தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை!
1. ஒரு முகாந்திரம்:
அரசு இயந்திரத்தை பூரி ஜெகன்னாத் தேருடன் ஒப்பிடுவார்கள். அத்தனை
மெள்ள மெள்ள நகருமாம். ஆங்கில மொழியிலேயே அந்த சொல், ‘ஆடாமல் அசையாமல்
வரும்’ ஆமை வேகத்திற்கு உவமை ஆகிவிட்டது. உவமை மேலும் பலவிதங்களில்
பொருத்தம். ஊர் ஜனங்கள் ஆயிரக்கணக்கில் வடம் பிடிக்கவேண்டும்;
தேர்த்தட்டில், அமர்ந்தும், நின்றும், ஆடியும்,பாடியும், கூவியும்
‘பண்டா’ எனப்படும் பூசாரி இனத்தவர் படுத்தும் பாடு சொல்லி மாளாது.
நம்மூர் பக்கம் வருவோம். நமக்குத் தெரிந்தது திருவாரூர் தேர். பெரிது. பல
வருடங்கள் நிலை பெயரவில்லை, திருவெறும்பூர் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்
நிறுவனம், நவீன சக்கிரங்கள் பொருத்தும் வரை. இது நடந்து நாற்பது
ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அப்போது எழுந்த வினா: முட்டுக்கட்டை எப்படி
இருக்கிறது?; முட்டுக்கட்டையை தலைமுறை, தலைமுறையாக போடும் வம்சாவளி
எங்கே? எங்கே?
ஐயன்மீர்! விழாக்கோலம் கொண்ட தேர் வலமும் வந்து, பெருமான் தரிசனமும்
அளித்து , மக்கள் ஒருமைப்பாட்டையும் நிலை நாட்டிய பிறகு, சொகுசாக
நிலையில் வந்து, வருடம் முழுதும் அமரிக்கையாக இருக்க வேண்டும் என்றால்,
முட்டுக்கட்டையாருக்கு வந்தனமும், நன்றியும் சொல்லியாக வேண்டும்.
சிறியவனாக இருந்த போது, அரியக்குடியில் தேர் வடம் பிடித்திருக்கிறேன்.
பதவியில் இருந்த போது, பூரி ஜெகன்னாத் தேரையும் இழுத்திருக்கிறேன். இரு
தடவையும், முட்டுக்கட்டையாரின் திறனையும், துணிவையும், வலிமையையும்,
உடனடி செயலையும் கண்டு வியந்திருக்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கப்படும்
மாலை மரியாதை, தாம்பூலம், திரவிய தானம், பரிசிலாகத் தேறல் எல்லாம்
உகந்தது தான் என்பதில் ஐயமில்லை. உவமித்து கூறுவது யாதெனில், அரசு
இயந்திரம் தேர் போல; வடம் பிடிப்போர் மக்கள் என்க. அரசு ஊழியம் செய்வோர்
பண்டாக்கள் மாதிரி. இங்கு மட்டும் உவமை அரைகுறை பொருத்தம் தான். பிறகு
விளக்குகிறேன்.
இத்தனை பீடிகை எதற்கென்றால், தணிக்கைத்துறை என்றதொரு ‘நிர்வாக
முட்டுக்கட்டை’க்கு இந்தியாவில் மதிப்பு குறைவு. அரசு புறக்கணிக்கும்;
ஊடகங்கள் ‘ஏனோ தானோ’; மக்கள் இருளில். இந்த குறைகள் தீர்ந்தால் தான்,
அரசு சுதாரித்துக்கொள்ளும். ஊடகங்கள் கவனைத்தை திருப்பும். மக்களும்,
‘நாக்கைப் பிடுங்கிக்கறாப்போல, நாலு கேள்வி’ கேட்க முடியும். அன்று தான்
ஜனநாயகம் வலு பெறும். சுருங்கச்சொல்லின், தணிக்கைதுறை மக்கள் தொண்டு
செய்ய இயலும், நல்லவை நடந்தால்.
ஆங்கில அரசின் படைப்பாக 150 வருடங்களாக பணி புரியும், அரசியல்
சாஸனத்தில் நிர்வாக ஆணிவேராக சொல்லப்பட்ட, இந்த இலாக்காவின் செயல்
பாடுகளின் பயன் மக்களை அடைவதில்லை. அமெரிக்காவில் ‘ஜெனெரல் ஆடிட் ஆஃபீஸ்’
என்ற பெயரை கேட்டாலே, அழுத குழந்தையும் வாயை மூடும். அத்தனை அச்சம்!
