பல வருடங்களாகவே, நாடறிந்த பகிரங்க ரகஸ்யம் யாதெனில், அரசு காண்ட்ராக்டுகள் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு. கட்சிக்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்ற விந்தையான புகார்ப் பட்டியல்கள், ஏதோ ‘அப்பன் வீட்டுச் சொத்து’ பறிபோன மாதிரி, தமிழ்நாட்டில் பரவலாக, எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், மேலாவுக்கு வந்த வண்ணம் உள்ளன.
கட்சி ஒரு பொருட்டல்ல, கொஞ்சம் பசையான காண்ட்ராக்டுகள் களத்தில் இறங்கும் போது. ‘காசே தான் கடவுளடா!’ என்ற தத்துவம், ஆளுமை செலுத்துகிறது என்பதும் கண்கூடு. அரசியல் கட்சிகளின் பஞ்சாயத்து உறுப்பினர்களின் இன்னோவா காரிலிருந்து, ‘மாண்புமிகு’க்களின் கோடிக்கணக்கான சொத்துக் குவியல் (தேர்தலுக்கு நிற்பதால், அவர்களே அறிவித்தது) வரை, காண்ட்ராக்டுகள் தான் மூலதனம் என்பதில், மாற்றுக் கருத்து இருப்பதாக, ஊடகங்கள் பேசவில்லை.
ஏலங்களில் இலை மறைவு, காய் மறைவு உண்டு. கோயில் குளங்களில் மீன் பிடிப்பு, தென்னந்தோப்பு போன்ற சின்னச் சின்ன குத்தகை, பெரிய மனுஷா கைக்குப் போவதற்கு பின்னணி, போட்டியைத் தவிர்ப்பது – சாம, தான, பேத, தண்டம் ஆகிய உபாயங்களால். சினிமாவிலே தத்ரூபமா காட்றஹளே! முறுக்கு மீசையும் கூஜாவுமாக, பெரிய மனுஷா பவுஷை! காண்ட்ராக்டுகள் என்றால், கிளை மறைவு, அடிமரம் மறைவு! பசையான காண்ட்ராக்டுகள் என்றால் ஆணிவேரும் மறைவு! ஆவணங்களோ பரிசுத்தம்! எல்லாம் டாக்டர்ட். தப்புத் தண்டா பண்றதை ஆடிட்காரன் எப்டி பிடிக்க முடியும்? நீங்கள் எல்லாரும் இந்த மாதிரி வினாக்கள் கேட்டால்தான், விழிப்புணர்ச்சி என்ற குண்டலினியைத் தட்டி எழுப்ப முடியும். மக்கள் சக்தி பெருகும். கேளுங்கள்; பதில் ஓடோடி வரும்.
என்னோட நச்சுன்னு ஒரு பயல் படிச்சான். வாத்தியார் எல்லார் மார்க்குகளையும் அம்பலத்தில் உரக்கப் படித்து மானத்தை வாங்குவார். அவன் மார்க் 2/150 என்றதும், ‘ஹொள?’ என்றான், வெத்துப் பேப்பர் கொடுத்த அவன்! பொறுமையே பூஷணமான, அவர் சொன்னார், ‘அப்பனே! உனக்கு சும்மா 1/2 மார்க் கொடுத்தேன், அம்பதுக்கு. அது 150க்கு 1 1/2 ஆகி, 2 ஆக ரவுண்ட்-அப் ஆச்சு. வெளிலே போ’ என்றார். அந்த மாதிரி ஒரு சாதா (சோதா?) கம்பெனிக்கு மார்க் கொடுத்து, ஸெண்டம் வாங்கக்கூடிய லார்ஸென் டூப்ரோ என்ற பிரபல பொறியியல் கம்பெனிக்கு மார்க் குறைத்து, காண்ட்ராட்டை, அபய தானம் செய்ததை, ஆடிட்டர் ஜெனரல் அண்மையில் குறை கூறினார் (L&T was ignored in bidding process: CAG).
உடனே, எனக்கு வந்த ஞாபகம், மூடு மந்திரம்!
இனி, கவனமாக படிக்கணும்னு பிரார்த்தனை. இல்லெனா, மூடு மந்திரத்தைக் கோட்டை விட்டுறுவீர்கள். ஒரு வீடு கட்டும்போது, அஸ்திவாரம், செங்கல் கட்டடம், விதானம் என்றெல்லாம், அது வளரும். ஒவ்வொன்றிலும் பல பகுதிகள்; அவற்றுக்கு ரேட்டு – 1.
