Google+ Followers

Sunday, June 25, 2017

கோப்புக்கூட்டல் [3]
 கோப்புக்கூட்டல் [3]

ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

இன்றைய கோப்பு: [3]

இன்னம்பூரான்
ஜூன் 25, 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=77745

கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றின் முதல் பகுதி:

  • “தனிமனிதன் இன்புறவேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்கவேண்டும். சமுதாயம் பழங்காலத்துத் தேர் போன்றது.  அதை எல்லோரும் இழுக்கவேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் இன்பம் உண்டு. பலர் ஏறி உட்கார்ந்து கொண்டு இன்பம் உற, சிலர் இழுத்துச் செல்கின்ற தேர் அன்று இது. ஒவ்வொருவரும் தன் கடமையை க் குறைவில்லாமல் செய்ய, ஒவ்வொருவரும் தமக்கு உரிய பங்கைப் பெறுமாறு, அமைந்திருப்பதே நல்ல சமுதாயம் ஆகும்.”


-இது சுதேசமித்திரன் இதழில் பேராசிரியர் மு.வரதராசன் ஏப்ரல் 1957ல் எழுதியது. 

‘...அவருடைய தமிழ்ப்பணிகள் எல்லாம் காலத்திற்கு ஏற்பத் தமிழை வளர்க்கும் பணிகளாக அமைந்தன. திரு.வி.க.வால் எளிமைக் கோலம் பூண்ட தமிழ்நடையை எளிமையின் எல்லைக்குக் கொண்டுசென்றவர் மு.வ. எளிதில் புரியும் திருக்குறளுக்கு விளங்காத நடையில் உரைகண்டு பொதுமக்களுக்கு எட்டாத உயரத்தில் உரையாசிரியர்கள் அதனை ஏற்றி வைத்திருந்தார்கள். அவர் குறளுக்கு எளிய உரைகண்டு கையடக்கப் பதிப்பாக வெளியிட்டு அதனை எளியவரும் கற்கும்படி ஆக்கினார். சராசரித் தமிழ் மக்களுக்குப் புரியாமல் இருந்த சங்கப்பாடல்களை விளக்கிப் புரியும் தமிழில் கட்டுரைகளாக வடித்து, விருந்து என்ற பெயரிலும், செல்வம் என்ற பெயரிலும் வழங்கினார். அவர் காலத்தில் வளர்நிலையில் இருந்த இலக்கியத் திறனாய்வுப் போக்கில் சிலப்பதிகாரம் குறித்து, இளங்கோவடிகள், கண்ணகி, மாதவி ஆகிய நூல்களை எழுதினார். இவை பண்டை இலக்கியங்களைப் பரப்புதற்கு மேற்கொண்ட ஆக்கப் பணிகள்...அவர் கால்கள் எந்த அரசியல் தலைவர் வீட்டையும் நோக்கி நடந்ததில்லை. ஆனால், அவரை நாடி அவர் வீட்டுக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் வந்தார்கள். அவர் பெரும்பதவிகளை நாடிச் செல்லவில்லை. பதவிகளே அவரை நாடி வந்தன. அவர் இறுதிச் சடங்கில் காமராஜர், அன்பழகன், எம்.ஜி.ஆர். போன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர் என்பதே அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அறிஞர் என்பதனைக் காட்டும்...வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் புகழையும் கொண்டாட்டத்தையும் வேண்டாத அவரை நாடிப் புகழ் குவிந்தது. உலகம் நூற்றாண்டு விழாக் கொண்டாடி அவரை நினைவுகூர்கிறது. இராமன் சொல்லையும் மீறி அவனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் செயல் அவன் அண்ணன்மீது கொண்ட அளவற்ற அன்பினைக் காட்டுவதுபோல், மு.வ.வின் கருத்துக்கு மாறாக எடுக்கப்படும் இந்த விழாக்கள் தங்கள் ஆசிரியர்மீது மாணவர்கள் கொண்ட அளவற்ற அன்பினை வெளிப்படுத்துகின்றன. அகல் விளக்கு எழுதிய மு.வ.வும் ஓர் அகல்விளக்கே. அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக உழைப்பே திரியாக ஒளி தந்த விளக்கு அது. அதன் ஒளி எங்கும் பரவட்டும். [ஏப்ரல் 25. பேராசிரியர் மு.வரதராசனாரின் (1912-1974) பிறந்த தினம்.  அவர் நினைவில், தெ. ஞானசுந்தரம் தினமணியில் 2012-இல் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள்: இதை கொடுத்து அருளியது, பசுபதிவுகள்: http://s-pasupathy.blogspot.in/2016/04/]

