அன்றொரு நாள்: மே 11:
வாரிசு!
இன்று அவரது நூற்றாண்டு விழா. இந்தியாவின்/பாகிஸ்தானின் நாளிதழ்கள், வார இதழ்கள் எல்லாம் அவரது கீர்த்தியை பாடுகின்றனர். கெளரவர்களும், பாண்டவர்களும் கொண்டாடுகின்றனர். ஶ்ரீகிருஷ்ணன் யார் பக்கம்? அந்த மாதிரி தான். சில மனிதர்களை தேசாபிமானத்திற்குள் அடக்கி ஆளமுடியாது. வண்ணத்திப்பூச்சிக்கு, உன் தோட்டமென்ன? என் தோட்டமென்ன? அதனால், அதனுடைய அருமை குறைந்து விட்டதா? என்ன? இன்றைய கதைமாந்தன் வாழ்ந்தது என்னமோ 43 வருடங்கள் தான். அவர் தரணிமைந்தன். மதம், மாச்சரியம், கலாச்சாரம்,பிராந்திய எல்லைகள், நாட்டுப்பற்று ஒன்றுமே அவரை பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய சீதா தேவி, மனித இனம். அவருடைய சூர்ப்பனகை, மனித குணம். அவருடைய கெளஸல்யை, ‘அம்ருத்’ அமிருதசரஸ். அவருடைய கைகேயி,மும்முறை கொலைக்களமான துரதிர்ஷ்ட அமிருதசரஸ். அவருடைய மந்தரை, கலோனிய அரசு. அவருடைய அகல்யை, பாரதமாதா.
இனி அவருடைய தாடகையையும், பூதகியையும் பற்றி மட்டுமே பேச்சு. இந்தியா தாடகை என்றால், பாகிஸ்தான் பூதகி. பாகிஸ்தான் தாடகை என்றால், இந்தியா பூதகி. இரண்டுமே ராக்ஷசிகள். யார் தான் உளவியல் வல்லுனர் அல்ல? பிறந்த மனிதன், மனுஷி எல்லாரும் ஏதோ தான் தான் ஃப்ராய்டின் கொள்ளுத்தாத்தா/பாட்டி என்று மார் தட்டிக்கொள்கிறார்கள். இத்தனைக்கும் மனோதத்துவ சாத்திரத்தின் வாசற்படி கூட மிதித்ததில்லை. நம் கதைமாந்தன் தனக்கு விருதுகள் அளித்துக்கொள்ளவில்லை என்றாலும், மனிதனின் மனம் என்ற ஆழ்கடலின் இண்டு, இடுக்குகளில் புகுந்து,அய்யய்யோ!, அவனுடைய நிர்வாண அசிங்கங்களை, புரிந்து கொண்டவராச்சே. அவர் ஒரு உருது இலக்கியவாதி. அவருடைய சிறு கதைகள், புதுமை பித்தனுடையதை விட நூறு மடங்கு பச்சை மிளகாய். 1947 இந்திய பிரிவினை பொருட்டு அவர் எழுதிய சிறு கதைகள்: வரலாறு, இலக்கியம், தத்துவ சாத்திரம், மனோதத்துவம். அவருடைய முதல் கதையில் (‘சதைப்பிண்டம் -டண்டா கோஷ்த்’), ஒரு சீக்கிய யுவன் ஒரு இஸ்லாமிய பெண்ணை கற்பழிக்க விரும்பி, கடத்துகிறான். அவளோ பிணமாக கிடக்கிறாள். அந்த திகைப்பில் அவன் ஆண்மை இழந்து விடுகிறான். நான், ஒரு தீப்பிழம்பை, இரண்டு வரியில் சொல்ல முயன்றேன். கலோனிய அரசின் காலாவதி சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், இந்த இலக்கியத்தை, ‘அசிங்கம்‘ என்று தடை செய்தது. பிற்காலம், தபால் தலை வெளியிட்டு, அவரை சிறப்பித்தது. அவரது மனோவேகம், இலக்கியத்திறன், உண்மை விளம்பல் பற்றி நூல் வடிக்கலாம். ஒரு சிறிய கட்டுரை எழுதுவது கடினம். சொல்லப்போனால், உசாத்துணை யாவும், இந்த சிறிய அறிமுகத்தைப்போல, அரைகுறை. எனவே, நானும் நிறுத்திவிட்டேன்.
அவர் பெயர்: ஸாதர் ஹாஸன் மாண்டோ (May 11, 1912 – January 18, 1955) அவர் யாருடைய வாரிசு தெரியுமா? அன்றொரு நாள்: ஜனவரி:28‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’
என்ற இழையில் தரிசனம் தரும்: ‘பாரதகண்டத்திலே, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் நற்பெயருடன் அறியப்படும் அமைதியின் மறு உரு; புரட்சித்தூண்; ஆன்மீகச்செம்மல்; லெளகீக மார்க்கபந்து; கடலோடி விடுதலை தேடியவர்; மனோபலசாலி; தியாகத்தின் சிகரம்; மாசற்ற ஜோதி. பாஞ்சால சிங்கம்,’ என்றெல்லாம் புகழப்படும் லாலா லஜபதி ராய் அவர்களின் வாரிசாக, இவரை கருதுகிறேன். சமீபத்தில் மஹாகவி பாரதி-தாகூர் சம்பந்தமான இழையில் சுட்டப்பட்ட,’இளமை இந்தியா (எங் இந்தியா) என்ற இதழை துவக்கி அதனுடைய முதல் இதழில் (ஜனவரி 1918) டாக்டர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் அமெரிக்க அதிபருக்கு எழுதி, கலோனிய அரசை பாடாய் படுத்திய கடிதத்தை, அதில் பிரசுரித்தார்.’ பேராசிரியர் நாகராஜன் அதிலிருந்து மற்றொரு பொக்கிஷத்தை எடுத்தார். 1910 ~20 களில் இருந்த இந்திய உறவுகளை பாருங்கள். இவருடன் அரசியல் ஆய்வு செய்தது ஹார்திகர் ~மஹராஷ்ட்டிரர்; குருநாதர் ~எஸ்.சுப்ரமண்ய ஐயர். இவருடைய அமெரிக்க இதழில் கவிதை வடித்தவர் ~குருதேவ் ரபீந்த்ரநாத் டாகுர். முன்னுரை: பிரிட்டீஷார் ஜோசையா வெட்ஜ்வுட்,’ என்று ஜனவரி 28 அன்று நான் எழுதியதை,நானே சிலாகித்துக்கொள்கிறேன்
இன்னம்பூரான்
11 05 2012
உசாத்துணை: கடந்த சில நாட்களாக, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வெளிவந்த நூற்றுக்கணக்கான இதழியல் கட்டுரைகள்.
|
No comments:
Post a Comment