அஸ்திவாரம் தோண்ட… கன அடி @ ரூ.
கல்லும் மண்ணும் வார… கன அடி @ ரூ.
பள்ளத்தைச் சுத்தம் செய்ய… கன அடி @ ரூ.
கான்க்ரீட் அஸ்திவாரமிட.. கன அடி @ ரூ.
செங்கல் இறக்க… லாரி @ ரூ.
கட்டடம் எழுப்ப… சதுர அடி @ ரூ.
தரை அமைக்க… சதுர அடி @ ரூ.
விதானம் எழுப்ப… சதுர அடி @ ரூ.
————————————————-
மொத்தம் ரூ. ……………..
—————————————————
இவ்வாறு ஒரு வீடு கட்டவே கிட்டத்தட்ட 60 / 70 பகுதிகள்.
பெரிய டெண்டர்களில் நூற்றுக்கணக்கில் இருக்கலாம். ஒவ்வொன்றுக்கும் ரேட்டு பதிவு செய்து, மொத்தத்தையும் பதிவு செய்து, சீல் வைத்த கவரில் வைத்து, டெண்டர் பெட்டியில் போட வேண்டும். குறிப்பிட்ட தேதியன்று, அவர்கள் முன்னிலையில், சீல் உடைத்து, மொத்த தொகைகளையும் படித்து, எந்த ஒப்பந்தக்காரர், குறைந்த செலவில் தயாராக இருக்கிறார் என்பது யாவருக்கும் தெரியப்படுத்தப்படும். எளிதில் நேர்மையாகச் செயல்படலாம், எல்லாருக்கும் புரிந்த வகையில்.
இங்கு தான், ஒரு மஹானுபாவன் புதியதொரு ஷரத்தைப் புகுத்தி, டெண்டர் இலக்கணத்துக்கு ஒரு மழுவைப் புகுத்தினான். மேற்படி பட்டியலில் மொத்த தொகைக்கு அடியில் [(+) %] / [(- %)] என்று சின்னங்களைப் பதிப்பிப்பது தான் அந்த மழு.
இது என்னே குழப்பம்? என்று யான் வினவினேன்.
தலைமைப் பொறியாளர் அளித்த விளக்கம்: ‘டெண்டரை சீல் செய்து அதற்கான பெட்டியில் போடுவதற்கு முன்னால், போட்டா போட்டி இருந்தால், மொத்த தொகையை க்ஷணத்தில், விகிதாசார அடிப்படையில் குறைத்தும், போட்டியில்லையெனில் க்ஷணத்தில் ஏற்றியும், ஒப்பந்தக்காரர்கள் கான்ட்ராக்டைக் கைப்பற்ற முடியும். அதற்கான வாய்ப்பு அளிக்கிறோம்’ என்று.
‘நமக்கேன் அந்தக் கவலை?’ என்றேன்.
ஒரு புன்முறுவல் தான் பதில்.
விட்டேனா? குடையத் தொடங்கினேன்.
கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுண்டாச்சா? மூடுமந்திரம் உடைத்துக்கொண்டு வருகிறது. எட்டு பேர் டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். ‘மலை முழுங்கி மஹாதேவனுக்கு’ தான் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம். அப்படியானால், ‘மலை முழுங்கி’ [(+) %] / [(- %)] சின்னங்களுக்கு எதிரே காலியிடம் இட்டு சீல் செய்து, நல்ல பிள்ளையாக, பெட்டியில் போட்டுவிடுவார். குறிப்பிட்ட தேதியன்று, சீல் உடைத்து, மொத்த தொகைகளையும் படிக்கும்போது, ஐயாவின் டெண்டர் இறுதியில் வாசிக்கப்படும்.
வாசிப்பவரோ, கணக்குப் புலியாகிய டிவிஷனல் அக்கவுண்டண்ட். ‘மலை முழுங்கி’யின் டெண்டரை எடுக்கும் வரை, மற்றவர்களின் மொத்த தொகையை மனத்தில் கொண்டு, கிடு கிடு வேகத்தில் கணக்குப் போட்டு, இவரின் டெண்டர் காலணா குறைவாக இருப்பதைப் போல [+%] அல்லது [-%] வாசித்து விடுவார். அடிச்சது லக்கி பிரைஸ். தெரிந்தால் கூட, போட்டியிடுபவர்கள் அமைதியாகக் கலைந்து போய் விடுவார்கள். நாளை இவர்களுக்கு லக்கி பிரைஸ் ஆர்டராகலாம். யார் கண்டது, எந்தப் புற்றில் பதர்? எந்தப் பொந்தில் பணம் என்று?