சிந்தனையை கிளரும் மேற்படி அறிவுரையை நடைமுறைக்குக் கொணர, தமிழ்நாட்டு சமுதாயம் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லமுடியாது. ஏனெனில், இதற்கு எதிர்வினையாகத் தான், அரசியலும், பிரதிநிதித்துவமும், பெரிய சமுதாயமும், பல சமூகங்களும் நடந்து கொண்டன. சினிமாத்தனம் நிறைந்த பண்பில் நடிப்பு சுதேசித்தனம் மலிந்திருந்தது. இந்த அறுபது வருடங்களில் திராவிடக்கட்சிகள் தான் தேர்தல் மூலமாக ஆட்சியை பெற்று, பின்னர் பல காலகட்டங்களில், தேர்தலை ஒரு நாடகமாக ஆடி,அதிலும் சகுனியாட்டம் ஆடி, அரசு மேலாண்மையை சீர்குலைத்தன. பஞ்சாயத்திலிருந்து நாடாளுமன்றம் வரை பிரதிநிதித்துவம், சுயநலனுக்கு மட்டும் தொண்டு செய்தது. லஞ்சம் வாங்குவது ஒரு தொத்து வியாதியாக மக்களை பற்றிக்கொண்டது. இதற்கு நடுவில் சில வேடிக்கைகளும் இடம் பெறுகின்றன. காரசாரமான கடுஞ்சொல் வீசி, ஆத்திகத்தின் மீது, பிராமணர்கள் மீது காழ்ப்புணர்ச்சி தெளித்த நாத்திக தொல்லைக்காட்சிகளில் ராப்பகலாக சாமி, சம்பிரதாயம், கும்பிடு, ஐயருக்குக் காணிக்கை உயிரை வாங்குகின்றன. காசு வர்ரது. அதான். பெரியாருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு மண் சோறு உண்கின்றனர், தீ மிதிக்கின்றனர், மொட்டை போடுகிறார்கள், குங்குமதிலகர்கள், எல்லா திராவிடகட்சிகளிலும். 

எனக்கு என்ன அச்சம் என்றால், மு.வ, அவர்களின் தேரை உடைக்கும் இவர்கள், அதை விறகாக கொளுத்தி, சிக்கன் பிரியாணி செய்து, அதை அன்னதானம் செய்து கூட்டம் கூட்டி, வருங்கால சந்ததியையும் மூளைச்சலவை செய்து விடுவார்களோ  என்ற அச்சம்.

தாமதம் செய்யாமல், நாம் அவரவருக்கு முடிந்தவரை மு.வ. அவர்களின் அறிவுரையை நடைமுறைக்குக் கொணர முயல்வோமாக. படித்தால் மட்டும் போதாது. அவரவர் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: 

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, June 20, 2017

தமிழ் சமுதாயம் 2067 [5]

தமிழ் சமுதாயம் 2067 [5]

இன்னம்பூரான்
ஜூன் 20, 2017

பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=77649
“...எதுவுமே செய்ய முடியவில்லை. சூழ்ந்து இருப்பவர்கள் வளர்ச்சிக்குத் தடையாகவே இருக்கின்றனர், என்றால் தடையாக இருப்போரை உங்கள் உறுதியுடன் மாற்ற முயலுங்கள். மாற்றமுடியவில்லையென்றால் உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சூழலிலிருந்து வேறு சூழலுக்குப் பெயர்ந்து விடுவது சிறப்பு.நம்மைச் சுற்றியுள்ளோர் சொல்வதற்காக நமது சுய திறமைகளை முடக்கி அழித்துக் கொள்வது என்பது இறப்பதற்குச் சமம். ..”
சுபாஷிணியின் இன்றைய  டைரி குறிப்பு.
28 05 2017 புலவர் ராமசுப்ரமண்ய நாவலரின்அணுகுமுறை ஒரு பழங்கால ஐதீக கதை ஒன்றை நினைவூட்டுகிறது. சிவபெருமானின் உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும், மறுபக்கத்திலிருந்து சம்ஸ்கிருதமும் ஒலித்தனவாம். சிலர் இதை கட்டுக்கதை என்பர். சிலர் இது அருமையான கற்பனை என்பர். நமக்கு வேண்டியதெல்லாம், சிந்தனை தானே. இரு மொழிகளும், சொல்லப்போனால், எல்லா மொழிகளிலும் நற்சிந்தனைகள் காணக்கிடைக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் நமது கலாச்சாரம் தோய்த்து எடுக்கப்பட்டுள்ளது, தமிழிலும், தெலுங்கிலும் போல. ஸலபசாஸ்திரம், உபநிஷத், பிரம்மசூத்ரம், யோகவாசிஷ்டம்,மஹாபாரதம், ராமாயணம், பாகவதம், சரகஸ்ம்ஹிதா,ஸுஷ்ருதசம்ஹிதா போன்றவை கருவூலங்கள். பழமையும், நவீனம் காண்கிறது, சம்ஸ்கிருதம். கணினி உலகத்தினர் அதை பெரிதும் வரவேற்கின்றனர். சொல்லப்போனால், விஞ்ஞானிகள் பெரிதும் போற்றும் மொழி அது. ஐன்ஸ்டீன் அவர்கள் பி.என்.குப்தா என்ற அறிஞரிடம் அந்த மொழி தன் ஆய்வுக்கு பயன்பட்டதாக சொன்னார் என்று கூறப்படுகிறது. ராபர்ட் ஆப்பன்ஹீமரும் அவ்வாறே. சம்ஸ்கிருத சொற்கள் பல மொழிகளின் பண்பாட்டில் இருக்கிறது, முக்கியமாக தமிழில். தமிழ் சொற்களும் அம்மொழியில் பயன்பாட்டில் இருப்பதாக தமிழறிஞர்கள் கூறுகிறார்கள்.

