Google+ Followers

Friday, March 1, 2013

அன்றொரு நாள் : ஜனவரி 30: அழுது புரண்டோம்.
அன்றொரு நாள் : ஜனவரி 30: அழுது புரண்டோம்.
1 message

Innamburan Innamburan Sun, Jan 29, 2012 at 6:42 PM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88 , coral shree , anantha narayanan nagarajan , Soumya Srinivasan
அன்றொரு  நாள் : ஜனவரி 30:
அழுது புரண்டோம்

ராஜவிசுவாசியான தாத்தா விக்கி விக்கி அழுதார். புதுக்கோட்டை களையிழந்து, அழுது புரண்டு, ஊர்க்காரா எல்லோருடனும் குளத்தில் குளித்தோம். பத்து நாட்கள் கழித்து அப்பா வந்த போது எல்லாரும் அழுதோம்.  காந்தி மஹான் தமிழ் இலக்கியத்தில் வாசம் செய்ய தொடங்கியதை, ஒரு வரி விடாமல், படியுங்கள். தற்கால இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். காந்தி ஸ்மரணம் செய்யுங்கள். ப்ளீஸ்! இனி பேச, எனக்குத் த்ராணியில்லை.
இன்னம்பூரான்
30 01 2012
Gand-10.JPG
**************
காந்தி - ஆளுமையின் தாக்கம்
pastedGraphic.pdf
சென்ற நூற்றாண்டின் மாபெரும் இந்திய ஆளுமைகளில் ஒருவர் மகாத்மா காந்தி. இவருடைய வாழ்வைப் போலவே மரணமும் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் தமிழகத்தில் கூடப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. காந்தியின் பிறந்தநாளான இன்று தமிழின் மூன்று முக்கிய ஆளுமைகளான தி.ஜானகிராமன், அசோகமித்திரன், வெங்கட் சாமிநாதன் மூவரும் தம் படைப்புகளில் காந்தியின் மரணத்தைக் குறித்துப் பதிவு செய்துள்ள பகுதிகளை வெளியிடுகிறோம்.
மோகமுள் - தி.ஜானகிராமன்
பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்திரன்
நினைவுகளின் தடத்தில் - வெங்கட் சாமிநாதன்

pastedGraphic_1.pdf

தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘மோகமுள்’ளில் காந்தியின் மரணத்தைக் குறித்ததொரு சிறு பகுதியைப் பதிவு செய்கிறார் தி.ஜானகிராமன். திருவையாறு போன்ற சிறு நகரத்திலும், சென்னை போன்ற பெருநகரத்திலும் சங்கீத நிகழ்ச்சியை ஸ்தம்பித்துப் போக வைக்கும் காட்சிப்படுத்தலாக காந்தி மரணத்தைப் பதிவு செய்கிறார் தி.ஜானகிராமன்.
*முதல் பக்கத்தில் மகாத்மா காந்தியின் படம் பெரிதாக அச்சாகியிருந்து.
இன்று அக்டோபர் இரண்டாம் தேதியா?
இன்றுதான் சம்பளம் கொடுக்கப்போகிறார்கள் என்று மணிபர்சிலிருந்த ஒரு ரூபாய் சொச்சம் சில்லறையைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.
மனுஷன் போய் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்… எட்டு மாசமாகிவிட்டது. ரங்கண்ணா செத்துப் போனபோது ஒரு தடவை அழுதேன். அப்புறம் ஏக்கம்தான் பிய்த்தது. இந்த மனிதன் போய்விட்டார் என்று கேட்டதிலிருந்து வேண்டியவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அழுகை குமுறிக் குமுறி வந்தது… டவுனில் தியாகராஜ ஆராதனை அன்று சாயங்காலம் கச்சேரி நடக்கிறபோது யாரோ ஒரு இளைஞன் வந்தான் . கச்சேரிக்கு நடுவில் ஓடி வந்து முகம் பேயறைந்தாற்போல் கோண, “அண்ணா” என்று வித்வானைப் பார்த்து ஒரு சத்தம் போட்டான். திடீரென்று வாத்யம், பாட்டு எல்லாம் நின்று விட்டது.
