தண்டோரா ~ 4
தண்டோரா போடுவது ஒரு நுண்கலை; பகிரங்கத்தை நுட்பமாக பொதுமன்றத்தின் முன்னால் வைக்க வேண்டும். கொசு ஒழிப்பானாலும், கருத்தடையானாலும், ஜப்தி செய்வதானாலும், பஞ்சாயத்து மீட்டிங்க் ஆனாலும், அரசாணை பிரகடனமானாலும், ஒலி எழுப்பி சேதி சொல்வதும், அதை கூட்டிக்குறைக்காமல் விளம்புவதும் எளிதல்ல. மாமாண்டூர் மாடசாமிக்கு இது கை வந்த கலை; குடும்பச்சொத்து; கொள்ளுத்தாத்தா அடித்தத் தண்டோராவைத்தான், இவனும் அடிக்கறான்.
டைம் லைன்: 10 05 2013; இடம்: மாமாண்டூர்; நேரம்: ஆதவன் மறைய வில்லை. மணியடிச்சாச்சு, ஆரம்பப்பள்ளியில். கன்னா பின்னான்னு ஓடி வந்த பசங்க புடை சூழ மாடசாமி அரசமரத்தடிக்கு விரைந்து சென்றான். சென்றானா? ஊர்ப்பஞ்சாயத்துக் கூடிய வண்ணம். வெள்ளி வெற்றிலை செல்லத்தை ‘கூஜா’ குப்புசாமி கொண்டு வந்து வைத்தான். அதில் பண்டாரவாடை துளிர் வெற்றிலை, கும்போணம் நெய்ச்சீவல், சிவபுரி பிரமபத்திரம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஊருக்கே செவிலியாகவும், வீட்டுக்கு வீடு பிள்ளைப்பேறுப் பார்ப்பவளும், கோயில் பிரகாரங்களை பெருக்கித் துடைக்கும் ‘மதினி’ லச்சுமி ஒரு கெத்துடன் ஒய்யாரமாக வந்து, சொம்பையும் வைத்து, விரல்களை நெறித்து திருஷ்டிக் கழித்தாள். எல்லாரும் அவளை ஒருமாதிரி பார்த்து விட்டு, உருத்திராக்ஷப்பூனை போல் கண் மூடி தவமிருந்தனர், அது கபட வேஷமாயினும்.
சின்ன மைனர் சிவசாமி ஐயர் தலைமை என்று சிலர் சொல்வதால், ஜாதிபத்திரியும், ஒரு குட்டி புட்டியில் மூக்குப்பொடியும் இருந்ததைப் பாத்தேன் என்று நம்ம கிட்டா சத்தியம் பண்றான். நாட்டாமை ஆறுமுகம் சேர்வை, இந்த சேதியெல்லாம் வந்தப்றம் தான், வீட்டை விட்டு கிளம்பினார். இன்று அவர் தான் அக்ராசனம் என்ற எண்ணம் அவருடைய மனதில் அசையா இடம் பெற்றதால், ஆரவாரத்துடன், அந்த பத்தடி தூரத்துக்கு ஜல் ஜல் என்று இரட்டை மாட்டு வண்டியில் வந்து கோஷத்துடன் இறங்கி, ஐயரை அரியாசனத்திலிருந்து இறக்கி விட்டு, தாம்பூலம் தரித்துக்கொண்டு, உறையூர் சுருட்டு ஒன்றை பற்ற வைத்துக்கொண்டார். சிவசாமி அய்யர் முகத்திலும் புகை. மனதிலும் புகை & பகை.