மேலதிக விவரங்களுக்கு:சித்திரத்துக்கு நன்றி:
http://photos1.blogger.com/blogger/7688/1730/1600/Rudrathaandavar-Pullamangai.0.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, June 17, 2017

தமிழ் சமுதாயம் 2067 [4]


தமிழ் சமுதாயம் 2067 [4]

புதன் கிழமை, ஜூன் 14, 2017, 5:29

இன்னம்பூரான்
பிரசுரம்: வல்லமை: https://mail.google.com/mail/u/0/#inbox?compose=15cb387e2b43ecc1
unnamed (2)
தமிழ்மொழியை செவ்வனே கற்க விழைந்த கேரளத்து ராமசுப்ரமண்ய நாவலர் அவர்கள் சம்ஸ்கிருதத்தை ஆதாரஸ்ருதியாக எடுத்துக்கொண்டது அவரது நுண்ணிய அணுகுமுறையின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது; அவர் தமிழன் என்பதில் ஐயமில்லை. இலங்கை தமிழ்நாட்டு பிராந்தியத்தில் இல்லை. ஆனால் இலங்கைவாழ் தமிழர்கள், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், நம்மை விட தமிழார்வம் கொண்டவர்கள், தமிழ்த்தொண்டு செய்தவர்கள் தமிழர்கள் தான். வித்துவான் கணேச ஐயர் அவர்களின் தொல்காப்பிய உரை போற்றத்தக்கது. ஆறுமுக நாவலர், கலாநிதி கைலாசபதி என்று பெரிய பட்டியலே நிறுவலாம். எந்த கணக்கில் அவர்களையும், ஏ.கே.ராமானுஜத்தையும், ஜியார்ஜ் ஹார்ட்டையும் தமிழர் அல்ல என்று ஒதுக்க முடியும்? கடந்த சில நாட்களாக, உலகத் தமிழ் மாநாட்டில். பல தமிழறிஞர்கள் தமிழின் தற்கால நிலை பற்றி கவலை தெரிவித்தார்கள். மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் ஆய்வுகளின், பாடங்களின், ஒலி/ஒளி பரப்புகளின், மொழி வல்லுனர்கள் இயங்கும் அருமையான வழிமுறைகளும், நமது தமிழார்வத்தை விட பன்மடங்கு கூடியவை என்பதை நேரில் கண்டேன்.இனியாவது ராமசுப்ரமண்ய நாவலர்களும், அவரை போன்ற பற்பல பன்மொழி புலவர்களும், தமிழ்மொழியில் முன்னிலை அடைந்து தமிழர்களில் மேன்மக்கள் ஆனார்கள் என்பதை பெரும்போலோர் ஏற்றுக்கொண்டால், அந்த தாராள மனப்பாங்கு 2067 வரை. கவனத்துடன், பேணப்பட்டால், தமிழ் சமுதாயம் பட்டொளி வீசி பறக்கும். இதன் பொருட்டு, எனக்கு அண்மையில் கிடைத்த சில மேற்கோள்களை பகிர்ந்து கொள்கிறேன்.
“சங்ககாலக் கவிதைகள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்றவற்றிற்கு நிகரான சாதனைகளை நாம் இன்றும் உருவாக்கினால் தான், இந்தியாவிலுள்ள பிற மாநிலத்தினர் நம்மை மதிப்பார்கள். உலகம் நம்மை மதிக்கும். இன்றைய நம் தமிழ் வாழ்வை மறு பரிசீலனை செய்யும் ஆக்கங்கள் நம்மிடம் இல்லையென்றால், நேற்று இருந்தவரை பற்றி மட்டுமே பேசுவது பழம் பெருமை பேசுவதாகிவிடும்/
-சுந்தர ராமசாமி 15 06 98 வானொலி உரையிலிருந்து
ஜனத்தொகை கணக்கெடுப்போ, நகரங்களின் மாபெரும் பரப்பளவோ அல்லது தானிய அறுவடையோ ஒரு நாகரீகத்தின் மேன்மைக்கு உண்மையான சின்னங்கள் அல்ல. எத்தகைய மனிதனை அது உருவாக்குகிறது என்பது தான் அதற்கு மேன்மை கிடைப்பதை தீர்வு செய்யும்.”
– ரால்ஃப் வால்டோ எமெர்ஸன்: உலகம் போற்றும் தத்துவ ஞானி)
[The true test of a civilization is, not the census, nor the size of the cities, nor the crops — no, but the kind of man the country turns out. -Ralph Waldo Emerson, essayist (25 May 1803-1882) ]
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://chiasuanchong.files.wordpress.com/2012/03/lingua-franca.jpg?w=840
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, May 22, 2017

தமிழ் சமுதாயம் 2067 [2]


தமிழ் சமுதாயம் 2067 [2]


இன்னம்பூரான்
22 05 2017
பிரசுரம் : 

முன்னேற்றம் கடினம்; கரடுமுரடான பாதை, கல்லும், முள்ளும், பரல்களும், விரோதமும், எதிர்வினைகளும் இன்னல்களை விளைவிக்கும். பின்னடைவு எளிது. உதட்டசைவும், போலி நடப்பும், கூடாநட்பும், பித்தலாட்டமும் போதும், குப்புறத்தள்ளி, குழி பறிக்க. இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது தமிழனின் கடமை. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் கடிதம் எழுதி ஆங்கில கையொப்பம் இடுபவர், தமிழார? அப்படி பார்க்கப்போனால், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நான் தமிழனானது 75 வயதில்! அது வரை பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் நாலடியாரை போல அறநூல் என்று நினைத்திருந்தேன். நான் அதுவரை தமிழன் இல்லையா? வீரமாமுனிவரை தமிழன் அல்ல என்று சொல்வது தகுமா? தற்காலத்து புலவர்களில் ழான் லுக் செவியர், டொமினிக் குட்ஆல், திருக்குறள் விருது பெற்ற ஈவா வில்டன் போன்ற பல அன்னிய நாட்டினர் தமிழர்களாகவும் ஆகிவிட்டனர். அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழ் சந்ததியினர் எல்லாருமே தமிழகம் தான். இனபற்று அடிப்படையில் யாரையும் ‘தமிழன்’ இல்லை என்று ஒதுக்கி, தனித்து வாழ்வது, 'தமிழ் சமுதாயம் 2067க்கு' உகந்த அறிவுரை அல்ல.  ஆங்கிலம் ஆங்கிலேயர்களுக்கு தாய்மொழி என்றாலும், அது உலகமொழி.  ஆங்கிலத்தில் உரையாடுபவர்கள் எல்லாரும் ஆங்கிலேயர்களும் அல்ல. ஆங்கிலேயர்கள் ஆர்வத்துடன் பலமொழிகள் கற்றுக்கொள்கிறார்கள். ஆங்காங்கே, தமிழ் தென்படுகிறது.

