Google+ Followers

Friday, August 4, 2017

நாளைய செய்தி இன்று காலை: 5 7 2017நாளைய செய்தி இன்று காலை: 5 7 2017தோழா/ழி!

இப்பொல்லாம் கவர்னமெண்டு தடால் புடால்னு ஆர்டர் போடுது. பங்களுர்லெ தான் பாக்கிறீங்களே. அமைச்சரெல்லாம் நமைச்சலில் குமைவதை. இன்று/நாளை நடுநிசியில் ஒரு ‘நீட்’ ஆக இருக்கும் ஆணை அமலில் வருகிறது. நம்ம ‘தண்டோரா கிழவன்’ தான்; பிச்சு உதற்ரராங்காணும்.

டம் ! டமா ! டாம் ! டுபுக்! டம் ! டமா ! டாம் ! டுபுக்! 

ஐயாமாரே! அம்மாமாரே! கருவில்லுறைபரே! கேட்டுக்குங்க! சுதாரிச்சுக்குங்க!
உஷார்!

“ இதனால் சகல ஜனங்களுக்கும், பிராணிகளுக்கும், விருக்ஷங்களுக்கும் தெரிவிப்பது யாதெனில், இனி ஆதார் கார்ட் இல்லாமல் இம்மியும் அசையாது; அம்மியும் அரைக்காது; மம்மியும் டெலிவராள். சுருங்கச்சொல்லின், நோ ஆதார்! நோ பெர்த். மண்டூகம்! ரயில்வே பெர்த் இல்லைடா. பிள்ளைப்பேறு. என்னுடைய மச்சினி மைதிலிக்கு பேறுகாலம். பொறுப்பில்லாத அவ புருஷன் டெட்ராய்ட்டுக்குப் போயிட்டான், அந்த கட்த்ரோட். நான் தான் எல்லாம் பாத்துக்கணும். டாக்டர் பாத்தாச்சு. அப்பப்போ டெஸ்ட் எல்லாம் பண்ணியாச்சு. டாக்டர் கிட்ட கெஞ்சி கூத்தாடி நார்மல் டெலிவரி வச்சுக்கோடி அம்மா என்று திருப்பதி லட்டு ஒன்று கொடுத்து அவளை தன்னை கட்டியாச்சு. ஐய்யயோ! ஆதார் கார்டுக்கு எங்கே போவேன்! கதவுலே சாஞ்சுண்டு நான் குரலெடுத்து அழுகிறேன். கண்ணீர் ரொம்பினதை அண்டாவில் நிரப்பி வைத்துக்கொண்டாள், என் தர்மபத்தினி. துணி துவைக்க உதவும்; தண்ணி வந்து மாமாங்கம் ஆச்சு என்றாள். அவள் மிகை படுத்திச்சொல்லுவாள்.

அதை விடுங்க. மைதிலி இடுப்பை பிடித்துக்கொண்டு சாஞ்சுண்டு நடந்தாள். முனகினாள். வலிக்கிறது அக்கா என்றாள். அப்போ பாத்து எதித்தாத்து அம்புஜம் பாட்டி வந்தாள். 

பா: ஏண்டா கோபு. பெருமாளை சேவிச்சுட்டு ஆம்பளைக்குழந்தையா லக்ஷணமாக பொறக்கணும்னு வேண்டிக்கோ. கர்ப்பரக்ஷாம்பிகைக்கு புஷ்பப்பல்லக்கு எடுக்கிறேன் அப்டினு வேண்டிக்கோடிம்மா. இல்லைனா, தெய்வ குத்தம் பொண்ணா பொறந்துடும். 

மை: பாட்டி! உங்களை ஆரு வரச்சொன்னா? எனக்கு பொண்ணு தான் வேணும்.

பா: கோபு! அவ கிடக்கா. ஒம்மாச்சி ஏமாத்தமாட்டார். ஆமாம். ஆதார் ஃபார்ம் எடுத்தண்டையா. இல்லைன்னா தாயையும், சேயையும் பிரிக்கதற்கு சுஷ்மாவை தான் கூப்பிடணும்.

கோ: (எரிச்சலுடன்) எடுத்தாண்டுச்சு, பாட்டி.

பா: நல்லதுக்கு சொல்றேண்டாப்பா. 
 1. அப்பா விண்ணப்பித்தால் ஃபார்ம் प.
 2. அம்மா விண்ணப்பித்தால் ஃபார்ம் प. प.
 3. அப்பா யாரென்று தெரியாவிட்டால், ஃபார்ம் प. प. प.
 4. அம்மா யாரென்று தெரியாவிட்டால், ஃபார்ம் प. प. प. प.
 5. ஆண் குழந்தையானால் ஃபார்ம் प. प. प. प. प. प.
 6. பெண் குழந்தையானால் ஃபார்ம் प. प. प. प. प. प. प.
 • அதெப்பட்டி சாத்தியம் என்றேன். அந்த டைம், மைதிலி லேபர் ரூம்லெ இருக்கச்ச.
  அந்தப்பக்கம் அகஸ்மாத்தாக எழுந்தருளிய நிர்வாகாதிகாரி சொன்னார், “ சார்! நாங்க கவர்னெமெண்டு ரூல் போட்றோம். இருந்தாலும், இல்லாவிட்டாலும், எல்லா விதமான பிரச்ணைகளுக்கும் ஆர்டர் போட்றணும். நாளைக்கு மரபணு விஞ்ஞானம் வளர்ந்து ஆண்களும் பிரசவம் செய்தால்.....
  அவர் சொல்லி முடிக்கல்லை. சிசு ‘ஓ’ என்று சிரித்தது. பொடிநடையா, ‘எங்கிட்ட ஆதார் இல்லையே’ என்று செப்பி விட்டு. ஒரு எக்காளத்துடன் ஓலா டாக்சியில் வீட்டுக்கு போய்விட்டது.

  பாட்டி: ஆணா? பெண்ணா? என்று கேட்டாள். நான் சொல்ல வில்லை. பிறந்தபின்னும் பால் அறிவிக்கக்கூடாதாமே? நிஜமா?
  இன்னம்பூரான்
  சித்திரத்துக்கு நன்றி:
  இன்னம்பூரான்

  http://innamburan.blogspot.co.uk

  http://innamburan.blogspot.de/view/magazine

  www.olitamizh.com

  Wednesday, August 2, 2017

  கொல்லுடா!

