Saturday, October 8, 2016

சிவகாமியின் செல்வன் 20

சிவகாமியின் செல்வன் 20

இன்னம்பூரான்
அக்டோபர் 8, 2016

'...இது இவ்வாறு இருக்க,1963லிருந்தே இறங்குமுகம் கண்ட காங்கிரஸ், 1967ல் காங்கிரஸ்ஸின் தூணாகிய காமராஜர் அவர்களே தேர்தலில் ஒரு மாணவனால் தோற்கடிக்கப்பட்ட அவலத்தையும் சந்தித்தது. அதற்கு பல காரணங்கள் சாங்கோபாங்கமாக கூறப்பட்டாலும் அது பற்றி காமராஜரும், ராஜாஜியும் கூறியவற்றை அடுத்த பதிவில் பார்த்த பின்னர் தான் ஓரளவு பின்னணி தெரிய வரும்.'

~சிவகாமியின் செல்வன் 19ன் இறுதி வரி.

எதிர்பாராத இன்னல்களாலும், இன்றியமையாத இதர பணிகளாலும் தொடரில் தொய்வு ஏற்பட்டதால், மேற்கண்ட நினைவூட்டல். முழுமை காண, இதுவரை வந்த தொடர், இணைப்பில்.

காமராஜர் அவர்களே தேர்தலில் ஒரு மாணவனால் தோற்கடிக்கப்பட்ட அவலம் பலவிதமான ஊகங்களுக்கும், வதந்திகளுக்கும், காளான்களின் உற்பத்திக்கும் வித்திட்டது. ஒரு தீப்பொறி போதும், ஊரை கொளுத்த. அத்தகைய தீப்பொறிகளும் பிறந்தன;பறந்தன;துரத்தி அடித்தன, நாம் ஆகிய மக்களை. தீப்பொறிகளுக்கு பிறகு வருவோம். 

காந்திஜி, ‘clique’(‘குழுவினுள்ளிருந்துகொண்டு தனி நலங்களுக்காகத் தனிச் செயலாற்றும் சிறு உட்குழு.’ ~தமிழ் லெக்சிகன்) என்ற சொல்லை வழக்கம் போல் நன்கு சிந்தித்த பின் தான் பயன்படுத்தினார்.'சிவகாமியின் செல்வன் 19' என்ற பதிவில் உள்ள படத்தை பாருங்கள். காமராஜர் காந்திஜியின் அருகில் தான் அமர்ந்திருக்கிறார். எல்லாம் நடந்த பின் தாக்காமல், தன் இயல்பு படி காந்திஜி காமராஜரிடன் தன் உள்மனதை கூறியிருந்தால், தமிழ்நாட்டின் தலை விதி இத்தனை பாடுபட்டிருக்காது என்பதில் ஐயமில்லை. அரசியல் நல்லதொரு ராஜபாட்டையில் பயணித்திருக்கலாம். இது நிற்க.