“காந்தி செத்துப் போயிட்டாராம் அண்ணா” என்று பொங்க, பொங்க, விசித்து அழத்தொடங்கி விட்டான் .
“என்னது?”
” எப்ப?”
” என்னடாது…. ஏய் பாலு ..”
” யார்ரா சொன்னா?”
” ரேடியோவிலே அண்ணா.”
ஒரே கலவரம். வெளியே கடைகளை அவசரமாக அடைத்துக் கொண்டிருந்தார்கள். பார்க்கிற முகம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது.
“என்ன பாபு?” யமுனா திடுக்கிட்டாற்போல் கேட்டாள்.
“ஒன்றுமில்லை.”
“என்ன?”
“ஒன்றுமில்லை யமுனா…” என்று பேசமுடியாமல் கண்டம் அடைத்துக்கொண்டது.
“என்ன சொல்லேன்” என்று அவன் படத்தைப் பார்ப்பதிலிருந்துதான் அவளுக்கு ஊகிக்க முடிந்தது.
“ஆமாம் பாபு, நானும் அம்மாவும் திருவையாத்திலே அன்னிக்கு கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தோம். திடீர்னு ஒருத்தர் வந்து சொன்னார். பந்தல் முழுக்க எழுந்து விட்டது. ஒரே அழுகை. ஒரு போலீஸ்காரன் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதான். அம்மா மூச்சை போட்டு விழுந்துவிட்டாள்.”
“உங்கம்மாவா?”
“ஆமாம்.”
கண்ணைத் துடைத்துக்கொண்டான் பாபு“புத்ரா என்று சுகனைப் பார்த்து கூப்பிட்டாராம் வியாசர். பிரிவு தாங்காமல் மரங்கள் கூட ஓலைமிட்டதாம். கூலிக்கு விழுந்த அடி மதுரை முழுவதும் விழுந்தது. இந்த உயிரை மரணம் பிடுங்கும்போது ஜீவராசி எல்லாம் நொந்து துடிச்சது.”
*


pastedGraphic_2.pdf
அசோகமித்திரனின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘பதினெட்டாவது அட்சக்கோடில்’ ஒரு அத்தியாயம் முழுக்கவே காந்தி மரணத்தைக் குறித்துப் பேசுகிறது. காந்தி மரணம் குறித்து கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்ததொரு சிறுவனின் ஆற்றாமையை வெகு அழகாக அந்த அத்தியாயத்தில் பதிவு செய்கிறார் அசோகமித்திரன். அந்த அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள் இங்கே.
சந்திரசேகரன் ‘புல்லடி’னின் மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தான். காந்தி பற்றி ஒரு வரி இல்லை. காந்தி சாகவில்லை.
‘ஏன் திருப்பிக் கொடுக்கிறாய்? உனக்கு வேண்டாமா?’ என்று அந்த மனிதன் கேட்டான்.
‘வேண்டாம். யாரோ காந்தி செத்துவிட்டார் என்று வதந்தி பரப்பினார்கள். அது உண்மையா என்று பார்த்தேன்…’
‘அது வதந்தி இல்லை பையா, நிஜந்தான். அதற்குத்தான் இங்கு இரவுக்காட்சி இல்லை’.
‘நிஜமாவா? நிஜமாவா?’
‘ஆமாம் பையா, என்ன செய்வது? நிஜந்தான்’.
‘பத்திரிகையில் ஒன்றும் இல்லையே?’
‘இந்தப் பத்திரிகை நான்கு மணிக்கே தயாரானது’.
‘ஒரு வார்த்தை கூட காந்தி பற்றி இல்லையே?’
‘அவர் அப்போது சாகவில்லையே?’
இதை அவன் வருத்தத்தோடு சொல்லிக்கொண்டே அங்கு ஒரு மூலையில் வைத்திருந்த ரேடியோவைத் திருகினான். உண்மையில் அது ரேடியோ என்று சந்திரசேகரன் நின்ற இடத்திலிருந்து தெரியவில்லை.
