Google+ Followers

Saturday, June 7, 2014

சிரிச்சு மாளலெ 4

சிரிச்சு மாளலெ 4

இன்னம்பூரான்
ஜூன் 8, 2014

பெரியவங்க சொன்னா பலிக்கும்ணு சொல்வாங்க. அது நிஜம் தாங்க. புருஷன் பொண்சாதியும் எதிரும் புதிருமாக அரசியலில். மாமி காங்கிரஸ் கட்சி. மாமா அந்த கட்சியை வாருவார். ஒரு நாள் அவர் தீவிரமாகவே காங்கிரஸ் கட்சி மேலெ குற்றப்பத்திரிகை வாசிச்சப்போ, ஒத்தர் எளுந்து கேட்டாரு, ‘அய்யா! நீங்களெல்லாம் பெரிய மனுஷா! அப்டி இருக்கச்சே, பொண்சாதி கட்சி மேலெ இப்டி தூத்தலாமா?’. அவர் சொன்ன பதிலை கேட்டு எல்லாரும் விளுந்து விளுந்து சிரிச்சாங்க. அவர் சொன்னது, ‘ இத்தனை வருஷங்களாக, நான் இந்த காங்கிரஸ் கட்சிக்காரங்க முட்டாள்கள் என்று சொல்லி வந்தேன். அது ‘தப்பு’ந்னு கன்னத்திலெ போட்டுக்கிறேன். இந்த காங்கிரஸ்காரங்க மத்தவன் பொண்டாட்டியையே அடிச்சுக்குணுப்போற குண்டர்கள் என்று’ இப்போ தான் எனக்கு தெரியும்.!’ ‘பொண்டாட்டி’ என்ற சொல் ஒரு உருவகம். பொருள்: ‘அகப்பட்டதை சுருட்றது’ என்று ஒரு பாடம்; ‘அகப்படாததைக்கூட அமுக்கிறது’ என்று பாடபேதம். ‘என்னே தீர்க்க தரிசனம் !’ னு பேசிக்க்றாக.

யாரு இந்த திவ்யதம்பதிகள் என்று சொல்லுங்கள். பாப்பம்.

சித்திரத்துக்கு நன்றி: http://www.reallygoodmarquees.co.uk/wp-content/uploads/2011/10/Man-question-mark.jpg


Friday, June 6, 2014

சிரிச்சு மாளலெ 3

சிரிச்சு மாளலெ 3
இது பெட்டரு!
இன்னம்பூரான்
ஜூன் 7, 2014

மோடி தள்ளாடினா கோடி புண்யம்னு சொன்னராம், பொன்னம்மா! இது வதந்தி. மோடி 3.0 யின் அவதாரம் நேற்று. குஜராத்லெ டாஸ்மெக் இல்லைனா கூட , அய்யாவுக்கு கொஞ்சம் தடுமாற்றம்! பின்னெ, அவருக்கு அச்சம் ஏற்படாதா? எங்க அப்பா சொல்வார். இன்னிக்கு காலை பிடிக்கிறவன் நாளைக்குக் கழுத்தைப் பிடிப்பான் அப்டினு. நேத்தைக்கு இந்த புதிசு எம்.பி. களிடம் தரகர்கள் கரகாட்டம் ஆடுவாங்க; உன் தலையை கொய்துடுவாங்கன்னு; அண்ட் விடாதே அப்டினு சொல்லிக்கிட்டே இருக்காஹ. அப்பப்போய் ஒத்தன் அய்யாவின் காலை பிடிக்கப்போய், அவரு அவன் கையை முறுக்கிக்கிட்டே சொன்னாராம்: ‘அப்பனே! இந்த தொழுகை வைத்தியம் எல்லாம் எனக்கு வேண்டாம்டா. ஆளை விடு. தள்ளாட்றேன், பாருடா! என்றாராம். அவரு சுதாரிச்சுப்பாருன்னு தான் தோணுது. ஆனா, அந்த ஆல் இன் ஆல் புதிசு எம்.பி. களிடம் தரகர்களிடமிருந்து களுத்தைக் காப்பித்துக்கணும். இல்லேனா, மானமும் போய்டும்; வேலையும் போய்டும்; கிம்பளமும் அவுட்டு.
வட இந்தியாவில் காலை தொட்டு வணங்கும் வளக்கம் குறையுது. தெற்கே வளருது.

வர்ரேன்...

