மார்கரெட் தாட்சர் காலம் காலமாக ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள தேசபக்தர்கள் நிறைந்த நாட்டில் இருந்த தலைவர். எதிர்ப்பு இருந்த போதிலும், அவர் ரகசியத் தாக்குதலுக்கு ஆளானபோதும் அந்த நாட்டில் நிலவிய தேசபக்தி, கல்வி அறிவு, பொருளாதார மேம்பாடு இவற்றால் அவரால் ஒரு எஃகு மனுஷியாக இருக்க முடிந்தது. கோல்டா மேயரின் நிலைமை வேறு. தாக்கி அழிக்கப்படும் தருவாயில் இருந்த ஒரு இனத்தை வீரமிக்க, சுயநலமில்லாத, எதிரிகளை ஈவிரக்கமின்றி அழிக்கும் ஆற்றல்மிக்க இனமாக உருவாக்குவதிலும், சோதனையான நேரங்களில் விவேகத்தோடு நடந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்ட போதும், பிரிட்டிஷ் சைப்ரசிலிலுருந்து யூத இன மக்களை பிரிட்டிஷ் கண்காணிப்பையும் மீறி தோணிகளில் கொண்டு வந்து இஸ்ரேலில் குடியேற்றிய ஆண்மை மிக்க செயல்பாடுகளிலும் அவர் ஒரு இரும்புப் பெண்ணாக இருந்தார். ஆனால் இந்திரா காந்தி, அவருடைய தந்தையோடு உலகம் பூராவும் சுற்றி வந்து பெற்ற அரசியல் அறிவு, சாணக்கியத்தனம் இவற்றோடு, இளமையில் தந்தை சிறையில், தாய் காசநோய் நோயாளியாக அன்னிய மண்ணில் இந்த நிலையில் மகாத்மாவை அண்டி வந்தபோது, பெரிய இடத்துப் பெண்ணான உன்னால் என்ன சேவை செய்ய முடியும் என்றபோது, முடியும் என்று 'வானர சேனையை' உருவாக்கி டில்லி நகர மதக் கலவரத்தின் போது தனது வீரமிக்க செயல்பாடுகளால் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பெண்மணி. ஆனால் இந்திய அரசியலின் நெளிவு சுளிவுகள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்வது, காலை வாரி விடுதல், ஆள் கவிழ்த்தல் போன்ற அரசியல் செயல்பாடுகளால் மனம் வெறுத்து ஒதுங்காமல், சூழ்ச்சிக் காரர்களின் முகத் திரையைக் கிழித்து, எதிர்ப்பு எந்த பெரிய இடத்திலிருந்து வந்தாலும் கவலை இல்லை என்று பலரையும் பிடித்து உள்ளே தள்ளி, நாட்டில், முதன் முறையாக ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நேரம் தவறாமையையும் கொண்டு வந்த ஆண்மை படைத்த வீரப் பெண்மணியாகத் திகழ்ந்தார். அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலைமை 'ஜனநாயகக் கொலை' என வர்ணிப்பவர்கள் சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும். நாட்டில் ஆரோக்கியமான ஜனநாயகம் நிலவி வந்ததா? ஏமாந்தால் முதுகில் ஏறி சவாரி செய்யவும், அடுத்தவன் தேடிச் சேமித்தவற்றை ஒரே இரவில் கொள்ளை கொண்டு போகும் கொள்ளைக்காரர்கள் போல, நாட்டுக்கு எதையும் செய்யாமல், ஆதாயங்களை மட்டும் மலை மலையாய்ச் சேர்த்தவர்கள் நிறைந்த 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' எனும் நிலைமையை ஒரு பெண்ணாக நாணி ஒதுங்காமல், ஆண்மையாளராக இருந்து எமர்ஜென்சியில் நாட்டில் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தவர் இந்திரா. அந்த நிலைமை ஒரு பத்து ஆண்டுகளாவது இந்தியாவில் இருந்திருந்தால், நாடு ஓரளவு சீரடைந்திருக்கும். கொள்ளைக்காரர்கள் கையில் நாடு சிக்காமல் இருந்திருக்கும். ஜனநாயகம் எனும் பெயரில் நடந்த கேவலங்கள் தடுக்கப் பட்டிருக்கும். கம்யூனிஸ்டுகள் விரும்பியதுகூட ஜனநாயகம் அல்ல. பாட்டாளி மக்களின் சர்வாதிகாரம் தான். அந்த வகையில் இந்திரா காந்தியை பாரத புத்திரியாக, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, அவரை ஒரு ஆதர்ச பெண்மணியாகப் பார்க்கிறேன். அவரை வேறுவிதமாக விமர்சிப்பவர்களுக்கு அதற்கு உரிமை உண்டு. எனினும் என்போன்ற கருத்துடையவர்களும் நிறையவே உண்டு என்பதை வலியுறுத்தவே இந்த கருத்தாக்கம். நன்றி.
- |
No comments:
Post a Comment