ரேடியோ தாளித்துக்கொட்டுவது போல ஏகப்பட்ட ஒலியெழுப்பியது. அவன் மூடி வைக்கவிருந்தவன் சட்டென்று உஷாரடைந்து நிமிர்ந்து உட்கார்ந்தான். ரேடியோ முள்ளை மிக நுணுக்கமாக நகர்த்தினான். ஒரு குரல் ஆங்கிலத்தில் ஒலித்தது. அவன் ‘பண்டிட் நேரு, பண்டிட் நேரு… கேள்’ என்ரான்.
ரேடியோ ஒலித்தது. ‘நம் வாழ்விலிருந்து ஒளி மறைந்துவிட்டது. எங்கும் இருள். இந்த பூமிக்கு ஒளி பாய்ச்சிய அந்த ஒளி சாமான்ய ஒளி அல்ல. அது இன்றையதை மட்டுமின்றி இன்னும் எண்ணற்றதை உட்கொண்டது. அது என்றும் வாழும் சாஸ்வதமான சத்தியத்தைப் பிரதிபலிப்பது”.
ரேடியோ ஏதேதோ சொல்லிக்கொண்டேயிருக்கச் சந்திரசேகரன் வெளியே வந்தான். எங்கோ ஆளில்லாக்காட்டில் இருக்கும் ஒரு சினிமாக் கொட்டகை அவனுடைய காந்தியைக் கொன்றுவிட்டது. காந்தி நிஜமாகவே செத்துப் போய்விட்டார்.
காந்தியை ஒரு முறை கூட அவன் பார்த்ததில்லை. காந்தி போன இடங்கள், தங்கியிருந்த இடங்களெல்லாம் ஏதோ கற்பனை உலக இடங்களாகத்தான் இருந்திருக்கின்றன. வர்தா, எரவாடா சிறைச்சாலை, சேவாக்கிராமம், சபர்மதி, நொவகாளி, ஹிந்தி பிரசார சபா… சென்னை ஹிந்தி பிரசார சபா வரையில் காந்தி வந்திருக்கிறார். ஆனால் ஒருமுறை ஹைதராபாத் சமஸ்தான்த்துக்கு வந்ததில்லை. எங்கெங்கோ மூலை முடுக்கெல்லாம் போயிருக்கிறார். சிகந்தராபாத்துக்கு வந்ததில்லை. இங்கே இருப்பவர்களுக்கு அவர் மேல் அன்பு கிடையாதா? அவர்களுக்கு அவருடைய தேவை இல்லையா?
காந்தீ! காந்தீ! சந்திரசேகரன் கத்திக்கொண்டே ஓடினான். அவன் கத்தியதைக் கேட்டுச் சில இரவுப்பூச்சிகள் ஒரு கணம் நிசப்தமாக இருந்தன. ஒரு பறவை பயந்துகொண்டு இருட்டில் மரக்கிளைகளுக்கிடையில் தத்தளித்துக் கிறீச்சிட்டது. சந்திரசேகரன் சாலையைவிட்டு பரேட் மைதானம் நடுவில் ஓடினான். நூற்றுக்கணக்கான படை வீரர்களும் ராணுவ வண்டிகளும் கூட நிரப்ப முடியாத அந்த அகண்ட வெட்ட வெளியில் காந்தீ என்று கத்திக்கொண்டே ஓடினான். பரேட் மைதானத்தைத் தூரத்தில் எலாப் புறங்களிலும் சாலைகள் எல்லை வகுத்தன. அந்தச் சாலைகளின் மரங்கள் கூட அந்த இருட்டில் தெரியவில்லை. மேலே விரிந்த வானம், நட்சத்திரங்கள். சந்திரசேகரனை ஒரு சிறு செடி தடுக்கியது. அப்படியே அவன் முகத்தின் மீது விழுந்தான். செம்மண் போட்டு சமவெளியாக்கப்பட்ட மைதானம். நிறைய செந்நிறக் கற்கள். சிறிதும் பெரிதுமானவை. இருட்டில் நிறம் ஒன்றும் தெரியாது. ஆனால் காயப்படுத்த அவை போதும். சந்திரசேகரன் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்து உதட்டை அடைந்தது.
