆண்டு ‘மக்கள் விடுதலை ப்படையில் சேர்ந்த பின், இலக்கியம் படிக்கத்தொடங்கினார். எழுதவும் தொடங்கினார். முதல் சிறுகதை வளி வந்தது 1981ல். 1986ல் வெளி வந்த குறு நாவல் Touming de hong luoboம் 1993ல் வெளிவந்த ஃப்ரென்ச் நாவல் Le radis de cristal ம் அவருக்கு புகழ் தேடித்தந்தன. அவருடைய படைப்புகளில் வரலாற்று மோகமும், பாமர கீர்த்தியும், சமுதாய குறை காணலும் அதிகம்.
கற்பனையையும், நிஜத்தையும் , வரலாற்று/சமூக வரலாற்றுத்துணுக்குகளாக, ரசவாதம் செய்து, கிழக்குக்கும், மேற்குக்கும் உகந்த இலக்கிய பாலங்கள் அமைத்தார்.
******
No comments:
Post a Comment