  கொல்லுடா!
  இன்றைய செய்தி: ஹிந்து ஆங்கில இதழ்:
  ஜூலை முதல் வாரம் மருத அரசனூர் என்ற தமிழ்நாட்டு கிராமத்தின் உள்ளூர் அரசியல் வாதி ஒருவர் அவருடைய சுற்றத்தை சார்ந்த ஆறு பேரால் கொல்லப்பட்டார். அவருடைய ஆதிக்கத்துக்கு அஞ்சி அவர்களின் ஆறு குடும்பங்களும் ஊரை விட்டு ஓடிவிட்டன. அவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. அவர்களுக்கு சொந்தமான கால்நடைகள் அநாதை ஆயின. அந்த 56 ஆடுகள், 17 பசுக்கள், சில கன்றுகள், சில காளைகள், இரண்டு செம்மறி ஆடுகள், 4 பன்றிகளுக்கு உணவு அளிக்கக்கூடாது, சரண் கொடுக்கலாகாது என்ற கட்டளைக்கு பயந்து, கிராமவாழிகள் அவற்றை ஐந்து நாட்கள் பட்டினி போட்டனர். ஐந்து பிராணிகள் செத்து ஒழிந்தன. கலைக்டருக்கு தகவல் எட்ட, அவருடைய ஆணையின் நற்பயனாக, அருணாசல பிராணிகள் சரணாலயத்தின் நிறுவனரான லெஸ்லீ ராபின்சன்  அவற்றை மீட்டி உயிர் பிச்சை கொடுத்தார். 

  சித்தரத்துக்கு நன்றி.

  http://img.dinakaran.com/data1/DNewsimages/Daily_News_3359142541886.jpg


  இன்னம்பூரான்

  http://innamburan.blogspot.co.uk

  http://innamburan.blogspot.de/view/magazine

  www.olitamizh.com

  Sunday, July 30, 2017

  பாமரகீர்த்தி -1:2 ஹரிஜனத் தந்தை

  பாமரகீர்த்தி -1:2 ஹரிஜனத் தந்தை
  இன்னம்பூரான்
  ஜூலை 28 2017
  பிரசுரம்: http://www.vallamai.com/?p=78585

  மதுரை மாநில மத்திய நூலகத்தில் இன்றும் கிடைக்கக்கூடிய MDU93641 நம்பர் உள்ள நூலின் பெயர் பார்ப்பவரின் கவனத்தைக் கவரும். ஏழு வருடங்களுக்கு முன் சீதாலக்ஷ்மி எழுதியது நினைவில் வருகிறது: 

  ‘... தினமணி செய்தி இது மதுரை,பிப். 23: அரிசன மக்களுக்கும், தேச விடுதலைக்கும் தன்னை அர்ப்பணித்த  வைத்தியநாதய்யர் நினைவு நாளை முன்னிட்டு (பிப்.23) அவரது சிலைக்கு மாலை அணிவிக்க யாரும் முன்வராதது தியாகிகளிடையே அதிர்ச்சியை
  ஏற்படுத்தியுள்ளது... உப்புச்சத்தியாக் கிரகத்தின்போது ராஜாஜி கைதான பின் அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது "புளியமர விளாரால்' அய்யரை தாக்கிய ஆங்கிலேயப் போலீஸார் அவரை சுமார் அரைகிலோமீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்தனர். உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.

  கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் என ஒவ்வோர் விடுதலைப்போராட்டத்திலும் ஆங்கிலேயப் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர் ஆவார்...தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளை ஈடுபடச் செய்தார். இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில்
  கடும்தண்டனையும் அனுபவித்தார். தனது இளையமகன் சங்கரனையும் விடுதலை போராட்டத்தில் வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது
  மூத்த மகன் இறந்தார். இதனால் அவரால் மகன் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை. மகளின் திருமணத்தைக்கூட சிறை தண்டனை பரோல் காலத்திலேயே
  நடத்தமுடிந்தது. அந்த அளவுக்கு சுதந்திரத்துக்காக சிறையில் பல ஆண்டுகள் கொடுமை அனுபவித்த "தியாகதீபம்' வைத்தியநாதய்யர். அரிசனசேவக சங்கத்தின்
  தலைவராக திகழ்ந்த அவரது வீட்டில் எப்போதும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர்...’. அந்த பதிவை படித்த திரு நரசய்யா அவர்களின் ஆதங்கம்:
  ‘இது தான் இன்றைய அரசியல்! தலை குனிய வேண்டியவர்களாயுள்ளோம். நான் சென்ற வாரம் மதுரை சென்றிருந்த போது, ஊரெல்லாம் ஒரு தலைவரின் கட் அவுட்டுகளாகவே இருந்தன. சுதந்திரம் இந்தியாவில் எவருக்குக் கிடைத்துள்ளது? தீர அலோசிப்போம்!’.
  [அவருடைய குடும்பத்திற்கும் வைத்யநாதய்யர் குடும்பத்திற்கும் தொடர்புண்டு. அவர் குமாரர் வை சங்கரன் இவரது சகோதரரின் உற்ற நண்பர். ஆலயப்ரவேசத்தில பங்கு கொண்ட புலி அய்யர் - இயற் பெயர் சுப்ரமணிய அய்யர்- இவரின் உறவினர். 


  ஆம் மதுரை ஏ. வைத்தியநாதய்யர் அவர்களை பற்றிய இந்த நூலின் பெயர்”
  ஹரிஜனத் தந்தை

  தன் இடம், பொருள், உடல், ஆவி, குடும்பம் எல்லாவற்றையும் முழுமையாக நசுக்கப்பட்டவர்களை உய்விப்பதற்கு அர்ப்பணம் செய்த இவர் திட்டமிட்டு மீனாக்ஷி ஆலயப்பிரவேசம் செய்து, ராஜாஜி இதற்கேற்ற சட்டம் இயற்றியதை போற்றவேண்டும். அதற்கு முன் ஆண்ட ஜஸ்டிஸ் கட்சி நசுக்கப்பட்டவர்களை கண்டு கொள்ளவில்லை என்பது வரலாறு. அது மேன்மக்களாட்சி.
  திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்;
  திருவெண்ணை நல்லூர் கிருபா ஆசிரமம்;
  சென்னை நந்தனார் கல்விக்கழகம்ல்
  கோவை ராமகிருஷ்ணா வித்யாலயம்;
  திருச்சி பொதுநல ஊழியர் சங்கம்ல்
  வேலூர் ஒலவையார் கல்விக்கழகம்;
  சென்னை ஆதி திராவிடர் மகாஜனசங்கம்;
  சென்னை அருந்ததியர் மகாஜனசங்கம்;
  தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள்.
  எல்லாவற்றிற்கும் அரிஜன சேவாசங்கத்தின் தலைவர் என்ற முறையில் பொருளுதவி முதல் பல தொண்டுகள் செய்த சான்றோன், இவர். மதுரையில் இவருடைய விசாலமான வீடு ஓர் அன்னதான சத்திரம்.
  இவரை பற்றி நான் எழுத வினாடியே, சுபாஷிணி இவரை பற்றி பேராசிரியர் தொ.பரமசிவன்(முன்னாள் தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) அவர்களின் நீண்ட கட்டுரையை பதிவு செய்தார்.

