Friday, April 15, 2016

சமையல் குறிப்புக்கள் & அனுபவம் புதிது!

சமையல் குறிப்புக்கள் &
அனுபவம் புதிது!

இன்னம்பூரான்
07042016
முன்னுரை

சமையல் ஒரு உயிர்மை, கவின்கலை; அறிவியல், அன்றாட அனுபவம், ருசிகரம், வாழ்க்கைப்பாடம் என்று சொல்வது மிகையாகாது. உணவு இல்லையெனில் வயிறு காயும். உடல் மெலியும். உயிர் பிரியும். பிரிந்த உயிர் திரும்ப வாராது என்பதால் தான் ஒளவைப்பாட்டி ஆண்டாண்டு அழுது புரளவேண்டாம் என்று அறிவுரைத்தாள்.  இது வாழ்க்கைப்பாடம். 

நீவிர் உண்டு களிக்க. அதற்கு சமையல் கலை அறிக.

அந்தணர்களின் உலகில், புகுந்த அகத்தில் பெண்ணுக்கு சமையல் தேர்வு நடக்கும். தயை என்பதை சற்றும் அறியாத இரட்டை வீடு ‘இரண்டாங்கெட்டான்’ ரங்காப்பாட்டி ( அது காரணப்பெயர். அந்த காலத்தில் ரங்காப்பாட்டி மாமியாக இருந்த போது, அவளும், சக்களத்தியும்... சரி விடுங்க. பிரச்னை வரும். சர்ச்சை வளரும். பிச்சு உதறி விடுவார்கள், இந்தக்காலத்துப் பெண்ணரசிகள்... வேண்டாம்...] நடத்துவாள். மணமகன் ராஜூ மாடியறையில் பகற்கனவில் ஆழ்ந்திருப்பான். அவனுக்கு நடக்கப்போகும் கொடுமையை அறிய வாய்ப்பில்லை. சற்றே மிகைப்படுத்தப்பட்ட உண்மை என்பதால், எல்லாம் உண்மைப்பெயர்கள். இது சத்தியம், சத்தியம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.  மணமகளின் பெயர், வசந்தா. அத்தையின் பெயர்  [அந்தணர்கள் மாமியார் என்பார்களாம்]. ருக்மணி. ரங்காப்பாட்டி பீடு நடை போட்டு, முட்டாக்கை இழுத்துக்கொண்டு, யானையின் கண்கள் போன்ற சிறு கண்களை இடுக்கிக்கொண்டு வருவதைக்கண்டு, அஞ்சி நடுங்கினாள், ருக்மணி. ஆதுரத்துடன் மருமகப்பெண்ணை அணைத்தவாறு, அவள், ‘இரட்டை வீடு ‘இரண்டாங்கெட்டான்’ ரங்காப்பாட்டி வரா. அவள் ஒரு துக்குரி. சாக்கிரதை’ என்றாள். (அத்தை நல்லவர் தான். ஆனால் அசல் பாப்பாத்தி, பேச்சுத்தமிழில்). இனி உரையாடலை தூய தமிழில் மொழியாக்கம் செய்து தருகிறேன். 'துக்குரி' தனித்தமிழ் தான்.

ஒரு உரையாடல்.

இ இ. ர. பா: (வசந்தாவின் அடர்ந்த கூந்தலை சற்றே இழுத்தவாறு) ‘பார்த்தேன். கொள்ளை அழகு. வெள்ளைக்காரி மாதிரி சோப்பு. சிறு வயது. அடர்ந்த கூந்தல். அது திருப்பதியிலிருந்து வாங்கி வந்த சவுரியோ என்று ஐயம். இழுத்துப்பார்த்தேன். இது அலங்காரமில்லை. அசலே. ராஜு அதிர்ஷ்டசாலி (தமிழ் என்ன?).

மூக்கில் மணந்தது போல், இது கேட்டு இறங்கி வந்த ராஜு: ‘பாட்டி! அவள் கூந்தலில் எனக்கு என்ன பாக்கியம்? நான் நினைப்பதெல்லாம்......

அவசரப்பட்டு, இ.இ. ர. பா. ‘உன்னை யார் இங்கே வரச்சொன்னார்கள்? நீ உத்தியோகம் செய். இவள் சமையல் செய்வாள். போய் உன் வேலையை பார். இந்தா குட்டி!, நீ என்னிடம் வா. எல்லாம் சொல்லி தருகிறேன்.