முதலில் தமிழர்கள் மற்ற மொழிகளை ஒதுக்காமல், பன்மொழி வித்தகர்களாக இயங்கினால், 2067ல் அவர்கள் முன்னேற்றம் அடையலாம். ஒரு இளைஞர். தமிழாசிரியர். ‘தமிழில் இல்லாதது வடமொழியில் இல்லை’ என்று கொக்கரித்தார். பொறுமையாக வினவிய பின்னர், இரு மொழிகளிலும் தனக்கு தெரியாததை தான் அவர் அள்ளி தெளித்தார் என்று தானே புரிந்து கொண்டு, வெட்கி தலை குனிந்தார். 

ஒரு சான்று இங்கே:
செந்தமிழ் ஆய்வு என்பதை துவக்கியவர் மு.ராகவ ஐயங்கார். அவருடைய உறவினர் ரா.ராகவ ஐயங்காரும் தமிழ் ஆய்வாளர் தான் அவரிடம் சம்ஸ்கிருதம் (வடமொழி) கற்றுக்கொண்ட நாகர்கோயில் ராமசுப்ரமணிய ‘நாவலர்’ அவர்கள் (மதுரை தமிழ்ச்சங்கம் அளித்த விருது)  எழுபது நூல்கள் படைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று தமிழ் உரிசொல் பனுவல். அதில் அவர் சம்ஸ்கிருத சொற்களை பிரயோகிக்கவில்லை. மதுரை தமிழ்ச்சங்கம் தமிழை போற்றி வளர்ப்பதில் மிகவும் பணி செய்துள்ளது. மலையாளியாக பிறந்த நாவலர் அவர்கள் தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுக்கொண்டு, தமிழ் விற்பன்னர் ஆனார். தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் வித்வானாக புகழ் எய்திய ரா.ராகவ ஐயங்காரிடம் நாவலர் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள  சீடரானர். அதற்கு அவர் கூறிய காரணம்: அந்த மொழியில் பாண்டித்தியம் இருந்தால் தான் தமிழ் மொழியின் நுட்பங்களை, ஆழத்தை புரிந்து கொள்ள இயலும் என்ற தெளிவான வெளிப்பாடு. அவ்வாறு அவர் கூறக்கேட்டவர், அவருடைய மைந்தர் மோஹனராஜன். நாவலர் அவர்கள் செந்தமிழ் நிலையம் என்ற பிரசுராலயத்தையும், தமிழ் விளக்கு என்ற தமிழ் இதழையும் நடத்தி வந்தார். சதாவதானி ஷைக்கு தம்பி பாவலருடன் வள்ளலார் பற்றி உரை நடத்திய தமிழ் ஆசிரியர் இவர், கவிராஜ பண்டிதர் என்று ஶ்ரீ ராமகிருஷ்ணமடத்தால் போற்றப்பட்ட நாவலர் பகவான் ராமகிருஷ்ணரின் சரிதத்தை தமிழில் எழுதினார். தன்னடக்கத்துடன் குடத்துள் விளக்காக விளங்கிய நாவலர் பற்றி விவரம் கிடைப்பதில்லை. இருக்கும் மேலதிக விவரங்களுக்கு, உசாத்துணை நோக்குக.
நாவலர் அவர்கள் தமிழரா? இல்லையா?
இன்னம்பூரான்

உசாத்துணை:

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

Friday, May 19, 2017

தமிழ் சமுதாயம் 2067 [1]

தமிழ் சமுதாயம் 2067 [1]


இன்னம்பூரான்
14 05 2017
பிரசுரம் : http://www.vallamai.com/?p=76999

தமிழகம் என்பது தரணி முழுதும் பரவியுள்ள தமிழர் உலகம். தமிழ் நாடு என்பது திருவேங்கட மலையை வட எல்லையாகவும், மூன்று கடல்களை மற்ற மூன்று எல்லைகளாகவும் கொண்ட பிராந்தியம். தமிழ் தமிழர்களின் தாய்மொழி. எனவே, தமிழ் சமுதாயத்தை உலகளாவிய மக்கள் கூட்டமாகவும் , தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் மட்டுமே என்று இரு கோணங்களில் காணமுடியும். டாக்டர் சுபாஷிணி தமிழர் என்பதில் ஐயமில்லை. அவர் தமிழ் நாட்டில் பிறக்கவும் இல்லை; அங்கு வசிக்கவும் இல்லை. தமிழின் மேலாண்மையை உணர்ந்த மதுரையில் வாழும் டாக்டர் பாண்டியராஜா, தமிழ் மொழிக்கே தன்னை அர்ப்பணித்த தமிழர் என்பதில் ஐயமில்லை. 
சூழ்நிலை பொருட்டு தமிழே அறியாத தமிழர்களும் உண்டு. பல இடங்களில், அவர்களின் தமிழார்வத்தை காண்கிறேன். மற்ற நாடுகளிலிருந்து வந்து தமிழராக மாறி விட்டவர்களும் உண்டு.

