|
சில நாட்களுக்கு முன், ஒரு இணைய தள நண்பர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். இரண்டே நிமிடங்களில் இருவருக்கும் தெரிந்தவர்களை பற்றி பேச்சு தொடர்ந்தது. தேசபக்தரான தன்னுடைய தந்தையை பற்றி சொன்னது மட்டுமில்லாமல், பாமர கீர்த்தியை சிலாகித்துப் பேசினார். அவருடைய தந்தையின் வரலாறு இங்கு பதிவாகட்டுமே என்று இசைந்தார். நான் கூறும் 99.9999% ல் திரு கிருஷ்ணன் அவர்களும் இருப்பார். இத்தருணம் பேராசிரியர் குறிப்பிட்ட பெண்ணரசியும் இருப்பார்.
இன்னம்பூரான்
23 09 2011
சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilhindu.com/wp-content/uploads/Bharat.jpg
இன்னம்பூரான்
20 05 2013
*
தேசபக்தர் கிருஷ்ணன் அவர்களின் பாமர கீர்த்தி ~ 1
எனக்கு அப்போது சுமார் பத்து வயதிருக்கலாம். ஆண்டு, தேதி நினை வில்லை. தமிழ் மாநில முதல்வர், பெருந்தலைவர் காமராஜர், சேலத்தில் ஏதோ நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார். என் தந்தை என்னையும் அழைத்துப் போயிருக்கிறார். சிந்தனை, செயல் மட்டுமின்றி, உடல்வாகிலும் உயர்ந்தவர் அல்லவா பெருந்தலைவர்? கூட்டத்தில் ஒரு புறம் நிற்கும் என் தந்தையை அவர் கண்கள் கண்டு கொண்டன. உடனே அருகில் வந்து என் தந்தையிடம், 'என்ன கிருஷ்ணன், நல்லா இருக்கீங்களா?' என முகமன் விசாரித்துப் பின் அவர்கள் ஏதேதோ பேசினார்கள். முதன் முறையாகச் சிறுவனாகிய எனக்கு, ஒரு மாநில முதலமைச்சரே அடையாளம் தெரிந்து கொள்ளும் அளவுக்கு, என் தந்தை, ஏதோ வகையில் சிறந்தவர் என்ற முதல் குறிப்பு, சிறிது பெருமையைத் தந்தது.
கிட்டத்தட்ட அதே ஆண்டில், நாமக்கல்லில் ஏதோ நிகழ்ச்சிக்காகச் செல்லும் போது, அப்போது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஓட்டல் ஊழியர், நாங்கள் அங்கு உணவருந்தச் சென்ற போது, என் தந்தையிடம் காட்டிய பரவ சம் மிகுந்த மரியாதையும், என் தந்தை கை கழுவச் சென்றபோது, என்னிடம், 'உன் அப்பா, தேச விடுதலைக்காக நாமக்கல்லில் ஒரு மறியல் செய்தபோது அவர் உடல் முழுவதும் அடி வாங்கி, இரத்த மயமான உடலோடு சந்தைப் பேட்டையில் விழுந்து கிடந்ததை என் பத்து வயதில் பார்த்த காட்சி என் நினைவில் நிற்கிறது' என்பது போல செய்தி சொன்னார். என் தந்தையின் உடலெங்கும், - குறிப்பாகக் கால்தொடை முதல் கணுக்கால் வரை நிறைந்திருந்த காயத் தழும்புகளின் காரணம் சற்று விளங்கிற்று. ஆனாலும் அவ்வளவு அடி வாங்கிட வேண்டிய தேவை என்ன என்பது சற்று குழப்பமாகத்தான் இருந்தது.
நான் உயர்நிலைப் பள்ளி மாணவனான போது, பள்ளிக்குச் சம்பளம் செலுத்த வேண்டும். எனக்கு மாதச் சம்பளம் ரூபாய் நான்கு; என் அக்காளுக்கு, ரூபாய் ஐந்தேகால்; என் அண்ணனுக்கு ரூபாய் ஏழரை; வீட்டு வாடகை ரூபாய் இருபது. என் வீட்டில் விருந்தினர் வராத நாளே கிடையாது. மாதச் சம்பளம் கட்டப் பணம் கேட்கும் போதெல்லாம், அந்தப் பணத்தைத் தர என் அன்னை மிகவும் சிரமப்படுகிறார் என்பதை உணர முடிந்தது. பள்ளியில் 92 MER Scholarship என்று பெற்றோரின் மாதச் சம்பள அடிப்படையில் கற்பிப்புக் கட்டண விலக்கிற்கான படிவம் பெற்று, என் தந்தையிடம் தந்தபோது, அவர் அதை முழுவதும் படித்துப் பார்த்து, ரூபாய் நூறுக்குக் குறைவான மாத ஊதியம் பெரும் பெற்றோருக்கு மட்டுமே இது செல்லுமென்றும், தன் மாதச் சம்பளம் ரூபாய் நூற்று ஒன்று என்றும் சொல்லி ஒப்பமிட மறுத்தார். படிவத்தைப் பள்ளியில் நிறைவு செய்யாமலேயே திருப்பித் தந்தபோது பள்ளி ரைட்டர், என்னைத் தெரிந்து கொண்டு தலைமை ஆசிரியரிடம் அறிமுகப்படுத்தினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு வி.சுப்பிரமணியம், சேலம் பிரமுகர் ஸ்ரீ அப்பாவு செட்டியார் அவர்களைத் தொடர்பு கொண்டு ஏதோ எண்டோமெண்ட் தொகை பெற்று அதன் மூலம் என் பள்ளிக் கட்டணம் கட்டாமலிருக்கும் சலுகை பெற்றுத் தந்தார். பொருளாதார ரீதியில் குடும்பத்தில் வறுமையே நிலவியதாக நான் நினைத்தேன். என் தந்தை ஏன் அந்த 92 MER Scholarship Applicationல் கையொப்பமிடவில்லை என்பது அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னை விடப் பொருளாதார அடுக்கில் மேம்பட்ட பல மாண வர்களும் 92 MER Concession பெற்றதாக நினைவு.
(தொடரும்)
No comments:
Post a Comment