Google+ Followers

Friday, March 25, 2016

இன்னம்பூரான் பக்கம் 5: 28: கனம் கோர்ட்டார் அவர்களே! 28 கந்துவட்டியும்கமிஷனர் துரையும்
இன்னம்பூரான் பக்கம் 5: 28: கனம் கோர்ட்டார் அவர்களே! 28

ந்துவட்டியும்கமிஷனர் துரையும்

இன்னம்பூரான்
Friday, March 25, 2016, 12:27
பிரசுரம்: http://www.vallamai.com/?p=67442

எனக்கு அலுத்து விட்டது. இயற்றிய சட்டம், அதன் கிளைகள், தீர்வு அளித்த சட்டம், சட்ட நிர்வாகம், சட்ட சீர்திருத்தம் ஆகியவை பற்றி நான் தெளிவாக பலமுறை எழுதியிருந்தாலும், ‘தும்பை விட்டு, வாலையும் விட்டு, வெறும் காற்றை பிடிக்கப்பார்த்து ஏமாந்து போகிறார்கள் சிலர். நம்ம இன்னம்பூரான் தானே ! அவர் என்னத்தைக் கண்டார்? என்று ஒரு இனம். சட்டம் ஒரு இருட்டறை என்றால் எதுகையோ, மோனையோ, அலங்காரமாக இருக்குது; இது மற்றொரு இனம். சட்டம் ஒரு கழுதை என்றால், உவமை அணி என்றொரு கட்சி. ஆக மொத்தம், எல்லாரும் ராங்கு ! புது வாசகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களாவது படிக்கட்டுமே.

அரசாங்கத்தைக் குறை சொல்வது எளிது; நடாத்துவது கடினம். பல வருடங்களாக, பற்பல அரசு நிர்வாகங்களுடன் இணைந்தும், எதிர்த்தும் நற்பணி செய்து வந்த நான் விதிகளையோ, சட்டப்புத்தகத்தையோ, ஈயடிச்சான் காப்பியாக அமல் படுத்தியதாக ஞாபகம் இல்லை. எங்கள் பயிற்சி மன்றத்தில் இது பற்றி பாடம் எடுத்தார்கள். ஒரு சிறிய உதாரணம். ஒரு நோயாளிக்கு அவசரமாக பென்ஷன் எடுத்துச்செல்ல ஆணையிட்டேன். இடம், பொருள், ஏவல் பெரிய கதை. ஃபோன்: ‘சார்! ஐந்து நிமிடம் முன்னால் அவர் இறந்து விட்டார். என்ன செய்ய?’. அந்தக்காலத்தில் அவர் மனைவிக்கு பென்ஷன் இல்லை; பழம்பாக்கி போய் சேர ஒரு வருடம் ஆகும். ‘சத்தமில்லாமல் பிரேதத்தின் கைநாட்டு எடுத்து வா. நான் அதற்கு சம்மதித்து ஆணையை பதிவு செய்கிறேன்.’ ஆட்டம் க்ளோஸ். என்னது இது? அவர் பேராசிரியர். அவர் கிட்ட கை நாட்டா? பிடி சார்ஜ் ஷீட். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட். அதுவும் செல்லுபடியாகும்!!!!

சட்டம் இயற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரு பின்னணியை முன்வைத்து பொது நலம் நாடுவார்கள்: ஜமீன்தாரி ஒழிப்பு. ஓட்டைகள் தவறியும், திட்டமிட்டும் அமையலாம். நீதிபதிகள் மோப்பம் பிடித்து சரி செய்த பின் அது சட்டம் ஆகும். இந்த வகையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இந்த வழக்கை பாருங்கள். இந்தியாவின் மத்திய & பேரார் மாகாணத்தில் பேதுல் ஜில்லாவில் ஒரு லேவாதேவிக்காரர் ஒரு பழங்குடி மீது வட்டியும் முதலுமாக வசூலிக்க வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்கள் பக்கா. கடங்காரரோ, ‘ஐயோ! அந்த பாவி தான் கடங்காரன். காசா கொடுத்தேன். உழைப்பா கொடுத்தேன், சின்ன பசங்கக் கூட உழைத்தார்கள். அவன் நாசமா போக! கடவுளே! நீ கண்ணில்லா கபோதி! எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. நோ ஆவணம். ‘ என்று கதறினான்.

