அன்றொரு நாள்: மே 7:
மரபு அணு மகிமை!
ஓரிரு குடும்பங்கள் உலகையே மாற்றியமைத்து விடுகின்றன. மூன்று பிதாமகர்கள் ஹிந்து மதத்திலிருந்து, இஸ்லாமுக்கு மாறியதால், ‘பிராலி’ என்று ஒதுக்கப்பட்ட பார்ப்பன குடும்பமொன்று, (‘குஷாரி’ வம்சாவளி). அது ‘தாக்கோர்முஷாய்’ (‘தவத்திரு’) என உயர்ந்தது. வணிகம், செல்வம், கல்வி, கலை எல்லாவற்றிலும் முதன்மை, ஒரிஜினல்.
முதலில் தலையெடுத்த தர்ப்பநாராயண் லேவாதேவி செய்தார். செல்வம் கொழித்தது. மகனார் கோபிமோஹன் கொடையாளி. காளி கோயிலுக்கு நன்கொடை, பல மொழிகள் அறிந்தவர். ஹிந்து காலேஜ் ஸ்தாபகர். மகனார் பிரஸன்ன குமார் ஜமீந்தார். நிலபுலன் சங்கம் துவக்கினார். ஆங்கில அரசின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். நாடகத்துறைக்கு அடி கோலினார். ஊருக்கு பெரிய மனிதர். மகனார் ஞானேந்திர மோஹன், கிருத்துவத்துக்கு மாறி, வாரிசு உரிமையை பறி கொடுத்தார். அவர் தான் இந்தியர்களில், முதல் பாரிஸ்டர். லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர். அடுத்த வாரிசு ஜதீந்திரமோஹன் நடிகர்; நாடகத்துறை வல்லுனர். மைக்கேல் மதுஸூதனர் ‘திலோத்தமை’ என்ற காவியம் எழுத நிதி உதவினார். நாட்டியாலாயா என்ற அமைப்பை நிறுவினார். அவர் தான் இந்தியாவில் கூட்டு இசை (ஆர்கெஸ்ட்றா) அமைத்து இசைப்பணி செய்தார். அந்தக்காலத்தில் ஃபோட்டோ மன்றத்தில், இவர் தான் முதல் இந்திய உறுப்பினர். அடுத்த வாரிசு ராம்நாத்: அவருடைய ஓவிய கண்காட்சி மிகவும் அருமையானது. ஸெளரீந்திரமோஹன் இசைத்துறையில் 1875ல் ஃபிலெடெல்ஃபியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்: ஆக்ஸ்ஃபோர்டிலும். மேற்கத்திய இசையிலும், இந்திய இசையிலும் வல்லுனராகிய இவரை ஈரான் மன்னரும், ஆங்கில அரசும் விருதுகள் அளித்து பெருமை செய்தன.
இதோ நெருங்கிவிட்டோம், இன்றைய கதாநாயகரின் தாத்தா துவாரகாநாத் அவர்களை. அவரொரு ராஜா. வாரிசுவழி சொத்து அபரிமிதம். சம்பாத்தியம் அதை விட மேல். கவர்ன்மெண்டில் பெரிய உத்யோகம்: ஷெரிஸ்தேதார். (இன்று அடிப்பொடி உத்யோகம் அது.) பெரிய சமூக சீர்திருத்தவாதி. செலவாளி. பத்தாம்பசலிகளுக்கு டேக்கா கொடுத்துவிட்டு, இங்கிலாந்துக்குக் கப்பலேறியவர்.
ராஜாவுக்கு பிறந்தது தேவரிஷி ஆகி விட்டது. ஆன்மிகத்தில் ஆழ்ந்தவர். பிரம்மோ இயக்கத்தைத் துவக்கினார். தத்துவபோதினி என்ற இதழை நடத்தினார். பிரும்மோ சமாஜத்தை வங்காள மறுமலர்ச்சி இயக்கமாக வழி நடத்தினார்.
தேவரிஷி இல்லறத்திலும் ரெக்கார்டு மனிதர். 13 மணியான குழந்தைகள் வளர்ந்தனர். மூத்தவர் த்விஜேந்த்ரனாத் புலவர், கனிஞர், இசை ஞானி, இதழ் ஆசிரியர், விழாத்தலைவர். பெங்காலி சுருக்கெழுத்து படைத்தவர். அடுத்தவர் ஸத்தியேந்திரநாத் இந்தியாவின் முதல் ஐ.சீ.எஸ்., எழுத்தாளர், கவிஞர், இசை ஞானி. மூன்றாமவரான ஹேமேந்திரநாத் கட்டுப்பாடு மன்னர், குடும்ப நிர்வாகி. பலசாலி பயில்வான். இந்தியாவின் முதல் விஞ்ஞான எழுத்தாளர். பெண்ணியவாதி. பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில், பாரத விலாஸ். கணேந்திரநாத் மேல்நாட்டு கலாச்சார மோஹி. மனைவி ஞ்யானதாநந்தினியை கிட்டத்தட்ட வெள்ளைக்காரியாக்கினார். அவரொரு பிருகிருதி.
பல மொழிகள் கற்ற ஜ்யோதீந்தரநாத் நாடகமேடையாளர். ஓவிய கலைஞர்.
ஆணுக்கு சரி நிகர் சமானமாக, பெண்ணரசி ஸ்வர்ணகுமாரி தேவி எழுத்தாளர், பாடகி, சமுக சேவகி, இதழாளர். மற்ற பெண்களும் க்யாதி படைத்தவர்கள். பட்டியல் மிக நீண்டது. மற்றொரு இழை சில நாட்களில் வர இருப்பதால், கடைக்குட்டி ரபீந்தரநாத் தாகூருடன், இவ்விழை முடிகிறது. நோபல் பரிசு வாங்கிய கவிஞர். நம் நாட்டு தேசீய கீத கர்த்தா. அழகிய தாடி. குருதேவ். 1946ல் படித்த அவருடைய கதைமாந்தர் காபூலிவாலா கண்முன் நிற்கிறார். மாப்பிள்ளை தேடுபவர்கள் இந்த குடும்பத்தில் சம்பந்தம் பேச விரும்பியது ஆச்சிரியம் இல்லை, இவர்கள் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும்.
இன்று அவருடைய ஜென்மதினம். மே 7,1761. அவரது கவிதை ஒன்றை, பவளசங்கரி என்ற மாமி மொழிபெயர்க்க, மஹாகவி பாரதியார் மொழிபெயர்த்த தாகூர் கவிதை ஒன்றை நாகராஜன் மாமா, ‘எலி அவரை கிள்ளினதையும் பொறுத்துக்கொண்டு, மலையை நிஜமாகவே கிள்ளி‘ கண்டு பிடித்தார். அதனால், நான் அதிகம் பேசவில்லை. என் அப்பா சொல்லுவார்: ஆகஸ்ட் 7, 1941 அன்று ரபீந்திரநாத் தாகூர் மறைந்ததை ரேடியோ அறிவித்தபோது, எட்டு வயதான நான், ‘ இன்று காலை அஸ்தமனம்‘ என்ற பொருள்பட சொன்னேனாம்.
இன்னம்பூரான்
07/8 05 2012
உசாத்துணை:
von Golam Abu Zakaria (2011) Rabindranath Tagore - Wanderer zwischen Welten: ISBN 978-3-86281-018-5 + பல நூல்கள்/ ஆவணங்கள்/இணைய தளங்கள்/விக்கிப்பீடியா
|
No comments:
Post a Comment