Saturday, July 26, 2014

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழும் விருதுகளும் -

தமிழும் விருதுகளும் - தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

இன்னம்பூரான்
26 07 2014
விருது வழங்குவது சான்றோர்களின் பெயர்களுக்கு தண்டியலங்காரம் போல் அணி அணிவித்து அழகு பார்க்கும் நற்பண்பு. தமிழ்த் தென்றல் என்றால் திருவாரூர் கல்யாண சுந்தரனார் அவர்கள் (அவர் விருப்பபடி சாதிப் பெயர் இல்லை) மட்டுமே. பாவேந்தர் என்றால் பாரதிதாசன் அவர்கள் தான். சிலம்புச் செல்வர் என்றால் ம.பொ.சிவஞானம் அவர்கள். சொல்லின் செல்வர் என்றால் குழந்தை கூட அது ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களைக் குறிக்கும் என்று சொல்லும். அண்ணாதுரை அவர்களும் பேராசிரியர் மு.வரதராசனார் அவர்களும் நமது பெர்னாட்ஷாவாகப் போற்றப்பட்டனர். நகரத்தார் சமூகத்தில் யாருமே கொடை வள்ளல் அழகப்ப செட்டியார் அவர்களைப் பெயர் சொல்லிக் குறிப்படுவதில்லை. ‘பார்-அட்-லா’ என்றால் அவர் மட்டுமே. ‘தமிழ்த் தாத்தா’ போன்ற ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரையின் நோக்கம் அது அல்ல.
விருது என்று சொல்வதை விட, இவற்றை எல்லாம் அடைமொழி எனலாம். அரசாங்கம் வழங்குவதை ‘விருது’ என்பதே சாலத் தகும். மகாத்மா காந்திக்கு விருது கொடுத்தால் அது அரசுக்குத்தான் பெருமை சேர்க்கும். அந்த மாதிரி அமைவதும் உண்டு. மாறாக, ‘ராவ் பகதூர்’ ‘கான் பகதூர்’ போன்ற ஆங்கிலேய அரசின் சிபாரிசுகள் பொறுத்துக்கொள்ளப்பட்டனவே தவிர, பாராட்டப்படவில்லை. அந்த விருதுகள் விருதாவாகத்தான் கருதப்பட்டன. ‘சர்’ எனப்படும் கலோனிய ‘பாரத ரத்னா’ கூட, ‘மயிலை முனிபுங்கவர்’ எஸ். சுப்ரமணிய அய்யர், ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெருந்தகைகளால் உதறப்பட்டது. எனினும், ‘மயிலை முனிபுங்கவர்’, ‘குருதேவ்‘ போன்ற அடைமொழிகள் சாசுவதம் அடைந்தன. ஆக மொத்தம், அடைமொழிகளும் விருதுகளும் இறவாவரம் பெறுவது, மக்களின் ஆதரவைப் பொறுத்து அமையும். பீடிகை முற்றியது.
இந்தப் பின்னணியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் இன்று நமது முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ‘... சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இளங்கோவடிகள் விருதும் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்குத் தமிழ்ச் செம்மல் விருதும் வழங்கப்படும்...’ என்று அறிவித்து,’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’ என்று தமிழரின் பழம் பெருமையைப் பற்றி புகழ்ந்து பேசும் புறப்பொருள் வெண்பா மாலையை முன்னிறுத்தி, ‘யாமறிந்த மொழிகளிலே’ நிகரற்ற தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதிலும், தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தவர்களைக் கௌரவிப்பதிலும் சிறப்பிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டதிற்குப் புகழாரம் சூட்டத்தான் வேண்டும்.
தமிழார்வலர்களுக்கு மகிழ்வும் நிறைவும் தரும் செய்தி இது; தமிழார்வம் கூட்டும் தன்மை உடையது. தற்காலம் வழங்கப்படும் விருதுகளை அதிகரித்து, தமிழ் மொழியின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்க விழைந்ததுடன் நிற்காமல் தன்னுடைய அணுகுமுறைக்கு இணங்க, செயலில் இறங்கிய முதல்வர் அவர்களை வாழ்த்தி, ஊக்கம் அளிப்பது நம் கடமை. உலகில் பல பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் இதை வரவேற்பர் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இதே அலைவரிசையில் தமிழுலகமும் சமுதாயமும் தமிழ் வளம் பெற, அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
என்னுடைய ஆய்வின் படி கலோனிய அரசு 18 / 19 நூற்றாண்டுகளில் செய்த தமிழ்ப் பணி, 1947க்குப் பிறகு தணிந்துவிட்டது. 18ஆம் நூற்றாண்டில் கலோனிய துரைத்தனத்தாரால் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ்ப் பாடப் புத்தகம் ஒன்று உளது. அத்துடன் ஒப்பியல் செய்தால், தற்காலப் பட்டப் படிப்பின் தரக் குறைவு, வெள்ளிடை மலை. தமிழை ஆட்சி மொழியாகக் கொணர்வது பற்றி, விடுதலை பெற்ற இந்தியாவில் பேச்சுத்தான் அதிகம். செயல்பாடு இன்று வரை இல்லை. 
1868ஆம் ஆண்டு கலோனிய அரசு தமிழில் ஆங்கிலேய கலெக்டருக்குத் தாசில்தார்களால் எழுதப்பட்ட மடல்களை ஐ.சி.எஸ். அதிகாரிகளுக்குப் பாடமாக அமைத்தது. இஸ்லாமிய தாசில்தார், வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். அந்தணராகிய அதிகாரி, உருதுச் சொற்களை இயல்பாகக் கையாளுகிறார். அந்த அளவுக்குச் சமன்படுத்தப்பட்ட தீவிரம், 1947க்குப் பிறகு காணக் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் தொலைநோக்குப் பார்வையில் 1940இலேயே அண்ணா அவர்கள் தமிழின் இறங்குமுகத்தைப் பற்றி மனவலியுடன் பேசியிருக்கிறார். அவருடைய தம்பிகள் அதைப் பொருட்படுத்தவில்லை என்று தான் தோற்றம் என்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். 
வெப்துனியா மூலம் நம் முதல்வரிடம் நான் அவையடக்கத்துடன் முன்வைக்கும் வேண்டுகோள்: 
"தயை செய்து இன்றே தமிழை ஆட்சி மொழியாக அறிவித்து, குஜராத்தில் 1960களிலேயே குஜராத்தி ஆட்சி மொழியாக நிலவிய வகையில், அமலுக்குக் கொண்டு வாருங்கள். பள்ளி / கல்லூரிகளில் / பல்கலைக்கழகங்தமிழும் விருதுகளும் - தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்
களில் தமிழ்ப் படிப்பின் தரத்தை உயர்த்தி, தமிழ்ப் புலமையை வளர்க்கவும் பல நாடுகளில் வாழும் தமிழர் கூட்டத்தின் தணியா ஆர்வம் அளவில் அடங்காது. நாள்தோறும் உலக மேடையில் தமிழன்னை வணங்கப்படுகிறாள். எனவே அவர்களையும் தேர்வடம் பிடிக்க அழையுங்கள்."
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, July 24, 2014

