Google+ Followers

Saturday, September 12, 2015

நாளொரு பக்கம் 3

நாளொரு பக்கம்  3

Friday, the 27th February 2015
“கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்/தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்/நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம்/ இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.”- தமிழ் நீதி நூல்: திரிகடுகம்.

‘திரிகடுகம் போலும் மருந்து’ 
Image Credit: தினமலர்

‘ அறம் செய்ய விரும்பு’ என்றாள், அவ்வைப்பாட்டி. ‘அகரமுதல் எழுத்தெல்லாம்...’ இறை வணக்கம் செய்தார், திருவள்ளுவர் பெரும்தகை. ‘யாமறிந்த மொழிகளிலே இனிதான...’ தமிழ்மொழியின் சங்க கால இலக்கியத்தில் நீதி நூல்கள் பல. அக்காலத்திலேயே தமிழன் கண்டறிந்து பொருத்தமாக கையாண்டு பயன் பெற்ற மூலிகைகளை முன்னிறுத்தி அறிவுரை அளித்த நீதி நூல்கள் மூன்று. யாவரும் அறிந்த மூலிகைகள் ஆன சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் வாழ்வாதாரம் தருபவை: அவையே ‘திரிகடுகம்’ என்ற உயிர் மருந்து நூல் எனலாம். இம்மைக்கும் (கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் வகையறா) மறுமைக்கும் (அவாவறுத்தல், மெய்யுணர்தல் வகையறா) ஏற்புடைய நல்வழிகளை உணர்த்தி அறம் சாற்றும் நூல், இது. 

இறை வணக்கத்தில் துவக்குவது சங்ககாலத்திலிருந்து தமிழ் மரபு.  கவிஞர் நல்லாதனார் ‘திரிகடுகத்தின்’ காப்பு செய்யுளில், தர்ம சாஸ்திரத்தின் சிருஷ்டிகர்த்தாவான கிருஷ்ண பகவானின் புகழ் பாடுகிறார். திருமாலின் லீலாவிநோதங்களில், வாமனாவதாரமும், குருந்தை மரத்தை முறித்ததும், மாயச்சகடம் உதைத்ததும் கூறி, அந்த ‘பூவைப்பூ வண்ணன் அடி’ போற்றி வணங்குகிறார்.  வரும் பாடல்களில் மூன்று மூன்று கருத்துக்களும், ஈற்றடியில் ஒரு பொது கருத்தும் கோர்க்கப்படுவது போல, இங்கும் மூன்று லீலாவிநோதங்களும், ஈற்றடியில் வணங்குதலும் பயின்று வரும் நுட்பத்தைசுவைப்போமாக.
-#-சித்திரத்திக்கு நன்றி: http://img1.dinamalar.com/admin/Bookimages/247713.jpg
Friday, September 11, 2015

ஒரு லிகிதம்

மேற்கண்ட கட்டுரையை யொட்டி
பிரம்மஶ்ரீ மு. ராகவையங்காரவர்களுக்கு
எழுதிய லிகிதம்.
இந்தியா ஆபீஸ்.
பிராட்வே, மதராஸ்.
18th October 1907
அநேக நமஸ்காரம்.

ஒவ்வொரு காலத்துச் சோம்பர் மிகுதியாலும், முன்னொரு காலத்தே முயற்சி மிகுதியாலும், தங்களைப்போன்ற பெரியோர்களுக்கு அடிக்கடி கடிதங்களெழுதிப் புனிதத்தன்மை பெறுவதற்கு அவகாசமிலாதவனாக இருக்கின்றேன்.

சென்ற முறை வெளி வந்த “செந்தமிழ்” பத்திரிகையிலே தாங்கள் எழுதியிருக்கும் “வீரத்தாய்மார்கள்” என்ற அற்புத உரையைக் கண்டு மகிழ்ச்சிபூத்து அம் மகிழ்ச்சியைத் தமக்கு அறிவுக்கும் பொருட்டாக இக்கடிதம் எழுதலானேன். 

தங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகமறியும். தங்கள் பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும் “ஸ்வதேசபக்தி” என்ற புது நெருப்பிற்குத் தான் நான் வணக்கம் செய்கிறேன்.

