கல்லணை கட்டுவதற்கும், தஞ்சை பெரிய கோயில் எழுப்புவதற்கும், வண்டியூர் தெப்பக் குளம் வெட்டவும், திருமலை நாயக்கர் மஹால் கட்டவும், அக்காலத்து மன்னர்கள் மொத்த காண்ட்ராக்ட் விட்டார்களா அல்லது லேபர்-காண்ட்ராக்ட் கொடுத்து, கையில் சவுக்குடன், மேற்பார்வை செய்தார்களா என்று, மெய்கீர்த்திகள் கூறவில்லை.
டெண்டர், காண்ட்ராக்ட், ஏலம் போன்ற வழிமுறைகளை வகுத்து, கண்டிப்பான ஷரத்துகளையும், திட்டவட்டமான நடைமுறை இலக்கணத்தையும், நடுநிலை பிறழாத தணிக்கையையும் ஆங்கிலேய கலோனிய ஆட்சியின் நல்வரவுகள் என்றால் மிகையாகாது. ஆனால், காலபோக்கில், அவற்றில் ஓட்டைகள் விழுந்தன. கலோனிய ஆட்சி காலத்திலேயே, கண்ட்ராக்டர்கள் கொழுத்த செல்வந்தர் ஆயினர். 1947க்கு பிறகு அந்த ஓட்டைகள் கண்ணாயிரம் ஆயின. கண்ட்ராக்டர்கள் மேலும் மேலும் செல்வம் ஈட்டியதோடு நில்லாமல், அரசு என்ற இலுப்பை மரத்தையே உலுக்கத் தொடங்கினர். அவர்கள் கையாண்ட யந்திர மந்திர தந்திரங்களைப் பட்டியலிட, ஒரு அகராதி தயார். ஒரு தந்திரம்: தசாவதாரம்.
“ஒரே முகவரியில் பல நிறுவனங்கள்: கண்காணிக்க மத்திய அரசு தீவிரம்” என்று அண்மையில் வந்த சூடான செய்தி, எனக்கென்னெமோ பழங்கஞ்சி. நான் சொல்லும் காலக்கட்டம் 1966-68 (தேதியெல்லாம் மறந்துடறது!). சிக்கனத்திற்கும் நல்லாட்சிக்கும் பெயர் பெற்ற குஜராத் மாநிலத்தில், கானகத்தின் நடுவே உள்ள உக்காய் என்ற தலத்தில், தாப்தி நதியில் எழுப்பப்படும் மாபெரும் அணைக்கட்டு சம்பந்தமான பணியில், நான் தணிக்கைத் துறையின் இரவலாக, நிதி ஆலோசகராக இருந்தேன். எனக்கு ‘உக்காய்’ ஒரு அடைமொழியாகவே ஆகிவிட்டது, பிற்காலம்! அந்த நான்கு வருடங்களில், நான் கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.
என்னை அணைக்கட்டு சம்பந்தமில்லாத பணிகளையும் அவ்வப்பொழுது செய்யச் சொல்வார்கள், மேலாவிலிருந்து. எல்லாமே சுவாரஸ்யம்; பல பட்டறை – டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டேரக்டர், ஸ்தாவர சொத்து, கடன் வசூல், விஜிலென்ஸ் ஆய்வு, ஆடிட்டுக்கு ஜவாபு இத்யாதி. எல்லாமே படா சேலஞ்ச். எல்லாத்தையும் சொல்லணும் போல ஆசையா தான் இருக்கு. உதாரணமாக, அஹமதாபாத் – காந்தி நகர் எஸ்.டீ.டீ டெலிஃபோன் கனெக்க்ஷன் ஒரே நாளில் வாங்கிய மாயாஜாலம்! குஜராத்தில் தமிழர்-ஐஏஎஸ் அதிகாரிகள் ஜாஸ்தி – ஈஸ்வரன், சிவராஜ், பார்த்தசாரதிஸ், சிவஞானம், கிருஷ்ணமூர்த்தீஸ், விட்டல், கோபாலசாமி… எல்லாருக்கும் நல்ல பெயர். டாப்ஸ்! அவர்களும் எனக்கு உதவியாக இருப்பார்கள்.