ஜட்ஜ்மெண்ட்:
‘சட்டப்படி வாதியின் வழக்கு சரியே. பிரதிவாதி இந்த கடனை தீர்க்கத்தான் வேண்டும். இல்லாவிடின் கடுங்காவல். வட்டியும் முதலுமாக அவர் ₹ 200 கட்டவேண்டும். அவரோ பரம ஏழை. ஆகவே, சட்டப்படி வருடத்துக்கு ஒரு ரூபாய் வீதம் 200 வருடங்கள் கட்டியே ஆகவேண்டும். இந்த ஷரத்துப்படி அப்பீல் கிடையாது.’

-J G Bourne, Deputy Commissioner & ex officio Judge of the Small Cause Court.
ஆதாரம்: MN Buch: 2008 When the Harvest Moon is Blue: Har Anand (p.56-57).

சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, March 22, 2016

‘வீதியிருக்கு…’: இன்னம்பூரான் பக்கம்: 2 சமுதாயமும், நீயும், நானும், அவரும் 2இன்னம்பூரான் பக்கம்: 2


Wednesday, March 23, 2016, 4:59

பிரசுரம்: http://www.vallamai.com/?cat=1066


இன்னம்பூரான் பக்கம்: 2 

சமுதாயமும், நீயும், நானும், அவரும் 2

‘வீதியிருக்கு…’
இன்னம்பூரான்

22 03 2016

 


கணக்குப் படிக்கும் போது, வட்டத்துக்குள் வட்டம் வரைந்து அழகு பார்ப்பதும் உண்டு. பெரிய வட்டம் இந்திய சமுதாயம், அம்பானியிலிருந்து அம்மாக்கண்ணு வரையில். அம்பானி அம்பாரியில் ஏறி ஆனை சவாரி செய்வார். அம்மாக்கண்ணு அபலை. புதுமைப்பித்தன் தான் அவரை பற்றி எழுதிவிட்டாரே. அடுத்த உள்வட்டத்தில் சராசரியில் மேன்மக்கள், செல்வத்தில். பகவத் கீதை-விஸ்வரூப தரிசனத்தில் ஆசாரியன் சொன்ன மாதிரி பற்பல பிரபஞ்சங்கள் சுழன்றவண்ணம் உள.

சில வருடங்களுக்கு முன் மும்பையில் மக்கள் ஆலோசனை மன்றத்துக்காக அலைந்து திரிந்தபோது, கால்களை இழந்த ஒரு மாற்றுத் திறனாளியை பேட்டி கண்டேன்; அவர் எனக்குக் குடும்பத்தினரை அறிமுகம் செய்து, தேநீர் வாங்கிக்கொடுத்தார்.

அவர் கதையை நான் எழுதப்போவதால், சாரம்சம் மட்டும் இங்கே, பக்கவாட்டில் கற்பனைத் தேரோட்டி!

‘நான் பிச்சை எடுத்து வாழ்ந்தேன். நல்ல வருமானம்; ஆனால் அவமானம். இந்தப் படத்தில் நான் வணங்கும் இந்த பார்ஸி அம்மை தான், எனக்கு வண்டி வாங்கிக்கொடுத்து, பழைய பேப்பர் வாங்கி விற்கும் நுட்பங்கள் சொல்லிக்கொடுத்து, இந்த கடைக்கு மூலதனம் போட்டார். இன்று நல்ல வருமானம்; மாதம் நிகரலாபம் 50,000 ரூபாய். இந்த கொலாபா பிராந்தியத்தில் தான் இந்த வியாபாரம் கொழிக்கும். ஆனால், கனவில் கூட குடிசை கூட வாங்க முடியாது. அதனால், வீதி தான் வீடு. பசங்க இங்கே தான் பிறந்தாங்க. நல்ல செக்யூரிட்டி, எங்கள் பிரபஞ்சம் தான் என்றார். போலீஸ் மாமூலில் மாதம் 10,000 அவுட்.’ என்றார்.


