அன்றொரு நாள்: ஏப்ரல் 13:1
கனல்
முனைவர் சைஃபுடீன் கிச்லூ சென்னை வந்திருந்தார். வரலாற்றில் பதிவு பெற்ற மனிதரென, அவரை பார்க்க சென்றிருந்தோம். அவர் பேசியது எல்லாம் நினைவில் இல்லை. ஆனால், தள்ளாத வயதில், மேஜையை ஓங்கி குத்திய வண்ணம், அவர் ஆவேசமாக பேசியது மட்டும் மறக்கவில்லை. 1947ல் இந்தியாவின் பிரிவினையை கடுமையாக எதிர்த்த ஒரே காங்கிரஸ்க்காரர், இவர் தான். அந்த கட்சியின் வரலாற்றுக்கிணங்க வெளியேறிய சான்றோர்களில், அவரும் ஒருவர். பிற்காலம், கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார். அவரும் டாக்டர் ஸத்யபால் அவர்களும்... அதற்கு பிறகு வருவோம். அண்மையில் வெளிவந்த ஒரு புதினத்தின் தலை மாந்தர்கள், இருவரும்.
- ரெளலட் சட்டம் என்று ஒன்றை, ‘விநாசகாலே விபரீத புத்தியின்’ பயனாக, கலோனிய அரசு இயற்றியது. அதனுடைய கர்த்தாக்களில் ஒருவர் ஸர்.ஸி.வி. குமாரஸ்வாமி சாஸ்திரி, மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜ். மற்றொரு இந்தியர் பீ.சீ.மிட்டர். அதனுடைய பிரதிகளை எல்லாம் எரித்து விட்டார்களாம், என்னிடம் இருந்தததை, தவிர. அதை த.ம.அ. வுக்காக, மின்னாக்கம் செய்ய ஒரு நண்பரிடம் கொடுத்தேன். அவர் உறக்கத்தில். கனலை கிளறி தீயை பற்ற வைத்த மட்டமான சட்டம் அது. விசாரணையில்லாமல் கைது செய்ய உதவியது. மேலும் அது பற்றி பேசப்படும்.
- இன்று அது பற்றிய முதல் கட்டம் மட்டுமே. ஏப்ரல் 13, 1919 அன்று தான், சில நாட்களாக ‘கண கண’ என்று சூடு தணியாத கனல் வேள்வித்தீயாக ஓங்கி வளர்ந்தது. அந்த ஆஹூதியில் சாம்பலானவர்கள்: ஒரு கைக்குழந்தை, 41 சிறார்கள், 337 மனிதர்கள். 37 வருடங்கள் கழிந்த பின் அங்கு சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபோது, உடல் நடுங்கியது. மனம் அழுதது. ஆத்மா கிலேசத்தில். எங்கள் குழுவில் இருந்த நான்கு பேரும் பேசிக்கொள்ளவில்லை, வருத்தம் மேலோங்கியதால்.
- மேலும் 56 வருடங்கள் கடந்த பின், இன்று, 1956ல் ஜாலியன்வாலா பாக் என்ற மாஜி நந்தவனத்தில் ஏப்ரல் 13, 1919 அன்று நடந்த சின்னாபின்னத்தின் சின்னங்கள் எம்மை வருத்தத்தில் ஆழ்த்தியபோது மனக்கண் முன் ஓடிய நவீன மஹாபாரதத்தின் குருக்ஷேத்திர யுத்தத்தின் சித்திர இதிஹாஸத்தின் முதல் அத்தியாயம், இன்று. முழு வரலாறும் சொல்ல 30 பக்கங்களாவது வேண்டும். ஆகவே, நீங்கள் யாவரும் சம்மதித்தால், அன்றொரு நாள்: ஏப்ரல் 13:1:கனல் தொடரட்டும்.
- ஏப்ரல் 6, 1919 அன்றிலிருந்தே, அமிருதசரஸ், கொந்தளிப்பில், மார்ச் மாதம் அந்த சட்டத்தை அமலில் கொண்டு வர முஸ்தீபுகள் நடந்த போது. அன்று ஒரு ஹர்த்தால். சில வன்முறை சம்பவங்கள். வஞ்சகமாக, முனைவர் சைஃபுடீன் கிச்லூவும், டாக்டர்.சத்யபாலும் கைது செய்யப்பட்டு தரம்சாலாவுக்குக் கடத்தப்பட்டனர், போலீஸால்.கவர்னர் போர்க்கால கட்டுப்பாடுகளை பிரகடனம் செய்தார். பக்கத்திலிருந்த ஜலந்தரிலிருந்து வந்து சேர்ந்த பிரிகேடியர்- ஜெனரல் டையர் தடியெடுத்தான், ஏப்ரல் 12ம் தேதி. கூட்டம் சேர்ந்தால், சுடுவேன் என்றான். நாளை நமக்கு பிறக்கும் ‘நந்தன’ வருடம் போல், ஏப்ரல் 13, பைஷாகி பண்டிகை. வருஷப்பிறப்பு, குரு கோவிந்த் சிங் அவர்களின் ஞாபகார்த்தாமாக. ஆயிரக்கணக்கான மக்கள், ஜாலியன்வாலா பாக் இல், தடையுத்தரவை மீறி. ஆதவன் அஸ்தமிக்கும் வேளை.மாலை ஐந்து மணி. அந்த கடங்காரன், கூர்க்கா கூலிப்பட்டாளத்துடன், அந்த நந்தவனத்தின் ஒரே குறுகலான நுழைவாயிலை அடைத்துக்கொண்டு, மாலை 5 50லிருந்து ஆறு நிமிடங்களுக்கு பீரங்கிகளிலிருந்து, மக்கள் அடர்த்தியாக இருந்தவிடமெல்லாம் சுட்டுத்தள்ளினான். தாங்கமுடியாமல், அங்கிருந்த கிணற்றில் குதித்து மாண்டவர்கள், 120 பேர்.
- உடனடி பலன்: பிரிகேடியர்- ஜெனரல் டையருக்கு, மேஜர்-ஜெனரலாக பிரமோஷன். படு பாவிகள்.
- தொடரலாமா?
- எதற்கும் ஒரு வேண்டுகோள். தயை செய்து, முதல் உசாத்துணையில் உள்ள படங்களை கண்டு, ஜாலியன்வாலா பாக் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துங்கள். அதை என்னிடம் சொல்லுங்கள்.
இன்னம்பூரான்
பி.கு: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஈடு, இணை அற்றவை. கலிஃபோர்னியா பல்கலைக்கழக்க்குழு, இந்த சட்டத்தின் ஒரு பிரதியை பாதுகாத்து, மின்னாக்கம் செய்ததை,இப்போது பார்த்தேன். அது உசாத்துணையில்.
உசாத்துணை:
|
|
No comments:
Post a Comment