அக்காலம் காந்தி நகர் என்ற தலைநகரம் கட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த நகருக்கு மின்விளக்குக் கம்பங்கள் நடுவதற்கு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டிருந்தது. மூன்று ஒப்பந்தக்காரர்களின் டெண்டர்கள், பரிசீலனைக்கு வந்தன. என்ன தான் நாணயமான அரசுப் பதவியில் இருந்தாலும், அதிகாரிகளும் மற்ற ஊழியர்களும் கட்டுக்கோப்பாகப் பணி புரிந்தாலும், அந்தக் காலத்திலேயே ஆங்காங்கே கறுப்பு ஆடுகள் வலம் வந்தன. பொதுப்பணித் துறையில், அவை அதிகமாக இருந்தாலும் தென்படமாட்டா.
கண்களில் விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு தான் எல்லாவற்றையும் அலச வேண்டும், கமுக்கமா. சமயத்தில், துப்பறியும் சந்துரு போல இயங்கவேண்டும்.
அந்த மூன்று ஒப்பந்தக்காரர்களின் டெண்டர்களை ஆராய்ந்து, குறைவான செலவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்த காண்ட்ராக்டருக்கு, அந்த காண்ட்ராக்ட்டை அளிக்கலாம் என்று அடிமட்டத்திலிருந்து தலைமைப் பொறியாளர் வரை ஏகோபித்த சிபாரிசு, பல பக்கங்களில் எழுதப்பட்டு இருந்தது. எல்லாம் குஜராத்தி மொழியில்; எனக்கு பரிச்சயமில்லாதது. அதனால் குறைந்து போகவில்லை. லாபம் தான். விழுந்து விழுந்து படித்ததாலும், தொண தொணத்து கேட்டதாலும், நுணுக்கங்கள் அவுட்.
சம்பந்தப்பட்ட அதிகாரியே அந்த கோப்பை என்னிடம் கைப்பட கொண்டு வந்து கொடுத்து, ‘ரொம்ப அவசரம்’ என்றார். ஆம். சில தினங்களில் காலவரையறை முடிந்து விடும். இப்படி ‘அவசர குடுக்கைத்தனம்’ செய்வது, ஒரு வாடிக்கை, தவறு செய்பவர்களுக்கு. ‘இந்த பாச்சா என்னிடம் பலிக்காது’ என்று சொல்லாமல், ‘ஆர்குமெண்ட் பலம். கேசு வீக்’ என்று நிராகரித்து விட்டேன். அதுவும் காலவரையறை முடிவதற்கு, நான்கு நாட்கள் முன்னால்! இதற்கு ‘ஹாண்ட் கிரெனேட் தியரி’ என்று நான் செல்லப் பெயர் வைத்திருந்தது, எல்லாருக்கும் தெரியும். போர்க்களத்தில் ஹாண்ட் கிரெனேட் எதிரியின் மேல் எறியப்படும். சில வினாடிகளில் அவனைத் தீர்த்து விடும்; ஆனால், அவன் சுதாரிப்புடன், அதை எறிந்தவன் மேல் திருப்பி எறிந்துவிட்டால், இந்த ஆள் ‘குளோஸ்’.
இதை எல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், அதிகார வர்க்கத்தின் நடைமுறைகள் எல்லோருக்கும் தெரியவேண்டும். என்ன தான் அடித்துக்கொண்டாலும், நாங்கள் நண்பர்கள். ஒன்றாகத் தேநீர் அருந்துவோம். ஆபத்து – சம்பத்துக்கு உதவுவோம். நாகரிகமாகப் பழகுவோம். அரட்டை அடிப்போம். ஒருமைப்பாட்டுடன் இயங்கவேண்டிய தருணங்களில் விட்டுக் கொடுக்க மாட்டோம். எனினும், கோடி ரூபாய் கொடுத்தாலும், தன்னுடைய பொறுப்பிலிருந்து துளியும் அசைய மாட்டோம். லஞ்ச லாவண்யக்காரர்களைக் காத தூரத்தில் வைத்திருப்போம். அதை வெளியில் காட்ட மாட்டோம். அப்பழுக்கு இல்லாத பொதுப்பணித் துறை அதிகாரிகளையும் ஊழியர்களையும் எனக்குத் தெரியும். இது நிற்க. தசாவதாரத்துக்கு வருவோம்.