சந்திரசேகரன் உட்கார்ந்தபடியே தரையைக் குத்தினான். ‘நீ செத்துப் போயிட்டயே!’ என்று மீண்டும் மீண்டும் குத்தினான். கால்களை உதைத்துக் கொண்டான்.
எழுந்து கொண்டான். இப்போது கை, காலெல்லாம் காயம். வேறேதோ திசை நோக்கி ஓடினான். அத்திசையில் கல்லறை இருந்தது. மறுபடியும் தடுக்கிக் கீழே விழுந்தான். ‘ஐயோ, உன்னை நான் ஒரு தடவைகூடப் பார்க்கலையே!’ என்று கத்தினான். மீண்டும் கையால் தரையை அடித்தான். அவனால் முடிந்த அளவு உரக்க “காந்தீ! காந்தீ!” என்று கூப்பிட்டான். அவன் கூப்பிட்டால் எங்கிருந்தோ யாரோ வந்துவிடப்போவதுபோல் நாற்புறமும் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வெறி அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்படியே கைகளால் தரையைப் பிராண்டினான். அது நன்கு கெட்டித்துப்போன தரை. இலேசில் நெகிழ்ந்து கொள்ளவில்லை. கைகளால் பிராண்டி எடுத்து சிறு அளவு மண்ணை அப்படியே மேலே எறிந்தான். மீண்டும் எழுந்தான். ஒரு திட்டமே இல்லாமல் ஓடினான். மறுபடியும் பலமாகக் குப்புற விழுந்தான். விழுந்தவன் தலையை அப்படியே முட்டிக் கொண்டான்.

pastedGraphic_3.pdf

தூரத்தில் ரேஸ் கோர்ஸ் அருகில் ஒரு மோட்டார் கார் விரைந்து சென்றது. அது குறைந்தது அரை மைல் தள்ளியாவது இருக்கும். ஆனால் சந்திரசேகரன் வண்டியை நோக்கித் தலை தெறிக்க ஓடினான். ஆனால் நொடிப்பொழுதில் அது அவன் பார்வையை விட்டுப் போயிற்று.
ஏமாற்றம் நிறைந்து வகை தெரியாதவாறு ஒலிகள் செய்து கத்தினான். கீழே புல்லையும் சிறு செடிகளையும் பிடுங்கி எறிந்தான். அவனுடைய கைகளில் எரிச்சல் மிகுந்தது.
மறுபடியும் சந்திரசேகரன் ஓடினான். அவனுடைய உடை இதற்குள் பல இடங்களில் கிழிந்து போய்விட்டிருந்ததை உணர முடிந்தது. பனி பெய்து கொண்டிருந்தது. அவன் உடலெல்லாம் எறிவது போலிருந்தது. அவனே துணியைக் கிழித்துக்கொண்டான். கீழே விழுந்தான்.
அவன் துருத்தி போல மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். உடலில் பல இடங்களில் காயம் பட்டு வலித்துக்கொண்டிருந்தது. அப்போது அவன் வெறி தணிந்ததாகத் தெரியவில்லை. அவனை யாரோ மோசம் செய்துவிட்ட உணர்ச்சியே மேலோங்கி நின்றது. அவன் ஆகாயத்தைப் பார்த்து, “காந்தீ! காந்தீ!” என்று கத்தினான். இடது கையால் கல்லைத்தூக்கி மேலே எறிந்தான். அது அதிகம் மேலே போகவில்லை. சீக்கிரமே அது தரையில் பொத்தென்று விழுந்த சத்தத்தைக் கேட்க முடிந்தது.
வானம் எப்போதும் போல இருந்தது. நட்சத்திரங்கள் எப்போதும் போல விஷமக்காரக் குழந்தைகளாக இருந்தன. அவன் சோர்ந்து போய்த் தரையில் விழுந்து கிடந்தான். இருட்டே விதவிதமாக மாறிக்கொண்டிருந்த மாதிரி இருந்தது. இருட்டுக்கும் வர்ணங்கள் உண்டு என்று தோன்றியது. இருட்டு ஒரு திரவம் என்று தோன்றியது. திரவமாகக் காற்றில் மிதக்கக் கூடியது என்று தோன்றியது. அவன் படுத்தபடியே தரையைத் தடவிப்பார்த்தான். அவன் அந்த மைதானத்தில் ஒரு கிரிக்கெட் பிட்ச் மீது படுத்திருந்தது தெரிந்தது. அவனே அங்கு எப்போதாவது கிரிக்கெட் விளையாடியிருக்கக்கூடும்.