கொலைகார பாவிகளா!

கொலைகார பாவிகளா!
இன்னம்பூரான்
24 07 2014 
அன்பின் ஶ்ரீவித்யா, தும்மா விஷ்ணு, ஸ்ருதி, சரத், வஹீத், ரஜியா, நீருடி வம்ஷி, சிந்தாலா திவ்யா, சிந்தாலா சரண், வித்யா, கோலா மஹேஷ், சிந்தாலா சுமன், மேலும் உங்கள் சகபாடிகள் எட்டு பேர்,
நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். மண்டை வெடித்து, மூளை சிதறி, கைகால் உடைந்து, குடல் பிதுங்கி, குருதி வெள்ளத்தில் மூழ்கி செத்துப் போய்விட்டீர்கள். ஆம். கொலை செய்து விட்டார்கள். நாசமா போற கைபேசியில் பேசிக்கொண்டே, உங்கள் பஸ்ஸை ஓடும் ரயிலில் தலை கொடுத்து, உம்மையெல்லாம் கொன்று குவித்து, தன்னையும் பலி கொடுத்தார் வண்டி ஓட்டுனர் பிக்ஷாபதி கவுட். அப்பனும் ஆத்தாளும் வவுத்திலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். அமைச்சர்களும் அதிகாரிகள் படையெடுத்து வந்து பிலாக்கணம் பாடுவார்கள், மூக்கொலியால். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, பிலாக்கணம் பாடினாலும், நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். படுகாயம் அடைந்த 20 சகபாடிகளில் எல்லாரும் பிழைக்கவேண்டும் என்று தெய்வத்துடன் கலந்து விட்ட உங்களிடம் வரம் கேட்கிறோம். காலை பிடித்து கெஞ்சுகிறோம். பேச்சுக்கு சொன்னேன். உங்கள் கால்கள் தான் உடைந்து மூலைக்கு ஒன்று கிடக்கின்றனவே. உங்கள் பள்ளிக்கூடமாகிய தூப்ரான் காக்காத்தியா டெக்னோ பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள். குழந்தைகள் அழும். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். அரசு ஓடி வந்து அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் காசு கொடுப்பார்கள். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். இதழ்களில் உரத்த குரலில் வாதம் புரிவார்கள். ஆனால், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். கனம் கோர்ட்டார் மன்றங்களில் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தடிக்கும் வழக்குக்கள் நடக்கும். ஆனால், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள்.
நான் பச்சாதாபத்தினால் இதெல்லாம் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம் உண்மை. கும்பகோணம் பள்ளியில் தீயில் பிஞ்சுகள் கருகி செத்துப்போய் பத்து வருஷம் ஆச்சு. உடனே தீ வைத்து உங்களையெல்லாம் கொளுத்தினாங்களே தவிர, கேசு நடக்குது. வாரத்துக்கு ஒரு ஆழ்கிணறு பலி. குழந்தைகளையும், பெண்களையும் கொல்லும் பாரத நாட்டில் ஈவிரக்கம் கிடையாது. கீழ்வெண்மணியில் உயிருடன் தீ மூட்டினார்களே. அசட்டை உண்டு.
நண்டேட்- செகந்திராபத் ரயில் ஏற்கனவே நான்கு மணி தாமதம். உங்கள் பஸ் ஓட்டுனரை கெஞ்சினீர்களே. கேட்டாரா? ரயிலை முந்தணும், காவு கொடுத்தாலும். அது தான் அவருடைய இலக்கோ? முந்திட்டார். ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு உங்கள் பஸ் இழுத்துச்செல்லப்பட்டதாமே. என்னத்தைச் சொல்ல !
‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள்.
இது மசியல்ல. உலர்ந்த உங்கள் குருதி.
சித்திரமும் வேண்டாம். மண்ணங்கட்டியும் வேண்டாம். அடுத்த அசட்டை கொலைக்களமும் நடக்கும் என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது.

