அன்றொரு நாள்: ஏப்ரல் 13:3
என்றோ துவக்கம்!
நான் வரலாற்றுத்துறையில் புலமை நாடியவனல்ல. குழந்தைகளின்‘படிப்பு தான் முக்கியம்’ என்பதற்காக, பல இன்னல்களுக்கிடையே,பிரிந்து வாழ்ந்துத் தியாகம் செய்த என் பெற்றோர்கள், பெரியவர்கள் பேச்சுப்படி நடப்பார்கள். அக்காலத்து பெரியர்கள் பேச்சு: சரித்திரம், இலக்கியம், தமிழ், சம்ஸ்க்ருதம் சோறு போடாது. பள்ளி உபாத்தியாயர் வேலை தான் கிடைக்கும். மெக்காலே சொன்னதைத் தவறாக புரிந்து கொண்டதின் விளைவு. ஆள வந்த ஆங்கிலேயர்களோ பழமை வாய்ந்த கிரேக்க, ரோமானிய இலக்கியங்களில், தத்துவ விசாரணையில் திளைத்து ஊறியவர்கள். வந்த இடத்து வரலாறு எழுத, ஆய்வு செய்ய முனைந்தவர்கள். நாம் தான் கண்டும் காணாமல் விட்டவர்கள். இந்த பீடிகை எதற்கு?
சில கொடுப்பினைகள் தற்செயலாகத்தான் கிடைக்கும், எனக்கு தமிழ் கிடைத்தது போல. மின் தமிழில் எழுதத் தொடங்கிய பின் தான், அவ்வப்பொழுது படித்து மனதில் பதுக்கி/நிறுவி வைத்திருந்த விஷயங்களின் உள்ளுணர்வின் ‘தாம்பக்கயிறு’ தொடர்பு எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. குறிப்பாக, 1954ம் வருடம். அது வரை வரலாற்றுப்பாடங்களில் ஆர்வம் காட்டாத நான், சரித்திரத்துறையில் ஆழ்ந்து படித்தால் ஒழிய, ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறமுடியாது, என்ற முடிவுக்கு வந்தேன். இந்திய சரித்திரம் நீண்டது என்பதால், அதை விட்டு விட்டு, பிரிட்டீஷ் சரித்திரமும், அகில உலக வரலாற்றையும் படித்தேன், பரிக்ஷைக்கு. கிட்டத்தட்ட 1942ம் வருடத்தில், ‘வெள்ளையனே! வெளியேறு’ என்ற அண்ணல் காந்தியின் அறை கூவலால் என்னை தேசாபிமானம் உந்த, உந்த,அதனால் தனக்கு ஏற்பட்ட இன்னல்களை பொறுத்துக்கொண்ட என் தந்தையாரின் பெருந்தன்மையினால், இந்திய வரலாற்றையும், பாலபருவத்திலேயே படிக்கத் தொடங்கினேன். அந்த காலகட்டம், கிட்டத்தட்ட கடந்த ‘நந்தன’ வருடத்திற்கும் பலவருடங்கள் முந்தியது எனலாம். அந்த பின்னணியில் இன்று சிந்திக்கும்போது, பின் மண்டையில் ஒரு ‘பளார்‘ மின்னல்! அதுவும் கீற்று மின்னலாக, இந்த தொடர் தொடங்கியவுடனே அடிக்கிறது. அதாவது,
“குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹமன்றோ! ஊற்றுக்களும், உப நதிகளும், கிளை நதிகளும், காட்டாறுகளும், நீரோடைகளும், நீர் வீழ்ச்சிகளும், கால்வாய்களும், வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்காமாதா கங்கோத்ரியில் ஜனித்து, தேவப்ரயாக், ருத்ரப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி, பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து, தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்பசாகரத்தில் குளிப்பாட்டி, ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின் நீலநிறநீரில் அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்து கொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால் கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம் அனுப்பிவைத்தேன்...”
என்றெல்லாம் என் மனது எதிரொலித்தது. இது என்ன உப பீடிகை? அதுவும் தன்னை பற்றி. சரியான கேள்வி. இந்த பத்தி ‘என்றோ துவக்கம்’ அன்று. பின்னூட்டங்களுக்கு உடனக்குடன் பதில் அளிக்க முடிவதில்லை. அதுவும் இன்று/நேற்று வந்த டானிக் பின்னூட்டங்களுக்கு. தனிமடல்கள் பல வருகின்றன. ஒரு சிலர் தங்கள் மேல்படிப்புக்கு உதவுகிறது என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஒரு சிலர் உணர்ச்சித்துணைவர் ஆகிறார்கள். அவர்களுக்காக, இந்த உப பீடிகை.
விஷயத்துக்கு வருகிறேன். இந்த ஜாலியன்வாலா நந்தவன நிகழ்வு ஏப்ரல் 13, 1919 அன்றைய தனி ஓலம் அன்று. அந்த ஆலங்கன்றின் நுண்ணிய வித்து என்றோ விதைக்கப்பட்டது; கும்பினிக்காரன் வந்த சில வருடங்களுக்குள் சுதந்திர தாகம் நெஞ்சை உலர்த்தியது; ஒளரங்கசீப் காலத்திலியே உரமிடப்பட்டது; ஆனால் இந்த ‘நந்தன‘ வருடம் வருமுன், சில கிளைகள் உளுத்துப்போயினவே என்ற வ்யாகூலமும் இந்த பாரதவர்ஷத்தை அலைக்கழிக்கிறது. அதையெல்லாம் கருதி தான் ‘என்றோ துவக்கம்!‘ என்ற தலைப்பு.
(தொடரும்)
இன்னம்பூரான்
14 04 2012
|
No comments:
Post a Comment