“காலச் சக்கரம் சுழல்கிறது” என்ற அவ்வுபந்நியாசத்தின் இறுதியிலே குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆம்! காலச்சக்கரம் சுழலவே செய்கின்றது; அச்சுழற்சியிலே, சிறுமைச்சேற்ரில் ஆழ்ந்து கிடந்த ‘நீச பாரதம்’ போய் ‘மஹாபாரதம்’ பிறக்கும் தறுவாய் வந்து விட்டது.

‘தாழ்நிலை’ என்ற இருளில் மூழ்கிக் கிடக்கும் பாரதவாஸிகளுக்கு மஹாபாரதம்’ காட்டத் தோன்றிருக்கும் சோதிகளிலே தமது நெஞ்சிற் பிறக்கும் நெருப்பொன்றாகும். அதற்கு வணக்கம் செய்கிறேன். அது வளர்க. ஓம்!
ஸி.சுப்ரமண்ய பாரதி.
குறிப்பு:- ஶ்ரீ அழகிய சிங்கப் பெருமாளையங்கார் (பச்சையப்பன் காலேஜ்) அவர்களும் அவர் தம்பி ஶ்ரீ.கிருஷ்ணமாசாரியாரும் தங்களுக்கு ஸாஷ்டாங்க வணக்கம் கூறும்படி என்னிடம் கற்பித்தார்கள்.
-#-
என் குறிப்பு: இந்தியாவில் இதழியல் அச்சாவதற்கு தடையாக நின்றது, கலோனிய அரசின் தடை. ஒரு நூற்றாண்டு கழிந்து போயிற்று. என்னுடைய இதழியல் ஆய்வுக்கட்டுரையை தேடி, அது உகந்தவாறு இருந்தால், அனுப்புகிறேன். ‘செந்தமிழும்’. ‘இந்தியாவும் இதழ்கள்.

என்னுடைய ஆதங்கம்: இருள் இன்றும் முழுதும் நீங்கவில்லை. 
இன்னம்பூரான்
12 09 2015

Thursday, September 10, 2015

நாளொரு பக்கம் 1

நாளொரு பக்கம்  1
Wednesday the 25th February 2015/Thursday, the September 10, 2015
“Translation is that which transforms everything so that nothing changes.”
-Günter Grass
Günter Grass is a globally-renowned creative writer, who won the Nobel Prize for his ‘The Tin Drum’. The citation praised his “frolicsome black fables (that)portray the forgotten face of history”. He hails from the literary movement: ‘coming to terms with the past (vergangenheitsbewältigung). He is a well- translated author and the quote is significant as his original texts invariably posed a challenge to the translators.
Excellent translations, like the ones that we find in the Katha volumes in our libraries are actually transcreations that do not stick to a word-by-word translation, but manage to transform and convey the author’s creation in such a chaste form that it looks as though the author himself wrote in a language with which he is unfamiliar.
-x-
Tuesday, September 8, 2015

‘வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி...!’

‘வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி...!’
-பளிக்கறை புக்க காதை: 112-121: மணிமேகலை.
இன்னம்பூரான்
செப்டம்பர் 8, 2015
சென்னை மாநகரத்தின் பழம்பெருமை வாய்ந்த மருத்துவ மையம்: General Hospital,Madras & Madras Medical College. நானூறு வருடங்களுக்கு மேலான பாரம்பரியம். அங்குள்ள செரிமான வியாதிகளுக்கு அறுவை மூலம் தீர்வு காணும் துறை சுதந்திரதினம் பொருட்டு, மக்களிடையே குறுகிய காலகட்டத்துக்குள் ஒரு கட்டுரை போட்டி (500 சொற்களுக்குள்) நடத்துவதாகவும், ஜூலை 31, 2015 கெடு என்றும் அறிவித்தார்கள். நான் அறிவிப்பு வந்த அன்றே கட்டுரையை அனுப்பிவிட்டு, ஆகஸ்ட் 2 அன்று வெளியூர் சென்று விட்டேன். இதை மறந்தும் விட்டேன். ஆகஸ்ட் 14 மாலை ஒரு குறும் தகவல். உங்கள் கட்டுரைக்கான மெடலை நாளை வந்து பெற்றுக்கொள்ளவும். உம்மை சிறப்பிப்போம். [‘எல்லாரும் காத்திருப்பார்கள், உடனே வர’ என்று நினைத்திருப்பார்கள் போல!] நான் போக இயலவில்லை. என் தம்பி மூலமாக கொடுத்து அனுப்பினார்கள்.
கட்டுரை இங்கே:


‘வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி...!’
-பளிக்கறை புக்க காதை: 112-121: மணிமேகலை.