பிற்காலம் ஹிந்தி எதிர்ப்பதில் ஆர்வம் காட்டிய ராஜாஜி சுதந்திரா கட்சியை துவக்கினார. அத்துடன் நில்லாமல், 1964ம் வருட சென்னை மகராட்சித் தேர்தலில், தி.மு.க. வுடன் கூடா நட்பை வளர்த்துக்கொண்டார். காங்கிரஸ் தோற்றது. 1965ல் தி.மு.க. ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது. என் போன்றவர்களுக்கு அக்காலத்து அரசி தட்டுப்பாடு நினைவில் இருக்கிறது. மக்களுக்கு ஒரு 'கச கச' கசப்பு. இந்த பின்னணியில் தான் 1967, வருட தேர்தல். காமராஜர் கூறிய 'ஒரே குட்டையில் அழுகிய மட்டைகளுடன்' ராஜாஜி, ம.பொ.சி., காயிதே மில்லத், மார்க்ஸிஸ்ட் ஆகியோரும் பிரசன்னம். இந்த கூட்டணி வஸ்தாத் காங்கிரஸை தோற்கடித்தது. போயும், போயும் விருதுநகரில் பெ.சீனிவாசன் என்ற மாணவன் காமராஜரை தோற்கடித்தார். இந்த தொடரின் முதல் இதழில் சுட்டியபடி, அங்குமிங்குமாக திராவிடகட்சி நோக்கில் தொகுத்து, காமராஜரை மற்றொரு பெரியார் போல சித்தரித்த “வானவில்” ஆடி 2016 இதழ், பக்கம் 12-13 போல, காளிமுத்து, கோபால்சாமி போன்றோர் 'அரிசி பஞ்சம்' 'மாணவர்களை சுட்டு விட்டார்கள் என்றெல்லாம் செய்த கலப்பட பிரச்சாரம் கை கூடியது என்று தான் பலர் பேசிக்கொண்டார்கள். ஆனால், சீனிவாசனை நிறுத்திய அறிஞர் அண்ணாவுக்கு உள்ளூர கொஞ்சம் வருத்தம் தான். இது இப்படியிருக்க, சீனிவாசனின் தலைகால் தெரியாமல் குதிக்கும் நிகழ்வுகள் அண்ணாவுக்கு பிடிக்கவேயில்லை. அமைச்சர் நமைச்சல் பிடித்த சீனிவாசன் ஓரம் கட்டப்பட்டார். அவர் ராஜாஜியிடம் சிபாரிசு நாடினார். ராஜாஜிக்கும் அண்ணாவுக்கும் அப்படியென்ன தாக்ஷிண்யம் என்று கேட்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் எல்லாம் சகஜம் தான். ஆனாலும் ராஜாஜி ஒரு காரியம் நடக்கவேண்டாம் என்றால் தனது சிபாரிசு போதும் என்று தன்னையே கேலி செய்து கொள்வார். ராஜாஜி சீனிவாசனிடம் சொன்னது வைர வரி: 

"...கென்னடி ரொம்ப ரொம்ப பெரிய மனுஷன் தான். ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளைக்கீழே சாய்ச்சுடுச்சு, அதுக்காக அந்த புல்லட்டை எடுத்துவச்சி அங்கே எவனாவது கொண்டாடினா?என்ன...?"
(கென்னடிக்காக டில்லியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் ராஜாஜி, வஸந்தா, நான் மூவரும் ஒரே வரிசையில் நின்று கையெழுத்து இட்டது நினைவுக்கு வருகிறது.) ~ இது ராஜாஜி.

எதற்கும் அலங்காத காமராஜர் உதகமண்டலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். காங்கிரஸ் பெருந்தலைகள் அவரை சந்தித்தபோது, பலவிதமான ஊகங்களையும், வதந்திகளையும், காளான்களின் உற்பத்தி ஆகியவற்றை பட்டியல் இட்டார்கள். அவற்றை எல்லாவற்றையும் நிராகரித்த நம் தலைவர் இது வியாபாரிகள் சம்பந்தப்பட்டது என்றார். அவர் சொன்ன காரணங்கள்: காங்கிரஸ் கட்சியின் பத்து அம்ச திட்டம் மக்கள் நலனுக்கு. அதன்படி உணவு தானிய மொத்த வர்த்தகத்தை அரசு எடுத்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது, விருது நகரில் இருந்த 40-50 வியாபாரிகளுக்கு பிடிக்கவில்லை. அந்த வகையில் நாலாயிரம் ஓட்டுக்கள் பிறழ்ந்து அளிக்கப்பட்டதில் இருமடங்கு நஷ்டம், தோல்வி என்றார்.ஒரு கார் விபத்தினால் தன்னுடைய பிரசாரம் தடை பெற்றதையும் கூறினார். தமிழ்நாட்டு மக்களின் மனதையே உள்ளங்கை நெல்லிக்கனியாக வைத்திருந்த காமராஜர் தப்புக்கணக்கு போடுபவர் அல்ல. இந்த காரணம், இந்திய அரசியல் உலகத்தின் சாபக்கேடான தீப்பொறி.

சிவகாமியின் செல்வன் 1-19:





(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி:
Attachments area