ராஜு நகரவரை காத்திருந்த இ.இ. ர. பா. வசந்தாவுக்கு வலிக்கிற அளவுக்கு அவள் கூந்தலைக் கோதியவாறு: ‘ஆமாம்! தெரியாமல் தான் கேட்கிறேன். உன்னுடைய அம்மா, அசங்காமல், கசங்காமல் வந்து விட்டுப்போனாளே, அவளுக்கு சமையல் தெரியுமா?’ [உள்குத்து கவனித்தீர்களோ! வசந்தாவின் அம்மாவின் புடவையில் ஜரிகை அதிகம். அதனால் பொறாமை, இந்த நார்ப்பட்டு நாயகிக்கு].

அத்தை ருக்மணியின் கண்ணசைவை கண்டு கொள்ளாத அறியாப்பெண் வசந்தா:
‘இல்லை, பாட்டி. எங்களகத்தில் பரிசாரகர் (தவசிப்பிள்ளை) உளர். ஆனால், அம்மா, மனது வைத்தால், அற்புதமாக சமையல் செய்வாள்’.

இ.இ. ர. பா. ‘நான் அதை கேட்கவில்லைடீ. ஆமாம். என்னை பார்த்தால் பாட்டி மாதிரியாகவா இருக்கிறது? நீ இந்தக்காலத்துப் பெண். காலேஜுக்கு போனவளாமே. அதான் இத்தனை துக்குரியாக இருக்கிறாய்.’.

( வசந்தா கண்ணீர் மல்க, மிரண்ட மானைப்போல அத்தையை பார்க்க, அத்தை ருக்மணி நிற்கதியாக நின்றாள்.)

1955
அடுத்து வருவது ‘சமையல் செய்து பார்’ படலம்.

இ.இ. ர. பா. ‘குழந்தாய்! (குழந்தைக்குக் குலை நடுங்குகிறது). உனக்கு சமையல் சற்றளாவது தெரியுமா? அல்லது அவன் தான், பாவம்!. அரிசி களைந்து, மாசு வடித்து, உலையேற்றி, அடுப்பூதி, கண் கசக்கி, சோற்றை வடித்து, இலையில் இடவேண்டுமா? அவன் ஆண்மகன். கையை சுட்டுக்கொள்வான். ஐஏஎஸ் படித்து விட்டு, அடுப்பாங்கரை உத்யோகமா? ‘ இப்படி அடுக்கிக்கொண்டே போகிறாள், அந்த மாபாவி. வசந்தா அழ, ருக்மணி கையைப்பிசைய, இடம், பொருள், ஏவல், தெரியாமல், தந்தை சீனிவாசன் வந்து ஒரு கோப்பைக்காப்பிக்கு ஆணையிடுகிறார்.
இது தான் சாக்கு என்று, காப்பிக்கலக்க வந்த ருக்மணியை, நாக்கைத்த் துருத்தி, அடக்கி விட்டு, தேனொழுக மொழிகிறாள், இந்த இ.இ. ர. பா.

இ.இ.ர.பா. பெண்ணே! உன் பெயர் என்ன வசந்தாவா? அது என்ன சினிமாக்காரி பெயர் மாதிரி! வசந்தசேனா என்று சினிமா வந்தது, தெரியுமோ? எமதுகத்து ‘பாவிப்பிராமணன்’ (அகமுடையான்), இரண்டாவது காட்சிக்கு போய் வந்து விட்டு என் உயிரை...’ சரி! சரி! அது எதற்கு உனக்கு? என்ன கண் கொட்டாமல், இந்த பிரலாபத்தை எல்லாம் கேட்கிறாய்? அசடு. ராஜு நல்ல பையன்.’
ருக்மணியும், வசந்தாவும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டுகிறார்கள் (தெலையாட்றதுகள்).

