Thursday, May 24, 2018

ஜன்ம தின வாழ்த்து நன்றி மடல்

ஜன்ம தின வாழ்த்து நன்றி மடல்

வழக்கம் போல சுபாஷிணி எடுத்துக்கூற நண்பர் குழாம் அடுத்தடுத்து இனிதே வாழ்த்த, அமைந்தது என் பிறந்த தினம்.[14 05 2018] நான் எடுத்த முயற்சிக்கெல்லாம் சுபாஷிணி தான் பிராரம்பம்.

நான் அன்றாட வாழ்க்கையின் நிறைவை அன்றாடம் மனதார அனுபவித்து கொண்டாடுவது வழக்கம். அதனால் மனம் விட்டு, செயற்கையான தாழ்நிலையெல்லாம் வைத்து அதில் என்னை சிக்கவைத்துக்கொள்ளாமல், உள்ளது உள்ளபடி எழுதுகிறேனே என்ன? சரி தானே!

குடும்பத்தில் சில பிரச்னைகளால், பதிலளிப்பதில் தாமதம். பெரிய குடும்பம். ஜகமே குடும்பம்.

மூன்று வருட மின் தமிழ்/வல்லமை குடும்ப கண்ணோட்டம் மேலும் ரசனையாகத்தான் அமைந்தது. வல்லமையும் வசதியாக சஞ்சாரித்துக்கொண்டிருக்கிறது. சிங்காநெஞ்சன் சொல்கிற மாதிரி 85 வயது முதுமை தான் என்கிறார், என் அடுத்த வீட்டு நண்பர். கீழே விழுந்து நிஜமாகவும் மூக்கை உடைத்துக்கொண்டதாலும், வயோதிகத்தின் அசதி கொஞ்சம் அமுக்கிப்பிடித்தாலும், வயசுக்கு வீச்சாத்தான் இருக்கிறேன். இறையன்பு தான் வேறென்ன?

நண்பர்கள் பாண்டியராஜா, இறையடியான்,'நவீன' பழமை பேசி, அவருடைய புகழுரைகளின் நான் மயங்கினாலும், ருத்ரா மிகைப்படுத்தாதவர் என்பதால், அவற்றை ஆனந்தமாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறி,காளை நம்ம தம்பி தானே என்று விட்டு விடாமல், அவருடைய பர்மா பயணத்தை மெச்சி, அவருடைய குடும்பத்தில் நான் ஒன்றிப்போனதை நினைத்து, இனிது மகிழ்ந்து, 'அக ஊதா', 'புறச்சிவப்பை' பற்றி உவமான உவமேயங்களாக படைக்கப்போவதை விளம்பி (மின் தமிழ்லெ போடுவாங்களோ?!),செல்வப்பரிமாணத்தைக்கண்டு வியந்து, வியந்து, நான் தான் அதை துவக்கிவைத்தேன் என்ற கப்ஸா மாலையை தரித்துக்கொண்டு, எஸ்கேஎன், ரத்தினம் சந்திர மோஹன், சி.ஜெ.,அண்ணா கண்ணன்,ஒ.அ., நுதலோசு, தமிழ்த்தேனீ (திவ்யதம்பதி இங்கு வந்து த்ரிசனம் தந்தார்கள்),செளம்யநாராயணன், தேனி ஆகீயோருக்கு நன்றி நவின்றபடி, சீதாலக்ஷ்மி, பரிசாரிக சிரோன்மணி ஷை, தமிழரசி பவளசங்கரி, நம்ம ஆதவன் திவாகர், பார்வதி மேகலா, தேமொழி,மலர்விழியாள் எல்லாருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு விசனம் என்னை ஆட்டிப்படைக்கிறது. என் ஆயுட்காலத்தில் தீர்வு கிடைத்தால்,நிம்மதியாக இருக்கும். இந்தியா போகும் பாதை சரியாக இல்லை. தமிழ்நாடு போகும் பாதை தப்பு வழி என்று வெளிப்படையாக தெரிகிறது.முகலாயர்/வெள்ளையன்/ மேல்சாதி ஆகியோரின் ஆதிக்கம் எத்தனையோ தேவலை என்று கூர்ந்து கவனிப்பவர்கள் மனம் வருந்தும் அளவுக்கு மக்கள் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் பகை மக்களை பகடையாக வைத்து சூதாடுகிறது. சமூக விரோதிகள் எங்கும் நிறைந்தவர்களாக போலீசாலேயே கூறப்படுகிறர்கள். பெண்பிள்ளைக்கு எங்கும் டேஞ்சர். சிசுஹத்தி செய்பவர்கள் டாக்டர் சீருடை அணிந்து வலம் வருகிறார்கள். சுருங்கச்சொல்லின் சந்தி சிரிக்கிறது, அது தன்னுடைய சந்தி என்பதை புரிந்து கொள்ளாமல்.
அந்த முத்துமாரியம்மா தான் வந்து காப்பாற்றவேண்டும்.
அன்புடன்,
இன்னம்பூரான்