04. 02 2010
தணிக்கை செய்வதில் தணியா வேகம் -32: ’மரபு’
அப்டேட்: 06 05 2013
இன்றைக்கு ரயில்வே போர்ட் படற பாடு பார்த்தேளோ?
கலோனிய அரசின் படைப்பு. உன்னதமான மரபுகள். கர்மமே கண்ணாயினார். சித்தரஞ்சன் எனக்கு அளித்தப் பாடங்கள் பல. பிற்காலம் ரயில்வே ஆடிட்டில் உயர்பதவிகள் வகிக்கும்போது, அவை கை கொடுத்தன. இந்திய தணிக்கை வரலாற்று தடிமன் நூலில் நிரந்தரமாக இது பொருட்டு என்னுடைய பெயர் பதிவானது எனக்குப் பெருமை தான்.
தேவ பீடம் என்று கருதப்பட்ட ரயில்வே போர்ட் இன்று தெரு நாய் போல அல்லாடுகிறது.
ஹூம் தலை விதி!
இன்னம்பூரான்
06 05 2013
டைம் லைன்: 1960/62
உங்காத்துலே கல்யாணத்துக்கு பெண் இருக்கோ? பேசாமா ரயில்வேக்காரனுக்கு கொடுத்துடுங்கோ. ராணி மாதிரி இருக்கலாம், அவ. தோட்டம், துரவு, அம்மாம்பெரிய வீடு,ஆளு, அம்பு, அணையா அடுப்பங்கரை (ஃப்ரீ நிலக்கரி!), கான்சாமா (நள பாகம் இல்லை: தவிசு பிள்ளை), ஓசி பயணம் இத்யாதி. பட்டா தெரியும் பாப்பானுக்கு என்பார்கள். வாக்கப்பட்டா தெரியும், ரயில்வே சொகுசு!
சித்தரஞ்சனுக்கு ரயிலேறும் போது, எத்தனை புதிய நண்பர்களை விட்டுச் செல்கிறோம் என்று தெரிந்தது. கல்கத்தாவிலிருந்து மொகல்சராய் பாஸ்ஸெஞ்சர் என்ற ஸ்லோ மோஷனில் ஏறப்போனால், வண்டியே காலியாக இருந்தது. ஜாஸ்தியாப்போன பத்து பேர் ! அன்று தான் எட்டுக்கோள்கள் ஒரே கோட்டில் வருவதால், சர்வநாசம் என்ற பீதி. எல்லாரும் வீட்டுக்குள்ளே.அடைந்து கிடந்தார்கள். மஹாப்பெரியவா சொன்னா என்று, 'வேயுறு தோளி பங்கன்...' பாடிக்கொண்டே (இரைந்து) போய் இறங்கினா, முதல் கேள்வி, 'உனக்கு மூளை இருக்கா?' (சரோஜ் குமார் மித்ரா: ரயில்வே அக்கவுண்ட்ஸ்: ஸிம்லா நண்பன்.) அவன் கொடுத்த விளக்கம், ' கோள்கள் என்ன தான் செய்யாது உன்னை? நீ வந்தது கொள்ளைக்காரர்கள் வழக்கமாக வரும் வண்டி.'
ஆபீஸ் போனால், மூன்று மரபுகள் முன் வைக்கப்பட்டன. எனக்கு முன்னால் இருந்த ஸீ.ஆர். முகர்ஜீ (ப்ரணாப் முகர்ஜியின் மாமா: அதையும் சொல்லிப்பார்த்தார்கள்) மரபு காத்தார் என்றார்கள்.
1. டெபுடி சீஃப் ஆடிட்டர் ஆஃபீஸுக்கு காலையில் மட்டும் ஒரு வேளை மட்டுமே வருகை தரவேண்டும். [பால்யமில்லியோ! அதை ஷரத்து
என்றே ஒத்துக்கொண்டேன்.]
2. தணிக்கைத்துறை, கணக்குவழக்குத்துறை வாயிலாகவே மற்ற துறைகளுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.