சித்திரத்துக்கு
நன்றி:http://1.bp.blogspot.com/-t3ewFKfs_Rg/UO5yZIyBpzI/AAAAAAAABs8/04HAhBT3n_Q/s320/download.jpg

சிரிச்சு மாளலெ 2

சிரிச்சு மாளலெ 2இன்னம்பூரான்
ஜூன் 6, 2014

‘குப்புற விழுந்தாலும் மீசையிலெ மண் ஒட்லை’ங்கிறதெல்லாம் பத்தாம் பசலி. அதான் சாமி கரடி வித்தைங்கிறது கூட அலுத்துப்போச்சு. ‘கண்டேனே! கண்டேனே!ஒண்ணுக்கும் இரண்டுக்கும் நுட்பமான வித்தியாசம் கண்டேனே!’ என்பது தான் தற்கால காங்கிரஸ் வித்தை.
மோடி 1.0. & மோடி 2.0. என்று தரம் பிரித்து, ‘மோடி 2.0.‘க்கு ஏறுமுகம் என்று யான் உரைத்தது, மோடி 1.0. ஐ இறக்கியது அல்லவோ! என்று ஶ்ரீமான் சசி தரூர் கட்சி தலைமையின் அறிவிப்புத்துறையிடம் சால்ஜாப்பு சமர்ப்பிவித்திருக்கிறார். இதற்கு முன்னரே, மணி சங்கர அய்யர் என்ற ராஜீவ் காந்தி காலத்து காங்கிரஸ்காரர், சசிக்கு இருந்த மூளை எங்கே போச்சு? என்று கேட்டு சசிக்கு உபத்ரவம் கொடுத்தார். குலை நடுங்கிப்போன சசியின் விவரமான விளக்கம்: ‘நான் காங்கிரஸ் கட்சியின் உபாசகர்; அதனுடைய சமய சார்பின்மையின் பக்தன். நான் கொஞ்சம் மோடியை ஆட்டிப்படைக்க வழி செய்தேன்; அவ்ளவு தான். மோடி 2.0. க்கு புகழ்மாலை சூடினால், மோடி 1.0. மாட்டிக்கிடுவார். அவருக்கு இடுக்கு பிடி போட வழி செய்தேன் என்றார். 

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா ? உஷ்! காந்தி மஹான் இருந்த கட்சி. இப்டியெல்லாம் எள்ளலாமோ?!


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, June 5, 2014

சிரிச்சு மாளலெ 1

சிரிச்சு மாளலெ 1இன்னம்பூரான்
ஜூன் 6, 2014

பாரதவர்ஷம் என்ற பொன் விளையும் பூமியிலே அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் என்ற சங்கீத வித்வான் ரொம்ப பிரபலம். அவரை, மற்ற உஸ்தாத்களுடன் ஜனாதிபதி மெடல் சூட்டி கெளரவித்தார். உஸ்தாத் -வித்வான் தாரதம்யம் கண்டு கடுப்பில் இருந்தார், அய்யங்கார்வாள். ஜனாதிபதியின் விஐபி எடுபிடியாக (மிஸ்ட்ரெஸ் ஆஃப் செரமனீஸ்) இருந்த நிர்மலா ஜோஷி அம்மையார், அய்யங்காரின் எரிச்சலை கண்டு கொள்ளாமல், இசை கேடாக ‘அய்யங்கார்ஜீ! உங்கள் தோடி பிரபலம். பாடுக’ என்று பணித்தாராம். அய்யங்காரும், ‘சரி தாண்டி, போடீ!’
என்றாராம். சான்று: சுப்புடு.

அந்த மாதிரி பிரியங்காவை ‘என் பொண்ணு மாதிரி’ என்று இணக்கமாக சொன்னதற்கு பதிலடியாக ‘நான் ராஜீவ் காந்தியின் பொண்ணாக்கும். போடா மோடி பிண்ணாக்கு..’ என்று பொருள்பட அந்த பொண்ணு சொல்லிடிச்சாம். பேப்பர்காரங்க சொல்றாங்க. அசோக சக்கரவர்த்தியின் ‘ப்ரியம் வத’ என்ற ஸுபாஷிதம் தான், ப்ரியாங்கா என்ற பெயரின் பின்னணி. தப்பா பேர் வச்சுட்டா, பாட்டி என்று தான் தோன்றது! அம்மாகாரி பொன்னம்மா அந்த வருண் வாண்டுக்கு சரியான புத்தி புகட்டினாராம். அவன் பதவிப்பிரமாணம் எடுத்தவுடனேயே பெரியம்மாவுக்கு படா கும்பிடு போட்டானாம். ‘மொதல்ல பத்திரத்திலெ கையொப்பம் போடு என்றாளாம், பெரியம்மா. அவங்களுக்கு தெரியும், ஆவணங்களின் மகிமை. வருண் கத்துக்குட்டி. 