இ.இ.ர.பா. ‘அம்மா, அந்த மதராஸ் காலேஜ் படித்த பெண்ணே! உன்னுடைய மாமனாருக்கு செரிமான பிரச்னை. மாங்கொட்டை கொண்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் பருப்புத்துவையல் அரைத்து என் வீட்டுக்குக் கொண்டு வா. மார்க் போடுகிறேன்.’
(ஆரவாரத்துடன், ஒரு ஆழாக்கு காப்பித்தூள் மல்லைய்யா கடனாக எடுத்துக்கொண்டு போகிறாள்).
நுட்பம் யாதெனில், எப்படி வயிற்று வலியால் துடிப்பது போல் பாசாங்கு செய்ய முடியுமோ அந்த மாதிரி, பருப்புத்துவையல் எப்படி அரைத்தாலும், குற்றம் காண இயலும். சில மதிப்பீடுகள்:
  1. இப்படி வெழுமூனாக (தமிழ் என்ன?) அரைத்தால், அது சாணி மாதிரி.
  2. என்னது இது? காப்பிப்பொடி மாதிரி கர கர என்று இருக்கிறது?
  3. அம்மா, ருக்கு! ஒரு டம்ளர் கொணருக. உங்கள் வீட்டு மருமகள் பருப்புத்துவையல் செய்துள்ளாள்; அருந்தத்தான் வேண்டும்!
  4. என்ன துவையைல், இது? மூக்குப்பொடி மாதிரி?
அந்த சமயம் பார்த்து இறங்கி வந்த ராஜு, ‘ பாட்டி! பாட்டி! நீங்கள் மூக்குப்பொடி போடுவீர்களா?
( இ.இ.ர.பா. விரலை சொடுக்கிக்கொண்டு வாசற்படி தாண்டி, மறைகிறார்.
[துரித கதியில், வசந்தா நளபாகினி ஆனாள். அம்மாவுக்கும், சகோதரிகளுக்கும், அவள் தான் ஆசான்].

1995 [ஐம்பது ஆண்டுகள் கடந்து]
அடுத்து வருவது ராஜூவின் சமையல் துணிச்சல் படலம்.
எங்கள் சங்கத்தில் மாதாமாதம் சோற்றுக்கடை, பட்டிமன்றம், வதந்தி நிலையம், சக்தி மசாலா எல்லாம் உண்டு. பிரபலங்கள் வந்து, திரவியம் நாடுவது, காப்பீடு குழப்பம், தண்டகருமாந்திரம் என்று பற்பல அரிய விஷயங்களை பற்றி உரை ஓதுவார்கள். எனக்கும் இயல்பான உறக்கம் கிடைக்கும். ஒரு தடவை ராஜு ‘சமையல் உத்திகள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற விழைந்தான். உள்கை காரியதரிசி ஆவன செய்தான்.
அவன் உரை:
“ யாவருக்கும் வணக்கம். சட்புட் என்று தாளிப்பு உளுத்தம்பருப்பைப்போல் சொல்லி முடிக்கிறேன். வசந்தா பெண்ணிய கான்ஃபெரன்ஸ், இதே ஓட்டலில், போய் இருக்கிறாள். வருவதற்கு முன்:
  1. ‘நெய்யில் தாளித்தால் நறுமணம்;
  2. தண்ணீரில் தாளிக்கலாம், எண்ணை விலக்க. ஆனால் அதை சூடு செய்யவேண்டும்;
  3. உளுத்தம்பருப்பு பொன்னிறமானவுடன் மிளகாயை கிள்ளிப்போடவும்;
  4. புளியை வென்னீரில் ஊறவைத்து, பிழிந்தால் புளியஞ்சாறு அதிகம் கிட்டும்;
  5. வெண்டைக்காய் துண்டங்களை சற்றே தயிர் தடவி பொரித்தால், ‘மொற மொற’;
  6. இட்லி மாவில் நாலொருபாகம் பூசணி பத்தையை அரைத்து விட்டால், மல்லிகைப்பூ இட்லி உத்தரவாதம்;
  7. இட்லி வேகவேண்டும்; தோசை ‘சொய்ங்.; உப்புமா கிளறவேண்டும்;
  8. வெங்காயம் உரிக்கும்போது கண்களை கட்டிக்கொள்ளலாம்;
  9. புளியோதரைக்கு நல்லெண்ணைய்; அவியலுக்கு தேங்காய் எண்ணைய்; வடைக்கு கடலை எண்ணைய்; மீனுக்கு கடுகெண்ணைய்.
  10. பாலில் வெந்தியம் போட்டபின் தயிர் துவைத்தால், நீரழிவு கட்டுப்படும்;
  11. புதினா போட்டுத் தயிர் துவைத்தால், செரிமானத்துக்கு உதவும்.
  12. கல்லைக்கரைத்து, உப்பிட்டு...
இந்த காலகட்டத்தில் வசந்தா வந்து விட்டாள் என்பதை கண்டுகொள்ளாமல், கூடியிருந்த குடும்பத்தலைவிகளின் கேள்விகளை அசால்ட்டா ஃபீல்ட் செய்தான், ராஜு.( இதற்கு தமிழ் என்ன?).
‘சட்’ என்று மேடை ஏறிய வசந்தாவை  கணவனை கடையேற்றியதற்குக் கை தட்டி வரவேற்றார்கள் பெண்ணினம். ஆண்வர்க்கம் முறைத்துக்கொண்டு கிடந்தது.
கையமர்த்தி, மீனாள் போல் கண்ணசைத்து வசந்தா செப்பியது கேளும், மாந்தர்காள்!
‘இந்த மனிதர் என்றாவது சமையலறைக்குள் தலையை காட்டினாரா? என்று வினவுக. அவர் சொல்வது எல்லாம் புருடா (தமிழ் என்ன?) என்றாள். அடுத்த ஹால் ஆசாமி ஒருவர் வந்து, ‘கொஞ்சம் மெதுவாக’ என்று கோபத்தில் உரக்கக்கத்தினார். அப்படி அப்ளாஸ் நம்மாத்து அம்மாமிக்கு!.