அவனுக்கு வீட்டு நினைவு வந்தது. வீட்டிற்கு ஒழுங்காக மின்சாரம் வரத் தொடங்கி விட்டிருக்குமா? இல்லை, இன்னமும் எல்லோரும் இருட்டில் துளாவிக் கொண்டிருப்ப்பார்களா? ஒளி மறைந்து விட்டது. இவ்வளவு நேரம் இருட்டில் தூங்கியிருப்பார்கள். இல்லை, அவனுக்காக் காத்து விழித்திருப்பார்கள். இல்லை, எல்லோருமே விழித்திருப்பார்கள். காந்தி செத்துப்போனது பற்றிச் சரியாகப் புரியாமல் குழம்பி இருப்பார்கள். அழுது கொண்டிருப்பார்கள். யாருக்கும் சாப்பிட மனமில்லாமல் சமையலறையில் வைத்தது எல்லாம் வைத்தபடி இருக்கும். எலிகளும், கரப்பான் பூச்சிகளும் கும்மாளம் போடும். எருமை மாடு கவனிப்பார் இல்லாமல் கத்தும்.
அவனுக்கே அங்கே திறந்த வெளியில் ஜன சஞ்சாரமற்ற இடத்தில் அப்போது படுத்திருப்பது ஆறுதலாயிருந்தது. ஆறுதலாகத்தான் இருந்ததா? அவனுக்கு எல்லாமே சந்தேகமாயிருந்தது. அவனுக்கு மோசடி செய்யப்படுகிறது. இந்த காந்தி கூட மோசம் செய்துவிட்டார்.
அவனுக்குக் கோபமும், துக்கமும் பொங்கிக்கொண்டு வந்தது. அங்கே அந்த மைதானத்தில் இருப்பது சகிக்க முடியாத வேதனையாக இருந்தது. மறுபடியும் எழுந்து ஓடினான். அவன் எப்போதோ பத்திரிகையில் பார்த்த காந்தியின் புகைப்படங்கள் பிரக்ஞை மட்டத்துக்கு வந்தன. ஒரு இரவில் இஞ்சினை அலங்காரம் செய்திருந்தார்கள். அந்த இஞ்சின் முன்னால் காந்தியின் படத்தை, பெரிய அளவு முகப்படத்தை, பொருத்தியிருந்தார்கள். அவனுக்கும், காந்திக்கும் கடைசியாக ஏற்பட்ட தொடர்பு அவன் அந்தப்படத்தைப் பார்த்ததுதான். அந்த இஞ்சின்தான் காந்தி கடைசியாகத் தென் இந்தியாவில் பயணம் செய்த ரயில் வண்டியை இழுத்துச் சென்றிருந்தது. இந்த இருட்டு போன்ற இரயில் இஞ்சின். அவனே இப்போது அந்த இஞ்சின் போலத்தான் ஓடிக்கொண்டிருக்கிறான்.
அவன் ஓரிடத்தில் நின்று பெரிதாகக் கூக்குரலிட்டான். அப்படியே கீழே உட்கார்ந்து விம்மி, விம்மி அழுதான்.