அது வரை, கட்சி மாறும் நம் அரசியல் குறுமன்னர்களைப்போல, காட்சி மாறுவதை கண நேரத்தில் உள்வாங்கிக்கொண்ட மாடசாமி நெடுஞ்சாங்கிடையாக சேர்வை ஐயா காலில் விழுந்து, ‘தண்டம், சாமியோவ். உத்தரவு’ என்று வினவும்போது, ‘மதினி’ லச்சுமிக்கு சாமி வந்து விட்டது. ‘ஓய்ய்ய்ய்’ என்று கூவி விட்டு, சுயநினைவை இழந்த மாதிரி பாவ்லா செய்து, ஐயரை உருட்டி விட்டாள். அவர் பாவம் நோஞ்சான். இது சேர்வையின் செட் அப் என்று மனதிலுள்ள புகையும், பகையும் ‘உள்-தண்டோரா’ போட்டாலும், சுதாரித்துக்கொண்டு, அவர் நாசி-உத்வேகத்தை வரவழைத்துக்கொண்டார். அடுத்த கட்டபஞ்சாயத்துக்குள்ளே, சேர்வை சாகமாட்டானா என்ற நப்பாசை!
இன்று ஒரு சிறிய உரையாடலுடன் பீடிகை மட்டும்.
சேர்வை: யாருடா அங்கே? மாடசாமிக்கு நாலு காசு கொடு. அவன் டாஸ்மாக்கிலே போய் குடிச்சுட்டுக் கிடக்கட்டும். நாம சாமியை கும்பிடுவோம். என்ன சரி தானே, மைனர்வாள்?
(மாடசாமி கிளம்பியாச்சு. இனி அவன் தண்டோரா அடிக்க நாலு நாள் இருக்கு.)
‘மதினி’ லச்சுமி மேல் வந்து ஆரோகணித்த அம்மன்:
‘கேட்டுக்கங்கடா! 25 வருஷமா நேரு-காந்திக்குல்லாக்காரங்க செண்டர்லெ ஆட்சியில் இல்லை. அவனையும், இவனையும் கூட்டுச்சேர்த்துக்கிணு லூட்டி அடிக்கிறாக.
சிவசாமி அய்யர்: (தனிமொழி) லூட்டி இல்லையம்மா. லூட். பரிசுத்த லூட். 2014லெ அவங்கள் தேர்தலை சந்திக்கணும்.
தெய்வமாச்சே( பாம்புச் செவி) அது சொல்லுது:
‘அய்யரே! ஆம்பிளை அடிச்சா லூட்! பொம்பளை அடிச்சா லூட்டி! உம்ம மாப்பிள்ளை வந்திருக்காப்லெ, அவரு தான் ஜோஸ்யர் ஆச்சே. கேட்றுவோம். எதற்கும் நான் சொல்றதைக் கேட்டுக்கோ. 2014ம் வருடம் 2013லேயே வந்திரும். கர்நாடகா தேர்தலில் ஆளும் கட்சி மண்ணை கவ்வின மாதிரி, இவுகளுக்கும் சோதனைடா! இந்த மோடி பேச்சு வேறே அடி படறதா. காங்கிரஸ் மைனராகி விட்டால் ( அவள் சொல்வது மைனாரிட்டி. சாமியெல்லாம் இப்படித்தான் பேசும்.). தென்னாட்டு கட்சிகளை பாம்பென்று அடிக்கவும் முடியாது. பழுதென்று மிதிக்கவும் முடியாது. காரியம் ஆகணும்னா காலை பிடிப்பானுக. காரியம் ஆகிவிட்டால், கழுத்தைப் பிடிப்பானுக. கிழக்கே வேறே மாம்தாவின் மமதையும், மாயாவின் மாயாஜாலமும் காங்கிரஸை பின்னி பெடல் எடுக்குது. போதாக்குறைக்கு, இன்னும் இருபது நாட்களில் மாஜியாகப்போற ஆடிட்டர் ஜெனெரல் படுத்தறான். ஆராசா போட்ற சத்தத்திலெ சாக்கோ ஷாக் ஆயிட்டார். ஒரு பேப்பர்க்காரன் சொல்றான்:‘பிஜேபிக்கு 150-160 ஸீட்: காங்கிரஸுக்கு 100.’ அப்டினு.
சொல்லி முடிக்கலை. சேர்வை பல்லை நற நறவென்று கடித்தார். சுருட்டை வீசி எறிந்தார்.
