அன்றொரு நாள்: மே 10:
காயா! பழமா!
பிராது: சர்க்கரை என்று மணலை பொட்டலத்தில் விற்றான்.
‘எஜமான்! நான் வீசை எட்டணா என்று கூவினேன். வாங்கிட்டுப்போனாங்க. அது தப்பா?’
‘பிராது தள்ளுபடி. அவன் பொய் சொல்லவில்லை. நிஜமும் சொல்லவில்லை.’ (கனம் கோர்ட்டார்).
*
இந்த சட்டம் இருக்கிறதே. அதில் விந்தைகள் பல உண்டு. போர்ட்ஸ்மத் ஹார்பர். போலண்டு கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. இரண்டு மாலுமிகள் தண்ணி போட்டு அடிச்சுக்கிட்டாங்க. கோர்ட்டில் வழக்கு, ஆங்கிலத்தில். இவங்களுக்கு அரைகுறையாகத்தான் தெரியும். தண்ணியின் எஃப்பெக்ட் குறையவே, இரண்டு பேருக்கும் ராஜியாயிடுத்து. இதை ஒத்தருக்கு ஒத்தர் மொழிபெயர்ப்புச் செய்ய, கோர்ட்டாரும் மனமுவந்து தள்ளுபடி செய்தார்கள். ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்று ஓடப்பார்த்தால், கூப்பிட்டு காசு கொடுக்கிறது, கோர்ட்டு! மொழிப்பெயர்ப்புக்கு சன்மானமாம்! அந்தக் காசையும் தண்ணிலெ போட்டாங்க!
*
நீங்கள் எக்மோர் சில்லறை கோர்ட்டு (ஸ்மால் காஸ்) போயிருக்கிறீர்களோ? ஸூப்பருங்க.
சைக்கிள்ளெ டபிள்ஸ் போய் மாட்டிக்கொண்டோம். எங்களை இற்செறித்த தண்டல்காரர் சொன்னார், ‘பேசாம ஃபைன் கட்டிட்டுப் போய்க்கிணே இரு. மவனே! வாதாடாதே. நாங்க கேட்டாத்தானே.
கோர்ட்டுக்காட்சி:
கோர்ட்: இரண்டு ரூபாய் அபராதம்
நான்: யுவர் ஆனர்!
கோர்ட்: அஞ்சு ரூபாய்.
நான்: நாங்கள்..
கோர்ட்: பத்து ரூபாய்.
நான்: (தனி மொழி) என்ன ஏலம் போடறார். (பாம்புச்செவி, அந்த கிழத்துக்கு)
கோ: நூறு ரூபாய்.
கட்டிட்டு ஓடியாந்தோம்.
*
ஜஸ்டிஸ் ராஜமன்னார் என்று ஒரு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. இருந்தார். குடும்பமே நீதிபதி குடும்பம். நல்லா ஊறியிருக்கு. ஒரு நாள் மாலை கடற்கரையில் நடை பயிலப்போறார். விடலைப்பசங்க ஈவ்-டீஸ்ஸிங். ஓரமா நின்றுகொண்டிருந்த அப்பாவி போலீஸ்காரனை கூப்டு அவங்களை அரெஸ்ட் பண்ண ஆணையிட்டார். ஜட்ஜுக்கு அந்த பவர் உண்டாம். பெரிய வீட்டுபசங்க எல்லாம் ராத்திரி கொசுக்கடிலெ. அடிச்சுப்பிடிச்சுக்கினு அப்பனும் ஆத்தாளும் மறுநாள் கோர்ட்டுக்கு ஓடிவாராஹ. ஜட்ஜ் ஐயா கூலா சொல்றாரு, ‘உன் பையனை கண் அடிக்க விடாதே.’ இத்தனைக்கும் அவரை பற்றியே ஒரு தினுசா பேசிப்பாஹ. நமக்கேன் வம்பு? இதெல்லாமே செவி வாய் செய்தி.
*
நான் நினெச்சுக்கறது. சில பேர் ‘ பெண்ணாய் பிறக்கலாகாதா’ என்று அங்கலாய்ப்பார்கள். நாம நீதித்துறையில் புகுந்து இருக்கலாம் அல்லவா! சொல்ல வந்த விஷயத்தை மறந்துட்டேனே!