*
pastedGraphic_4.pdf
‘நினைவுகளின் தடத்தில்’ என்ற தன்னுடைய சுயசரிதையில் காந்தி மரணம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் தமிழின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான வெங்கட் சாமிநாதன். அப்பகுதிகள் இங்கே.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாயந்திரம் பள்ளிக்கூடம் முடிந்ததும் உடையாளூருக்குப் போய்விடுவேன். பின் திங்கட் கிழமை காலை புறப்பட்டு சாயந்திரம் பள்ளிக்கூடம் முடிந்ததும் தான் தங்கியிருக்கும் பாட்டி வீட்டுக்குப் போவேன். இப்படித்தான் ஒரு சனிக்கிழமை காலை உடையாளூரில் என் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். காலை பத்து பதினோரு மணி இருக்கும். என் தங்கை யார் வீட்டுக்கோ போய்த் திரும்பிக்கொண்டிருந்தவள் என்னைத் திண்ணையில் பார்த்ததும் வேகமாக ஓடி வந்து “அண்ணா, காந்தி செத்துப் போய்ட்டாராம் அண்ணா, யாரோ சுட்டுட்டாளாம்” என்றாள். அவளுக்கு காந்தி பற்றி எதுவும் அறியாதவள். கிராமத்திலேயே வளர்ந்த 13-வயதுச் சிறுமி. யாரோ செத்துப் போய்ட்டா. எல்லோரும் பேசிக்கிறா, ரொம்ப பெரிய விஷயமா இருக்கணும். அண்ணா கிட்ட சொல்லணும். அண்ணாக்கு தெரியாத ஒரு விஷயம் தனக்குத் தெரிஞ்சு போச்சு” என்ற மூச்சிறைக்க ஓடி வந்தவள். ஆனால் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் அவள் பேரில் கோபம் தான் வந்தது. “உளறாதே. யார் சொன்னா உனக்கு? பேசாமே உள்ளே போ,” என்று கத்தினேன். என்னமோ நினைத்து ஆசையோடு வந்தவளுக்கு நான் வள்ளென்று விழுந்தது அதிர்ச்சியாக இருந்தது. அவள் இதை எதிர்பார்க்கவில்லை. பயத்தில் உள்ளே ஓடினாள்.
இதை யார் சொல்லியிருக்கமுடியும்? உடையாளூரில் யார் வீட்டிலும் ரேடியோ கிடையாது. தினசரி பத்திரிகையும் வலங்கிமானிலிருந்து தான் வரவேண்டும். அவன் இதற்குள் வந்திருக்கமுடியுமா? ஒரு சுதேசமித்திரனையோ, தினமணியையோ எடுத்துக் கொண்டு மூன்று மைல் வலங்கிமானிலிருந்து உடையாளுருக்கு வந்து கொடுத்தாகவேண்டும் என்ற அவசரம் அவனுக்கும் இல்லை. உடையாளுருக்கும் இல்லை. அவன் ஒரு மணி அளவில் தான் வருவான். அது பற்றி யாரும் புகார் செய்யப் போவதில்லை. பின் தான் தெரிந்தது வலங்கிமானிலிருந்து வந்தவர் ஒருவர் ஊருக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறார். அவர் சாவகாசமாக வலங்கிமானில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு ஊர் வந்ததும் முதல் காரியமாக ஊரில் நுழைந்ததும் பிள்ளையார் கோயிலைத் தாண்டி தென்படும் இரண்டாவது வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் part time போஸ்ட் மாஸ்டரிடம் சொல்லியிருக்கிறார். அவர் கார்டு கவர் மொத்தமாக வாங்கி வைத்து வேண்டியவர்களுக்குக் கொடுப்பவர். அங்கு தான் வலங்கிமானிலிருந்து வரும் தபால் காரன் தபால்களை எடுத்துச் செல்வதும் பட்டு வாடா செய்வதும். திண்ணையைத் தாண்டி இடைகழியை ஒட்டிய அறையின் ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டால் அந்த அறை எங்கள் ஊர் தபால் நிலையமாகி விடும். எங்கள் ஊரில் வெளியூர் விஷயங்கள் விஷயங்கள் உலக விவகாரங்களுக்கு அவரும் இன்னும் ஓரிருவரும் தான் அதாரிட்டி.
அங்கு ஒரு சிறிய கூட்டம் கூடியிருந்தது. கொஞ்சம் சலசலப்புடன். பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக செய்தி அங்கிருந்து பரவியது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மாவை யாரோ சுட்டு விட்டார்கள். முன்னாலேயே சில நாட்கள் முன்னால் இம்மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அப்போது யாருடைய உயிருக்கும் சேதம் இல்லை. தனக்கு ஏதும் விசேஷ பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம் காந்தி. அவர் பேச்சைக் கேட்காமல் பாதுகாப்பு கொடுத்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம். காந்தி இப்போது உயிரோடி இருந்திருப்பார் என்று பேசிக்கொண்டார்கள்.