-#-

Wednesday, July 23, 2014

பனையூர் நோட்ஸ் 2: ‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:2




பனையூர் நோட்ஸ் 2: ‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:2



இன்னம்பூரான்
24 07 2014

“... தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும் மனோநல தலையீடுகளை (அதுவும் பெண்களை ‘ங’ போல் வளைய சொல்பவை) கண்டு அஞ்சுகிறேன். நமது மடலாடலிலும் அது தென்படுகிறது. மனோநலம் என்ற துறை சாமான்யமானது இல்லை...”. 

(தொடரும்)

புலன் பெயரும் நிலையில் உள்ள இந்த நீண்ட தொடர் ‘நான்’ என்ற சிந்தனையின்/குழப்பத்தின் வரத்துபோக்குக்களை முன் எடுத்து வைக்க முயலும். முதற்கண்ணாக, மனித இனத்தின் மன அழுத்தம் (depression) என்பதை பற்றி சில வரிகள். அது ஒரு அபூர்வமான மனோவியாதி அல்ல.
எந்த சமூகத்திலும் பத்தில் ஒரு பங்கு மக்கள் இத்தகைய பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள் என்று சமீபகால (2013) பிரிட்டீஷ் ஆய்வு ஒன்று கூறுகிறது. முதற் பலிகடா வாழ்வின் தரம். அடுத்த படியாக சுற்று வட்டாரத்தில் உள்ள மற்றவர்களை ஏதோ ஒரு வகையிலாவது பாதிக்கிறது.  மேலும் ஒரு கொடுமை,  அதன் மறைமுகம். ‘நான்’ மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாதவன் (ள்) என்று தான் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். போதாக்குறைக்கு, anxiety என்று சொல்லப்படும் கவலை/வியாகூலம்/ விசாரம் மன அழுத்தம் என்ற வேடம் பூண்டு வருகிறது. ‘ஏக்கமும்’ (stress) பகுவேடதாரி. பத்து தலை ராவணனைப் போல மன அழுத்தமும், மன அமுக்கமும், கவலையும், ஏக்கமும் ஒன்று கூடி வந்தால், வேறு வினை வேண்டாம். அவை தனித்துத் தனித்து வந்தாலும், ‘மன அழுத்தம்’ ‘கவலையாகவும், ‘கவலை’ ஏக்கமும் ஆக வந்து  பாடாய் படுத்தலாம்.

இதையெல்லாம் மேலெழுந்தவாரியாக ‘நான்’ என்ற தனக்கே பூட்டிக்கொள்வது எளிது, Jerome.K.Jeromeயின் கற்பனயில் உதித்த Three men in a Boat போல! இங்கிலாந்தில் முப்பது சதவீத மக்கள் கவலைப்பட்டு, கவலைப்பட்டு மாய்ந்து போகிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஒன்று கெட ஒன்று என்ற சங்கிலித்தொடர் அபாயம் வேறு இருக்கிறது. ஏக்கம் கவலையாக மாறி அது மன அழுத்தமாக உருவெடுத்து , பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக, கொம்பேறி மூக்கன் போல் ஏறி, ஆளைக் குலைத்து விடலாம். 