  சுபாஷிணியின் முன்னனுமதியுடன் அதை கீழே பதிவிட்டு, இந்த பதிவின் நிறைவை காண்கிறேன்.
  -#-
  சித்திரத்துக்கு நன்றி:
  **********
  பேராசிரியர் தொ.பரமசிவன்(முன்னாள் தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

  மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1939 ஜூலை 10ஆம் தேதி அரிசன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. மதுரை நகரத்தில் வாழ்ந்த காங்கிரஸ் பிரமுகர் வைத்தியநாதையர் இதனை முன்னின்று நடத்தி னார். தேசிய இயக்கத்தவரால் ‘மிகப் பெரிய சமூகப் புரட்சி ‘ என்று அன்றும் இன்றும் பெருமையோடு பேசப்படும் நிகழ்ச்சி இது.

  தமிழ்நாட்டில் அரிசனங்களுக்கும் பெருந்தெய்வ ஆலயங்களுக்கும் உற்ற உறவினை ஏறத்தாழக் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நந்தன் கதையின் மூலம் முதன்முதலாக அறிகிறோம். அதன் பின்னர் வைணவப் பெரியாரான இராமாநுசர் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கருநாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டையில் (திருநாராயணபுரம் என்று வைணவர் வழங்குவர்) திருமால் கோயிலுக்குள் அரிசனங்களை அழைத்துச் சென்ற செய்தியினை ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவத்தால் அறிகிறோம்.

  1939இல் மதுரையில் பரபரப்பூட்டிய அரிசன ஆலயப் பிரவேச நிகழ்ச்சியின் மறுபக்கத்தினை அதாவது, அதற்கு மேல்சாதியினர் காட்டிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வரலாற்றுக் கட்டுரைகளிலும் நூல்களிலும் முழுமையாகக் காணமுடியவில்லை. இந்நிகழ்ச்சி ஒரு அரசியல்வாதியின் தனிமனித முயற்சியாகவே காட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு எதிரான அரசியல், சமூகப் பின்னணி பற்றிய செய்திகள் பின்வந்தவர்களால் அறியப்படவே இல்லை எனலாம். 1963இல் மதுரைக் கோயிலில் பி. டி. இராசன் முயற்சியால் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி வெளியிடப்பட்ட இ. பழனியப் பன் எழுதிய ‘கோயில் மாநகர் ‘ என்ற திருக்கோயிலாரால் வெளியிடப் பட்ட 300 பக்கங்களையுடைய நூலில் கோயில் வரலாற்றில் முக்கிய மான இந்த நிகழ்ச்சி ஓரிடத்தில்கூடக் குறிப்பிடப்படவில்லை.

  ஆனால் இந்நுழைவு நடந்த காலத்தில் அரிசன ஆலயப் பிரவேசத்தைக் கண்டித்தும் எதிர்த்தும் பிராமணப் பெண்கள் இருவர் பாட்டுப் புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். 1939இல் ‘மதுரை பேச்சியம்மன் கோயில் ரஸ்தா லேட் பத்மனாபய்யரவர்கள் பாரி பாகீரதி அம்மாள் ‘ என்பவர் ‘ஆலய எதிர்ப்பு கும்மி பாட்டுப் புஸ்தகம் ‘ என்ற பெயரில் இரண்டணா விலையில் 16 பக்கத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 1940இல் ‘மதுரை கமலத் தோப்புத் தெரு எஸ். தர்மாம்பாள் ‘ என்பவர் ‘ஆலயப் பிரவேச கண்டனப் பாட்டுப் புஸ்தகம் ‘ என்ற பெயரில் இரண்டணா விலையில் 28 பக்கத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். உணர்ச்சிமயமான இந்தப் புத்தகங்களின் பெயர்களில் ஒரு ‘தெளிவின்மை ‘ காணப்படு வது கவனிக்கத் தகுந்தது.

  1937 மார்ச் தொடங்கி மதுரைக் கோயிலில் ஆர். எஸ். நாயுடு என்பவர் நிர்வாக அதிகாரியாக இருந்திருக்கிறார். மதுரையில் புகழ்பெற்று விளங்கிய வழக்கறிஞர்களில் ஒருவரும் காங்கிரஸ் தலைவருமான வைத்தியநாதையரும், ஆர். எஸ். நாயுடுவும் மதுரைக் கோயிலில் ‘அரிசன ஆலயப் பிரவேசம் ‘ நடத்தத் தீர்மானித்தனர். 1939இல் வைத்தியநாதையர் இது குறித்துப் பொதுக் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். ஜூன் மாதத்தில் இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் மதுரை நகருக்குள் சில பொதுக் கூட்டங்களையும் அவர் நடத்தினார்.

  நுழைவுக்குப் பத்து நாள் முன்பிருந்தே மதுரையில் தனது இல்லத் தில் (இப்போதுள்ள காலேஜ் ஹவுஸ் விடுதியின் பின்புறம்) சுமார் 50 பேர்களுக்கு சத்தியாக்கிரகப் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். ஆனால் ஆலயப் பிரவேச நாளை அவர் வெளியிடவில்லை. வைத்திய நாதையரின் முயற்சியினை அறிந்த ஆலயத்தின் பிராமணப் பணியாளர்கள், சனாதனிகள் ஆகியோர் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் ஜூலை 8ஆம் தேதி திடாரென்று 6 பேரை உடன் அழைத்துக்கொண்டு வைத்தியநாதையர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

  இந்த அறுவரில் மதுரை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தும்பைப்பட்டி கக்கன் (பின்னாளில் தமிழக அமைச்சராக இருந்தவர்), ஆலம்பட்டி முருகானந்தம், மதிச்சியம் சின்னையா, விராட்டிபத்து பூவலிங்கம், முத்து ஆகிய ஐவரும் அரிசனர். ஆறாவது நபர் விருதுநகர் சண்முக நாடார். 1 (அக்காலத்தில் நாடார்களுக்கும் கோயில் நுழைவு மறுக்கப்பட்டிருந்தது).