ஏப்ரல் 7, 2016
[ மேலும் இருபது ஆண்டுகள் கடந்து]
அடுத்து வருவது ராஜூவின் இன்றைய சமையல்  படலம்
சில நாட்களாக வெயில் தாங்காமல், ராஜுவே காலை/ மத்திய உணவு குறைத்து நடுவில் ‘சுயம்பாகம்’ (சொந்த சமையல்).
இப்போது மிகுந்த அதிகப்படி விலையில் நாணும் பெண்ணைப்போல் வளையும், ருசிக்கும் வெள்ளரிப்பிஞ்சு கிடைக்கிறது. விலை அதிகம்.கிலோ ரூ.130. 
வெள்ளரிப்பிஞ்சு     - 5 கண்டதுண்டமாய்.
தக்காளி           - 4  கண்டதுண்டமாய்.

கொய்யா            - 2 கண்டதுண்டமாய்.

ஆப்பிள்    - 1 கண்டதுண்டமாய்.

மாதுளைமுத்துக்கள் - 187
கமலா ஆரஞ்சு   - சில சொளைகளை பிழிந்து
இஞ்சி              -சிறிது அரைத்து
உப்பு, மிளகுத்தூள், பெருமாள் தீர்த்தப்பொடி, தூவி
புதினா இலைகளை அறுத்துத்தூவி

இறுக்குமதி செய்யப்பட்ட விதைக்கொத்து, ஏலக்காய், வவங்கைப்பட்டை வகையறா சேர்த்து,

எல்லாவற்றையும் பல குலுக்கல்கள், குலுக்கி, அண்டை வீட்டுக்கு எடுத்துச்செல்கிறான். அவரும் அவனும் கதைத்துக்கொண்டே சுவைக்கிறார்கள். பொருத்தமான உணவு + என்கிறார், டாக்டர். அதற்குள் அடுத்த வீட்டு பெண் வந்திருந்தார். ருசி பார்த்து விட்டு கொஞ்சம் வாங்கிக்கொண்டு போனார். ராஜு காலரைத் தூக்கி விட்டுக்கொண்டான்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: https://s-media-cache-ak0.pinimg.com/236x/f0/96/4d/f0964dbd6f4bd8b6d85d9adf118cd914.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, April 13, 2016

மொழியின் வரலாறு



தமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை வரவேற்பாக பிரசுரித்த சிறப்பு மலரில் வந்துள்ள என் கட்டுரை, இது.