தலைமைப் பொறியாளர் என்னிடம் வந்து கனிவுடன் பேசத் தொடங்கினார். அவர் என்னை விட வயதிலும் பதவியிலும் சீனியர். தன்னுடைய மகன் என்னை விட வயதில் பெரியவன் என்று சொல்லி, என்னைத் ‘தன்னைக் கட்டுபவர்’. போதாக்குறைக்கு, அவர் எனக்குப் பல சிக்கலான விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர். என் மதிப்புக்குரியவர். நான் ‘அமுக்கறாக் கிழங்காய்’ அடம் பிடிக்க, அவருக்குச் சினம் பொங்கியது; குரல் உயர்ந்தது; கடுமை தொனித்தது. பிறகு, அரசு தந்திரங்களில் ஒன்றான கமிட்டி கூட்டப்பட்டது. அந்தத் துறையின் தலைமையில் ஒரு ஐ.ஸீ.எஸ் அதிகாரி. ‘நீ எந்த சிபாரிசை நிராகரித்தாலும், காரணமும் பரிகாரமும் கூறுவாய். அப்படி செய்யாமல் ஏன் கழுத்தறுக்கிறாய்?’ என்று அவர் அங்கு சம்பிரதாயமாகக் கேட்டாலும், என் காஷ்ட மெளனத்தை கலைக்கவில்லை. அவருக்குத் தெரியும், ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்று. மேலும், சரியாகச் சொல்லப் போனால், எனக்கு மேலதிகாரி, கறார் ஆசாமியான நிதித் துறைத் தலைவர். அலட்டிக்க முடியாது.
காலவரையறை முடியும் நாளோ, அடுத்த நாள். நான் மட்டும் ‘ஹாய்’யா இருந்தேன். அறைக்கு வந்தால், ஒரு விசிட்டிங்க் கார்ட். அந்த காண்ட்ராக்டர் வந்து நிற்கிறார், ஹி ஹின்னு இளிச்சுண்டு! அந்த மாதிரி மனிதர்களைத் தட்டிக் கழிப்பது எளிதல்ல. ஒன்று கிடக்க, ஒன்று வத்தி வைத்து விடுவார்கள். நான் ‘டுர்ர்’ னு வீட்டுக்கு போய்விட்டேன். மறு நாள், ஆஃபீஸுக்கு வந்தால், ஒரே கலாட்டா. அனல் பறந்தது, கடுஞ்சொற்களால். குஜராத்தியில் வசை பாடினார்கள் என்று நினைத்தேன்.
அப்போது குஜராத் முதல்வர், திரு. ஹிதேந்திரபாய் தேசாய். அவர் ஒரு காந்தீயவாதி. திரு.மொரார்ஜி தேசாயின் பரம சிஷ்யர். அதிர்ந்து பேச மாட்டார். அவரின் கட்டுக்கோப்பும் கண்ணியமும் இன்றும் என்னை அவரை வணங்கச் சொல்கிறது. எனக்குத் தணிக்கை ஆசான், அவர் தான். ஆடிட்டர் ஜெனெரல்கள் எல்லாம், அப்புறம். வழக்கம் போல் அதிர்ஷ்டமும் கை கொடுத்தது. அவருடைய அறைக்கு பார்பர் ஷாப் கடைகளில் அந்தக் காலத்தில் இருப்பது போல அரைக் கதவு. எட்டிப் பார்த்துவிட்டு, அவர் ஃப்ரீயாக இருந்தால், அத்தியாவசிய வேலை என்றால், யாருமே உள்ளே போகலாம். நானோ அவருடைய செல்லப் பிள்ளை. (அது மூணாவது உபகதை.) கேக்கணுமா? போய் என் சரக்கை அவிழ்த்தேன்.
.
“…”. என்னவென்றால்: “சார்! இந்த மூன்று ஒப்பந்தக்காரர்களும் ஒரே ஆளு. முதற்கண்ணாக, காப்பியடிச்சு, அள்ளித் தெளித்த கோலமாக, அரைகுறை திருத்தங்களுடன், ரேட்டு (Rates) கொடுக்கின்றன, மூன்றும். அவை, சிறிய மாறுதல்களுடன், கிட்டத்தட்ட ஒரே முடிவைக் கூறுகின்றன. இரண்டு பேருக்கு ஒரு விலாசம். இரண்டாமவர்க்கும் மூன்றாமவர்க்கும் ஒரே டெலிஃபோன்…’ என்று இழுத்தேன். அவர் முன்னால் நான் கொசுவல்லவோ! ‘சொல்லு’ என்றார். ‘ஒரே டைப்ரைட்டர்!’ என்றேன். சிரித்துக்கொண்டே, ‘அப்புறம்?’ என்றார். கக்கி விட்டேன், உண்மையை.