சேர்வை: அம்மா! தாயே! பரதேவதையே! அரசியல் எதுக்கம்மா, நமக்கு. இன்று பஞ்சாயத்து பெங்களுரு பற்றி தானே, அம்மா. நமக்கு ஏன் இண்டெரெஸ்டு? ஏதோ நாலு காண்டிராக்ட் எடுக்கலாம்லெ.
‘என்னடா சொன்னாய்? (அவளை அந்தப்புரத்தில் பாடாய் படுத்தும் அவரை விரட்ட இது தானே சாக்கு!) அங்கே, காங்கிரஸ் தலையெல்லாம் உருளுது. சித்தராமையா, மல்லிக்கார்ஜுன கார்கே,பரமேஷ்வரா, தேஷ்பாண்டே, சிவகுமார், சிவஷங்கரப்பா, ஜயச்சந்திரா, முனியப்பா, எண்ணிக்கிட்டையா, இப்டி எட்டுப்பேர் முதல்வர் போஸ்டுக்குப் போட்டாபோட்டி. நீ எதுக்கு ராசா காண்டிராக்ட் கெஞ்சணும். நீயும் போட்டிப்போடு’ என்றாளே பார்க்கலாம்!
மூலையில் நின்று கொண்டு வேடிக்கைப்பார்த்த வாத்தியார் அனந்து சார் ‘கொல்’ என்று சிரித்து விட, ‘ ஹோய்ய்ய்ய்’ என்று கூவிக்கொண்டு. சாமி மலையேறிவிட்டது. ‘மதினி’ லச்சுமி மூர்ச்சையாகி விழுந்து விட்டாள். அவளுக்கு சூடம் ஏற்றி ஆராதனை நடக்கும்போது, நம்ம அனந்து சார் சொன்னார்.
‘கர்நாடகா எம்.எல்.ஏ களில் 90% கோடீஸ்வரர்கள், எந்த கட்சியானாலும். ஒவ்வொத்தனுக்கும் சொத்து ஜன்னி கண்ட ஜுரம் மாதிரி எக்கச்சக்கமா ஏறிடுத்து, நாலு வருஷத்துக்குள்ளே. மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ மேலே கிரிமனல் கேசு இருக்கு அவங்களே எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். பெங்களுரிலே கிட்டத்தட்ட 60% ஓட்டு. பிஜேபி யை துரத்தி அடிச்சுட்டாங்க என்றாலும் சிலர் சொந்த மதிப்பினால் கெலித்திருக்கிறார்கள்.’
அவர் பேசி முடிக்கலை. நம்ம ஆண்டாளு பிள்ளை ‘அரும்பு மீசை’ சேஷாத்திரி, காலேஜ்லெ பெரிய கிளாஸ் படிக்கிறான் இல்லை. அவன் மடிக்கணினியை வைத்துக்கொண்டு, ‘அப்டேட்’ என்றான். அதற்குள் சந்தியாவந்தனம் பண்ணனும் என்று சிவசாமி அய்யர் எழுந்து போய்விட்டார். நாட்டாமை ஆறுமுகம் சேர்வையும் வண்டியேறினார். வண்டி பின்னாலேயே, தகரியமா, ‘மதினி’ லச்சுமி நடந்து சென்றாள். கூட்டமும் கலைந்தது. நாளை தண்டோரோ அடிக்கப்படும் என்று மக்களிடையே பேச்சு அடிபட்டது.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
____________________________________________________________________________-_
அப்டேட்: வாலு போச்சு: பன்ஸலும், அஷ்வினி குமாரும் ராஜிநாமா.
கத்தி வந்தது. முப்பது வருஷத்துக்கு பிறகு மைசூருக்கு யோகம். சித்தராமையா முதலமைச்சர். ஆனால், அது எளிதில் வரவில்லை. அதற்கும் சீக்ரெட் ஓட்டெடுப்பு.
இன்னம்பூரான்
10 05 2013
|
No comments:
Post a Comment