நம்மிடம் மொழி பற்று இருப்பது நியாயம் தான். மொழி வெறி தான் கூடாது. தமிழர் என்ற இனப்பற்று இல்லாவிடின், நாம் தாய்மொழியை இழந்துவிடுவோம். அதுவே இனவெறியாக மாறினால், நம்மையும் கூட இழந்து விடுகிறோம். சுருங்கச்சொல்லின், பற்றுக்கோல் வழி நடத்தும். வெறியாட்டம்  வழியை மறிக்கும். இந்த தொடரின் மைய கருத்து இது தான். 

தமிழகம் தமிழரை பற்றியும், தமிழ்நாட்டை பற்றியும் அன்றாடம் நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளவேண்டும், விழிப்புணர்ச்சியுடன் நுட்பங்களை ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டும். அவ்வப்பொழுது தமிழ் நாட்டுக்கு பல வகைகளில் உதவவேண்டும். தமிழ் நாட்டுமக்களுக்கு தற்காலம் நன்றாக அமையவில்லை. ஆட்சியில் பல இன்னல்கள். செங்கோலாட்சியை தவறவிடுவதில், மக்கள் மிகுந்த ஈடுபாடுடன் செயல் பட்டுள்ளனர், ஐம்பது வருடங்களாக, படிப்படியாக சல்லிக்காசிலிருந்து பல கோடி ரூபாய் வரை. நாட்டிலும், உலகிலும் நமக்கு நல்ல பெயர் இல்லை. இங்கே என்ன என்ன தடுமாற்றங்களும், குழப்பங்களும் நடக்குமோ என்று மற்றோர் கவனித்து வருகிறார்கள். எல்லா துறைகளிலும் தலை குனிவு. முதற்கண்ணாக தமிழ் மொழியை பேணுவதில் செயல்படாத ஆணைகளும், தீர்மானங்களும். அதற்கு காரணம் உதட்டசைவை காரியத்தில் காட்டாத நடப்பு. அத்தகைய போலி வாழ்க்கையை எங்கும் காண்கிறோம். போலி மருத்துவர்களை சமுதாயம் காப்பாற்றுகிறது. கலப்படம் செய்பவர்கள் - பாலுடன் நீர், நீருடன் மாசு, மாசு கலந்த காற்று. ஐம்பூதங்களையும் கலங்க அடிக்கும் மனித பிசாசு, நமது சமுதாயத்தில், நம் கண் முன் அட்டூழியங்கள் செய்தவாறு, பீடு நடை போடுகிறான். கல்வித்துறையில் காலூன்றிய பணமுதலைகள், ‘படிப்பு தான் முக்கியம்’ என்று வாழ்ந்த மக்களை, பல ஊழல்களில் இழுத்து வைத்து, கல்வி என்ற சொல்லையே அவமதித்து விட்டனர். இத்தகைய சிலந்தி பின்னலில் தன்னை மாட்டிக்கொண்ட தமிழ் சமுதாயம் ஐம்பது வருடங்களுக்கு பிறகு எப்படி இருக்கும் என்ற வினா எழுவது இயல்பே. இப்படியே எழுதி கொண்டு போனால், அது எத்தனை தேவையான வினா என்பதை தெரிந்தும், வாசகர்களில் சிலர்  ஓடி விடலாம் என்ற அச்சத்தில் ஒரு நற்செய்தியை பற்றி குறுக்கு சால் ஓட்டிவிட்டு, அடுத்த தொடரில், பின்னூட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, தொடருவோமாக.

நற்செய்தி: 
ஶ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தின் அருகில் உள்ள கோபால ஐயங்கார் மெஸ் மிகவும் பிரபலம். திரு.கோபாலன் கல்லாபெட்டி மேஜை மீது மிகவும் புனிதமாக கருதி வைத்திருப்பது இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகள் (இன்று கலைக்டர் மார்க்கட்டில் அதற்கு மவுசு அதிகம்!); அத்துடன் ஜனாப் பாஹவுதீந் கபியா பேகம் நிழற்படங்கள். ஐம்பது வருடங்கள் முன்னால், மதுரை காஜிமார் தெரு இஸ்லாமியருக்கு இவர்கள் குடும்பம் நெருக்கம், இரு வீட்டு குழந்தைகளும் இரு வீட்டிலும் வளர்ந்தனர். அத்தகைய பாசம், மதவெறி இல்லாத, மதப்பற்றை விடாமல் போற்றி வந்த மதநல்லிணக்கம் திரும்ப வரவேண்டும். முழுவிவரம் 16 05 2017 தேதியிட்ட தி இந்து இதழில் கிடைக்கும்.

என் சிறுவயதில் அண்டை வீடு தலைமை ஆசிரியர் யாகூப் கான். பொதுக்கிணறு. அவருடைய மகள் நம் வீட்டு சமைலறையிலிருந்து சுவாதீனமாக வாப்பாவிற்கு ரசம் எடுத்துச்செல்வாள். இது நடந்தது அறுபது வருடங்கள் முன்னால். அண்மையில் பாண்டிச்சேரியில் தமிழாய்வு செய்து வரும் முனைவர் விஜயவேணுகோபால் என்னிடம் எங்கள் தலைமை ஆசிரியர் யாகூப் கான் என்று பெருமிதமாக கூறிய போது, நான் அவருக்கு சீனியர் என்றறிந்து, இருவரும் எங்கள் ஆசானை போற்றினோம்.

