மனம், மனது, மனசு போன்ற சொற்கள் ஒரே சொல்லின் திரிபுகள் என்று இலக்கணத்தார் உரைத்தாலும், என் மனம், மனது, மனசு சொல்வது வேறு. மனம் யோசிக்கும்; மனது அசை போடும். மனசு அடிச்சுக்கும். ஒன்றை மற்றொன்று பாதிக்கும். சிலது புலப்படும். சிலது தேடினால் சிக்கும். சிலது ஆழ்மனதில் (அது என்ன ஆழம்!) புதையுண்டு கிடக்கும். திடீரென்று விஸ்வரூபமெடுத்து, ஆட்டி படைக்கும். இத்தனைக்கும் திரை மறைவில் ‘மனோதர்மம்’ இருக்குமாமே! உடனக்குடன் விமர்சனங்கள்: அது ஆளுக்கு ஆள் வேறுபடும்; அது யாவருக்கும் ஒரே நிலைப்பாடே; காலத்துக்கு காலம் வெவ்வேறு மனோதர்மங்கள்; இடத்தின் இனம் கண்டு மாறும், இது. ஏவிப்பாருங்கள்! தோசை திருப்புவது போலல்லவா, அது உம்மை திரும்பிப்பார்த்து ஏவும். இது உத்தரவாதமையா, என்றார் ஒரு தத்துவஞானி.
எதற்கு ஐயா அடிப்பாரம் போட்றீர்? தன்னை கேட்க வேண்டிக்கொள்வதை எம்மை ஏன் கேட்கிறீர்? இல்லை, யாம் அறியாததை சொல்லிவிட்டீர்களா? பல குரல்கள்: என் மனோதர்மம், உண்மை விளம்பல்; என் மனோதர்மம் பணி செய்து கிடப்பது; என் மனோதர்மம் கடமை; என் மனோதர்மம் மனித நேயம்; என் மனோதர்மம் இல்லறம் பேணுவது; என் மனோதர்மம் விட்டேற்றியாக துறவு பூண்டு, ஞானம் தேடுவது. ஒரு நூறு பக்க ஜாபிதா போட நேரம் பிடிக்காது. ஒரு தொடரை புரிந்து கொள்ள யுகாந்திரங்கள் போதாது. ஒருவர் கேட்டார், ‘நீண்ட பீடிகை உம் மனோதர்மமோ?’ என்று. அவருக்கு புரியவில்லை என்பது திண்ணம். எனக்கு புரியாமலிருக்கலாம் என்பது ஐயம். ‘யான் யானே’ என்ற மாயம் உளதே. என் செய்வேன்? நீங்களும் என் செய்ய இயலும்? தடம் மாறுகிறது. ‘ஸ்டாப்!’ கயல்விழி சொன்னதாக, முரசொலி ஒலித்தது போல்!
பத்து வருடம் முன்னால், என் பையன் Illich [1971] CELEBRATION OF AWARENESS: London: Calder & Boyers என்ற நூலை படிக்கக்கொடுத்தான். எழுதாத விதி: எடுத்த இடத்தில் வைக்கவேண்டும். கையில் கொடுத்ததால்,அது இங்கே. மொழி பெயர்க்கவேண்டிய சிறிய நூல். முன்னுரையில் எரிக் ஃப்ரோம் என்ற ஞானி இறுதியில் கூறுவது, “...[இல்லிச்சின்] சிந்தனைகள் புதுமையான தரவுகளை சுட்டுவதால், மனத்தை தளையிலிருந்து விடுவிக்கின்றன. பழக்கப்பட்டுப்போன, கழுவப்பட்ட, முன்பதிவு பெற்ற அபிப்ராயங்கள் தான் அந்த தளை. விடுவித்ததும் அல்லாமல், புதிய பாட்டை அல்லவா அமைத்திருக்கிறார்.” இது மனோதர்மத்துக்கு ஒரு அறிமுகம் மட்டுமே.
எனக்கு தெரிந்தவரை, இச்சொல் இசையுலகில் நடமாடுகிறது. கல்கி, “...தினம் பொழுது விடிந்தால் கச்சேரிதான். தம்பியின் வாசிப்போ நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருந்தது. இதற்கு முன்னாலெல்லாம் நான் பணத்துக்காகத் தவுல் வாசித்துக் கொண்டிருந்தேன். தம்பிக்கு வாசிக்க ஆரம்பித்த பிறகு, என்னை மறந்து பரவசமாய் வாசித்தேன், ஸ்வாமி! அது என்ன மனோதர்மம்? அது என்ன கற்பனை? அது என்ன பொருளுதயம்? - இத்தனைக்கும் தம்பி, பெரியவர்கள் காட்டிய வழியிலிருந்து அந்தண்டை இந்தண்டை நகரவில்லை. இந்தக் காலத்திலே போல், ஒத்துக்குப் பதில் தம்புரா சுருதி வைத்துக் கொள்ளவில்லை. தவுலுக்குப் பதில் தபலா, அப்புறம் பக்க வாத்தியத்துக்கு ஹார்மோனியம், மோர்சிங்கு - இப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது...” என்றார் ஒரு இடத்தில். அந்த மனோதர்மம் யாது?
தொடரப்போவது யாரு?
அன்புடன்,
இன்னம்பூரான்
18 09 2010
|
No comments:
Post a Comment