மணிமேகலை காப்பியத்தில் ‘செயல் திறனுடையவனே! கேட்பாயாக’ என்று விளித்த சொற்றொடரே, நோயற்ற வாழ்வை மக்களே அமைத்து கொள்ள முடியும் என்பதை உணர்த்த, பொருத்தமான தலைப்பு. அசகாய சூரர்கள் நமது மக்கள், துயில் கலைந்துவிட்டால்!

அன்றாட வாழ்க்கையில் நாம் தூய்மையுடன் இயங்கினால் நோய்கள் பல அணுகா. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பற்பல கிருமிகளை அண்ட விடாது. கை கால் கழுவுவதின் முக்கியத்துவத்தை செம்மல்வைஸ் 1847 லேயே நிறுவி விட்டார். இல்லம் தோறும் தங்கு தடையில்லாமல் கொழிக்கும் குப்பையையும், கூளத்தையும் அகற்றி சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது மக்களின் கையில் தான் இருக்கிறது. மகட்பேறு காலத்து கவனிப்பு, மழலைகளுக்கு தடுப்பூசி, வளரும் பருவத்திலிருந்து உடற்பயிற்சி, உண்ணும் உணவிலும், பருகும் நீரிலும் கவனம், நடை, உடை, பாவனைகளில் பண்பு, லாகிரி விலக்கு, பாவேந்தரின் ‘குடும்ப விளக்கு’ இல்லறம், முதியோர் சேவை ஆகியவற்றை கற்றுத்தரக்கூடிய விழிப்புணர்ச்சி, ‘வரப்புயர...குடி உயர்வது’ போல, வாழ்க்கைப் பயணத்தின் தரமுயர்த்தும். பட்டி, தொட்டி தோறும், மக்களை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்ட விழிப்புணர்ச்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். விழிப்புணர்ச்சி, திருமூலர் ‘உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்’ என்று அருளிய ஆலயத்தின், அடித்தளம். 

சுகாதாரத்தை பள்ளிகளில் ஆசிரியர்கள் அனுபவக்கூறாக, சுயநடத்தை மூலம், படிப்படியாக பயிற்சியுடன் கற்றுக்கொடுக்கவேண்டும். காந்தீயத்தின் அடிப்படையில் கழிவறை சுத்தம் செய்வது முதல் உறுப்பு தானம் வரை கற்பிக்கப்படவேண்டும். விடலைப்பருவம் வருமுன் மென்மையான பாலியல் பாதுகாப்புப்பாடங்களை பெற்றோர் உதவியுடன் அளிப்பது போன்ற ‘வருமுன் காப்போன்’ செயல்கள் ஊக்குவிக்கப்படவேண்டும்.  அறியாமையினாலும், அசட்டையினாலும், புற்று நோய், நீரழிவு, இதய பாதிப்புகள், இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மக்கள் மிகவும் தாமதித்து வருவதால், உரிய நிவாரணம் கிடைப்பதில்லை. பசுமரத்தாணி போல் மனதில் படியும் முறையில், எச்சரிக்கைகளை சித்தரித்து விளக்குவது எளிது. சான்றாக,எதிராஜ் கல்லூரியும் மதராஸ் மருத்துவ கல்லூரியும் இணைந்து, காய்ச்சிய எண்ணையில் திரும்பத்திரும்ப சமைப்பதின் அபாயத்தை நிரூபித்துள்ளன. உள்ளூர் ஆர்வலர்கள் மூலம் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து, ஆலோசனை வழங்கி, சிறுநீரகம் திறன் இழப்பத்தை தடுத்தாட் கொள்ளமுடியும் என்பதை சென்னைக்கு அருகே நிரூபித்ததை, ‘நேச்சர்’ என்ற பிரபல மருத்துவ இதழ் பாராட்டியிருக்கிறது. உடனடியாக, திறந்த மனதுடன், இத்தகைய பணிகளுக்கு அரசும் வடம் பிடித்தால், கோடிக்கணக்கான மக்கள் பயன் பெறுவர்; செலவு கணிசமாகக் குறையும். மக்களே நோயற்ற வாழ்வை அமைத்துக்கொள்வார்கள். வருங்கால சந்ததிகள் நீடூழி வாழ்வார்கள். மருத்துவ படிப்பில் சமுதாய நலன் பொருட்டு இயங்கும் ‘வருமுன் காப்போன்’ துறை மேலும் பிரகாசப்படுத்தப்படவேண்டும்.