மத நல்லிணக்கம் எல்லா நல்லிணக்கங்களுக்கும் அடிதளம். தமிழ் சமுதாயத்தில் தற்காலம் சகிப்புத்தன்மை குறைவு. காழ்ப்புணர்ச்சி வெள்ளம். சாதிப்பிரிவினை அரசியலை ஆண்டு வருகிறது. சாதி பேதம் எங்கும் தென்படுகிறது. 2067ல் நாம் எப்படி இருப்போம்? முன்னோட்டம் என்னவாக இருக்கும்? பின்னடைவு என்னவாக இருக்கும்?
(தொடரும்)

சித்திரத்துக்கு நன்றி:Tuesday, May 9, 2017

கோப்புக்கூட்டல் [2]
கோப்புக்கூட்டல் [2]


பிரசுரம்: http://www.vallamai.com/?p=76773
ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

இன்றைய கோப்பு: [2]

பொது நலம் மக்களாட்சியின் இலக்கு. மக்களாட்சியை நடத்தும் நிர்வாகத்தில் சட்டசபை, நிர்வாகம், நீதி மன்றம் ஆகியவை இடம் பெறுகின்றன. திராவிட ஆட்சிகள் தலையெடுக்கும் முன் கலோனிய அரசிலும், காங்கிரஸ் அரசிலும் லஞ்சம் இருக்கத்தான் இருந்தது. ஆனால்,அரை நூற்றாண்டுக்கு முன் மாமூல், கிம்பளம் ஆகியவை கூட சொற்பமாகவே இருந்தன.மக்கள் ஆதரவும், அரசு போஷாக்கும் கிடையாது. கடந்த ஐம்பது வருடங்களில் மக்களும் முறைகேடுகள் செய்வதில், மாநில அரசின் ஆசியுடன் பழக்க வழக்கமாக ஈடுபடத்தொடங்கினர். திருமங்கலம் சூத்திரம் என்று அறியப்பட்ட லஞ்ச லாவண்யம், மக்களை வளைத்துப்போட்டு, தமிழினத்தையே கயவர் கூட்டமாக்கியது, ஆர்.கே. நகர் அவலம் யாவரும் அறிந்ததே. சர்க்காரியா அறிக்கை நம்மை தலை குனியவைத்து பல்லாண்டுகள் ஆயின.

வீடு, மனை விவகாரங்கள்.வில்லங்கங்களில், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதில், கோயில் சொத்தை அபகரிப்பதில் நாம் நிகரற்றவர் என்று மார் தட்டிக்கொள்கிறோம்!. 

அதருமமிகு சென்னையில் பெரும்பாலான கட்டிடங்கள் விதிகளை மீறியவை. இது மக்களின் கைங்கர்யம்.

செப்டம்பர் 9,2016 லிருந்து மார்ச் 28, 2017 வரை அங்கீகாரம் பெறாத மனைகளும், விவசாய நிலங்களும், உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல் 9,760 பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 2581 வேலூரிலும், 2434 மதுரையிலும், 1412 சென்னையிலும். பிராது என்னவோ 4 லக்ஷம் பதிவுகள் கோர்ட்டாரை மதிக்காமல் செய்யப்பட்டுள்ளன என்று சொல்கிறது.

நாம் எப்போது நம்மை காப்பாற்றிக்கொள்வோம்?

இன்னம்பூரான்


சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
Sunday, May 7, 2017

The School & The Seagull

Dear Friends,
You may like to read the 12th article and others of this Link.
http://www.confluence.mobi/blog/confluence-may-2017-issue/
Innamburan

Thursday, April 13, 2017

நித்யாபரணங்காதை


நித்யாபரணங்காதை
சிந்தை குளிர வரமளிப்பாள் சித்ரா நித்யா!


இன்னம்பூரான்
ஹேவிளம்பி புத்தாண்டு தினம்
14 04 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=76330#respond

உங்களுக்கெல்லாம் தெரியாமா, தெரியாதா/? என்று எனக்குத் தெரியாது. கோட்டையூரில், நித்யா, நித்யான்னு ஒரு பொண்ணு இருக்கா. நித்தம் நித்தம் சமத்தா இருப்பதால் தான் அந்த பெயர் வைத்தோம் என்று அப்பங்காரன் சொன்னாங்க. அம்மாக்காரி அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அவ நிமிஷத்துக்கு, நிமிஷம் சமத்து என்றாள்; ஒரு புன்னகை உதிர்த்தாள். எனக்கு புரிஞ்சு போச்சு, ரண்டு பேரும் பொய் சொல்றாங்கன்னு. அப்புச்சிக்கும் ஆச்சிக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு; தாத்தாவுக்கு அவளொரு ப்ளாட்டினம் குஞ்சு. பின்ன என்னங்க? உள்ளதை உள்ளப்படி சொல்லுவோம். 

