Google+ Followers

Thursday, July 21, 2016

'தானாய் வந்ததால் வீணாய் போனதோ வேதம்!'

இன்னம்பூரான் வலைப்பூ வாசகர்களில் சிலருக்கு இந்த கட்டுரை உகந்ததாக படலாம் என்பதால், தினமலருக்கு நன்றி கூறி, இத மீள்பதிவு செய்கிறேன்.
இன்னம்பூரான்
22 07 2016'தானாய் வந்ததால் வீணாய் போனதோ வேதம்!'


பதிவு செய்த நாள்
20
ஜூலை
2016 
23:44


திவாகர நிகண்டு, தொல்காப்பியம், திருமந்திரம், பொய்யாமொழி உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில், வேதங்கள் பலவாறாக போற்றப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வேதங்கள் மொழி பெயர்க்கப்படாமல் இருந்தது. இந்த குறை, 19ம் நுாற்றாண்டில், த.ப.ராமசாமி பிள்ளையால் களையப்பட்டது.

இதுகுறித்து, சமூக, பண்பாட்டு ஆய்வாளர் ரெங்கய்யா முருகன், நம்மிடம் பகிர்ந்து கொண்டது: 
தெரியாததை சொல்வது வேதம் என்பர். இடப தேவர் அருளியது; புறா வடிவம் கொண்ட கடவுள் உபதேசித்தது; இருடிகளால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற பல்வேறு கருத்துக்கள், வேதங்கள் பற்றி உலவு கின்றன. இருப்பினும், இருடிகள் தான், வேதங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தினர். 
ஆங்கிலேயர் வருகைக்கு பின், அச்சு ஊடகம் வளர்ச்சியடைந்தது. அது, கிறிஸ்தவத்தை பரப்ப உதவியதுடன், இந்திய வேதங்களை ஆங்கிலம் உள்ளிட்ட மேலை மொழிகளில் மொழிபெயர்க்க வைத்தது. 
வேதகிரி முதலியார், வேதக் கருத்துகளை தமிழில் கட்டுரைகளாக எழுதினார். 1898ல், சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு, தன் பத்திரிகையில், உபநிடதங்கள் குறித்த குறிப்புகளை வெளியிட்டார். பாரதியாரும், வேதக் கருத்துக்களை எள்ளி
நகையாடி உள்ளார். 
பத்தொன்பதாம் நுாற்றாண்டில், வியாசர்பாடி கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமி கள், சூளை ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள், பெரம்பூர் வீர சுப்பையா சுவாமிகள், வண்ணை நாராயணதேசிகர் உள்ளிட்ட வடசென்னை மடங்கள், பல்கலைக்கழகங்களைப் போல் செயல்பட்டு, பன்மொழி வேதாந்த கருத்துக்களை, தமிழில் வெளியிட்டன.
கசப்புணர்வு