காந்தி இறந்துவிட்டார், அதுவும் பிரார்த்தனையின் போது யாரோ ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாகி, மனத்தை நிலை குலையச் செய்தது. ஒரு மிகப் பெரிய மனிதர் இனி நம்மிடையே இல்லை. சில வருஷங்களுக்கு முன் அவரைப் பார்க்க அம்மையநாயக்கனூருக்கு மூன்று மைல் ஒரு ஒற்றையடிப் பாதையில் குறுக்காகச் சென்று பார்த்து வந்தது, பின் ஒரு வருடம் முன்பு மதுரையில் தமுக்கம் மைதானத்தில் அருணா ஆசஃப் அலி (காந்தி சொன்னதன் பேரில் தலைமறைவாக இருந்தவர் தானாகவே போலிஸிடம் சரணடைந்தவர்) பேச்சைக் கேட்கச் சென்றது, அவருடைய ஹிந்திப் பேச்சைக் கேட்கக் குழுமிய கூட்டம், தமிழ்நாட்டில் அவர் ஒன்றும் பிரபலமான தலைவர் இல்லை, இருந்த போதிலும், “இந்த மழையைக் கண்டு பயந்த நீங்கள் எப்படி சுதந்திரத்திற்காகப் போராடப் போகிறீர்கள்?” என்ற ஒரு வார்த்தையில் அந்தக் கூட்டம் மழையில் கலையாமல் உட்கார வைத்தது எல்லாம், காந்தியின் தாக்கம் என்பதைப் பின்னர் அறிந்து கொண்ட விஷயங்கள்.
பி.எஸ் ராமையா தன் மணிக்கொடி வரலாற்றில் எழுதியிருந்தார். தீபம் பத்திரிகையில் எழுதிய போது படித்தது. பி.எஸ். ராமையாவும் அவரது சகாக்களும் இரண்டாம் ஆட்டம் ஏதோ படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அப்போது வழியில் சற்று தூரத்தில் ஒரு குடிசையின் முன் நின்றுகொண்டிருக்கும் வயதான பெண் ஒருத்தி, இளம் பெண் ஒருத்திக்குச் சொல்லுகிறாள்: “அதோ வராங்க பாரு, காந்திகாரங்க, அவங்க கூடப் போ. அவங்க துணைக்கிருக்கப் போ. ஒரு பயமும் இல்லே” என்று சொல்கிறாள். எங்கோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு கிழவர், அவரை அடையாளம் காட்டும் ஒரு கதர் குல்லா போதும், இங்கு ஒரு குடிசை வாழும் பெண் நடு இரவின் தனிமையில் என்ற மாயத்தை எப்படிச் செய்தார் என்பதெல்லாம் பின்னர் நான் தெளிந்து வியந்தவை.
சில நாட்கள் முன்பு கூட கொலை செய்யும் எண்ணத்தோடு ஒருவன் கூட்டத்தில் காணப்பட்டும் எனக்குப் பாதுகாப்பு ஏதும் வேண்டாம் என்று சொன்ன மனிதர். இதெல்லாம் பின்னர் தெரிந்தவை. ஆனால் அன்று ஒரு பெரிய மனிதர் இனி இல்லை என்பது தான் மனத்தை என்னவோ செய்தது. அது ஒரு காலம். இன்று நாலு கருப்புப் பூனைகள் துப்பாக்கி சகிதம் காட்சி தருவது தன் பதவிக்கான அலங்கார அடையாளமாகி உள்ளதைப் பார்க்கும் போது, இது முற்றிலும் வேறு ஒரு காலம் என்று சலித்துக் கொள்ளத்தான் தோன்றுகிறது.
