Google+ Followers

Thursday, February 28, 2013


தேசாபிமானத்தில் தலை சிறந்தவரும், மனித நேய பண்பாளரும், நமது முதல் பிரதமருமான பண்டித ஜவஹர்லால் நேரு ‘சட்’ என்று சினந்து, அதை உடனே மறந்துவிடும் முன்கோபி என்றாலும், அவருடைய கள்ளமில்லா குழந்தை மனதும், கலையார்வமும், வசீகர புன்னகையும் உலக பிரசித்தம். அவரை அடிக்கடி தரிசித்திருக்கிறேன். அவருடைய முகாரவிந்தத்தில் பிரசன்னமான சந்தோஷத்தையும், சோகத்தால் அது இருண்டு போனதையும் பார்த்திருக்கிறேன். ஆவடி காங்கிரசுக்கு வந்திருந்த போது, முண்டியடித்தக் கூட்டம் என்றாலும், எப்படியோ நானும், என் தந்தையும் மேடைக்கு அருகில் இருந்தோம். உரையாற்ற எழுந்த நேருவின் முகத்தில் ஒரு கோபரேகை ஓடியது. அவருடைய கண்ணாடியை காணவில்லை. சாளேஸ்வரம் தானே. மற்றவர்களின் கண்ணாடி உதவலாம். சர்தார் படேல், மெளலானா ஆசாத், ராஜாஜி எல்லாரும் அவரவர் கண்ணாடியை தந்தாலும், ஒன்றும் உதவவில்லை. கோபம் கொப்பளிக்க, குழந்தை மாதிரி அடம் பிடித்தார். பஞ்சுத்திண்டுகளைக்கூட தூக்கி அடித்தார். சில நிமிட டென்ஷனுக்குப் பிறகு, தன்னுடைய    இடது பக்க ஜேபிலிருந்து கண்ணாடியை எடுத்த அவருடைய முகத்தில் ஊரையே மயக்கும் ஒரு அசட்டுச்சிரிப்பு. அது ஒரு பிரசன்னம். பல வருடங்கள் கழிந்த பின், எனக்கு ராணுவ அமைச்சரகத்தில் ஊழியம். சைனா யுத்தம். வீ.கே.கிருஷ்ண மேனன் ராணுவ அமைச்சர். அவர் மீது யாவருக்கும் அதிருப்தி, நேருவைத் தவிர. அவருடைய ராஜிநாமா இன்றியமையாததாக ஆகிவிட்டது. வீ.கே.கிருஷ்ண மேனனை கூப்பிட்டனுப்பாமல், நாகரீகம் கருதி, அவரே வீ.கே.கிருஷ்ண மேனனுடைய அறைக்குப் போகும் போது, நான் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தேன். நேருவின் முகத்தில் சோகம் அப்பியிருந்தது.  அந்த காலகட்டத்தில், அவருடைய நண்பரும், அரசியல் எதிராளியாகவும் ஆகி விட்ட ராம் மனோஹர் லோஹியா அவர்கள், நேருவின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, நேருவை கடுமையாக தாக்கினார். அந்த விவாதத்தை கவனித்து எங்கள் அமைச்சரகத்துக்கு அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டதால், நான் உன்னிப்பாக அதை கவனித்தேன். நேருவின் நெற்றியில் சுருக்கங்கள்; தாக்குதல் எல்லை மீறிப்போகும்போது முகம் சுளித்தது. சில சொற்கள் வேதனை கலந்த மென்சிரிப்பை உணர்த்தின. அகத்தின் அழகு முகம். சிறிது காலத்திற்கு பிறகு, ராம் மனோஹர் லோஹியா  கைது செய்யப்பட்டார். ஜெயிலில் இருக்கும் போது அவருக்கு பிறந்த நாள். வாழ்த்துக்களுடன், ஒரு மாம்பழக்கூடை வந்தது பரிசாக. அனுப்பியது நேரு. நேருவை பற்றி ஒரு வரி மட்டும் தான் எழுத நினைத்தேன், ஒரு பீடிகையாக. ஆனால் ஒரு பத்தி படிந்து விட்டது.

“மேடாக அமைந்துள்ள உமது நெற்றியையும், அது தெரியப்படுத்தும் உமது மேதையையும் வருணிக்க ஒரு கவிஞரின் கற்பனையூற்று வேண்டுமையா. வாழ்வியல் நாகரீகத்துக்கு அடித்தளமாகிய மானிடத்தின் உன்னத இலக்குகளை முன்கொணரும் புருஷோத்தமன் ஒருவரை பற்றி என் மனதில் ஒரு கனவு உண்டு. அதை உம்மிடம் நான் உணருகிறேன்”

~ நேருவை பற்றி ஹெலென் கெல்லர் (அவருக்கு ப் பார்வை கிடையாது; காது கேட்காது; வாய் பேசாது. எல்லாம் விரல் நுனி தான்.)