சித்தம், யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம் ஆகியவற்றில் குறை காணத் தேவையில்லை. அவற்றின் மேன்மையை ஆய்வு மூலம் கண்டறிவது, அரசின் கடமை. எனினும்,பாமரர்களுக்கு உகந்த நிவாரணம் பற்றியும், போலி வைத்தியர்களை தவிர்க்கவும் ஆலோசனை தரும் மையங்கள் பெருகவேண்டும். உதாரணமாக, நீரழிவு நோய்க்கு பூரண நிவாரணம் எந்த முறையிலும் கிடையாது. ஆராய்ச்சி மூலம் அலோபதி அந்த வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. புற்று நோய் தீவிரமானது; உயிர் கொல்லி. இன்றே அறுவை சிகிச்சை அவசரம் என்ற நிலையில் மற்ற முறைகள் உதவா. தற்காலம், இந்த சிக்கல்களை அவிழ்க்க முடியாமல் பாமரன் திண்டாடுகிறான்; இறந்தும் போகிறான், சொத்துப்பத்துக்களை இழந்தபின். பணம் பறிக்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் பெருகி விட்டன. வைத்தியம் சம்பந்தமான காப்புரிமை திட்டங்களை தணிக்கை செய்யும் அளவுக்கு மக்கள் மன்றங்கள் உருவாக வேண்டும். 

அறுவை சிகிச்சைகள் மிகவும் முன்னேறிவிட்டன. வயறு அதிசயங்கள் நிறைந்த ஆலயம் என்றொரு மருத்துவ பழமொழி. தற்காலம், செரிமான வியாதிகள் பொருட்டு இயங்கும் அறுவை சிகிச்சைத்துறை அவற்றை விட அதிசய நிவாரணங்கள் தருகிறது. மற்ற அவயவங்கள் பொருட்டும் அத்தகைய முன்னேற்றம் காண்கிறோம். அரசு நடத்தும் ஆஸ்பத்திரிகளில் ஏழைபாழைகளுக்கு இலவசமாகவே நிவாரணம் கிடைக்கிறது. கடினமான, சிக்கல் மிகுந்த அறுவை சிகிச்சைகள் அன்றாடம், வாகை சூடி, நிறைவேறுகின்றன. இவற்றை பன்மடங்கு பெருக்குவதும், நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் இவை எளிதில் கிடைப்பதும் அவசரத்தேவை. மக்கள் முடிந்தவரை நற்பெயர் பெற்ற அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்வது சாலத்தகும்.தொலைநோக்கில் பார்த்தால், இது தான் சிக்கனம், மக்கள் சேவை, மருத்துவ சாத்திரத்தின் இலக்கு.

முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் மருத்துவத்தின் தேவை ஏறி வருகிறது. பெற்றெடுத்த செல்வங்களும், சமுதாயமும், அரசும், முதியோர்களுக்காக, இணைந்து பயணிப்பது உசிதம். கவனத்துடன் செயல் பட்டால், குறைந்த செலவில் அதிக பயன் காண முடியும். உளவியல் இங்கு கை கொடுக்கும். அன்பு அருமருந்தாக நிவாரணம் தரும்.

இறந்தவர்களின் உறுப்புக்கள் மற்றவர்கள் உடலில் வாழும் காலத்தில் நாம் இருக்கிறோம். இது ஒரு இறவாவரம். தமிழகத்தில் நடக்கும் உறுப்பு தானம் பற்றிய அதிசய செய்திகளே விழிப்புணர்ச்சியின் அடித்தளம். முடிவாக கூறப்போனால், உறுப்புகளுக்கு ஒரு மறுவாழ்வு திண்ணம். அதைப்பற்றி இடை விடாத பிரசாரமும், சட்டத்திருத்தங்களும் தேவை. 

நோயற்ற வாழ்வை மக்களே அமைத்து கொள்ள முடியும் என்பதை விளக்க ஒரு நூலே தேவை. எனவே, இந்த கட்டுரை ரத்னசுருக்கமான ஒரு அறிமுகமே. [497]
-#-
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com