இங்கிலாந்தில் ஆடிட்டர் ஜெனரலை தேர்ந்தெடுக்கும் விதம் பாரபக்ஷம் அற்றது;
எவராலும் மறுக்க இயலாதது; வீசும் வலையும் நாலாப்பக்கமும் அலையும்.
ஏனென்றால், அந்த வேலை ஆயுசு பரியந்தம் உறுதி. ஒரு உபகதை இருக்கிறது.
பிறகு சொல்கிறேன். இந்தியாவில், ஆடிட்டர் ஜெனரலை நியமிப்பது பிரதமர், நடை
முறையில். அது பற்றியும் பிறகு தான் அலச வேண்டும். இப்போதைக்கு பீடிகை
போதும்.
ஒரு தற்கால விவகாரத்தை அவதானிப்போம். இந்த 2ஜி சமாச்சாரம் எங்கும்
நிறைந்துள்ளது - உச்ச நீதி மன்றம், பிரதமரின் ஜவாபுகள், நாடாளுமன்றத்தில்
கலாட்டா, அந்த மன்றத்துக் குழுக்களின் இழுபறி, தொலைக்காட்சிகளில் தொல்லை,
இதழ்களில் முணுமுணுப்பு, உலகெங்கும் இந்தியாவை பற்றி இழிச்சொல், எள்ளல்.
இதற்கெல்லாம் மூலம் ஒரு சிறிய ஆடிட் ரிப்போர்ட் - 57 பக்கங்கள்; பேசும்
ஆவணங்கள் 77 பக்கங்கள்; சிறிய முன்னுரை. அதன் சாராம்சம் ஒரு வரியில்!
சும்மா சொல்லக்கூடாது. குடை சாயும் தேரை, இந்த முட்டுக்கட்டை
நிமிர்த்தும் போது, அந்த தேர் நடுநடுங்கித்தான் நின்றது. இத்தனைக்கும்,
அந்த ரிப்போர்ட், கண்ட கண்ட இடங்களில் சேதி கேட்கவில்லை;ஒற்று
கேட்கவில்லை; வதந்திகளை நம்பவில்லை. டெலிகாம் துறையின் ஆவணங்களும்,
அத்துறை அருளிய விளக்கங்களே ஆதாரம், இந்த ரிப்போர்ட்டுக்கு. ஆடிட்
மரபுகள் மீறப்படவில்லை. வழக்கம் போல், தணிக்கை செய்யப்போகிறோம் என்று
நோட்டீசும் கொடுத்து, (தீவட்டிக் கொள்ளைக்காரன் கூட இப்படி முன்னறிவிப்பு
செய்வதில்லை!). அதை எப்படி செய்வோம் என்று முன் கூட்டி அத்துறையின்
அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தணிக்கை முடிவுகளையும் அவர்களுடன்
விவாதித்து, அவர்களின் விளக்கங்களை பெற்றபின் தான் அது ஃபைசல்
செய்யப்பட்டது. இத்தனை முஸ்தீப்புகள் செய்த பின், ‘ஐயகோ! மண்ணில்
வீழ்த்தினானே! இவன் உருப்படுவானா!’ என்றெல்லாம் அலறி விட்டு, ‘மீசைலே மண்
ஒட்டலே’ என்று நொண்டி சமாதானம் கூறினால், நடந்தது, நடக்கவில்லை என்று ஆகி
விடுமா என்ன?
இந்த 2ஜி ஆடிட் ரிப்போர்ட் பல வகைகளில் வரலாறு படைத்தது.
விக்கி லீக் மாதிரி, இந்த ரிப்போர்ட்டின் கசிவுகளை, ஆவணங்கள் ஆர்வத்துடன்
அணைத்து ‘குய்யோ முறையோ’ என்று கூவின. அன்றாடம் எதிர் கூவல்கள். ஆடிட்டர்
ஜெனரல் காஷ்ட மெளனம். எங்கள் துறையில் காபந்துகள் அதிகம், தொடக்கக்
காலத்திலிருந்து. ஒரு மூச்சு! ஹூம்! கசிவுகள் எல்லாம்
வேறிடங்களிலிருந்து.