மனோநல ஆலோசகர் [Psychologist] வாயா வார்த்தையாக குணப்படுத்த முயலுவார்கள். மனோ வியாதியின் குறிகளை, கண்டறிந்தும், கேட்டறிந்தும், அலசியும் தீர்வு காண்பதில் இறங்குவார்கள். சில பயிற்சிகளையும் சொல்லிக்கொடுப்பார்கள். மனோநல வைத்தியரிடம் [Psychiatrist] செல்ல பரிந்துரையும் செய்யக்கூடும். இருவரும் கலந்தாலோசித்தும் நிவாரணம் தரலாம். தரமுயர்ந்த மருந்துகளும் உளன. உதாரணமாக Prozac என்ற மருந்து அதிகம் பேசப்படுகிறது. மற்றும் சில மருந்துகளை பற்றி சொல்ல தயங்குகிறேன். ஏனெனில் மனோநல வைத்தியரின் பரிந்துரை அத்தியாவசியம். இல்லாவிடின் பக்கவிளைவுகள் பாதிக்கலாம்.  மனோநல உள்ளுறை ஆலோசகர் [Therapist] இந்த வரிசையில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரிடம் பாதிக்கப்பட்ட நபர், குடும்ப நபர்கள் எல்லாருமே ஆலோசனைக்கு வரவழைக்கப்படுவார்கள். அது தொடர் நிகழ்வாக பல தடவை நடை பெறும். நேரம் பணவிரயமும் அதிகம். ஆனால், பக்க விளைவு இல்லாத வகையில் இதில் பூரண நிவாரணம் கண்டவர்கள் பலர். சொல்லப்போனால், மேல்நாடுகளில் மனோநல உள்ளுறை ஆலோசகரை , யாதொரு விதமான பாதிப்பு இல்லாதவர்கள் கூட அணுகுவது உண்டு. 

‘பெண்களை ‘ங’ போல் வளைய சொல்லும் தொல்லைக்காட்சிகள்/ இதழ்களில் உலவும் அத்தைப்பாட்டிகள் (agony aunts)/ அடுத்த வீட்டு அம்மாமி/ எதிர்வாடை எதிராஜ நாயுடு போன்றோர் விளைவிக்கும் அபாயம் பற்றி பிறகு பேசுவோம். ஏனெனில், இது ஒரு இரங்கல் மடல்.

இந்தியாவில் மனோநல உள்ளுறை ஆலோசகர்கள் மிகக்குறைவு. எல்லோரும் மனோநல நிபுணர்களாக உள்ள இந்த பாரதபூமியில் அவர்களுக்கு மவுசு இல்லை. சென்னையில்  Emma Gonsalves என்ற மனோநல உள்ளுறை ஆலோசகர் இருந்தார். தனது துறையில் வல்லுனாராக இருந்தவர். பணத்தாசை இல்லாமல் மன நிம்மதியுடன் இருந்து முன்னுதாரணமாக இருந்து திகழ்ந்தவர். செல்லப்பிராணிகளின் மீது ஆசை. அவருடைய பெர்ஸியன் பூனை மிகவும் அழகானவள்.  எனக்கு நண்பர். என் மகளுக்கு ஆசான். அண்மையில் அவர் (82) தன் அறையில் கழுத்து நெறிக்கப்பட்டுப் பிணமாகக் கிடந்தார். முதலில் இயற்கை மரணம் என்றார்கள். பின்னர் வேலையாள் செய்தது என்றார்கள். அவரது குடியிருப்புக்கு சிறந்த பாதுகாப்பு. அப்படியும் கொலை விழுந்தது. உயில் சம்பந்தமாக உறவினர் கொலை செய்திருக்கலாம் என்ற செய்தியும் உலா வந்தது. இதோ படம்.
ஒரு நாள் அவருடைய நண்பர்கள் கூடி நீலாங்கரையில் அண்மையில் அஞசலி செலுத்தினார்கள். ஊடகமும் அவரை மறந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இதை பதிவு செய்கிறேன்.

-#-
சித்திரத்துக்கு நன்றி: காப்புரிமை ஹிந்து & ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, July 21, 2014

லேடீஸ் & லேடன்ஸ்,

லேடீஸ் & லேடன்ஸ்,


வாகை சூடினாரே! வாகைனா வாகை!
வாங்க அய்யா, அய்யா வாங்க.
மாலை போடுங்க நம்ம பசங்களுக்கு.
கோலம் போடுங்க லார்ட்ஸ்லெ.

இதெல்லாம் சில நிமிடங்களுக்கு முன்னால். 28 வருடத்திற்கு பிறகு இந்தியாவுக்கு லார்ட்ஸ்லெ வெற்றி