சொல்லியாச்சு.
இன்னம்பூரான்
02 12 2011/ 08 05 2013
இது தேவரகஸ்யம்!
- Friday, December 2, 2011, 12:25
- இலக்கியம், கட்டுரைகள்
இன்னம்பூரான்
முதல்பத்து -1
சில சன்மார்க்கங்கள் மனதில் பதிந்து விட்டால், ‘அஹோ பாக்யம்’ என்று மகிழலாம். அதற்கு உகந்த மார்கபந்துவும் கிடைத்தும் விட்டால், அது மஹாபாக்யம். அக்கமும் பக்கமும் அனுசரணையாக இருந்து விட்டால், கேட்கவே வேண்டாம். பெருமாளே, தாயாருடன், கருடாரூடராக இறங்கி வந்து, சேவை சாதிக்கறாப் போல. அந்த மாதிரி கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்னால் கண்டு களித்த காட்சி ஒன்று, காலம், தேசம், வர்த்தமானம் எல்லாவற்றையும் லகுவாகக் கடந்து, அகக்கண்ணின் முன்னே மட்டுமல்லாமல், புறக்கண்கள் முன்னாலும், களிநடனம் ஆடுகிறது. அதை உள்மனதில் ஊறுகாய் போட்டு தனக்கு மட்டும் ஆத்மதிருப்தி என்று முடங்கிக் கொள்ளாமல், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது தான் உகந்தது என்று அந்த உள்மனதே சொன்னாலும், தயக்கம் நீங்கவில்லை.
ஏனெனின், அன்றாடம் எழுதும் வழக்கம் இருந்தாலும், வாசகர்களுக்கு ஆர்வம் இல்லாத விஷயதானம், தனக்கே வழங்கிக் கொள்ளும் பரிசில்/ நற்சான்று/விளம்பரம். தேவையற்றது. இலக்கிய உலகிலே அவற்றிற்கு வரவேற்பு குறைவு; எள்ளல் அதிகம். அது வேண்டாம் என்றொரு எழுதப்படாத விதியுண்டு. எனினும் ஆசிரியர் கேட்டுக் கொண்டால், அதை மதிப்பது தான் பண்பு என்பதும் ஒரு எழுதப்படாத விதி. ஆகவே, இந்த தொடரின் ப்ராரம்பம். ஆம். இதனுடைய பரிமாணம்/எல்லை/வேலி/திசை எல்லாம் இன்னும் மங்கலாகவே தென்படுகின்றன. இதுவே ஈற்றடியாகவும் அமையலாம். நூறு பத்திகளில் அறிமுகம் மட்டும் அமையலாம். யாமறியோம்.
அந்தக் களிநடனம் புரிந்தவர் ஒரு தொண்டு கிழவர். கதாபாத்திரம்: காமமிகு காதலி ராதா. இடம்: தம்புடு சார் பள்ளிக்கூடம், கீழ மூன்றாம் வீதி, புதுக்கோட்டை. ஏவல்: நரஸிம்ஹ ஜயந்தி உத்ஸவம். காலம்: 1946. நடன நிகழ்ச்சி: ராதா கல்யாணம். பந்ததி: ஶ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதர் பந்ததி. ஆத்ம விசாரணை செய்த சில சான்றோர்களால் பகிர்த்து கொள்ளப்பட்ட விஷயங்கள், டிசம்பர் 1, 2011 அன்று என்னை 1946-க்கு இழுத்துச் சென்ற ஆத்ம தரிசனம் பற்றி ஆசிரியருக்கு முன்னாலேயே தெரியுமா? என்ன? அது ஆரூடமா? தேவரகஸ்யமா?
குற்றாலத்து அருவிகள் அளிக்கும் சுகானுபாவத்தைப் போல் தான் இந்த ராதா கல்யாணம். ஒரு தாத்தா சிற்றாடைச் சிறுமியாக மாறினால், அவருடன், ஆளுக்கொரு விளக்கு எடுத்துக் கொண்டு, ஒரு கிழவர் குழு, தட்டாமாலை ஆடினால், கும்மியடித்தால், கோலாட்டமாடினால், நடு நாயகமாக வீற்றிருந்த செல்லப்பிள்ளை உத்ஸவர் நீலமேக சியாமளன் ஓடோடி வந்து அந்த தாத்தாவை கட்டித் தழுவி முத்தம் கொடுக்க வேண்டாமோ?
நான் அதைத் தான் எதிர்பார்த்தேன், 65 வருடங்களாக. இன்று தான் அருவிகள் பல நீர் வீழ்ச்சியாக வந்து என்னை திக்குமுக்காட வைத்தன. இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். சுகானுபவங்களை என் இஷ்டப்படித்தான் எழுத முடியும். அது கூட ஒரு சுதந்திரம் தான்.
உங்களில் எத்தனை பேருக்கு அபிநய சரஸ்வதி பாலசரஸ்வதியின் ‘கிருஷ்ணா நீ பேகனே வாரோ’ என்ற பதத்திற்குப் பிடித்த முகராசியும், முத்திரைகளையும், கண் அசைவையும் பார்த்து அனுபவிக்கக் கிடைத்ததோ என்று நானறியேன். அவர்களுக்கும், ராதைகளுக்கும், 16-வது நூற்றாண்டில் ரூபா கோஸ்வாமி என்ற சமய தத்துவ மேதை ‘நாடகமே உலகம் என்பது மட்டுமல்லாமல், ஒரு புராண கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை நடித்துக் காட்டுவதை ‘ராகானுக பக்தி சாதனா’ என்று நாமகரணமிட்டு,தேவருலகம் எய்தும் வழிகளில் ஒன்று என்றொரு தேவரகஸ்யம் சொன்னாரல்லவா. அதைப் பகிர்ந்து கொண்டு, இப்போதைக்கு விடை பெறுகிறேன்.
No comments:
Post a Comment