குறிப்பாக, 'திருவொற்றியூரான் அடிமை' என அழைக்கப்பட்ட, த.ப.ராமசாமி பிள்ளையின் வேத மொழிபெயர்ப்பு பணி மிகச்சிறந்தது. அவர், சிறுவனாக இருந்தபோது, கரந்தையில் உள்ள கருவேலநாதர் சன்னிதியில் வேதம் கேட்க போய், அந்தணர்களால் திருப்பி அனுப்பப்பட்டார். அந்த நிகழ்வு, அவருக்குள் கசப்புணர்வாகவே இருந்தது
அவர், பொருளாதார ரீதியாக வளர்ந்ததும், தமிழில் வேதத்தை கேட்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில், காசிவாசி சிவானந்த யதீந்தர சுவாமிகள் கரப்பாத்திர சுவாமிகளின் அனந்த ஆசிரமத்திற்கு வந்தார். அதன் நிர்வாக பொருப்பாளரான முக்தானந்த சுவாமிகள், த.ப.ராமசாமி பிள்ளையிடம், சிவானந்த யதீந்தர சுவாமிகளை அறிமுகப்படுத்தி, 'நீங்கள் இருவரும் இணைந்தால், திருமகளின் கடாட்சமும், கலைமகளின் அருள்வாக்கும் தமிழுக்கு கிடைக்கும்' என, அறிவுறுத்தினார்.
அதனால், 1930களில், த.ப.ராமசாமி பிள்ளை பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, அனைத்து மொழிகளிலும் உள்ள வேதத்தின் உரைகள், வேதாங்கங்கள், நிருக்தம், நிகண்டு உள்ளிட்டவற்றை தருவித்து, காசிவாசி சிவானந்த யதீந்தர சுவாமிகளிடம் கொடுத்து, வேத மொழிபெயர்ப்பை துவங்கினார். 
மூன்றாண்டுகளுக்குள் சாம வேதத்தின் சம்கிஹிதா பாகத்தை, பதவுரை, கருத்துரை, குறிப்புரைகளுடன் மொழிபெயர்க்க வைத்தார். 
அவர்களுடன், அ.கோபால் மேனன், வடமொழி பதிப்பையும், டாக்டர் ராசாபகதுார் நாயகர், ஸ்டீவென்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு பிழைதிருத்தம் செய்ய உதவினர். பின், பாடியத்தை தழுவி நாகரம், கிரந்தம், தமிழ் என 3 வடிவங்களில், 2 தொகுதிகளை அச்சிட்டு உயர் ரக காலிக்கோ பைண்டிங் செய்து, ஆயிரம் பிரதிகள் பதிப்பித்து, தமிழர்களுக்கு இலவசமாக கொடுத்தார். 
த.ப.ராமசாமி பிள்ளை, தன் பதிப்புரையில், 'நாம் வேதத்தை, இன்னதென்று உணர முடியாமல் அறியாமையில் கட்டுண்டு கிடந்தோம். அதை உணர்ந்து, நமது திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானார், வேதங்களை தமிழிலும் எழுதுமாறு பணித்தருள, அப்பணியை தலைமேற்கொண்டு, செயற்கரிய செய்யும் பெரியாரை கொண்டு தமிழில் மொழிபெயர்த்து, முதலில் சாம வேதத்தை பதிப்பித்து உலகம் உய்யுமாறு நன்கொடையாக அளித்தனம்.
'இப்போது, கிருஷ்ணா எசுர் வேதத்தையும் மொழிபெயர்த்து நன்கொடையாக அளிக்கிறோம். மேலும் அதர்வண வேதம் முதலியவற்றையும் அளிக்க உள்ளோம். தானே வந்தது வீணே போனது என்றபடி, இதை வீணாக்காமல் அதன் பொருளுணர்ந்து உய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார். 
நன்கொடையாக...
இந்த வேத மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்காக, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு மேற்கு மூலையில், பத்திரகிரியார், வள்ளலார், பட்டினத்தார் உள்ளிட்டோரின் சிலைகளுடன் கூடிய அழகிய கல்மண்டபம் எழுப்பி, அதற்கு கும்பாபிஷேகம் நடத்தி, இந்த நுாலினை நன்கொடையாக வெளியிட்டார்.
அவரை தொடர்ந்து, அதே காலகட்டங்களில் சிவத்தியானந்த மஹரிஷியும், மணக்கால் ஆர். ஜம்புநாத ஐயரும் சாம வேதங்களின் சில பகுதிகளை தமிழில் வெளியிட்டனர். என்றாலும், த.ப.ராமசாமி பிள்ளையின் மொழிபெயர்ப்புகளை, அரசோ, மடங்களோ, வேதாந்திகளோ மீண்டும் பதிப்பித்து மீட்டெடுக்காதது, தமிழின் சோக வரலாறாக உள்ளது.


  • நமது நிருபர் -

Retrieved with thanks from Dinamalar on July 22, 2016

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

இன்னம்பூரான் பக்கம் [8] பாமரகீர்த்தி [1]

இன்னம்பூரான் பக்கம் [8] 
பாமரகீர்த்தி [1]Friday, July 22, 2016, 4:59
பிரசுரம்: http://www.vallamai.com/?p=70528
இன்னம்பூரான்
21 07 2016

“ என்னுடைய நோயாளிகளில் 95% சமுதாயத்தில் மிகவும் கீழ்படிந்த நிலையில் வறுமையில் உழலும் திக்கற்றவர்கள். அவர்களின் எதிர்நீச்சல்களை காணும் போது நம்மால் அவர்களுக்கு நல்லதொரு மாற்றம் தர இயலும் என்பது கண்கூடு”
-டாக்டர் டொனால்ட் மெக்லார்ட்டி.

“… சமுதாயத்தில் உரத்த குரல் எழும் வரை, அன்றாடம் நிகழும் அவலங்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”
-இன்றைய பாமரன்
வரலாற்றின் கதாநாயகர்கள் ராஜா ராணியும், அமைச்சர்களும், தொழிலதிபர்களும் தான். சுருங்கச்சொல்லின் பிரபலங்கள். அங்கும் இங்கும் மிகை இருக்கலாம். உண்மை நீர்த்துத் தென்படலாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பாடப்புத்தகத்தில் கூட போட்டுவிடுவார்கள். 

ஆனால், பெரும்பான்மை மக்களை பற்றி பேச்சு மூச்சு கிடையாது. அவர்களின் சாதனை சேற்றில் மறைந்த மலர். வீடு தோறும் தலைமாந்தர்கள் மேலாண்மை வகித்துள்ளனர். ஜெயகாந்தனின் கெளரிபாட்டியின் யுக சந்தி ஒரு புரட்சி. அவள் மாதிரி தான் என் நண்பரின் பிராமண சம்பிதாயத்தை போற்றும் அன்னை நாமகிரி அம்மாள் பேத்திகளின் கலப்பு மணத்தை ஆதரித்தார். தம்பி காளைராஜனின் முன்னோர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தார்கள், தாயகத்துக்கு. அதே மாதிரி, இரண்டாவது உலகப்போரின் காலகட்டத்தில். குஞ்சும் குளவானுமாக குழந்தைகளை தூக்கிக்கொண்டு மலேசியா- சிங்கப்பூரிலிருந்து கடைசியாக கிளம்பிய ஜப்பான் கப்பலில் இலங்கைக்கு வந்து, கால்நடை, கட்டைவண்டி, கரிமூட்டை பஸ் என்று வந்த எச்சுமி என்ற இளம்பெண்ணுக்கு தலையாய பிரச்னை: பசங்க பாம்பன் பாலத்தில் பிடிக்க முடியாதபடி ஓடியது தான். சோறு தண்ணி இல்லாமல், வெடித்த பாதங்கள் வலித்ததும், நாட்கணக்கில் தூங்காததும் அவருக்கு பிரச்னையாக படவில்லை. அவரை தினமும் பார்க்கும்போது, பாமரகீர்த்தி எழுத விழைவேன். துவக்க, ஒரு அதிசயப்பிறவி பாமரனை தேடிக்கொண்டிருந்தேன். இன்று தான் அவர் கிடைத்தார். போகப்போகப் பார்க்கலாம்; பாமரனுக்கா பஞ்சம்!

இன்றைய பாமரகீர்த்தி கதாநாயகன் டாக்டர் கெளசிக் ராமையா. அவருடன் உரையாடிய ஜூலெஸ் மார்கன், அவர் இராப்பகல் பார்க்காமல், சம்பாத்தியத்தை அறவே மறந்து, ஏழை பாழைகளுக்காக 24 x 7 ஊழியம் செய்வதை கண்டு, மாய்ந்து போகிறார். அதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது அவர் பணி புரியும் நாடு ~ டான்சானியா. அந்த நாடு ராமையாவை என்றோ தத்து எடுத்துக்கொண்டு விட்டது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னாலிருந்து குடும்ப வணிகம் முந்திரிக்கொட்டை ஏற்றுமதி. ராமையா சொல்வதைப்போல, ஆப்பிரிக்க நாடுகளில் குடி பெயர்ந்த இந்தியர்கள் குடும்பத்தொழில்களை வகுத்துக்கொண்டு திரவியம் தேடினர். 
அந்த தொழிலில் வாழ்க்கையை தொடங்கிய ராமையாவுக்கு வானூர்தி பொறியியலில் இருந்த ஆர்வம்,சாக்கியமுனிக்கு ஞானோதயம் கிடைத்தது போல மக்களுக்கு மருத்துவம் மூலமாக தொண்டு செய்வதற்கு மாறியது. மும்பைக்கு வந்து மருத்துவத்தில் பட்டம் பெறுகிறார். டான்சானியாவின் தலைநகரான தாருல் இஸ்லாம் நகரில் மேற்படிப்பு. அதிர்ஷ்டவசமாக அவருக்கு அமைந்த ஆசான்கள் டொனால்ட் மெக்லார்ட்டியும், சாம்ஸன் பாஸீண்டாவும் அவருக்கு மருத்துவம் மட்டும் சொல்லிக்கொடுக்கவில்லை. மனித நேயப்பாடங்களையும் சொல்லிக்கொடுத்தார்கள். தன்னுடைய குடும்பம் இவரது படிப்புக்காக செய்த தியாகங்களை ரோமம் சிலிர்க்க, பகிர்ந்து கொண்ட ராமையா வறுமையின் கொடுமையினால் மருத்துவ நிவாரணம் கிடைக்காத ஏழைகளின் பாதிப்பு தன்னை திசை திருப்பியது என்கிறார்.

‘தட்டுங்கள்; கதவு திறக்கும்’ என்பார்கள். இவரை தேர்வுக்கு பரிசோதிக்க வந்த டாக்டர் ஜார்ஜ் ஆல்பெர்ட், மேற்படிப்புக்கு இவரை இங்கிலாந்துக்கு அழைத்து செல்கிறார். அதை முடித்து விட்டு தாய்வீடு திரும்பிய ராமையா, “மேல்நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கு உள்ள இடைவெளியை குறைக்க செல்வம் இன்றியமையாதது இல்லை.’ என்ற தீர்மானத்துடன் நான்கு டாக்டர்கள், மூன்று அறைகள், பத்து படுக்கைகள் கொண்ட ஒரு தரும ஆஸ்பத்திரியுடன் தன்னை இணைத்துக்கொண்டார், 1982ல். அது தற்காலம் அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில், நீரழிவு நோய்க்கும், ஹெச்.ஐ.வி./ஐட்ஸ் சிகிச்சைக்கும் பெரிய ஆஸ்பத்திரியாக இயங்குகிறது. நாட்தோறும் 600 நோயாளிகள், 45 படுக்கைகள். இதுவே சிறியதாகத் தோன்றும், நாம் அவர்கள் கடந்த இன்னல்களை அறியாவிடின்.

1990 காலகட்டத்தில் ஹெச்.ஐ.வி./ஐட்ஸ் உயிர்கொல்லிகள். ராமையா உடனே அமெரிக்கா சென்று அது பற்றி படித்து திரும்பி வந்து அநேக நோயாளிகளுக்கு மறு வாழ்வு அளித்தார். டைப் 1 டயாபிடீஸ் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை. இவர்கள் எல்லாரும் வந்து, உங்களால் எங்கள் வாழ்க்கைக்கு புனருத்தாரணம் தரமுடிந்தது என்று சொல்வது தான், அவருக்கு பரிசு. அவர் தலைமை வகிக்கும் அந்த ஆஸ்பத்திரியின் பெயர்: ஶ்ரீ ஹிந்து மண்டல் ஆஸ்பத்திரி.
சஹாரான் ஆப்பிரிக்கா பிராந்தியத்தின் உலகளாவிய டயாபிட்டீஸ் நிறுவனத்தின் தலைவரும் இவரே. 24 x 7 டாக்டர் கெளசிக் ராமையாவின் பொழுது போக்கு: தபால் தலை சேகரம்.
டாக்டர் கெளசிக் ராமையா போன்ற பாமரகள் நிறைந்த நல்லுலகம் இது.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://www.eahf.net/wp-content/uploads/2015/05/kaushik-300x300.png

படித்தது:

இன்னம்பூரான்


http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com