மொழியின் வரலாறு

இன்னம்பூரான்
ஏப்ரல் 9, 2016

தகவல்/கருத்து பரிமாற்றம் மனிதனின் நிகரற்ற திறமை என்பது ஒரு மாயை. எறும்புகள் அணி வகுத்து செல்லும் போது, நின்று பேசி விட்டு செல்கின்றன. பூனையும் நாயும் நமக்கு உற்ற தோழர்கள்; பாப்பி என்ற பூனை என்னை காலையில் 4 மணிக்கு எழுப்பி தின்பண்டம் கேட்பாள். டிஃபன் என்ற நாய் வீட்டுக்கு எஜமானனாக பீடு நடை போட்டாலும், நூறு ஆணைகளில் ஒன்றைச் சொன்னால் உடனடியாக பணிந்து இயங்குவான். ராணுவ நாய்கள் தியாகச்சுடர்கள். கிளியும் மைனாவும் திருப்பிச்சொல்லி நம்மை மகிழ்விக்கின்றன. விகடன் ஆசிரியர் அமரர் பாலசுப்ரமணியன் என்னை தனது பறவைப்பண்ணைக்கு அழைத்து சென்ற போது இரு ஈமு பறவைகள் அவருக்கு மெய்காப்பாளராயின. ஒரு கிளி அவர் வந்து கொஞ்சும் வரை, ‘பாலூ’ ‘பாலூ’ என்று கூவித்தீர்த்து விட்டது. சிங்கத்தையும் புலியையும் நன்கு பயிற்சிக்கு உட்படுத்தமுடியும். யானைக்கு வடமொழி புரியும் என்று மணக்குளத்து விநாயகர் கோயில் யானையின் பாகன் செய்து காண்பித்தார். அறுபது வருடங்களுக்கு முன்னால் இலங்கை பிரதமர் லண்டன் மிருக கண்காட்சி மையத்து யானையுடன் நீண்ட நேரம் பேசி, எல்லாரையும் அசத்தினார். பீடிகை முற்றிற்று.

c. 484–425 BC

தொல்காப்பியம் தொன்மை வாய்ந்த தமிழரின் வாழ்வியல் இலக்கணம். ‘என்மனார்’ என்ற தொல்காப்பிய அடக்கம் மிகுந்த சொல், அதற்கும் தொன்மையான தமிழ் மொழி படைப்புகளை கூறுகிறது. காலத்தின் பரிமாணத்தில் அத்துடன் ஒப்புமை உடையது எனலாம், ஹெரொடோட்டஸ் என்ற கிரேக்க அறிஞர் மூலம் சுமாராக 2500 ஆண்டுகளுக்கு முன்னால்கிடைத்த  ஒரு தகவலும், ஆராய்ச்சியும், முடிபும். முதலில் மூன்று வினாக்கள்:


  1. ‘கல் தோன்றி, மண் தோன்றா’ காலகட்டத்தில், மொழியில் புலமை, பெற்றபோதே கிடைத்ததா? பின்னர் பெறப்பட்டதா?;
  2. மொழி இயற்கையின் வரமென்றால், ஏன் பற்பல மொழிகள்?:
  3. பிறந்தவுடன் குழவியை கண்காணாதத் தேசத்திற்கு அனுப்பி தனிமையில் விட்டு விட்டால், அது பழகப்போகும் மொழி யாது?. 

ஹெரொடோட்டஸ் எகிப்தில் ( தமிழாக்கம் அருமையாக அமைந்திருப்பதை நோக்கவும்.) பயணம் செய்யும் போது, சாம்திக் ("Psamṯik") என்ற அரசன் மொழியின் மூலாதாரத்தை அறிய, இரு குழந்தைகளை ஒரு இடையனிடம் கொடுத்து, அவர்களிடம் யாரும் பேசக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை போட்டு விட்டாராம். ஆனாலும் அவர்களுக்கு அன்னமிட்டு சிரத்தையுடன் கவனித்து, அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டு, முதற்சொல் அமைந்த விதத்தை தெரிவிக்கவேண்டுமெனெ ஆணை. ஒரு மழலை "βεκὸς" என்று கூவினானாம். மற்றொரு மொழியில் அது ரொட்டியை சுட்டும். அந்த மொழி தான் ஆதிமொழி என்று  சாம்திக் அறிவித்து விட்டானாம். ஆதாரம் இல்லாத கதை தான். ஆனால், ஹெரொடோட்டஸ் சொன்ன செய்தியல்லவா!  அப்படியிருந்தாலும் அவர் கூறிய ஆரூடம் பலித்தது எனலாம். என்ன தான் சொன்னாலும் மேன்மக்கள் மேன்மக்களே. 