அடுத்தபடியாக:

சல்மான் குர்ஷீத் தருண் தேஜ்பாலுக்கு வக்காலத்தாம். கபில் சைபால் கல்கத்தாவுக்கு போய் வாதாடறப்போறாரம். ப.சி. யும் எங்காத்து மாமா போல கேஸ்கட்டு எடுத்தக்கப் போறாராம்.
பொழைக்க தெரிந்த மனுஷா. அவா காட்லெ மழை பொழியும்.
*
பி.கு. சுப்புடு சொல்றார்: ‘அய்யங்காரா! கொக்கா! மெடலை தேச்சு பாத்தார். கில்ட்டு!
எடுபிடி மாமி ரசவாதம்னு கொமைஞ்சு போய்ட்டாராம், அய்யங்கார்வாள். 
பாரதவர்ஷம் என்ற பொன் விளையும் பூமியிலே நிலக்கரி கறுப்பாக இருந்தாலும் அயல்நாடுகளில் கொழிக்கும். அலைகற்றை ஆகாசத்தை வளைக்கும். இன்னும் எத்தனையோ!
-x-

சித்திரத்துக்கு நன்றி: http://solvanam.com/wp-content/uploads/2009/12/img430.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, June 4, 2014

[4] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370

[4] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370

இன்னம்பூரான்
04 06 2014
(தொடரும்)...[3]...
தஞ்சாவூரான் திரு. என்.கோபாலசாமி அய்யங்கார், மூடி மெழுகாமல் உகந்த பதில் அளித்தார். அது என்ன?

அவருடைய பதிலை கூறுவதற்கு முன்னால், எல்லா துறைகளிலும் புகுந்து தீர்வு காணும் பொறுப்பு உள்ள அமைச்சர்-Minister without Portfolio - என்றால் என்ன என்பதை விளக்க வேண்டும். அது ஒரு அருமையான ஏற்பாடு. அத்தகைய அமைச்சர் பிரதமருக்கு அடுத்தபடி எனலாம். அல்லது சமமானவர் என்று கூட சொல்லலாம். அல்லது பிரதமரின் பிரதிபலிப்பு என்றும் சொல்லலாம். எல்லா துறையிலும் தலையிட்டு தன் கருத்தை/ தீர்வை பதிவு செய்யும் உரிமை அவருக்கு உண்டு. அத்தகைய பதவி வகித்தவர்களில் ராஜாஜியையும், திரு. என்.கோபாலசாமி அய்யங்காரையும் குறிப்பிடலாம். அப்படி ஒருவர் இருந்திருந்தால், 2ஜி விவகாரம் கருவிலேயே தடை செய்யப்பட்டிருக்கும். இனி திரு. என்.கோபாலசாமி அய்யங்காரின் பதிலுக்கு வருவோம்.

‘... இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களை போல் அல்லாமல், காஷ்மீர், விடுதலை பெற்ற இந்தியாவுடன் இணைவதற்கு தயாரான நிலைமையில் இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும், ஜம்மு காஷ்மீர் பொருட்டு போர் களத்தில் இறங்கிவிட்ட தருணம். ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், ஒரு அசாதாரண சூழல் உருவாகிவிட்டது; நாட்டின் சில பகுதிகள்  புரட்சியாளர்/ விரோதம் பாராட்டும் நாடு ஆகியோரின் கையில் இருக்கிறது. ஐ.நா.வின் தலையீடு மற்றொரு சிக்கல். காஷ்மீரின் உள்நாட்டு பிரச்னையை தீர்த்தால் அந்த சிக்கலை அவிழ்க்கமுடியும். எப்படியும் ஜம்மு & காஷ்மீர் அரசியல் சாஸன மன்றம் மூலமாக மக்கள் கருத்து தான் தீர்மானிக்கவ வேண்டிய முடிவு, இது. ஏனெனில், அமைதி நிலவும் போது மக்கள் எடுக்கும் முடிவை மதிக்க வேண்டும். சுருங்கச்சொல்லின், ஹரிசிங்கின் ஆபத்சஹாய உடன்படிக்கையை கூடிய சீக்கிரம் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது...’.

