அன்றொரு நாள்: ஏப்ரல் 11:
सिर्फ शायरी और म़ौज़िकी ही मर्द की आँख़ो में आँस़ू ला सकते हैं|
மகுடி ஊதினால் பாம்பு மயங்குவதும், தாலாட்டில் குழந்தை உறங்குவதும், குந்தன் லால் ஸைகால் மென்மையாக, தாழ்ந்த குரலில் இசை இழைத்தால் கண்ணில் நீர் மல்குவதும் ஏன்? இந்தியன் ரயில்வேயில் சட்டைக்காரர்களே அதிகம் இருந்த காலத்தில் ஒரு டைம் கீப்பர் இருந்தார். அவர் கல்கத்தாவில் வசிக்கத்தொடங்கினார். ஏனெனில், அவர் அப்போது ரெமிங்டன் ராண்ட் தட்டச்சு மிஷின் சேல்ஸ்மேன். கல்கத்தா தான் அந்த கம்பெனியின் தலைமை ஆபீஸ் இருந்த இடம். வெற்றிலை போட்டுக்கப் போன கடை வாசலில், ஒரு பாட்டை ஹம்மறார். ஸார்! தட்டுங்கள் கதவை. திறக்கும் என்பார்கள், ஆப்டிமிஸ்ட்ஸ். அதெல்லாம் ஒன்றுமில்லை. மல்லாக்கத் திறந்த கதவு, கடை வாசலிலே. ஆமாம். அந்த மனுஷன் பாட்றதை கேட்டுட்டு, ஆர்.ஸி,போராய் என்ற பிரபல இசை மேதை, அவரை தன் வெண்குடைக்கு அடியில் கொணர்ந்து விட்டு, திரும்பிப் பார்க்கிறார். இவர் (அதான் ஸைகால்) இசை வானத்து உச்சி மேலே அசாத்திய சஞ்சாரம் பண்றார். கஜல் பாடும் வித்தை ஜனனம். ஹம்மினாலும், கமகம் உச்சரித்தாலும், ‘சித்திரம் பேசுதடி’ என்பது போல் நாவும் ‘கண்ணை கசுக்குதடி’ எனலாம். அத்தனை உருக்கம். இசையின் எழில் குந்தன்லால் ஸைகால் நாவினேலே, குரல் வளத்திலே, அடி நாபியிலே, மனதென்னும் கண்ணாடியிலே. ஒரிஜினல் தேவதாஸ் சினிமா பார்த்தவர்கள் அதை நினைவு கூராத நாட்கள் இல்லை. தினந்தோறும், ‘பாலம் ஆயே பஸோ மோரே மன் மேஹ்ன்...’ என்று முணுமுணுத்துக்கொண்டு இருப்பார்கள்.ஆனால், அநேக பேர் தண்ணி போட்றைதை நிறுத்திவிட்டதாக, கேள்வி!
உங்களுக்கு தான்ஸேனை பற்றி தெரியுமோ? அக்பரின் தர்பாரில் இசை மேதை. அவர் பாடினால், கல்லும் கரையும், வானமும் பொழியும், அக்பரும் மயங்கிடுவார். ஜயந்த் தேசாய் எடுத்த படத்தில், அந்த பாத்திரத்தில் நடிக்க பம்பாய் வந்த ஸைகால், கருங்கல்லும் உருக இசைத்து, அந்தக்காலத்து பிரபலங்கள் ஆன கனந்தேவி, குர்ஷீத் எல்லாரையும் தூக்கி அடித்து விட்டார். ஏழு கட்டையில் துரிதகதியில் உச்சஸ்தாயியில் சஞ்சாரம் செய்வது தான் இசை என்று பரவலாகப் பேசப்பட்ட காலத்தில், நம்ம ஸைகால் எல்லாத்தையும் மாத்திப்பிட்டார். தாழ்ந்த குரல். மெதுவான நடை, மென்மையான உச்சரிப்பு. உலகத்தின் மனமயக்கம். அது தான் ஸைகால். ‘ஸோ ஜா ராஜகுமாரி, சோ ஜா’ என்று அவர் பாடினால், அந்த ராஜகுமாரி அவரது மடியிலேயே தூங்கி விடுவாள்! ‘பியே ஜா! ஒளர் பியே ஜா!’ என்று அவர் பாடினால், தண்ணி போடாமலே லாஹிரி தலைக்கு ஏறும்! ஒன்று திண்ணம். அவருக்கு நடிப்பு, இசையின் தாதி. இசை குரல்வளத்தின் பாங்கி. அது உண்மை தான். அவர் வரும் வரை, இனிமையான இசைவளம், கஜல் பாடல்களின் பொருளை மறைத்திடுமோ என்று நினைத்தார்கள். இவரோ இசை வளத்தினால், பொருளை உணர்த்தினார். 1932 -1946 காலகட்டதில், அவர் 250 பாடல்களை பதிவு செய்தார். அந்த 15 வருடங்கள், சைகால் சஹாப்தம். பின்னால் வந்த மன்னா டே,தாலத் முகம்மது,முகேஷ், சி.ஹெச்.ஆத்மா, எல்லாம் வல்ல கிஷோர் குமார், ரஃபி ஆகியோர் பாடல்களை உன்னிப்பாக கவனியுங்கள். சிலவற்றில் அப்பட்டமாக, சைகால் ஜாடை அடிக்கும்.
ஆனால், ஐயாவால் தண்ணி அடிக்காமல் இருக்க முடியாது. குடி தான் குரல்வளம் தருகிறது என்று நம்பினார். ஒரு நாள், நெளஷத், இவரை தண்ணியில்லாமலும் பாடவைத்து, அது தான் சிறப்புற அமைந்தது என்பதை நிரூபித்தார். டூ லேட். குடி அவரது உயிரை ஜனவரி 18, 1947 அன்று உறிஞ்சி விட்டது.
ஒரேடியாக, இவரது லக்ஷணம் சோக லக்ஷணம் என்று முடிவு கட்டாதீர்கள். சிறார்களையும், ‘எக் ராஜா கா பேட்டா...’ என்ற பாட்டில் கவர்ந்த இவர் ஜாலி மேன். கல கல ஸ்வபாவம். அப்படி அவர் பாடிய பாட்டு ஒன்றையும், ‘பாலம் ஆயே பஸோ மோரே மன் மேஹ்ன்...’ என்ற பாட்டுடன்* அவருடைய பிறந்த நாள் (11 04 1904) அஞ்சலியாக, பதிவு செய்துள்ளேன். பேராசிரியரும், தேவ் வும்,(ஜிவ் ஜிவ் என்ரு) மேலும் பல பாடல்களை தந்து, நம்மை மகிழ்விப்பார்களாக.
* அந்த பாடலை இயற்றிய ‘வாஜித் அலிகான் ஒரு கலையரசன். ‘கதக்’ என்ற நடன இலக்கணத்தை வகுத்தவர். இசையையும், நடனத்தையும் போஷித்தவர். தன்னால் இயற்றப்பட்ட பாடல்களும், கவிதைகளும், மக்களை கவர்ந்தது பற்றி அவருக்கு மிக சந்தோஷம். கும்பினிக்காரர்கள் ஆட்சியை பறிக்கும் தருணத்தில், திவான் குரல் உடைந்து அழுகிறார். நவாப் அமரிக்கையாக சொல்கிறார்: ‘ஐயா! நீருண்ட மேகங்கள் போல (கண்ணதாசன் உபயம்) கண்ணீர் மல்க, கவிதை வேண்டும்; இசை வேண்டுமையா, மனிதகுலத்துக்கு...’. ~இது உருது. ஹிந்தி அல்ல. பொருள் மிகவும் மென்மையானது. உருதுவில் முடிந்த அளவு, ஹிந்தியில் நுட்பங்கள் உரைப்பது கடினம், எனக்கு முடிந்த வரை மொழியாக்கம்: ஒரிஜினல் இன்றைய உப தலைப்பு. வாஜித் அலிகான் பற்றிய இழை: அன்றொருநாள்: பிப்ரவரி 7: கரிநாள்.
இன்னம்பூரான்
11 04 2012
உசாத்துணை:
|
No comments:
Post a Comment