ஆதவன் உதிப்பதற்கு முன்னாலே, காஃபி எடுத்து வருவாள்; கூடவே காஃபி டிக்காக்ஷனையும் எடுத்து வந்து, அதிலேலிருந்து சிக்கனமாக இரண்டு சொட்டுப்போட்டு, நுறைவரவரைக்கும் ஆற்றிப்படைத்து, இது உங்க ‘இன்னம்பூரான் காஃபி என்று புன்னகைத்துக்கொடுப்பாள். நாம டவராவை கீழே வைக்கறத்துக்குள்ளே, காணாமல் போயிருப்பா. ‘என்னது இது? என்று கேக்கறதுக்கு முன்னாலே, அந்த குட்டி ஓடிப்போயிருப்பாள். சிரிப்பு மட்டும் தான் கேக்குமையா, சிவனாரே. அப்றம் அந்தி மங்கினப்பிறகு தான் நித்யா தரிசனம். நீ ஏன் மீட்டிங்குக்கு வரலை? அறுசுவை உண்டிக்கு வரல்லை? என்று கேட்டால், ஆஃபீஸ்லெ ஏழு மீட்டிங்க், ஐயா. ஆக மொத்தம் ஒம்பது கிளிப்பிள்ளைகள் மாதிரி, அந்தகாலத்து ஹெச்.எம்.வி.கிராமஃபோன் மாதிரி, அத்தையும் இத்தையும் திருப்பி,திருப்பி சொல்லுதாக. நானும் நோட்ஸ் எடுத்தேன் என்று சால்ஜாப்பு கட்றா. என்னத்தை சொல்ல, போங்கள்! மின் தமிழ் வாசாலகர்களை நினைத்துக்கொண்டேன்.

மின் தமிழிலே, ‘எக்ஸ்ட்ரா’ வாத்தியார் ‘வினை தீர்க்கிறேன்’ பேர்வழியாகிய சொனா வீனா அவர்கள். அவுக வீட்லே திண்டியா சாப்ட்டு விட்டு, இப்டி பேசினால் தப்பு என்ன? வினை தீர்த்தான் தம்பதி வினை தீர்ப்பதுமில்லாமல், மூட்டை கட்டி மச்சுலெ போட்றுவாக. 

 ‘என்ன குட்டி என்று சொல்கிறீர்கள்? கல்கியும், பிரியமான தாத்தா பாட்டி தான் அப்படி கூப்புடுவாக. அதெல்லாம் மின் தமிழுக்கு ஒவ்வாமை’ என்று சவுண்டு கொடுத்தால், நாலு கிலுகிலுப்பை சத்தம் வரும். ‘ஐயா! குட்டி = பொடியன் + . அடுத்தபடி நந்திகேஸ்வரர் சொல்லுவார், ‘அவ எங்க மின்னாள் கொடுத்த வரம்.’. பெத்தெடுத்த நாகேஸ்வரி, ‘எங்க அப்பா வச்ச பேருங்க.’ என்று சொல்லுவதற்கு முன், மின் தமிழ் சேசாத்திரி போல பேச்சை மாத்திடுவாக. அவருக்கு, இதான் சாக்கு என்று ஆறுதல் அளிக்கிறோம். நம்ம மின் தமிழிலே, எல்லா மொழிக்கும் தடாலடியா ‘வாதம், பேதம்,  வாதபேதம்,மீதம் எல்லாம் பீடு நடை போடும் போதும்,  வைஷ்ணவ சான்றோன் ந.சுப்பு ரெட்டியார் அவர்கள், வேறொரு இடம், பொருள், ஏவல் பொருட்டு கூறியதெல்லாம் வரும். ஆனா ஒண்ணு. சுந்தர் பிச்சை கிட்டேயிருந்து ஒரு தனி மடல் வந்ததுங்க. ‘இன்னிக்கு நாங்க போட்ட படம் பாத்தீங்களா?’ என்று கேட்டார். நான் மையமாக, ‘நல்லாயிருந்தது, சுந்தர்.’ என்றேன். உன்னை உய்விக்கும் பொருட்டு ‘பச்சை’, ‘நீலம்’ கலர்கள நீக்கிட்டோம் என்றார். அவருக்கு நன்றி கூறியது சன்னமாத்தான் கேட்டது. ஏன்னா? ஆயிரமாயிரம் குல்லாக்கள் களையப்பட்டு எறிந்து விட்டது, ஒரு குல்லா இமயமாக எழுந்து நின்றது. எழுப்பிய சத்தம் அப்டிங்க. டில்லிலெ ‘வாய்வாழி எலிகளையெல்லாம்’ ஓட்ற சத்தம், வானை பிளந்தது. பாத்தீங்களா?  அவர் ஆரை சொல்றீக? என்று கேட்டார். ‘எல்லாம் உங்க பிராந்தியம் தான் தம்பி. கணினி பெண்மணிகள் எல்லாம் அங்கிட்டுதானே என்ற நான், கூகில் மேப் காட்டவில்லை. மட்டுறுத்திடுவாங்களோ என்ற பீதி. ஒண்ணு சொல்ல வந்தா எழுத்து, அதுவாகவே, எங்கெங்கும் ஓடுகிறது! இது நிற்க. 

நம்ம  நித்யாவுக்கு விமரிசையாக திருமணம் நடந்தது. ‘சந்தோஷமா’ ஒரு பொடியன். அடுத்தது பொண்ணா பொறந்திருக்கணும். புவனேஸ்வரி என்று நாமம் சூடியிருக்கலாம். பொடியனா போச்சா. சர்வேஸ்வரன் ஆனான். நல்ல பசங்க. மாப்பிள்ளை விவரமான ஆளு. இப்பவே பசங்களுக்கு பேலியோ டயட், செல்வபெருந்தகையே. குமுதம் வாங்கி படிப்பாங்கா. இளந்தாரியாக ஆனபிறகு பசங்க படத்தையெல்லாம் பாக்கட்டும். அது வரை வம்பை விலைக்கு வாங்கவேண்டாம் என்று காசிஶ்ரீ அவர்கள் கோந்து வாங்கி அதையெல்லாம் ஒட்டி வருகிறார் (நானும், அவரும் பாத்தப்பறம் தான்). 