நேருவுக்கும், படேலுக்கும் சம்மதமான அறிவிப்பு தான், இது. சர்தார் படேல் ஷரத்து 370 ஐ எதிர்க்கவில்லை. நேரு காஷ்மீரை ஒரு அழகிய பெண் என்றார். ரொமாண்டிக் நோஷன். சர்தாரோ உள்ளதை உள்ளபடி பார்த்து, வெளிப்படையாக இதை ஆதரித்தார்; இந்த ‘திரிசங்கு நரகாசுரர்களை’ அடக்கி ஆண்ட சர்தார் தடாலடி பிரிவினை வாதிகளுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. நேருவின் அனுமதியுடன் ஷேக் அப்துல்லா, மிர்ஜா அஃப்ஜல் பெக், மெளலானா மஸூடி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தியதற்கு சர்தாரின் சம்மதம் இருந்தது. இத்தனைக்கும் பல கோணங்களில் அவருடையை அவநம்பிக்கையும், அதனுடைய பிரதிபலிப்பும் கண்கூடு. ஒரு காலகட்டத்தில் ஷேக் அப்துல்லாவுக்கும், திரு. என்.கோபாலசாமி அய்யங்காருக்கும் அபிப்ராய பேதம் அதிகரிக்க, திரு. என்.கோபாலசாமி அய்யங்கார் அரசியல் சாஸன அசெம்ப்ளியிலிருந்து ராஜிநாமா செய்யும் அளவுக்கு அபிப்ராய பேதம் வலுத்தது.

(தொடரும்)

சித்திரத்துக்கு நன்றி:http://www.indiaelections.co.in/wp-content/uploads/2009/11/shiekh_abdullah.jpg

பி.கு. ஷரத்து 370 எல்லா மாநிலங்களுக்கும் வேண்டும் என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டை அது குலைத்து இருக்கும் என்பது என் கருத்து. இன்று தெலிங்கானா பிறந்த கதையை பாருங்கள். தேசீயம் என்பதற்கு இரு முனைகள் உண்டு.