*
இன்றைய தினம்: மே 10, 1893: அமெரிக்காவின் உச்ச நீதி மன்றத்தில், வரலாறு காணாத தீர்ப்பு ஒன்று அளிக்கப்பட்டது, வழக்குத் தொடர்ந்து ஆறு வருடங்களான பிறகு: NIX v. HEDDEN, 149 U.S. 304 (1893)
கோர்ட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன், வாங்கோ.
ஜட்ஜ் மும்ம்மூர்த்திகள் வந்தவுடனே டவாலி கூவினார். எல்லாரும் எழுந்து நின்றார்கள். மூவரும் அமர, கோர்ட்டுத் தொடங்கியது. மூன்று கனமான அகராதிகள் கொண்டு வரப்பட்டன. புரட்டப்பட்டன. பொருள் திரட்டப்படப்ட்டது.
சாக்ஷி1: ‘கடவுள் மீது ஆணை! அகராதிகள் எல்லாவற்றையும் வகைப்படுத்துவதில்லை. ஆனால், செய்தவரை சரி. அறுபது வருடங்களில் அர்த்தம் அதிகமாக மாறவில்லை. அதாவது கொஞ்சம், கொஞ்சம் மாறியிருக்கலாம்.......’ இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போனார்.
சாக்ஷி 2: இந்த சொற்களுக்கு எல்லாம் அறுபது வருடங்களுக்கு முன்னாலும், பின்னாலும் விசேஷமான அர்த்தங்கள் இருப்பதாக.....இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போனார்.
இரண்டு சாக்ஷிகளும், இரு தரப்பு வழக்குழப்பவர்களும் ( அதாவது வழக்கறிஞர்களும்) அதே மூன்று அகராதிகளையும் வைத்துக்கொண்டு, அவரவர் நிலைப்பாடுகளை நிலைப்பாட்டினார்கள். வாயிருந்தா, அகராதி அழுதிருக்கும்.
வணிகப்பெயருக்கும், பாமர மக்கள் பேசும் மொழியில் உள்ள அர்த்தத்துக்கும், விஞ்ஞான பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் அலசப்பட்டன.
தீர்ப்புக்கு வந்த சிக்கல்:
கொடியாக வளர்ந்து, வளைந்து, பூத்துக்குலுங்கி, கொத்துக்கொத்தாக ஒரு வஸ்துவை தரும் தாவரத்தின் பெயர் ‘Solanum lycopersicum’. அதை பறித்துக்கொடுத்தால், கீதா, ராஜம், ஸுபாஷிணி ஆகியோர் சட்னி, ரசம், பிசைந்த சாதம், ஊறுகாய் செய்வார்கள்; அதற்கு முன் ஃபோட்டோ போடுவார்கள். தாவர இயல் சாத்திரம் இதை பழம் என்கிறது. உபவகை: பெர்ரி. 1773ல் இதை உருளைக்கிழங்குடன் வகைப்பாடு செய்தார்கள்.1768ல் வைத்த புது நாமகரணமான Lycopersicon esculentum இன்றும் வளைய வருகிறது. உங்களுக்கு புதிரவிழ்க்க உதவவேண்டும் என்ற கடமையினால், இந்த விவரங்கள் அளிக்கிறேன். நன்றி கூறவும்.
தீர்வு: விஞ்ஞானம் ‘பழம்’ என்றாலும், இது காய்.
அடடா! எதை பற்றி இந்த ‘காயா’ ‘பழமா’ தாவா?
அந்த காய்/பழத்தின் பூவின் படம் கிடைத்தது. இணைத்துள்ளேன். நீங்கள் உடனே கண்டு பிடித்து, ‘
ஏன் இந்த தாவா?’ என்ற வினாவுக்கு விடை அளிப்பீர்களாக.
இன்னம்பூரான்
10 05 2012
உசாத்துணை:
U.S. Supreme Court:149 U.S. 304:NIX et al. v. HEDDEN, Collector. No. 137: May 10,1893
|
No comments:
Post a Comment