ஆடிட் என்றால் வேம்பு, அரசு ஆளுமைக்கு. அரசியல் சாஸனத்தின் அடிப்படை
விதிகளுக்கு முரணாக, எல்லா கட்சி அரசுகளும் தணிக்கை அறிக்கையை நாடாளும்
மன்றம் ஒத்தி வைக்கப்படும் தினம், மூடு விழாவை போல, வைப்பார்கள், யாரும்
படித்து வினா எழுப்பக்கூடாது என்ற குற்ற உணர்வோடு. வரலாறு காணாத
முறையில், இந்த ரிப்போர்ட் முதல் முறையாக, உடனுக்குடன் நாடாளும்
மன்றத்தில் வைக்கப்பட்டது. அந்த அளவுக்கு, அரசுக்கு நெருக்கடி.
ஆடிட் இங்க்லீஷ் அரசு இங்க்லீஷ். புரியாது, மற்றவர்களுக்கு. இந்த
ரிப்போர்ட் பரவாயில்லை. படிக்க முடிகிறது. நீங்களும் நானும் அலசலாம்.
படியுங்களேன்.
77 பக்கங்கள் கொண்ட ஆவணத்தொகுப்பு, ஒரு நல்வரவு. மத்திய அரசை ஒரு கை
பார்த்து விட்டது.
இது கூட, தணிக்கைத்துறையின் இலக்கணத்தை பற்றிய விளக்கம் மட்டுமே. 2ஜி
விவகாரம் என்ற கந்தல் புராணம் பற்றி பேசும் தருணம் இது அல்ல. பிறகு
வருவோம்.
ஒரு சூடான செய்தி: “ஒரே முகவரியில் பல நிறுவனங்கள்: கண்காணிக்க
மத்திய அரசு தீவிரம்.” பத்து தலை ராவணனையும் தோற்கடிக்கும் மயில்
ராவணன்கள் நிறைந்த நன்னாடு இது. ஒரே முகவரியில் பல பெயர்களில் இயங்கும்
நிறுவனங்கள்/ பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் சிலரே இயக்குநர்கள்/
பல வருமான வரி ‘பான் கார்டுகள்’ வைத்துள்ள ஏய்ப்போர் என்றெல்லாம், அரசு
கவனத்திற்கு வந்திருக்கிறதாம். ஒரு சான்று: அசத்யம் செய்த சத்யம்
கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம்.
எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இந்த கூத்தெல்லாம் நான் போன
நூற்றாண்டின் அறுபதுகளிலேயே கண்டு கொண்டவன். தடுத்தாட்கொண்டதால், எனக்கு
பேரும், புகழும் வந்து சேர்ந்தன. அந்தக் காலத்து கான்ட்ராக்ட் ஒன்று,
கோடிக்கணக்கில். மூன்று அரையணா ஆசாமிகள் போட்டி! போடாத போட்டி! அதாவது,
மூன்று பேரும் உள்கை. விதிமுறைகள், ஆணைகள், வரை முறைகள் எல்லாமே
அப்பழுக்கு இல்லாமல், பரிசுத்தம். நான் திட்டவட்டமாக, அந்த ‘பரிசுத்த’
டெண்டர்களை நிராகரித்தவுடன், அம்மாநிலத்து பொதுப்பணித்துறையின்
மேலதிகாரிகள் ‘புலு புலு’ என்று சண்டைக்கு வந்து விட்டார்கள். என்னை விட
ரொம்ப சீனியர். ராஜாஜி அன்றொரு நாள் சொன்னார்,’ என் முதல் எதிரி
கம்யூனிஸ்ட்கள் அல்ல; பொதுப்பணித்துறை் தான் என் முதல் எதிரி’ என்று. அது
நினைவுக்கு வர, எங்கள் முதல்வரிடம் ஓடினேன்..,
(தொடரும்)
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp5iR3wl8lVp_tkzPXTUPjZ_s7DGijBrwhuTQjAXHBO11nAWM38tjr2C0UdQSD2UZ0IdxkmeechYUiqjtjlZD9EqvM4q7hedoGWZ2GwUomyKVK0jXnLGGu3q7kq8mBgXh2sdOB2QZ5WzY/s1600/rath-3.jpeg
பின்குறிப்பு:
இந்தியாவில், ஆடிட்டர் ஜெனரலை நியமிப்பது பிரதமர், நடை
முறையில். அது பற்றியும் பிறகு தான் அலச வேண்டும்
No comments:
Post a Comment