  இதைக் கண்ட ஆலய அர்ச்சகர்களும், வேதம் ஓதும் ‘அத்யயன பட்டர் ‘ என்ற பிரிவினரும் இந்தத் திடார் முயற்சியைக் கடுமையான சொற்களால் (மட்டும்) எதிர்த்தனர். இருப்பினும் அன்றும் மறுநாளும் ஆலய பூசைகளை முறைப்படி செய்தனர். 10.7.39 அன்று காலை பூசை முறைகாரர் சுவாமிநாத பட்டர் என்பவர். மீண்டும் 10ஆம் தேதி பெருமளவில் அரிசனர்கள் கோயிலுக்குள் நுழையப் போவதைப் பிராமணர் அறிந்து மதுரை (தானப்ப முதலித் தெருவில் இருந்த) ‘மங்கள நிவாசம் ‘ என்னும் பங்களாவில் கூடினர். வைத்தியநாதை யரைப் போலவே அக்காலத்தில் மதுரையில் புகழ் பெற்றிருந்த வழக்கறிஞர்கள் கே.ஆர். வெங்கட்ராமையர் என்பவரும் ஆறுபாதி நடேச ஐயர் என்பவரும் இவர்களுக்கு உதவினர். இவர்களில் ஆறுபாதி நடேச ஐயர் ஏற்கெனவே ‘வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தின் ‘ மதுரை நகரத் தலைவராகவும் இருந்தார். வழக்கறிஞர் களின் ஆலோசனைப்படி பிராமணர்கள் 9ஆம் தேதி இரவு முதல் கோயிலைப் பூட்டிவிட முடிவு செய்தனர். 10ஆம் தேதி அர்ச்சக முறைகாரரான சுவாமிநாத பட்டர் இதற்கு உடன்படவில்லை. எனவே 9ஆம் தேதி இரவு பூசை முடிந்ததும் அர்ச்சகர்கள் கோயிலைப் பூட்டி, சாவியை எடுத்துச் சென்றுவிட்டனர்.

  ‘கோயில் நிர்வாக அதிகாரி ஆர். எஸ். நாயுடு சனாதனிகள் செய்யவிருந்த ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்பார்த்து அதற்குத் தகுந்த காரியங்களைச் செய்தார் ‘ என்கிறார் ஒரு தகவலாளி. இதன்படி 10ஆம் தேதி காலையில் மேஜிஸ்டிரேட் ஒருவர், சுவாமிநாத பட்டர் ஆகியோர் முன்னிலையில் ஆர்.எஸ். நாயுடு பூட்டியிருந்த கோயிற்கதவுகளைத் திறந்தார். திட்டமிட்டிருந்தபடி அன்று ஏராள மான அரிசனங்கள் ஆலயப் பிரவேசம் செய்தனர்.

  கே. ஆர். வெங்கட்ராம ஐயரும் ஆறுபாதி நடேச ஐயரும் போட்ட திட்டங்கள் தோற்றுப் போயின. வெங்கட்ராமையர் வன்முறையை எதிர்பார்த்துத் தன் கட்சிக்காரரும் நண்பருமான பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் உதவியை நாடியதாகத் தெரிகிறது. ஆனால் தேவர் உதவி செய்ததாகத் தெரியவில்லை.

  ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த 10ஆம் தேதி முதல் சுவாமிநாத பட்டர் தவிர மற்ற அர்ச்சகர்களும், கோயிலில் வேதம் ஓதும் அத்யயன பட்டர் பிரிவினரும் கோயிற்பணிகளில் நேரடியாகக் கலந்துகொள்ளாமல் வெளியேறிவிட்டனர். கோயில் நிர்வாகத்தின் மீது பல வழக்குகளைத் தொடுத்தனர். கோயிலில் பிராமணரல்லாத மற்றப் பணியாளர்கள் வழக்கம் போலத் தம் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்.

  வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத் தலைவரான ஆறுபாதி நடேச ஐயரும் கோயில் நிர்வாகத்தை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குகளின் விளைவாக வைத்தியநாதையர் கைது செய்யப் படலாம் என்ற நிலை உருவானது.

  இதற்கிடையில் அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி, அரிசன ஆலயப் பிரவேசம் சட்டத்துக்கு எதிரானதல்ல என்று ஒரு அவசர சட்டத்தை அறிவித்தார். இதன் விளைவாக வைத்தியநாதையர் கைதாகும் நிலை தடுக்கப்பட்டது.

  ஆலயப் பிரவேசம் நிகழ்ந்த நாள் முதல் கோயிலின் பிராமணப் பணியாளர்களும் சனாதனிகளும் ‘மங்கள நிவாசம் ‘ பங்களாவிலே தொடர்ந்து கூடினர். அதையே மீனாட்சி அம்மன் கோயிலாகக் கருதி பூசை வழிபாடுகளை அங்கேயே நடத்தி வந்தனர். சில நாள் களுக்குள், ஆறுபாதி நடேச ஐயர் வீட்டின் முன் இருந்த காலி மனையில் (இப்போது தமிழ்ச் சங்கம் சாலையில் செந்தமிழ்க் கல்லூரியை அடுத்துக் கீழ்புறமாக உள்ள காலி மனை) ஒரு ‘புதிய மீனாட்சியம்மன் கோயிலை ‘ச் சிறியதாகக் கட்டினர். அங்கேயே வழிபாடுகளும் பூசைகளும் நடத்தினர்.2

  இந்தப் புதிய கோயில் வடக்குவெளி வீதியிலிருந்த (இப்போதுள்ள ஸ்பென்சர் கம்பெனி) வெங்கட்ராமையர் வீட்டுக்கு அருகில் இருந்தது. அரிசன ஆலயப் பிரவேசத்தைக் கண்டித்துப் பாட்டுப் புத்தகங்கள் எழுதிய இரண்டு பெண்களின் வீடும் இவர் வீட்டை அடுத்த வலப்புறத் தெருவிலும் இடப்புறத் தெருவிலும் இருந்தன.

  எனவே 1939இலும் 40இலும் வெளியிடப்பட்ட இந்த இரண்டு பாட்டுப் புத்தகங்களும் ஆறுபாதி நடேச ஐயர் தலைமையில் இயங்கிய, கே. ஆர். வெங்கட்ராமையரும் பங்குகொண்ட வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தின் ஆதரவுடனேயே வெளிவந்திருக்க வேண்டும்.

  இனி இப்பாட்டுப் புத்தகங்கள் தரும் செய்திகளைக் காண்போம்.

  ஆஸேது ஹிமயமலை வரையில் அ அங்கே

  எத்தனையோ ராஜாக்கள் ஆண்டார் அ அவாள்

  ஆலயப் பிரவேசமென்ற அநீதிகளைக்

  கனவிலும் நினையார் மனந் துணியார்

  அந்த நாளில் இந்த சண்டாளர்கள் இல்லையோ

  அவாள் இன்றுதான் பூமியில் குதித்தனரோ

  (எதிர்ப்புக் கும்மி)

  பாகீரதியம்மாள் புத்தகத்தில் (1939) இவ்வகையான கடுமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

  ஆறுபேர் சண்டாளர்களை

  அன்புடனே அழைத்துக்கொண்டு

  ஒருவருக்கும் தெரியாமல்

  உள் நுழைந்தார் திருடனைப்போல்.