அடுத்த பேட்டி: மாதுங்கா போலீஸ் ஸ்டேஷன். டிஃபனும், இனிப்புடன் கொடுத்து, அசத்தி விட்டார்கள்.

இன்ஸ்பெக்டர்:

‘ஐயா! உங்களுக்கு என்ன பதில் சொல்வது? நான் சிப்பாயாக சேர்ந்து, 20 வருடங்களில் இரு உயர் பதவிகள். ஆனால், அதே ஓர் அறை குடில். வசதி நில். நேரம், காலம் தவறிய ஊழியம். இரண்டு மகனும், இரண்டு மகளும் விவரம் தெரிந்த வயது. பெற்றோர்கள் உடன். எனக்கும் என் மனைவிக்கும் தனித்துப் பேசிக்கொள்ளக்கூட இடம் இல்லை. பிறந்த நாள், விவாக நாள் என்றால், ஹோட்டலில் இடம் பிடித்துத்தான் ஜல்ஸா செய்யமுடியும். நாங்களும் மனிதர்கள் தானே! கட்டுப்படியாகாது. லோக்கல் ரெளடி தான் இது உபயம். நான் வாயடைத்து நின்றேன்.


ஹெப்ஸிபா (16) வாயு வேகத்தில் ஓட்டப்பந்தயத்தில் கெலிப்பாள்; அதிலேயே கரணம் போடுவாள். ரியோ டெ ஜெனீரோவில் நடந்த தெருவாசி பெண்களுக்கான பந்தயத்தில் வாகை சூடினாள். அது சரி. அவள் வளர்ந்த விதம் என்ன? செல்வந்தர்கள் வளைய வரும் நேரு ஸ்டேடியம் கட்ட, தெருவில் வளர்ந்து, உருண்டு பிரண்ட இந்தப் பெண் வெளியேற்றப்பட்டாள். ஏதோ சென்னை கார்ப்பரேஷன் நடத்திய சரணாலயத்தில் அபயம். கருணாலயா என்ற தன்னார்வக் குழு நடத்திய தெருவாசி பெண்களுக்கு ஆன பந்தயத்தில் நல்ல பேர் எடுத்தாள். மிகுந்த பிரயாசை செய்து, கடன் வாங்கி, கருணாலயா, அவளை ரியோ அழைத்துச்செல்ல, அவள் அங்கு வெற்றியுடன், பேசியே மக்கள் மனதைக் கவர்ந்தாள். அஷோக், ஸ்னேகாவும், உஷாவும் அங்கு சொன்ன சமாச்சாரம், ‘ நாங்கள் நாட்தோறும் போலீசுக்கு நடுங்கி வாழ்கிறோம். எங்களைப் பாதுகாக்க வேண்டிய போலீசால் தான் எங்களுக்கு அபாயம். அதிலிருந்து எங்களை தப்புவிக்க, போலீஸ் பயிற்சி மன்றங்களில் பேச எங்களைக் கூட்டிச்செல்லுங்கள்.’ இது இன்றைய ஹிந்து இதழ் செய்தி.


ஐயாமார்களே!, அம்மாமார்களே!


மூன்றுமே உண்மை செய்திகள். நன்றாகச் சிந்தித்து, இந்த மூன்றையும் மட்டும் பற்றி, திசை மாற்றாமல், உங்கள் கருத்தை வெளியிடுங்கள். எத்தனை பேர் சமுதாய சீர்திருத்தம் பற்றி 1% வது சிந்திக்கிறார்களோ, பார்ப்போம்.


-#-

சித்திரத்துக்கு நன்றி:

https://s-media-cache-ak0.pinimg.com/originals/48/b2/de/48b2de51a8e11b3f3cd617f1d3226a51.jpg

இன்னம்பூரான்

22 03 2016

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com