அன்றொரு நாள்: ஏப்ரல் 13:2
'குருதிப்புனல்'
இன்றைய ஜூனியர் விகடனில் பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் ஜாலியன்வாலா பாக் இழிநிகழ்வை பற்றி எழுதியிருக்கிறார். அவர் ஏன் முனைவர் கிச்லூ அவர்களின் பெயரை தவறாக உச்சாடனம் செய்துருக்கிறார் என்று புரியவில்லை. ஜாலியன்வாலா பாக் நிகழ்வுக்கு மதம் சார்ந்த பின்னணி என்று சொல்கிறார். அரசியல், தேசீய பின்னணி பற்றி அவர் ஒன்றும் கூறவில்லை. வரலாற்றுப்போக்கில் நோக்கினால். 1919க்கு முன்னும், பின்னும், பைஷாகி திருவிழா இத்தனை விமரிசையாக நடக்கவில்ல்ஐ. இது நாட்டுப்பற்று பரவசம் ஐயா! அவருடைய அணுகுமுறை நிகழ்வை சார்ந்தது. எனது, நிகழ்வு, அதன் பின்னணி, நிகழ்வின் பலாபலன்கள் ஆகியவை பற்றியது. இது நிற்க.
ரெளலட் சட்டத்தை பற்றி மட்டுமல்ல, அயல் நாடுகளில் (சான்றாக, மெஸபட்டோமியா) இந்திய ராணுவம் உயிரிழப்பது, அகில இந்திய காங்கிரஸ்ஸின் தேசாபிமான பிரச்சாரம், பொருத்தமான பிரமேயங்கள் இல்லாமல், முந்திரிக்கொட்டைத்தனமாக, அதுவும் ரஹஸ்யமாக, அதுவும், வஞ்சகமாக முனைவர் ஸைஃபுத்தீன் கிச்லூவையும், டாக்டர் சத்யபாலையும் கைது செய்து நாடு கடத்தியது எல்லாம் மக்களை உசுப்பி விட்ட சம்பவங்கள். அது ஏப்ரல் 6, 1919 அன்று கொழுந்து விட்டு எரிந்தது. சொல்லப்போனால், கலோனிய அரசு அன்று ஆளுமையை இழந்துவிட்டதாக, அஞ்சியது. அதனால் அவசர நடவடிக்கை. போர்க்கோலம். தொடை நடுக்கம். தாரதம்யம் இல்லாத தடை உத்தரவுகள். இது எல்லாம், ‘விநாச காலே விபரீத புத்தியின்’ முதல் பகுதி. இல்லாவிடின், பைஷாகி திருவிழாவுக்கு மதம் சார்ந்த அளவுக்கு ஏற்பாடு செய்யாமல், அரசு செயல் இழந்திருக்குமா? அல்லது, அலங்கோலம் நடந்த பின்னரும் தத்து பித்து என்று:
- அந்த கடங்காரனுக்கு பதவி உயர்வு அளித்திருக்குமா?
- கையோடு கையாக, அவனை பதவியிலிருந்து விலக்கி, கட்டாய ஓய்வில் வைத்திருக்குமா?
- அவனுடைய காழ்ப்புணர்ச்சி அமில உளரல்கள்: ‘அது புரட்சி; அடக்கினேன்.’/‘சுடாமல், கூட்டத்தை கலைத்திருக்க முடியும்; அது மறுபடியும் கூடினால், நான் கேலிக்கு உள்ளாவேன். அதான், சுட்டேன்.’/‘மிஷீன் கன்கள் கொண்டு போக இடமில்லை. முடிந்திருந்தால், குருதிப்புனல். ஆஹாஹா.’/‘நான் எதற்கு அடிப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லவேண்டும். ஆஸ்பத்திரிகள் திறந்த வண்ணம். யார் வேணுமானாலும் போயிருக்கலாம்.’/
- கர்மவினை: அம்ருத்சரசின் சீக்கிய தங்கக்கோயில் அறங்காவலர்கள் அந்த துஷ்டனுக்கு, ‘அண்ணாச்சி’ என்று விருது கொடுத்து அபகீர்த்தி தேடிக்கொண்டார்கள்.
- இங்கிலாந்தின் பிரபுக்கள் அவை, அவனுடைய மெய்கீர்த்தி பாடியது.
- கன்செர்வேட்டிவ் கட்சியினர், அவனை, ‘பஞ்சாப் காவலன்’ என புகழ்ந்து, பட்டாக்கத்தி ஒன்றை பரிசிலாக அளித்தது.
இத்தனை ‘விநாசகாலே விபரீத புத்தி’ நடுவில் ஒரு கண்டனம்: ‘ இந்த ஜாலியன் வாலா பாக் நிகழ்வு அசாதாரணமானது. அசுர நிகழ்வு. பயங்கரமான தனித்த பைசாச நிகழ்வு.’ யார் தெரியுமோ? மிஸ்டர் வின்ஸ்டன் சர்ச்சில். அவருக்கு மூடி மெழுகப்பிடிக்காது. மேலும் சொல்ல பல விஷயங்கள் உளன.
(தொடரும்)
இன்னம்பூரான்
13 04 2012
No comments:
Post a Comment