  இந்த வரிகள் 8.7.1939 இல் நடந்த நிகழ்ச்சியைக் குறிக்கின்றன. இதே நிகழ்ச்சியை 1940இல் வெளிவந்த தர்மாம்பாள் பாட்டு, நிகழ்ச்சிக்குக் காரணமான நபர்களின் பெயர்களுடன் குறிப்பிடுகிறது:

  ஆர். எஸ். நாயுடும் வைத்யநாதரும் அக்ரமங்கள் செய்தார்கள்

  அக்ரமமாய்ப் பஞ்சமரை ஆலயத்தில் புகுத்திவிட்டார்

  (கண்டனப்பாட்டு)

  பாகீரதியம்மாள் புத்தகத்தில் ஒரு பாட்டு ‘அரிசனங்கள் ஆலயத் துக்குள் புகுந்தவுடன் அங்கிருந்து வெளியேறிவிட்ட மீனாட்சியம் மனை மதுரை நகர்த் தெருக்களில் தேடுவதாக ‘ அமைந்திருக்கிறது.

  அத்துடன் அன்றைய முதலமைச்சர் இராஜாஜி முயற்சியில் அரிசன ஆலயப் பிரவேச நிகழ்ச்சிக்கு ஆதரவாக வெளியிட்ட அவசர சட்டத்தினையும், அவரையும் கண்டித்து பாகீரதியம்மாள் பாடுகிறார். (காங்கிரஸ் கட்சிக்குள் தன் ஆதரவாளரான மதுரை வைத்தியநாதையரைக் கைதாகாமல் காப்பாற்ற வேண்டி அப்போது ஊட்டியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மாநில ஆளுநரிடம் அவசர மாகக் கையெழுத்து வாங்கி இராஜாஜி அவசரச் சட்டத்தை வெளியிட்டார்.)

  என் தாயைப் பறையர் கையில் ஒப்புவித்துப்

  பவிஷுடன் மார்தட்டுகிறார் பிரதம மந்திரி (எ.கு)

  என்று அவரைக் கண்டிப்பதோடு, ‘பக்க பக்க மெம்பர்களுக்கு காசு கொடுத்து ‘ இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதாகவும் குற்றஞ் சாட்டுகிறது. பாகீரதியம்மாளின் மற்றொரு பாடல் ‘மங்கள பங் களாவுக்குப் போவோம் வாருங்கள் ‘ என்று சனாதனிகளும் கோயிற் பிராமணர்களும், வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத்தாரும் மங்கள நிவாசம் பங்களாவிலே கூடி ஆலோசனையும் பூசைகளும் நடத்தி யதைக் குறிப்பிடுகிறது.

  இந்தக் காலகட்டத்தில் வடநாட்டிலிருந்து வந்திருந்த ஒரு சாமியாரும் இந்த முயற்சிகளுக்கு ‘ஆசி ‘ வழங்கியிருக்கிறார். இவரை ‘பூரிமடத்துச் சாமியார் ‘ என்று களஆய்வுச் செய்திகள் தெரிவிக் கின்றன. ஆனால் தர்மாம்பாளின் பாடல்கள் இவர் பத்ரிநாத் திலிருந்து வந்ததாகக் குறிப்பிட்டு, இவரை வாழ்த்தி இவரிடம் ‘ஆலோசனைகளும் ‘ கேட்கின்றன. ‘சத்குருவே எங்கள் சமயமறிந்து வந்தீர் தேசிகமூர்த்தி ‘ என்றும், ‘ஆலய அபரிசுத்தம் ஆக்கிவிட்டார் கள் அ ஐயோ அனுக்கிரஹம் செய்யுங்களேன் தேசிகமூர்த்தி ‘ (க.பா.) என்றும் தர்மாம்பாள் இவரைப் பாடுகிறார்.

  10ஆம் தேதி பெருமளவில் அரிசனங்கள் ஆலயத்துள் நுழைந்த பிறகு ‘மங்கள நிவாசம் ‘ பங்களாவில் கூடி எடுக்கப்பட்ட முடிவினைப் பாகீரதியம்மாள் பாடல் தெரிவிக்கிறது.

  ஆலயமொன்று இயற்றி

  ஆடவர் ஸ்திரீ பாலருக்கு

  ஆகமவித்தை பயிற்சி

  அரும் உபன்யாஸம் இயற்றி

  வித்வத் கோஷ்டிகளுடன்கூட

  வேகமுடன் தெரிசித்து

  பக்தியுடன் ஸத்காலேட்சபம்

  செய்துதான் வசிப்போம் (எ.கு.)

  இந்த முடிவின்படிதான் தமிழ்ச் சங்கம் சாலையில் ‘வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கத் தலைவர் ‘ ஆறுபாதி நடேசய்யர் பங்களா வளாகத் தில் காலி மனையில் சிறியதாக ஒரு ‘புது மீனாட்சியம்மன் கோவில் ‘ கட்டப்பட்டு பூசை, வழிபாடுகள் நடைபெறத் தொடங்கின. கோயிலுக்கு முன்னர் சிறிய ஓலைப்பந்தலும் போடப்பட்டிருந்தது. மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து வெளியேறிய அர்ச்சகர்களும், வேதம் ஓதும் பட்டர்களும் இங்கு வழிபாடு நிகழ்த்தினர்.

  1945 வரை இந்தக் கோயில் நீடித்திருந்தது. அதன்பின் பூசைகள் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டு, பின்னர் சுவடு தெரியாமல் இடிக்கப் பட்டும்விட்டது. கோயிலின்மீது வழக்குத் தொடுத்திருந்த அர்ச்சகர் களும், வேதம் ஓதும் பட்டர்களும் தங்கள் முயற்சியில் தோற்று மீண்டும் கோயிற் பணிக்குத் திரும்பினார்கள்.

  1939ஐ ஒட்டிய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கோயில் நுழைவில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆர்வம் காட்டவுமில்லை; திரண்டெழுந்து போராடவுமில்லை. அந்த நிலையில் மதுரை வைத்தியநாதையர் இந்தப் பிரச்சனையை ஏன் முன்னெடுத்துச் சென்றார் என்றும் ஒரு கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான விடை காங்கிரஸ் இயக்கத்தின் வரலாற்றில் பொதிந்து கிடக்கிறது.

  காந்தியடிகள் எரவாடா சிறையில் காலவரம்பற்ற உண்ணா நோன்பைத் தொடங்கியதன் விளைவாக டாக்டர் அம்பேத்கார் காங்கிரஸ் இயக்கத்தோடு ‘புனா ஒப்பந்தத்தை  1932 செப்டம்பர் 24இல் செய்துகொண்டார்.3 ஆயினும் அவருக்கு நிறைவு ஏற்பட வில்லை. 1933 பிப்ரவரி 4ஆம் நாள் நிகழ்ந்த காந்தியடிகள்  அம் பேத்கார் சந்திப்பின்போது மத்திய சட்டசபையில் ஸ்ரீரெங்க ஐயரும் தமிழகச் சட்டசபையில் அப்போதைய முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனும் கொண்டுவரவிருந்த ‘தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேச மசோதா ‘வுக்கு ஆதரவு தருமாறு காந்தியடிகள் அம்பேத்காரைக் கேட்டுக் கொண்டார். அம்பேத்கார் இணங்கவில்லை.4

  ‘கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப் பட்டோர் முன்னேறும்போது கோயில் நுழைவு தானாக நடைபெறும் ‘ 

  என்பது அம்பேத்கார் கருத்து. மறு வாரம் 11 பிப்ரவரி 1933 காந்தி யடிகள் புதிதாகத் தொடங்கிய ‘ஹரிஜன் ‘ இதழுக்கும் இக்கருத்தையே அம்பேத்கார் செய்தியாக அனுப்பியிருந்தார்.5 இருவருக்குமான கருத்து வேறுபாடுகள் முதிர்ந்துகொண்டு வந்தன.

  புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர் களில் அம்பேத்காரைத் தவிர மற்ற இருவரும் தமிழ்நாட்டவர் ஆவர். ஒருவர் ராவ்பகதூர் (ரெட்டைமலை) சீனிவாசன்; மற்றவர் எம். சி. ராஜா. இவர்களில் சீனிவாசன் வட்டமேசை மாநாட்டின் முதல் சுற்றில் அம்பேத்காரோடு கலந்துகொண்டவர்.

  மிக விரைவில் புனா ஒப்பந்தத்தைக் காங்கிரஸ்காரர்கள் நடை முறையில் கைகழுவி விட்டனர். அரிசனர் கோயில் நுழைவைக் கடுமையாக வங்காள இந்துக்கள் எதிர்த்தனர். அதற்கு முசுலீம்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயன்றனர்.6 1933இல் வங்காளத்தைச் சேர்ந்த கவி ரவீந்திரநாத் தாகூர் கூட புனா ஒப்பந்தத்துக்கு அளித்த தன் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.7

  புனா ஒப்பந்தத்துக்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு பரவலாக இருந்தது. 1932 அக்டோபரில் சென்னையில் ஜே. சிவசண்முகம் (பிள்ளை) தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டோர் மாநாடு புனா ஒப்பந்தத்தைக் கண்டித்தது. அத்துடன் ‘இம்மாநாடு கோயில் நுழைவு அவ்வளவு அவசியமல்லவென்று கருதுகிறது ‘ என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.8 காந்தி தாழ்த்தப்பட்டோருக்கு அரிஜன் என்று பெயரிட்டு, இதழ் ஒன்றையும் தொடங்கியதைக் கண்டித்துத் தாழ்த்தப்பட்டோர் எழுதினர். மணிநீலன் (எ. முத்துக்கிருஷ்ணன்) என்பவர்

  சாற்றிடும் அரிசனப் பெயர் எதற்குதவும்  அது

  தாழ்ந்தவரைக் கை தூக்குமோ

  என்று பாடல் எழுதினார்.9 அவரெழுதிய நூலின் பெயரே ‘காந்தி கண்டன கீதம் ‘ என்பதாகும். 1937 தேர்தலில் காங்கிரஸ் அம்பேத் காருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது. இருப்பினும் அவர் வென்றார்.

  இந்தச் சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டோரைக் காங்கிரஸ் இயக் கத்துக்குள் தக்கவைக்க வேண்டிய நெருக்கடி அதற்கு உருவாயிற்று. இந்த நெருக்கடி தமிழ்நாட்டில் கடுமையாக இருந்தது. ஏனென்றால் முதலமைச்சர் இராஜாஜியின் வேட்பாளரான சுப்பையாவை எதிர்த்துத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராசர் வெற்றி பெற்றிருந்தார். வெளியிலே தெரியாதபடி கட்சிக்குள் ஒரு நெருக்கடி உருவாகியிருந்தது.

  மதுரை வைத்தியநாதையர் காங்கிரஸ் கட்சிக்குள் இராஜாஜியின் ஆதரவாளர் ஆவார். எனவே உள்கட்சி நெருக்கடி, தாழ்த்தப்பட்டோர் ஆதரவைப் பெறுவது என்ற இரண்டு நோக்கங்களோடு இவர் மதுரைக் கோயிலில் ‘அரிசன ஆலயப் பிரவேசம் ‘ நடத்திக் காட்டி னார். இராஜாஜியும் அரிசன ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் அவசர சட்டத்தை வெளியிட்டு, வைத்தியநாதையரின் முயற்சியினை வெற்றியாக்கிவிட்டார்.

  இனி, ‘அரிசன ஆலயப் பிரவேசம் ‘ என்ற நிகழ்ச்சியை முன்னிறுத்தி ‘கோயில் ‘ என்ற சமூக நிறுவனமும் அதை மையமிட்ட பண்பாடும் எவ்வாறு தோற்றுப் போயின என்பதை வரலாற்றுரீதியாகக் காண வேண்டும்.

  கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டில் கோயில் என்பது மிகப்பெரிய சமூக நிறுவனமாக வளரத் தொடங்கியது. பத்தாம் நூற்றாண்டுக்குள் தமிழ் நாட்டுப் பொருளாதாரமே அதைச் சார்ந்து நிற்கும் நிலை உருவானது. விளைநிலங்களின் பெரும்பகுதியும் கோயிலைச் சார்ந்ததாக மாறிவிட்டது. (கி. பி. 1010ல் கட்டி முடிக்கப் பட்ட இராசராசனின் தஞ்சைப் பெரிய கோயிலின் அக்கால வருமானம் குறித்துப் பேராசிரியர் நா. வானமாமலை எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை இங்கு நினைவிற்குரியது.) நிலவுடைமையின் விளைபொருள்களில் ஒன்றான சாதி இறுக்கங்களும், தீண்டாமையும் பத்தாம் நூற்றாண்டிலேயே மிகவும் வளர்ந்துவிட்டதைச் சோழர் காலக் கல்வெட்டுகள் நன்கு உணர்த்துகின்றன. சுருக்கமாகச் சொல்வ தானால் அரசுக்குத் தேவையான பண்பாட்டு வடிவங்களைச் கோயிலின் மூலமாக மதம் நிறைவேற்றி வந்தது. சோழப் பேரரசு சரிந்து பிற்காலப் பாண்டியப் பேரரசிலும் இந்நிலைமை நீடித்தது.