3. தலைமை அதிகாரிகள் மீட்டிங்க்குக்கு தணிக்கை அதிகாரிகளைக் கூப்பிடும் ரயில்வே மரபு இங்கு இல்லை; ஏனென்றால், நீ இள நிலை அதிகாரி. [2 & 3 அவுட்! வேலை நடக்கவேண்டாமோ?]
இப்படியாக குப்பை கொட்டும்போது, நேருஜி வந்தார், மின்சார எஞ்சின் தயாரிப்பை தொடங்கி வைக்க. ஜெனெரல் மானேஜர் திரு கிருஷ்ணசாமி அவர்கள் ஜமால்பூர் பாய்*. அவரிடம் தணிக்கைத்துறையும், இந்த தருணத்தில் இட்ட பணி செய்யும் என்று சொன்னேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, எங்களுக்கும் பணி அளிக்க உத்தரவிட்டார். அதற்குள், ஒரு நாள் என் மூட்டு நழுவி விட, நேருஜி மீட்டிங்கில், என் இடத்தை நழுவவிட்டு, சனி மூலையில் நின்றுகொண்டிருந்தேன், என் சிறிய மகன் வளைய வர. அந்த தோட்டத்தில் நுழைந்த நேரு அவர்கள், அவனிடம் வந்து, அவனை தூக்கிக்கொண்டார்; அருகில் இருந்த இடத்தில் அவனுடன் உண்ண அமர்ந்தார். மேஜை மேல் சப்ஜாடா காலி! ஒரு முறை முறைத்தாரே பார்க்கலாம். எல்லாம் மின்னல் வேகத்தில் வந்தன. சில நிமிடங்களுக்கு பிறகு, மகிழ்ச்சியுடன் வளைய வந்தார்.
வங்காள முதல்வர் டாக்டர். பிதன் சந்திர ராய் அருமையாக ஒரு செய்தி சொன்னார். பிரதமரோ ராத்தங்குகிறார். இவர் கல்கத்தா திரும்பவேணுமாம். காரணம்: . துர்காபூஜை; சட்டம்,ஒழுங்கு காப்பாற்ற இவர் கல்கத்தாவில் இருக்கவேண்டும். இதழ்களில் வந்த அடுத்த காரணம்,இவர் வந்தால் தான் புதிய அமைச்சர்களுக்கு அறை ஒதுக்க இயலும்! இரண்டும் உண்மை. டா. ராய் புகழ்வாய்ந்த டாக்டர். 80 வயதில், முதலமைச்சராக இருந்த போதும், ப்ராக்டீஸ் உண்டு. தற்காலம், நாம் எல்லாரும் திரு.ஜ்யோதி பாஸு அவர்களின் பெருமை சாற்றுகிறோமோ,அம்மாதிரி அவருக்கு அபரிமிதமான செல்வாக்கு, மக்களிடம். அவர் நேருஜியை 'ஜவஹர்' என்று தான் உரிமையுடன் அழைத்தார். கொஞ்சநாள் கழித்து ஸ்டேட்ஸ்மன் இதழில் படித்த நினைவு: அவரது பிறந்த நாள் விழாவுக்கு அமோகமாக மலர் மாலைகள், பூச்செண்டுகள். அன்று அவர் இறந்து விட்டார். மலர் வளையங்களுக்கு, கல்கத்தா மாநகரத்தில் புஷ்பம் கிடைக்கவில்லையாம்.
எல்லாம் நல்லபடியாக நடந்து விட்ட வேளையில் ஒரு ஆடிட் பூசல் புகுந்தது. ஜெனெரல் மானேஜர் என் தரப்பில் .பேசி , தீர்த்து வைத்தார். நாளை சொல்கிறேன்.
* ஜமால்பூரில், தணிக்கைத்துறை எஸ்.ஏ.எஸ் மாதிரி, ரயில்வே நிர்வாகம் மேல்நிலையிலிருந்து பதவி நிலை ஒரு படி குறைந்த வகையில் நேரடித்தேர்வு செய்து கடினப்பயிற்சி அளித்தார்கள். ஒருவர் கூட சோடை போகவில்லை.
No comments:
Post a Comment