நான் நிதி ஆலோசகராக பணி புரிந்த மாநிலம் ஒன்றில், பொறுத்திருந்து, ஒரு நாள் இந்த ‘+ %’ பதிவை ஒழிக்க முடிந்தது, கடுமையான எதிர்ப்பு
இருந்தாலும். அவர்களின் கஷ்டம்: ‘எதிர்ப்பை எழுத்தில் பதிவு செய்தால், கேலிக்கு உள்ளாக வேண்டும்’ என்பதால். பேசியும் கூவியும் பார்த்தார்கள்.
ஊஹூம்! ‘சட்’டென்று ‘- %’ பதிவையும் ஒழித்து, கான்ட்ராக்டர்கள் சமூகத்தின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டேன். சில வருடங்களுக்கு பிறகு,
‘மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி…’ என்று செம்பை ஆலாபனை செய்தது போல், இந்த ஓட்டைகள் மறு பிறப்பு எடுத்துவிட்டன என்று கேள்விப்பட்டேன்.
இந்த காண்ட்ராக்ட் சமாச்சாரங்களில் மக்களுக்குத் தெரியாத நுணுக்கங்கள், பரமபத சோபன விளையாட்டுகள், கிருத்திரமங்கள், செப்பிடு வித்தைகள், ஆட்டைத் தூக்கி மாட்டில் போடுவது, மாட்டைத் தூக்காமலே ஆட்டில் போடுவது, பாதாளக் கரண்டிகள், பொம்மலாட்டங்கள், பொய்யும் புனைசுருட்டும், ரசவாதம் எல்லாம் களிநடனம் புரிகின்றன.
ஆடிட்காரன் கண்ணில் பட்டது ஒன்று என்றால், படாதது பத்து. இந்த ஜாபிதாவைப் பொழிப்புரையுடன், ஒரு புத்தகம் போட்டால் எனக்கு
ஜன்ம சாபல்யம் ஆகும். அடுத்ததாக, ‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும்’ செப்பிடு வித்தையா? அல்லது ‘உலோக ரசவாதமா?’ என்பதை பற்றி, நீங்கள்தான் வாக்களிக்க வேண்டும்.
செல்லப்பா wrote on 19 April, 2011, 14:21டெண்டர் என்றாலே இப்பொழுது ஊழல் தான் நினைவிற்கு வருகிறது.
டெண்டர் பற்றிய வேடிக்கையாக உள்ள ஒரு நகைச்சுவை : “அமெரிக்காவில் ஒரு bridge கட்டி முடித்தவுடன் மிஞ்சுவதை அரசாங்க அதிகாரிகள் பங்கு போட்டு கொள்வார்கள். ஆனால் நமது இந்திய நாட்டில் பங்கு போட்டது போக எஞ்சி உள்ள தொகையில் தான் bridge கட்டுவார்கள். அந்த அளவிற்கு ஊழல்.
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
ganesan t.k wrote on 6 May, 2011, 6:40“இந்த காண்ட்ராக்ட் சமாச்சாரங்களில் மக்களுக்குத் தெரியாத நுணுக்கங்கள், பரமபத சோபன விளையாட்டுகள், கிருத்திரமங்கள், செப்பிடு வித்தைகள், ஆட்டைத் தூக்கி மாட்டில் போடுவது, மாட்டைத் தூக்காமலே ஆட்டில் போடுவது, பாதாளக் கரண்டிகள், பொம்மலாட்டங்கள், பொய்யும் புனைசுருட்டும், ரசவாதம் எல்லாம் களிநடனம் புரிகின்றன.”
அண்ணா
சரியாகச் சொன்னீர்கள்
ஆனால் இங்கு யாரும் திருந்தும் ஜென்மங்கள் இல்லை.
“ஆடிட்காரன் கண்ணில் பட்டது ஒன்று என்றால், படாதது பத்து.”
ஆடிட்காரன் கண்ணில் பட்டாலும் அரசியல்வாதிகள் கையில் தான் எல்லாம் உள்ளது.
“%’ பதிவையும் ஒழித்து, கான்ட்ராக்டர்கள் சமூகத்தின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டேன்.”
நேர்மையாக நடப்பவர்கள் கடைசியில் எல்லோருடைய
வயித்தெரிச்சலைத்தான் கொட்டிக்கொள்ள வேண்டும்.
என்ன செய்வது?
- கணேசன் / கோயம்புத்தூர்
No comments:
Post a Comment