  பாண்டியப் பேரரசின் வீழ்ச்சியின்போது 1310இல் நிகழ்ந்த மாலிக்காபூரின் படையெடுப்பும் கோயிற் கொள்ளைகளும் ‘கோயில் ‘ என்ற சமூக நிறுவனத்தின்மீது பெருந்தாக்குதலாக அமைந்தன. 14ஆம் நூற்றாண்டில் பெருங்கோயில்கள் பல தம் செல்வாக்கை இழந்து நின்றன. மீண்டும் விஜய நகரப் பேரரசின் எழுச்சிக் காலத்தில் ‘இந்து மதமும் ‘ கோயில்களும் மறுவாழ்வு பெற்றன. இருப்பினும், பல்லவ, சோழ, பாண்டிய அரசர்கள் காலத்திய செல்வாக்கினை மீட்க முடியவில்லை. அரசுக்குத் தேவையான பண்பாட்டு முயற்சிகளில் மதமும் கோயிலும் பின்தங்கிப் போயின. ஆட்சியாளர்கள் பிறமொழியாளர்களாக இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

  மீண்டும் 1752இல் ‘கும்பினியார் ‘ படைகளும் நவாபின் படைகளும் தமிழ்நாடு முழுவதும் கோயில்களை நெருக்கடிக்கு உள்ளாக்கின. அதைத் தொடர்ந்து அரசின் நேரடி ஆதரவைக் கோயில்கள் இழந்தன. தம் ஆதிக்கத்திலிருந்த நிலங்களைக் காப்பாற்றத் திணறின. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதிய ஆங்கிலக் கல்வியும் வாழ்க்கை நெருக்கடிகளும் கோயிலின் தலைமையான பிராமண சமூகத்தினரை நகர்ப்புறங்களுக்கும் புதிய நாகரிகத்துக்கும் கொண்டு வந்து சேர்த்தன.

  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலங்களின்மீதும், கலாசாரத்தின்மீதும் தான் கொண்டிருந்த மேலாதிக்கத்தைக் கோயில் சிறிதுசிறிதாக இழந்து கொண்டிருந்தது. தேசிய இயக்கத்தின் புதிய அலைகள் இப்போக்கை விரைவுபடுத்தின. 1920 முதல் இந்தியா வெங்கும் ‘கல்வி, குடியுரிமைகள், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்து தல், கோயில்களில் நுழைவதற்கான அனுமதி, இன்ன பிறவற்றுக்கான போராட்டங்கள் நகர்ப்புறங்களில் நடந்தன ‘ என்கிறார் கெய்ல் ஓம்வெட்.10

  இந்தப் பின்னணியில் 1939இல் நடைபெற்ற வைத்தியநாதையரின் முயற்சியை எல்லா நிலையிலும் தளர்ந்திருந்த கோயிமூ கலாசாரத்தால் எதிர்த்து நிற்க முடியவில்லை. எனவேதான் கோயிமூ பிராமணப் பணியாளர்கள் ஆறு ஆண்டுகள் கழித்து 1945இல் மீண்டும் கோயிற் பணியில் திரும்ப வந்து சேர்ந்தனர். இதனை மற்றுமொரு நிகழ்ச்சி யாலும் உறுதிப்படுத்தலாம். நாட்டு விடுதலைக்குப் பின்னர் வந்த ஜமீன்தாரி இனாம் ஒழிப்புச் சட்டத்தினால் கோயில் நிலங்களை வைத்திருந்த பிராமணர், வேளாளர் ஆகிய இருமேல் சாதியினரும் அந்நிலங்களை இழந்தபோது அரசாங்கம் கொடுத்த நட்ட ஈட்டை ‘மனமுவந்து பெற்றுக்கொண்டு ‘ ஒதுங்கிவிட்டனர். பாகீரதியம்மாள், தர்மாம்பாள் இருவரது பாடல்களிலும் ஒலிக்கும் ‘தீண்டாமை உணர்வு ‘ கால ஓட்டத்தில் பலவீனப்பட்டு, தோற்றுப்போனதும் இப்படித்தான்.

  குறிப்புகள்

  கள ஆய்வில் முக்கியமான தகவல்களை ஆளித்து உதவியவர்கள்
  1. காங்கிரஸ் தலைவர் அ. வைத்தியநாதையர் மகன், வழக்கறிஞர் திரு. வை. சங்கரன் (66), மதுரை
  2. திரு. எஸ். சுப்பிரமணியம் (62), மதுரை
  3. (காலஞ்சென்ற) இராகவையங்கார் (61), மதுரை
  4. திரு. கி. செயராமன் (60), மதுரை
  5. செல்வி. எஸ். ஆனந்தி, மதுரை

  1. விடுதலை, (தமிழ் நாளிதழ்), 27 அ 2 அ 1989, ப.3
  2. ஆலயப் பிரவேசம் நடந்தவுடன் ஏற்பட்ட எதிர்விளைவினை வைத்தியநாதையர் வாழ்க்கை வரலாறு பின்வருமாறு குறிப்பிடுகிறது :
  ‘நடேச அய்யரும் சனாதனிகளின் ஏனைய தலைவர்களும் ஆவேசத்துடன் மீனாட்சியம்மன் கோவிலுக்கு விரைந்தனர். உடனே ஒரு பொற்குடத்திற்கு ஏராளமாகச் சடங்காச்சாரங்களைச் செய்து பூஜை செய்தனர். அந்தப் பொற்குடத்துடன் சனாதனிகளனைவரும் நடேச அய்யர் வீட்டிற்குச் சென்றனர். மீனாட்சியம்மன் இக்கோயிலை விட்டு வெளியேறிவிட்டாள் என்றும், தமது வீட்டில் அருள் பாலித்தி ருப்பதாகவும் நடேச அய்யர் அறிவித்தார். நடேச அய்யர் வீட்டில் பொற்குடம் வைக்கப்பட்டுப் பூஜைகள் நடத்தப்பட்டன. மீனாட்சி யம்மன் தன் கோயிலை விட்டு வெளியேறி நடேச அய்யர் வீட்டில் இருக்கிறாள் என்ற செய்தி பொது மக்களிடையே மீண்டும் திகைப்பை ஏற்படுத்தியது. ஏராளமான பிராமணர்கள் நடேச அய்யர் வீட்டிற்குச் சென்று வழிபட ஆரம்பித்தனர். ‘
  பி. எஸ். சந்திரபாபு, ஹரிஜனத் தந்தை அமரர் அ. வைத்தியநாத அய்யர் வாழ்க்கை வரலாறு, தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம், மதுரை.
  3. M. L. Shahare, Dr. Ambedkar – His Life and Work, NCERT, 1988, p.53
  4. Ibid., p.58
  5. Ibid., p.58
  6. Ibid., p.56
  7. Ibid., p.62
  8. கழஞ்சூர் செல்வராஜ் (தொ. ஆ.) டாக்டர் அம்பேத்கார் அறிவுக்கொத்து, ப. 87 (குடியரசு 23.10.1932, ப. 13)
  9. மணிநீலன் (முத்துக்கிருஷ்ணன்), காந்தி கண்டன கீதம், உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, 1932, ப.11 (பி. யோகீசுவரன், தமிழ்க் கவிதையில் சமுதாயச் சிக்கல்கள், பக்.171அஇல் மேற்கோள்)
  10. கெய்ல் ஓம்வெட், வர்க்கம் சாதி நிலம் (தமிழ் மொழி பெயர்ப்பு : இராஜாராம்), 1988, ப. 7
  ****
  ‘பண்பாட்டு அசைவுகள் ‘ நூலிலிருந்து 
  ைவ சமயம் ஓர் உன்னதமான சமயம் என்று சொல்லிவரும் வேளையில் இப்படிப் பட்ட பதிவுகளைப் படிக்கும் பொழுது மனம் வேதனையடைகின்றது.