Sunday, June 1, 2014

[3] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370

[3] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370


இன்னம்பூரான்
02 06 2014

‘சொன்னால் விரோதம்’ என்று வாளாவிருந்தனர், உள்ளுறை அறிந்த காங்கிரஸ்காரர்கள் கூட. ஒரு நிகழ்வு. பாம்பேயிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த நான், அகஸ்மாத்தாக திரும்பிப்பார்த்தேன். எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகமாக, இரு போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அரசியல் கைதியாக அமர்ந்திருந்தார், ஷேக் அப்துல்லா சாஹேப். மரியாதை நிமித்தம் கையாட்டினேன். மலர்ந்த முகத்துடன், அவரும். ஒரு போலீஸ் அதிகாரி வந்து என்னை குடைந்து எடுத்து விட்டார். தான் மதித்த நண்பனை கைது செய்யும்படி நேரு உத்தரவு இட வேண்டியிருந்தது. பிறகு மன்றாட வேண்டி இருந்தது. படேலின் அணுகுமுறை வேறு: அவருக்கு ஷேக் அப்துல்லாவின் நிறம் மாறும் குணம் பிடிக்கவில்லை. ஷரத்து 370ன் சிற்பியும், நிபுணத்துவத்தின் சிகரமும் ஆன என்.கோபாலஸ்வாமி அய்யங்கார் அவர்களுக்கு படேல் எழுதினார்,’ பல்டியடிக்க விரும்பும் போதெல்லாம் ஷேக் சாஹேப் தான் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமையை முன்வைப்பார்.’!
1953ம் வருடம் காஷ்மீருக்குள் அனுமதியில்லாமல் இந்தியர் நுழையமுடியாது. (1981/82 சில உட்பகுதிகளுக்கு செல்ல, நான் அதை பெறவேண்டியிருந்தது! ) இந்த தடையை மீறிய தேசபக்தரும், ஹிந்து மஹா சபை தலைவரும் ஆன திரு. ஷ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி கைது செய்யப்பட்டார். மருந்துகள் சரிவர கொடுக்கப்படவில்லை. மரணம் அடைந்தார். அவரோ புருஷோத்தமன். தந்தையோ மஹாபுருஷன் அஷுடோஷ் முக்கர்ஜி. அண்ணனோ தலைமை நீதிபதி ராம்பிரசாத் முக்கர்ஜி. சவ ஊர்வலம் அஷுடோஷ் முக்கர்ஜி ரோடு வழியாக, ஷ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி ரோடு வழியாக மயானம் அடைந்தது. லக்ஷோபலக்ஷம் மக்கள் அஞ்சலி செலுத்தினர். ஊரோ இந்தியாவின் பெரிய நகரம், கல்கத்தா. வீதிகளோ ராஜபாட்டைகள். அவற்றின் பெயர், இவருடைய குடும்பம் சார்ந்தது. அந்த படத்தைப் பார்த்து என் மனம் நொந்தது இன்னும் நினைவில் உளது. அவருடைய அன்னை நேருவுக்கு கடிதம் எழுதினார், ‘My son was killed. I charge you with complicity in that murder.’: ‘என் மகன் கொல்லப்பட்டான். அந்த கொலையின் உள்கை நீ.’. எனக்கு தெரிந்தவரை நேரு அதற்கு பதில் போடவில்லை.
1981/82ல் நான் காஷ்மீர் போனபோது ஒரு அயல்நாட்டில் இருப்பதாக உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் துப்பாக்கி போலீஸ். மாடமாளிகைகளும், மாடமாளிகை ஓடங்களும், குடிசைகளும், ஏதோ ஒரு ஒத்துழைப்பில், கலந்து வாழ்ந்தன. காஷ்மீரவாசிகள் ஒருவராவது தன்னை இந்தியராக கருதவில்லை. ஆங்கிலேய காலனித்துவம் போல இந்திய தொப்புள்கொடியை அவர்கள் பாவித்தனர். ஷரத்து 370 கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு இந்த நிலை! ஷஷ்டியப்தபூர்த்தி காலகட்டத்தில், சலுகைகளை அனுபவித்த யாம், ஷரத்து ரத்து ஆகலாம் என்ற பேச்சு எழுந்தாலே, இந்தியாவை விட்டு விலகிவிடுவோம் என்று ஒமர் அப்துல்லா பயமுறுத்துகிறார். பேஷ்!
இது பற்றி நன்கு ஆராய்ந்து, ஆஸ்ட் ரேலியாவின் மெல்போர்ன்/ இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் ஆன அமிதாப் மட்டு (‘மட்டு’ காஷ்மீரத்தில் பாபுலர் பெயர்.) ஐந்து வினாக்களை எழுப்பி, நிஜத்துக்கும், கற்பனைக்கும் இது விஷயமாக உள்ள வித்தியாசத்தை அலசியிருக்கிறார். 
அந்த வினாக்களை புரிந்து கொள்ள ஒரு சின்ன வரலாற்று தகவல் தொகுப்பு:
  1. ஷரத்து 370ன் தேவை என்ன? என்று மெளலானா ஹஸ்ரத் மோஹினி அக்டோபர் 17, 1949ல் அரசியல் சாஸன மன்றத்தில் கேட்டார். பதில் அளித்த அரசியல் ஞானியும்,  காஷ்மீரத்து மாஜி திவானும், அந்த ஷரத்தை எழுதியவரும் ஆனவரும். எல்லா துறைகளிலும் புகுந்து தீர்வு காணும் பொறுப்பு உள்ள (மோடி தர்பாரில் அத்தகைய அமைச்சர்-Minister without Portfolio - இருக்கவேண்டும்.) தஞ்சாவூரான் திரு. என்.கோபாலசாமி அய்யங்கார், மூடி மெழுகாமல் உகந்த பதில் அளித்தார். அது என்ன?
(தொடரும்) 

சித்திரத்துக்கு நன்றி: http://kashmirvoice.org/wp-content/uploads/Gopalaswami-Ayyangar.jpg

[2] காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~

காஷ்மீர் தலைப்பாகை: ஷரத்து 370~[2]