1769 AD

பற்பல நூற்றாண்டுகள் கழிந்த பின் வந்த ஒரு ஆய்வை நோக்குவோம்.
கிட்டத்தட்ட 250 வருடங்கள் முன்னால் பெர்லின் அறிவியல் மையம், சில வினாக்களை எழுப்பி, ஒரு போட்டி வைத்தார்கள்: வினாக்கள்:
  1. மனித இனம் தன்னுடைய இயல்பான போக்கில் இயங்கி ஒரு மொழியை உருவாக்க முடியுமா? 
  2. அது சாத்தியம் என்றால், அவர்கள் கையாளப்போகும் உத்திகள் யாவை? 
  3. மேற்படி வினாக்களுக்கு, ஆய்வின் அடிப்படையில் விடை அளிக்கவேண்டும்.
வாகை சூடிய கொட்ஃப்ரிட் ஹெர்டர் என்பர் ‘மொழியின் மூலம்’ என்ற கட்டுரையில்  மனிதன் விலங்கினத்தை சார்ந்தவர் தான். அதனால் அவனிடம் மொழியறிவு ஏற்கனவே இருந்தது தான் என்றார். 170 வருடங்கள் கழிந்த பின் ‘மொழியை பெற்ற பேறுப் பற்றி அதிசயமான ஒரு நிகழ்வு நடந்தேறும் என்பதை அந்த அறிவியல் மன்றமே எதிர்ப்பார்த்து இருக்கமுடியுமா என்பது வியப்புக்குரிய கேள்விக்குறி தான்.


1937
டாக்டர் ரிச்சர்ட் ஆல்பெர்த் வில்சன் ‘மொழி பிறந்த வரலாறு’ [1937] என்ற நூலை எழுதினார். சிறிய நூல் தான்; ஆனால், இருபது வருட ஆய்வின் பயன். தன்னுடைய நூல்  புறவெளிக்கும் [Space] காலதேவனுக்கும்  [Time]  உள்ள உறவு பற்றி அமைந்தது என்றார். அவர் என்னமோ பெரிய கை அல்ல. காலாவட்டத்தில் அந்த நூலுக்கு சமாதி வைத்திருப்பார்கள். ஒரு எதிர்பாராத விந்தை நிகழ்ந்தது. நாடகத்துறையிலும், இலக்கிய விமர்சனத்திலும், சமத்துவ பிரச்சாரத்திலும் உலகப்புகழ் பெற்ற பெர்னாட் ஷா இந்த நூலை பரிந்துரை செய்ததுமில்லாமல், நீண்டதொரு முகவுரையும் அளித்தார். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாயின. மொழியின் பிறப்பும், அது புறவெளிக்கும் காலதேவனுக்கும்  உள்ள உறவின் அரும்தவப்பேறு என்ற கருத்து, கடுகு சிறுத்தது ஆனாலும் காரம் போகாது என்பது போல, ஒரு நவீனத்துவமாக அமைந்து விடுகிறது என்பதை எல்லா மொழிகளிலும் காணலாம்.

தமிழில், தொன்மை வாய்ந்த பரிபாடலில்:
நிலனும், நீடிய இமயமும், நீ. 
அதனால், 
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என, 
அன்னோர் யாம் இவண் காணாமையின், 
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55 

மன்னுயிர் முதல்வனை ஆதலின், 
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே! 
நின் ஒக்கும் புகழ் நிழலவை; 
பொன் ஒக்கும் உடையவை; 
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60 

1979

ஹெரொடோட்டஸ்ஸின் ஆரூடம் நிக்கராகுவேயில் பலித்தது. காது கேளாத சிறார்களின் பள்ளிகளில் அவர்களுக்கு மொழியின் பயன் கிடைக்கவேண்டி செய்த முயற்சிகள் வியர்த்தமாயின. அமெரிக்காவிலிருந்து 1986ல் வரவழைக்கப்பட்ட நிபுணர் ஜூடி கெகல் கண்டு கேட்டு அனுபவித்த வியப்புக்குறிய விஷயம்: அந்த குழந்தைகள், பெரியவர்களின் பாடங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, தாங்களே உருவாக்கிய மொழியில் பேசிக்கொண்டார்கள், இயல்பாகவே. ஆசிரிய பெருமக்களுக்குத் தான் அது புரியவில்லை. தற்காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொடுத்தது பல நூல்களாக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான சிறார்களுக்கு உதவுகிறது.

இந்த கட்டுரையின் இலக்கு ஆய்வுக்குறிய விதங்களில் எல்லாமொழிகளின் வரலாறு அமைகிறது, அதில் ஏற்படுத்தப்படாமல் ஏற்படும் விந்தைகள் தான் நமக்கு தாரகமந்திரங்களாக அமைகின்றன என்ற கருத்தை மற்றவர்கள் அலச வேண்டும் என்ற ஆர்வமமே.
-#-




சித்திரத்துக்கு நன்றி: http://biblelight.net/tower-painting-parliament.jpg