  மனித நேயமற்ற ஐந்தறிவு உடையோர் கோயில் வழிபாட்டைக்  கையகப்படுத்திக் கொண்டு சக மனிதர்களைத் தீண்டப்படாதவர் என்று ஒதுக்குவாரேயானால் இவர் செய்யும் இறை வழிபாட்டின் பொருள்தான் யாது? அவ்விடத்தில் எங்ஙனம் ஆளும் இறைத்தன்மை? இதுவா புண்ணிய பூமிக்கான இலக்கணம்? 
  இவ்வாறு நடந்தது கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்புதான்.

  இந்த பிரச்சனை இன்னமும் முழுதாக  முடியவில்லை. 
  பெரிய கோயில்களில் இவ்வகையில் செயத பெறும் போராட்டங்களினால்தான் இன்று எல்லா மக்களும் செல்லும் வாய்ப்பு  கிடத்தது.
  இன்றைய நிலையில் கிராமங்களில் இன்னமும் பல கோயில்களில் சாதி பெறும்பிரச்சனையாகத்தான் இருக்கின்றது.
  தாழ்ந்த சாதி என ஒதுக்கி வைத்து அவர்களை கோயிலுக்குள் வரவிடாமல் செய்வது தேர் இழுத்தல் அடிப்பது உதைப்பது துன்புறுத்துவது என்பது இன்றும் தொடர்கின்றது.  மோட்டார் பைக்கில் சிறு  சந்துகளில் பயணித்து சேரிக்குள் சென்று இந்த வேலியையும் பார்த்தேன். 
  இது மனதிற்கு சொல்லமுடியாத வேதனையை வழங்குகின்றது.
  மலேசிய தமிழர்கள் இந்த பாகுபாட்டு நிலையை என்றோ கடந்து விட்டனர். தமிழகத்திலோ இது இன்னமும் பசுமையகாத் தொடர்கின்றது.

  சுபா


  இராசகோபால ஆச்சாரியாரின் பாராட்டு:
  மதுரை மீனாட்சி கோவிலில் 8.7.1939 சனிக்கிழமை தாழ்த்தப்பட்டவர்கட்குத் திறந்துவிடப்பட்டமையையும் அன்று காலை ஆதிதிராவிடர்கள் அக்கோவிலுள் நுழைந்தமையையும் பற்றி அதற்கு 22 நாள் கழித்து 30.7.1939 அன்று மதுரையில் பேசிய மாண்புமிகு (கனம்) இராசகோபால ஆச்சாரியார் "இந்த வெற்றி (மதுரை மீனாட்சி கோவிலில் ஆதிதிராவிடர்கள் நுழைந்தமை) காங்கிரசுடையது அல்ல, அல்லது ஒரு கட்சிக்குக் கிடைத்த வெற்றியுமல்ல, இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இவ்விஷயத்தில் ஜஸ்டிஸ்காரர்களும் சுயமரியாதைக் காரர்களும் இன்னும் இதரர்களும் சேவை செய்திருக்கின்றனர்" என்று குறிப்பிட்டார் இச் செய்தி 31.7.39 நாளிட்ட "சுதேச மித்திரன்" ஏட்டில் வெளியாகி இருந்தது 
  ("விடு-தலை" 1.8.39).

  ”மகாத்மா காந்தி, இச்சம்பவத்தால் மனம் மகிழ்ந்து, 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்..
  “இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
   மதுரை ஆலய பிரவேசம் அரசியல் காரணங்களுக்காக நடந்தது எனச் சொல்பவர்களும் உண்டு. "மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939" என்ற கட்டுரையில் பேராசிரியர் தொ. பரமசிவன் எழுதும் போது, "காந்தியடிகள் எரவாடா சிறையில் காலவரையற்ற உண்ணா நோன்பைத் தொடங்கியதன் விளைவாக டாக்டர் அம்பேத்கர் காங்கிரஸ் இயக்கத்தோடு 'புனா ஒப்பந்தத்தை ' 1932 செப்டம்பர் 24இல் செய்துகொண்டார்.  ஆயினும் அவருக்கு நிறைவு ஏற்படவில்லை.     இந்தச் சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டோரைக் காங்கிரஸ் இயக் கத்துக்குள் தக்கவைக்க வேண்டிய நெருக்கடி அதற்கு உருவாயிற்று. இந்த நெருக்கடி தமிழ்நாட்டில் கடுமையாக இருந்தது. ஏனென்றால் முதலமைச்சர் ராஜாஜியின் வேட்பாளரான சுப்பையாவை எதிர்த்துத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராசர் வெற்றி பெற்றிருந்தார். வெளியிலே தெரியாதபடி கட்சிக்குள் ஒரு நெருக்கடி உருவாகியிருந்தது.
  மதுரை வைத்தியநாதையர் காங்கிரஸ் கட்சிக்குள் ராஜாஜியின் ஆதரவாளர் ஆவார். எனவே உள்கட்சி நெருக்கடி, தாழ்த்தப்பட்டோர் ஆதரவைப் பெறுவது என்ற இரண்டு நோக்கங்களோடு இவர் மதுரைக் கோயிலில் 'அரிசன ஆலயப் பிரவேசம் ' நடத்திக் காட்டினார். ராஜாஜியும் அரிசன ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் அவசர சட்டத்தை வெளியிட்டு, வைத்தியநாதையரின் முயற்சியினை வெற்றியாக்கிவிட்டார்'' எனக் குறிப்பிடுகிறார் தொ. பரமசிவம்.
   தந்தை பெரியார் ஆலய பிரவேசம் குறித்து 30-10-1932 குடிஅரசு இதழில் எழுதிய தலையங்கத்தில்.. "இவ்வாலயப் பிரவேச விஷயத்தில் நமக்கு இவ்வளவு அக்கறை இருப்பதற்குக் காரணம் எல்லோரும் கோயில்களில் சென்று வணங்க வேண்டும், அங்கு தெய்வமிருக்கிறது, அல்லது கடவுளிருக்கிறது என்னும் நோக்கத்துடன் நாம் கோயில் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை. கோயில்களும் தேசத்தின் பொதுச்சொத்து என்ற முறையில் வணங்குவதற்கோ, அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ, அல்லது சும்மாவோ, அவைகளுக்குள் நுழையக் கூடிய உரிமை தேசமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனேயே நாம் கோயில் பிரவேசத்தை முழுமனதுடன் ஆதரிக்கின்றோம். இதற்காகச் சட்டஞ்செய்யப்படும் முயற்சியையும் வரவேற் கிறோம்" என எழுதியிருந்தார். இந்தக் கருத்து தலித் ஆலய பிரவேசத்தை விரும்பும் அனைவருக்கும் உடன்பாடான கருத்தாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. “
  -#-