ஹெலென் கெல்லர் (June 27, 1880 – June 1, 1968 ) ஒரு சாதாரண சராசரி பிறவி. அவரது வாழ்க்கை அபூர்வமானது. பெற்றோர்களும் சராசரி அலபாமா (அமெரிக்கா) பிரஜைகள். பிரச்னைகளை எதிர்நோக்கி, இன்னல்களுக்கு எதிர்நீச்சலடித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் தன்மை அவர்களிடம் இருந்தது. இரண்டு வயதுக்குள், இன்றும் இனம் காண இயலாத, காய்ச்சல் ஒன்று, அவருடைய கண்பார்வையையும், செவியின் செயலையும் பறித்தது. அதனால், பேச்சும் வரவில்லை. இயலாமையினால் அவளுடைய அடம், பிடிவாதம், படுத்தல் எல்லாம் உச்சகட்டம். பிரபல ரேட்க்ளிஃப் காலேஜில் படித்து பீ.ஏ. பட்டம் பெற்ற முதல் மாற்று திறனாளி. செவி/வாய் திறனற்றவர்களுக்கு முதல் பள்ளி துவக்கியவர், இவரது மூதாதை ஒருவர் என்பது குறிப்படத்தக்கது. புவியெங்கும் புகழப்பட்ட எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், சமூக ஊழியராகவும், தொழிலாளிகள், சமுதாய ஏற்ற தாழ்வுகளை குறைப்பது, பெண்களின் நலம் ஆகியவற்றுக்கு உழைத்த ஹெலன் கெல்லர், உலகத்தை தன் உள்ளங்கையாக பாவித்து, அலட்டிக்கொள்ளாமல் சுற்றுப்பயணம் செய்தவர். தயங்காமல் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர். அவரது சுயவரலாற்றை 22 வயதிலேயே பதித்த இவர் எழுதிய நூல்கள் 12. அமெரிக்காவின் ‘சுதந்திர விருது’ மெடல் மிகவும் போற்றத்தக்கது. 1964ல், ஜனாதிபதி ஜான்ஸன், அதை இவருக்கு அளித்து கெளரவப்படுத்தினார். அடுத்த வருடமே தேசீய பெண்ணரசிகள் மன்றத்தில் அமர்வு கொடுக்கப்பட்டது. அலபாமாவும் 1971ல் அவரை கெளரவித்தது. அவரை பற்றி உசாத்துணைகளில் படித்துக்கொள்ளலாம். நான் அவரை பற்றி கடைசியில் ஒரு வரி சொல்லுவேன். மற்றபடி வந்த விஷயம் வேறு.

வாடி வதங்கிய அழுகும் கத்திரிக்காயாக விழுந்து கிடக்காமல், ஹெலென் கெல்லர் ஒரு புதுமைப்பெண்ணாக உலகம் சுற்றியது பின்னணி: 1. அமெரிக்க சமுதாயத்தின் எதிர்நீச்சல் மனப்பான்மை; 2. மனித நேயத்தின் பன்முகம்; 3. ‘முயற்சி திருவினையாகும்’ என்ற கோட்பாடு; 4. நன்மை செய்வதயே நாடும் நண்பர்கள் எனலாம். இந்த சமுதாயபண்புகள் வந்த தினம் தான், இந்தியாவுக்கு பூரண சுதந்திரம்.

குறிப்பாக சொல்லப்போனால், இவர்கள் நிவாரணம் தேடிய வகையை போற்றவேண்டும். சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய ஒரு வரலாற்றை படித்த இவரது அன்னை, இவரை, ஆறு வயதில், பால்டிமோர் டாக்டர் ஒருவரிடம் அழைத்துச் செல்ல, அவர் டெலிஃபோன் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் அவர்களிடம் அனுப்ப, அவர் தன் பங்கை மட்டும் செய்வதுடன் நிற்காமல், கண்ணொளி நிபுணர் மைக்கேல் அனக்னோஸ் அவர்களிடன் அனுப்ப, அவர் தன் மாணவி ஆன் சல்லிவனை இவருக்கு அன்றாட ஆசிரியராக நியமிக்கிறார். சங்கிலித்தொடர் போல் இந்த நற்பணிகள் அமைந்தது ஒரு கொடுப்பினை. அந்த ஆன் சல்லிவனின் அன்றாட தொடர்பு 50 வருடங்கள் அமலில் இருந்தது. அது ஒரு தெய்வ சங்கல்பம் என்று தான் சொல்ல வேண்டும்.

எப்படி என்று கேட்கிறீர்களா? ஹெலன் கெல்லரின் திறன் ஆற்றுப்பெருக்குப்போல் கூடி வருவது கண்டு, அவருக்குக் கிருத்துவ மதத்தை போதிக்க ஒரு பங்குத்தந்தை வந்து யேசு கிருஸ்து பிரானை பற்றியும் விவிலயத்தைப் பற்றியும் ஆன்மீகப்போக்கில் பேசுகிறார். அதை கேட்ட நம் ஹெலன் கெல்லரின் விளக்கம், மெய்யுணர்வின் உச்சகட்டம். பக்தி இலக்கியத்தின் சூத்ரம். ஞானமார்க்கத்தின் ராஜ பாட்டை.

“அவர் இருப்பது நான் என்றோ புரிந்து கொண்டது தான். அவருடைய பெயர் தான் எனக்குத் தெரியாது.” (“I always knew He was there, but I didn’t know His name!}  நான் உங்களிடம் கேட்பது: அவருடைய பெயர் கிருஷ்ணனா? கிருஸ்துவா?
இனி எழுத என்ன இருக்கிறது?
(தொடரும்)
இன்னம்பூரான்


சித்திரத்துக்கு நன்றி

உசாத்துணை:
இதை பிரசுரம் செய்த அதீதம் இதழுக்கு நன்றி:http://www.atheetham.com/?p=4018