அதிசயமாக ஒன்று நடந்தது. ‘அறிவியலகு’ க்கு அப்பாற்பட்டது.  ஒரு சிசு ஜனனம், அவங்க வீட்டில். சர்வேஸ்வரினின் அருள் என்று எல்லாரும் வியந்து சந்தோஷப்பட்டார்கள். கின்னஸ் ரிக்கார்ட்லெ போட்லாங்க. பிறக்கச்சயே அவனுக்கு 83 வயசு. ஆனா, எஜமானியம்மா எங்க அப்பா வந்த மாதிரி தான் இருக்கு என்கிறார்கள்.

வழக்கம் போல், இறுதி உரை, இன்னம்பூரானது. என் வாழ்க்கையிலேயே மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொடுத்த நிகழ்வு எது என்று சேர்மன் மாணிக்கவாசகர் பள்ளி மாணவர்கள் கேட்டால், இதை தான் சொல்லுவேன்.

ஒரு குறிப்பு: ‘வரவு பத்தணா! செலவு எட்டணா!’

-#-

சித்திரத்துக்கு நன்றி:


வணக்கம் ஐயா.
பெருமாளே 83 வயதுப் பிள்ளையாய் எங்கள் வீட்டில் பிறந்த பேறு யாருங்கு எங்கே கிடைக்கும் !
நித்தமும் எழுந்தவுடன் வந்து 'எப்படி என் மேக்கப்' என்று கேட்டபது 3 வயதுப் பேரனும் 83 வயதுப் பெருமாளும்.
குட்டி என்றால் தங்கள் பேத்தி என்பாக்கியம் என்பாள்.
பொடியன் என்றால் என் பேரன் சொன்னவரைப் பொடிப்பொடி ஆக்கிவிடுவான்.
நாங்கள் பெற்ற வரம் இது.  வரத்தை எந்த அறிவியல் அலகு கொண்டு அளப்பது ? என்பதுதான் எங்களுக்குத் தெரியவில்லை.
ஒரு குறிப்பு: உண்டியல் பணத்தை ஆடிட்டர்  கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது தெரிந்திருத்தால் ஒருவர் எத்தனை உண்டியல்கள் வைத்திருப்பார்கள் என்பது தெரிந்திருக்கும்.

Monday, April 3, 2017

நாளொரு பக்கம்: 6: 2017நாளொரு பக்கம்: 6: 2017

-இன்னம்பூரான்
பிரசுரம்: http://www.vallamai.com/?p=76071&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+Vallamai+%28Vallamai%29


innam

नभसो भूषणं चन्द्र:
नारीणां भूषणं पति: |
पृथिव्या भूषणं राजा
विद्या सर्वस्य भूषणं ||

நப⁴ஸோ பூ⁴ஷணம்ʼ சந்த்³ர:
நாரீணாம்ʼ பூ⁴ஷணம்ʼ பதி: |
ப்ருʼதி²வ்யா பூ⁴ஷணம்ʼ ராஜா
வித்³யா ஸர்வஸ்ய பூ⁴ஷணம்ʼ ||
சொல்லுக்கு அலங்காரம்/அணி சேர்ப்பதைப் பற்றி தமிழிலும், சம்ஸ்க்ருதத்திலும்  தண்டியலங்காரம் என்ற இலக்கணநூல் உளது. உவமைதான் எல்லா அலங்காரங்களுக்கும் மூலாதாரம் என்க.  மேற்படி கவிதையில் நிலாவொளி விண்ணுக்கு அழகு அளிக்கிறது என்றும், கணவன் பெண்களுக்கு அழகு தருபவன் என்றும், நாட்டுக்கு அரசன்தான் பூஷணம் (அலங்காரம்) என்றும், எல்லோருக்கும் கல்வி அழகு என்றும் கூறப்பட்டது. அதனால் தான் கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.
***
சித்திரத்துக்கு நன்றி:இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, April 1, 2017

நாளொரு பக்கம்: 4: 2017நாளொரு பக்கம்: 4: 2017

-இன்னம்பூரான்மார்ச் 29, 2017
பிரசுரம்:http://www.vallamai.com/?p=75960

innam4
நான்மணிக்கடிகை: 66
திரியழல் காணில் தொழுப விறகின்
எரியழல் காணின் இகழ்ப – ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா ராட்டும் உலகு.
ஆண்டவன் சன்னதியில் சுடர் விட்டு எரியும் திரியுடன் பிரகாசிக்கும் விளக்கைக் கண்டவுடன் கை கூப்பித் தொழுவார்கள். திருமடைப்பள்ளியில் அடுப்பில் சமைக்க உதவும் விறகு கொழுந்து விட்டு எரிந்தாலும் அதை மதியார், மக்கள். அதே மாதிரி, ஒரே வீட்டில் மூத்தது மோழையாகவோ, கோழையாகவோ, அறிவிலியாகவோ இருந்து விட்டால், அதே வீட்டில் இளைய மகன் கல்விமானாகவும், தலைவனுக்குரிய பண்புள்ளவனாகவும் இருந்து விட்டால், அவனுக்குத் தான் மதிப்பு.
***
சித்திரத்துக்கு நன்றி:
http://eluthu.com/images/poemimages/f24/zjsoe_247061.jpgஇன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com