இன்னம்பூரான்
01 06 2014

1947ல் காஷ்மீரில் நடந்தது என்ன? லெப்டினண்ட் ஜெனெரல் ஶ்ரீ ராஜராஜஸ்வர் மஹாராஜாதி ராஜா ஶ்ரீ ஸர் ஹரிசிங் இந்தர் மஹீந்தர் பகதூர் ‘ப்ளா ப்ளா’ கலோனிய அரசின் விசுவாசி. எட்டு வயதில் கர்ஜான் பிரபுவின் கெளரவ எடுபிடியாக அமர்ந்து, 20 வயதில் காஷ்மீர் தளபதியாக (நம்மூர் ஸ்டாலின் மாதிரியில்லை; சீருடை, மெடல் எல்லாம் உண்டு!) பதவி உயர்த்தப்பட்டு, சொகுசு வாழ்க்கை அனுபவித்தவர். அவருக்கு காங்க்ரஸ்ஸும் பிடிக்காது; முஸ்லீம் லீக்கும் பிடிக்காது. சர்தார் படேலின் சமஸ்தான அணுகுமுறையும் பிடிக்காது. தன்னை மட்டும் பிடிக்கும். இழுபறி ‘ராஜதந்திரம்’ செய்து வந்தார். அக்டோபர் 1947ல் பாகிஸ்தான் ராணுவ உந்தலுடன் பாகிஸ்தானிய புஷ்டூன் பழங்குடி மக்கள் + காஷ்மீர் மீது படையெடுத்தார்கள். அவர்கள் அன்று லபக்கிய பகுதிகள் இன்றும் அவர்கள் கையில். தொடை நடுங்கிய ஹரி சிங் இந்தியாவிடம் ராணுவ உதவி நாடினார்.‘சரி தான். இந்தியாவுடன் சேரப்போவதாக உடன்படிக்கைப் போட்டால் தானே, அது முடியும் என்றார், மவுண்ட்பேட்டன். வேறு வழியில்லை என்று அக்டோபர் 26, 1947 அன்று தன்னுடைய நாட்டை ((including Jammu, Kashmir, Northern Areas, Ladakh, Trans-Karakoram Tract and Aksai Chin) அதில் கையொப்பமிட்ட ஹரி சிங்குக்கு மறுநாளே அளித்த பதிலில் மவுண்ட்பேட்டன் பிரபு எழுதிய முக்கிய வாசகம்: ‘படையெடுத்தவர்களை விரட்டி அடித்து, சகஜ நிலை திரும்பிய பின், மக்கள் கருத்தறிந்து செயல்படவும். இது எமது அரசின் விருப்பம்’. அதற்கிணங்க இந்திய அரசும் மக்களிடம் கருத்தறியும் தேர்தல் நடத்த தயார் என்றது. மற்ற எல்லா ஸமஸ்தானாதிபதிகளிடம் போடாத வழுக்கு மரம் இங்கே. அதனால் காஷ்மீருக்கு ஒரு திரிசங்கு நரக வாழ்க்கை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பகை. சென்னை செண்ட்றல் நிகழ்வு வரை பயங்கரவாதிகள் தாக்கம். நாம் இந்திய அரசை வசை பாடுவதற்கு இல்லை. சர்தார் படேலின் தீர்க்கதரிசனத்துக்கு முட்டுக்கட்டை போட்ட ஹரிசிங்குக்கு தேசாபிமானமும் இல்லை. சுய அபிமானமும் இல்லை. தீர ஆலோசித்துத் தான் ஒருமித்த கருத்துடன் நேருவும் படேலும் இயங்கினர். அவர்களின் அறிவுரை படி, படி இறங்கினார், ஹரி சிங், திருமகனார் கரன் சிங்கை படியேற்றிவிட்டு. கரன் சிங் தங்கமான மனிதர். ஆன்மீகவாதி, காங்கிரஸ் விசுவாசி. ஆனால், காஷ்மீர் விஷயத்தில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த தொடரில் ஒரு ஆவணத்தை இணைத்து, இந்த உடன்படிக்கை ஆவணம் காணாமல் போன கதையை சொல்லி, இப்போதைக்கு நிறுத்தி, பிறகு தொடருகிறேன். ஷரத்து 370 ஐ இத்தனை விவரம் சொல்லாமல், ‘ஏனோ தானோ’ என்று விவரித்தால். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்றமாதிரி! அதான்...
தொடரும்

சித்திரத்துக்கு நன்றி:http://aim4u.ch/wp-content/uploads/2014/04/imagesGRWM55QQ-150x150.jpg

பல உசாத்துணைகளில் படிக்க வேண்டிய ஒன்று: http://www.hindu.com/op/2005/09/18/stories/2005091800161400.htm