திங்கட் கிழமை பள்ளிக்கூடம் போன போது பள்ளிக்கூடத்தில் இரங்கல் என்ற பெயரில் ஏதும் நடந்ததா என்பது நினைவில் இல்லை. சுதந்திர தினத்தன்று கூட பள்ளியில் ஏதும் நிகழ்ந்த நினைவு இல்லை. சரித்திர பாடம் எடுக்கும் ‘சுந்தரம் பிள்ளை’, எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர், பாடம் நடத்துவதே உணர்ச்சி மயமாகத்தான் இருக்கும். அவர் தான் காந்தி பற்றி அவ்வப்போது ஒரு ஆவேசத்தோடு சொல்லி வருவார். பள்ளிக்கூடத்தில் கதர் வேட்டியும் கதர் ஜிப்பாவுமாக வரும் ஆசிரியர் அவர் ஒருவர் தான். மற்றது எதுவும் நினைவில் இல்லை. காந்தியின் அந்திம யாத்திரையும் அந்த மக்கள் வெள்ளத்தையும் பின்னர் யமுனை நதிக்கரையில் நடந்த தகனமும் செய்திப் படங்களில் பின்னர் பார்த்தது தான். மௌண்ட் பாட்டன் தம்பதியர் தரையில் சம்மனிட்டு உட்கார்ந்திருந்தது, அது தான் அவர்கள் தரையில் அப்படி உட்கார்ந்தது முதல் தடவையாக இருக்க வேண்டும், மனத்தில் ஒரு அழியாத சித்திரம்.
பின்னர் சில நாட்களுக்குப் பிறகு, ஒரு விசேஷ ரயில் மூலம் மகாத்மா காந்தியின் அஸ்தி கலசம் தில்லியிலிருந்து கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது சமுத்திரத்தில் கரைக்க. அந்த வண்டியில் ராஜாஜியும் அவினாசி லிங்கம் செட்டியாரும் இருந்தனர் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் அந்த வண்டி நின்றது, மக்கள் கூட்டம் காத்து இருந்தனர். அஸ்தி கலசத்தைத் தரிசிக்க. எனக்கு இப்போது சரியாகச் சொல்ல முடியவில்லை. அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாகக் கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்ததும் அஸ்தி கலசத்தைத் தரிசித்ததுமாக ஒரு நினைவு பதிந்திருக்கிறது.
அந்த வாரக் கடைசியில் கிராமத்துக்குத் திரும்பிய போது கிராமத்துக்கு வந்த ஒரு புதியவரைச் சந்தித்தேன். உடையாளூர்க் காரர் தான். இருபத்து ஐந்து - முப்பது வாலிப வயதினர். தில்லியிலிருந்து வந்தவர். அழகான முகம். கட்டுக் குடுமியோடு இருந்தார். நிறைய பேசுவார். என்னை மதித்து வெகு சகஜமாக என்னை அவருக்குச் சமமாக எண்ணிப் பேசிக்கொண்டிருந்தாரே என்று இப்போது அது பற்றி நினைக்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தில்லி பற்றியும், காந்தி பற்றியும் பேசிக்கொண்டே இருந்தார். தனக்கு வந்த கடிதத்தைக் காட்டினார். ஆச்சரியமாக அது ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தின் முதல் வரியே “காட்சே நாமக் ஏக் சண்டால் நே பாபுஜிகி ஹத்யா கர்தி” (காட்சே என்னும் ஒரு சண்டாளன் பாபுஜியைக் கொன்றுவிட்டான்) என்றுதான் ஆரம்பித்திருந்தது.
*
பி.கு. 
1. எனக்கு இந்த ‘கட் & ஒட்’ மகாஜனங்களை பிடிக்காது. இருந்தும், ஒருவர் அனுப்பியதற்கு நன்றி. அவர் அதை அநாமதேயமாக கூறியதால், மூலத்தைத் தேட நேரம் பிடித்தது. ஆனால் கிடைத்தவிட்டது:சொல்வனம். 
2.ஆம். அந்த வண்டியில் ராஜாஜியும் அவினாசி லிங்கம் செட்டியாரும் தான் இருந்தனர். நான் புதுக்கோட்டை ரிசப்ஷனிஸ்ட்.
உசாத்துணை: