Friday, August 1, 2014

பெருங்களத்தூர் நோட்ஸ் 1 அலை பாயுதே !

பெருங்களத்தூர் நோட்ஸ் 1
அலை பாயுதே !
இன்னம்பூரான்
01 08 2014

தர்மமிகு சென்னை நாலாபக்கமும் விரவி வருவதால், வண்டலூர் மிருக கண்காட்சி
சாலைக்கு அருகில் உள்ள பெருங்களத்தூர் என்ற மனித கண்காட்சி சாலையின்
மவுசு ஏறி வருகிறது. புதிய பெருங்களத்தூரின் பிறவி வேறு. அருகே கானகம்
வேறு மெருகேற்றுகிறது. சுற்று வட்டாரத்தில் வேங்கை நடமாடினாலும், இங்கு
புகலடைந்தேன். கிட்டத்தட்ட தமிழில் நாற்பது நூல்கள் எழுதிய சான்றோன்
ஒருவரின் நட்பு கிடைத்தது. அவர் ஜே.கே.யின் தத்துவங்களை பற்றி ஒரு
அருமையான நூல் படைத்திருக்கிறார். அதை படித்துக்கொண்டிருக்கிறேன்.இது வரை
எழுதியதற்கு அவருடைய முன்னுமதி இருப்பதால், எழுதிவிட்டேன்.  அவருடன்
அளவளாவுவது ஒரு இனிய அனுபவம்.

அவரும் நானும் பல விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். அத்தருணம், என்னுடைய
ஜனவரி 1953ம் வருட குறிப்பு ஒன்று தற்செயலாக கிடைத்தது. அதில் ‘The
Psychology of Study’,வீணடிக்கப்பட்ட நேரம், ஆனந்த விகடனில் தேவன் எழுதிய
கதையை பற்றிய விமர்சனம்,அரிஸ்டாட்டில், என்னுடைய சிநேகிதி, அண்ணல்
காந்தி, சர்தார் படேல், கன்ஃபூஷியஸ் எல்லாரும் உலவுகிறார்கள். இருவரும்
இதை படித்துவிட்டு, நினைவலைகளில் மிதந்தோம். அதன் நற்பயனாக, “Master
Kong” (Chinese: Kongzi), Confucius எனப்படும் சீன தத்துவ மேதையிடம்,
எங்கள் சிந்தனை அலை பாய்ந்தது. நண்பர் வயதானவர்.ஓய்வெடுக்க சென்று
விட்டார். கன்ஃபூசியஸ்ஸிடம் வசமாக மாட்டிக்கொண்டேன். தமிழில் அவரை பற்றிய
செய்திகள் குறைவாகத்தான் காணப்படுகின்றன. சாக்ரட்டீஸ் மாதிரி அவரும்
பெரிதும் புகழப்பட்டவர், நிந்திக்கப்பட்டவர்;அவரே தெய்வம்;அவரே சாத்தான்!
எனினும், உலகமெங்கும் சிந்தனைக்களங்களில் இன்றளவும் பேசப்படும் அந்த
ஞானியை பற்றியும் அவருடைய சூத்திரங்களை (Analects (Chinese: Lunyu)
பற்றியும் நாம் அறிந்தது சொற்பம் என்ற தோற்றம். எனவே, அபரிமிதமான
துணிவுடன், அவரை பற்றிய இந்த தொடரை துவக்கியுள்ளேன் பார்க்கலாம்!

இங்கு ஆசான் எனப்படுவது அவரே.அரசாங்கமும், பொது நடப்புகளும் என்ற
தலைப்பில் அவர் எழுதிய சூத்திரங்கள் இந்திய சமுதாய முன்னேற்றத்துக்கு
பொருத்தமானவை. இன்றைக்கு முதலாவது:

‘ஆயிரம் தேர்கள் ஆடி வரும் நாட்டில், கண்ணியம், சிக்கனம், கொடை,
காலத்துக்குகந்த வேலை வாய்ப்பு, தரமுயர்ந்த வணிகம் ஆகியவற்றின் மீது
தீவிர கவனம் தேவை என்று ஆசான் அவர்கள் கூறினார்.

‘The Master said: In ruling a country of a thousand chariots there
should be scrupulous attention to business, honesty, economy, charity,
and employment of the people at the proper season.’

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


-
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

சிரிச்சு மாளலெ! ~10

சிரிச்சு மாளலெ! ~10


இன்னம்பூரான்
01  08 2014

சமீபத்தில் அழகர் கோயில் போயிருந்த போது அங்கு வானர மேலாண்மையை கண்டு மகிழ்ந்தோம். ஓடோட, என் புத்திரி அவற்றை படம் பிடித்துக்கொண்டாள். அனுப்பவதில் தான் தொய்வு. அமெரிக்கா போன பிஸி தான். இன்றைய செய்தி ஒன்றை பார்த்து விட்டு என் கவலைகள் பறந்தோடின. தனியாக இருக்கும்போதே சிரித்துக்கொண்டிருக்கிறேன்! கொஞம் லூசு தான். என்ன பண்றது?

மஹா கனங்கள் - ராஹுலிலிருந்து மோடி வரை - வாழும் டில்லியில் ஸ்க்ரீச் என்று வானர இசை கேட்டால் அது மந்தியில்லை. கூலிக்கு  ‘ஸ்க்ரீச்சும்’ நரோத்தமர்கள் (சொல்லிப்பிட்டேன்; நான் யாரையும் குறிப்பிடவில்லை.) குரங்குகளை விரட்டுகிறார்களாம்! ஆனானப்பட்ட வெங்கையா நாயுடு அவர்கள் நேற்று ராஜ்ய சபையில் தாக்கல் செய்த அறிக்கை படி மனித வானரங்கள் வானர வானரங்களை அச்சுறுத்தி விரட்டுகிறார்களாம். நம்ம பனையூர் பேட்டைக்கு அருகில் வேங்கை புலி தரிசனம் கொடுத்ததால், பெருங்களத்தூருக்கு  பறந்தோடி வந்தேன். இங்கும் ஒன்று சுத்துகிறதாம். இனி, காலை 4.00 மணிக்கு உலாவ செல்லாமல் 4.01க்கு போகவேண்டும். கையில் ஒரு தடி வேறே. இதை விடுங்கள். யானை கூட்டங்கள் வந்து கந்து வட்டி வாங்கி நட்ட கரும்பு தண்டுகளை அபேஸ் செய்து விடுகிறதுகளாம். அவங்க பேட்டையில் அனாயசமாக, தரகர்களுக்கு அழுது விட்டு, குடித்தனம் போன விபசாயிகள் பட்டாஸ் வெடித்து அவற்றை துரத்த முனைகிறார்களாம். சாமி! டில்லிக்கு போங்க. நம்ம பெரிசுகள் அங்கே வானர விரட்டல் மன்னர்கள். சிலரை புலி வேஷம் போட்டுக்கொண்டு இங்கே வரச்சொல்லுங்கள். நான் காலாகாலத்தில் வாக் போக செளர்யமாக இருக்கும். ஆனை வேஷம் எப்டிப் போட்றது? நம்ம க்ரூப்லெ குண்ட்ன்ஸ் இல்லையே. எதற்கும் பிள்ளையாரப்பனை துணைக்குக் கூப்பிடவேண்டாம். அவர் அந்தப்பக்கம். உங்க கற்பனை யானையை தட்டி எழுப்புங்கள். பல தீர்வுகள் கிடைக்கும். சில பைத்தியக்கார பரிந்துரைகள்:
  1. ஆனைக்குட்டியை அபேஸ் பண்ணி கொண்டுவந்து விட்டு ப்ளேக்மைல் செய்யலாம்; அதற்குள் ஆனைக்குட்டி உம்மை மோதி மிதித்து விடும்.
  2. பட்டாஸ் வெடித்து விரட்டலாம். நம்ம இந்திய பட்ஜெட் மாதிரி புஸ்வாணமாக அது போய்விட்டால், கரும்பும் போச்சு, வீட்டுக்கூரையும் போச்சு.
  3. ‘கும்கி’ வைத்து விபீஷண சரணாகதி அடையச்சொல்லலாம். அந்த யானைக்கும் உருண்டை சாதம் கொடுக்க ஐவேஜி இருக்கா?
  4. நடக்ககூடிய ஒரு வழி: ஒரு எலிக்கு பயிற்சி கொடுத்து யானையின் காதில் புகுத சொல்லலாம். ஆனால் ஆனையுடன் எலியும் போய்விடும்! ஒரு எலிப்பட்டாளம் வளர்த்துக் கொள்க.
  5. கரடி வந்தா என்ன செய்வது? யான் அறியேன். மதஎசுஇந்திரனை கேட்டால், தீர்வு கிடைக்கலாம்.
-#-
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, July 29, 2014

நெடுநல்வாடை 6 :பனையூர் நோட்ஸ் 6

பனையூர் நோட்ஸ் 6


இன்னம்பூரான்
29 06 2014

நெடுநல்வாடை  6
‘...பல்வேறு மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில், குளிர்ச்சியான குருந்த மரக்கிளைகளின் குருத்துகளில் இருந்து மழைத்துளிகள் இடையறாது விழுந்து கொண்டேயிருந்தன...’
(தொடருகிறது)
புல்லின் மீது உறையும் பனித்துளி மிருதுவானது; மாசற்றது; மென்மையும் வெண்மையும் கலந்த ஒரு ரசவாதம். இயற்கையின் கவின்கலை. நெடுநல்வாடையின் மாக்கள் தெருவில் அலைந்து திரியும் காட்சிக்கு முன் சோலையின்பம் காண்போமே! மழைத்துளியின் படைப்புத் தானே இந்த சோலை.
நாம் குறுந்தொகையில் வரும் சோலைகளையும், கிட்கிந்தை மலை, பள்ளத்தாக்கு, கானகங்களில் ஏறி இறங்கி, ஆச்சாமரங்களையும், சந்தனமரங்களையும் பார்த்து மகிழ்ந்த ராமலக்ஷ்மணர்களையும், மஹாகவி பாரதி குயில்பாட்டு எழுதிய மாந்தோட்டத்தையும் (அது தற்போது இல்லையாம்.) ஏதோ தென்னகத்தில் எஞ்சியிருக்கும் தேக்கடி, முன்னார், வால்பாறை,முதுமலை, கபினி கானகங்களை நினைத்துக்கொள்ளலாம். என் பங்குக்கு, ஸிமிலிபால்,ஸாஸன்கிர், ராஜாஜி பார்க், கன்னா பார்க் போன்றவற்றை பற்றி சில வரிகள் எழுதுகிறேன்.
அஞ்சுவது அறியாது , அமர் துணை தழீஇ
நெஞ்சு நப்பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய,
மை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும்
சேய  அம்ம , இருவாம் இடையே
மாக் கடல் திரையின் முழங்கி , வலன் ஏர்பு
கோட்  புலி வழங்கும் சோலை

எனைத்து என்று எண்ணுகோ முயக்கிடை மலைவே 

- குறுந்தொகை பாடல் 237. பாலை தலைவன் கூற்று


கானகத்தே மவுனம் நிலவும் என்று தான் நகரவாசிகள் நம்புகிறார்கள். நீங்கள் ஐந்து நிமிடங்கள் கூட கானகத்தில் நின்றாலும், ஜீவன்களின் வாழ்வியலை கண்ணார காண்பீர்கள். ஒரு சத்தம், பல சத்தங்களின் கோரஸ் ஓயாமல் அல்லும் பகலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மவுனம் கூட ஒலிக்கும். அவற்றின் மிக்ஸ்-அப் தனை இனம் கண்டு பிரித்துப் பார்த்தால் நாம் புரிந்துகொள்ளக்கூடிய  பிராணிகளின் தற்காப்பு கலை அதிசயத்தை சொல்லி மாளாது. நல்ல பாம்பு சீறிக்கொண்டு வந்து எச்சரிக்கும். மேகமூட்டம் கண்டு மயில் ஆடும். மான்கள் அமைதியாக மேய்ந்தாலும், குரங்கு ‘புலி வருகிறது’ என்று அதற்கான பிரத்யேக ஒலி கொடுத்து எச்சரித்தால், மயிலாடுதற்கு மசியாமல் மான்கள் பாய்ந்தோடி விடும். வண்டினம் ஒலிப்பதில் எத்தனை ‘ச ரி க ம ப த நி ஸ ‘ சரளி வரிசை! 

பாலைத்தலைவனுக்கு சற்று தொலைவில் நிற்கும் தலைவியை தழுவ ஆசை. யாருக்குத்தான் இருக்காது? தடை யாதெனில், அது இடையே அடர்ந்து இருக்கும் புதர் மண்டிய காடு. அதை ‘கடல் திரையின் முழங்கி , வலன் ஏர்பு கோட்  புலி வழங்கும் சோலை.’ என்கிறார், புலவர். கோரஸ் சத்தம். புலி உலவும் சோலை. அஞ்சாமல்  இருக்க முடியுமா? அவர்களின் காதலுக்கு தொந்தரவு செய்யாமல், வேறு ஒரு சோலையும், நீரோடையையும் காண்போம்.

79. பாலை - தலைவி கூற்று 
கான யானை தோனயந் துண்ட 
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை 
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப் 
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் 
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச் 
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு 
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே. 
-குடவாயிற் கீரத்தனார். 

அலர் தூவுவது ஊராரின் இயல்பு. ஊரில் உள்ளவர்கள் கண்டபடி பேசி அவர்கள் வாரி இறைக்கும் அவதூறுக்கு பயந்தால் காதலும் காமமும் வெளிக்காட்ட முடியாமல் குறைந்து பின் மறைந்துவிடும். அதற்காக எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று கர்மமே(காமமே) கண்ணாக இருந்தால் அனைவர் முன்னிலையில் வெட்கித்தலைகுனியும் நிலையும் ஏற்பட்டுவிடக்கூடும். எப்படி பெரிய யானை தன் தும்பிக்கை கொண்டு முறித்த மரக்கிளை, நிலத்திலும் விழுந்து தொலையாமலும், மரத்திலும் ஒட்டாமலும் ஊசலாடுமோ- ... ெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ...’ - அப்படித்தான் அவர் நினைவால் வாடும் என் உடம்பும் உள்ளது தோழி..!
காதலையும் காமத்தையும் மறக்கவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் போன தன் நிலையை தோழிக்கு கூறுவதாக அமைந்த இந்த வரிகள்...
ஆலந்தூர் கிழார் என்ற புலவரால் எழுதப்பட்ட குறுந்தொகைப் பாடல்...

’பெளவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே
.’
குறுக்கே (குறுந்தொகை) புகுந்து நெடுக (நெடுநல்வாடை) வருகிறோம், தெருவில் திரியும் மக்களைப்போல !
தெருக்களில் சுற்றித்திரியும் மக்கள்
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
படலைக் கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலைத் தண் துளி பேணார் பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர  (29 – 35)
அந்த பழமையான நகரத்தின் (மூதூர்) வீதிகள் ராஜபாட்டைகளாம்; அவை அகண்ட காவேரி போல நதியுருவம் கொண்டனவையாம். அங்குண்டாம் மாட மாளிகை, ஏழு மாடி உப்பரிகைகளாம். அவை வானுற உயர்ந்தவையாம். [கடும் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றால்] உடல் வலிமை பெற்று திடகாத்திரமான புஜங்களுடன் பூமாலை அணிந்த ஆணழகர்கள் மொந்தை மொந்தையாக தேறல் (கள்) அருந்தியபடி காலம் போக்கினார்களாம். நீங்கள் மொந்தை கள் பார்த்திருக்கிறீர்களோ, பருகியதை சொல்ல துணிவு இல்லாவிடினும்! ‘மது! ‘மது! ‘மது! சொல்லே அழகு. லாகிரியோ மயங்கிய அழகு. பருக, பருக, உன்மத்தம் ஏறுதடி. நிலை தடுமாறுதடி. நம்மில் அநேகருக்கு அமிதா பச்சனை தெரியும். மருமகப்பெண் கண்ணழகி ‘ஐஸ்’ ஐஸ்வர்யா ராய்யை தெரியும். எல்லாம் தொலைவிலிருந்து தான். ஆனால் அவருடைய தந்தை ஹரிவம்சராய் ஶ்ரீவத்ஸவா ’பச்சன்’ அவர்களை பற்றி சிலருக்குத்தான் தெரியும். அவர் ‘மதுஷாலா’ என்ற அற்புதமான கவிதையை படைத்தார். அதிலிருந்து முதல் இரண்டு பாக்கள்:
मधुशाला



मृदु भावों के अंगूरों की आज बना लाया हाला,
प्रियतम, अपने ही हाथों से आज पिलाऊँगा प्याला,
पहले भोग लगा लूँ तेरा फिर प्रसाद जग पाएगा,
सबसे पहले तेरा स्वागत करती मेरी मधुशाला।।१।

प्यास तुझे तो, विश्व तपाकर पूर्ण निकालूँगा हाला,
एक पाँव से साकी बनकर नाचूँगा लेकर प्याला,
जीवन की मधुता तो तेरे ऊपर कब का वार चुका,
आज निछावर कर दूँगा मैं तुझ पर जग की मधुशाला।।२।
அது மற்றொரு கவிதை. பார்க்கலாமா? 
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a4/Ara_macao_-_two_at_Lowry_Park_Zoo.jpg