‘அந்த விலாசமே சந்து பொந்தில், கீக்கிடம்! வஸந்தா பேஹ்ன் (என் மனைவி; பேஹ்ன் என்றால் சகோதரி; குஜராத் பாணி) என் காரை எடுத்துக்கொண்டு கறிகாய் வாங்கப் போய்விட்டாள், பான்கோர் நாக்காவுக்கு. ரொம்ப நெரிசல். கவலையுடன், ஆஃபீஸ் காரில் அவளைத் துரத்தும் போது பார்த்தேன். அந்த இடத்துக்குக் கிட்ட இவுக அரையணா விலாசம். வெத்து வேட்டு. ஐ.எஸ்.ஐ. தரத்தில் இந்த மின்கம்பங்களை உற்பத்தி செய்யும் பெரிய கம்பெனிகள், இந்தியாவிலேயே இரண்டு மட்டுமே; அவற்றின் ரேட்டு கேட்லாக் இதோ. அது, இவுக கேட்பதை விட மிகக் குறைவு. நம்ம ஆர்டர் பெரிசு. என்னால், அவர்களுடன் பேசி இன்னும் குறைத்து வாங்க முடியும். டெண்டரே தேவையில்லை’ என்று.
‘சரி.சரி. ஆஃபீஸ் நடைமுறைப்படி அனுப்பு’ என்றார். கமிட்டிகள் அலசுவதற்கு முன்னாலேயே, ‘அலசிய கருத்துகள்’ என்று நோட்ஸ் வைத்துக்கொள்ளும் பிரகஸ்பதி என்று என்னைக் கேலி செய்தவர், அவர். விடுவாரா? என் குறிப்புகளை வாங்கிப் பார்த்தார். தலையாட்டி விட்டு, தலைமைக் காரியதரிசியிடம், குஜராத்தியில் பேசினார். நானும் அதையே கோப்பில் எழுதி, நடைமுறைப்படி, காரியதரிசிகள் / அமைச்சர்கள் என்ற ஏணி அமைத்து மேலாவுக்கு அனுப்பினேன். கேட்கணுமா? சர்வ சம்மதம் தான், மின்னல் வேகத்தில். முதலில், எனக்குப் பாராட்டுச் சொன்னவர், அந்த ஐ.ஸீ.எஸ். அதிகாரி.
பிற்காலம், இந்தப் படிப்பினை மிகவும் உதவியது. மற்றொரு மாநிலத்தில் ‘ரோடு / பாலம்’ ஒப்பந்தங்களை அலசும்போது, ஒப்பந்தக்காரர்கள் மத்திய அரசுக்கு ஒன்று, மாநில அரசுக்கு மற்றொன்று, டெண்டரில் மூணாவது என்று, பல ஆவணங்களில், முரண்பட தந்த விவரங்களை ஒப்பியல் செய்து, பன்முகங்களின் முகத் திரையைக் கிழிக்க முடிந்தது, பெரிய அளவில். ஆனால், நோ யூஸ். அந்த மாநில அரசு தணிக்கை ரிப்போர்ட்டைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது. ‘பணம் பாதாளம் மட்டும் பாயுமல்லவா!’ அதனாலே, வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே காண்ட்ராக்ட் கொடுக்கும் கலை வளர்ந்தது. அந்த மூடுமந்திரம்…
Geetha Sambasivam wrote on 7 April, 2011, 15:17பிரமாதம்னு சொல்றது வெறும் வார்த்தை. அநுபவிச்சுப் படிச்சேன். அதுவும் கைஎறி குண்டு. உண்மையான விஷயம் அல்லவோ?? நல்ல தியரி தான். தொடர்ந்து காத்திருக்கேன்.
செல்லப்பா wrote on 7 April, 2011, 16:12Very interesting article Sir; Nice one to read;
பவள சங்கரி wrote on 7 April, 2011, 22:00ஐயா தங்களின் நினைவாற்றல் என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. இவ்வளவு அழகாக கோர்வையாக எழுத முடிவது அதனால்தான். தொடருங்கள் ஐயா, தெரியாத பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. பொதுவாக behind the scenes theory is always interesting !
No comments:
Post a Comment