தெருக்கூத்து -1
‘நவீன சகுனி’
அண்ணா சாலை அண்ணா சாலை எனப்படும் மெளண்ட் ரோட்டிலிருக்கும் ஆனந்த சினிமா தியேட்டருக்கும் ரங்கோன் தெருவுக்கும் மத்தியிலே, ஹைதர் காலத்திலிருந்து அருள்பாலிக்கும் மன்னார் சாமி கோயில் கொடியேற்றம். திருவிழா. பஜனை, சத்சங்கம், தெருக்கூத்து எல்லாம் விமரிசையாக நடக்கப்போகிறபடியால்:
தண்டோரா:
டும்! டும்! டும்! சாமியோவ்! அம்மாமார்களே! ஐயாமார்களே! சின்னப்பசங்களே! கிழங்கட்டைகளே! நம்ம பேட்டை மன்னார் சாமி கோயிலின் அறங்காவலர் குழு, கோயிலில் கொடியேற்றம், திருவிழா. பஜனை, சத்சங்கம், தெருக்கூத்து எல்லாம் விமரிசையாக நடக்கணும்னு ஏகோபித்துத் தீர்மானம் போட்றுக்காங்க. கொடியேற்றம் இன்று காலை 7 மணிக்கு ஆயிடுத்துங்க. ராத்திரி 8 மணி அளவில், மின்வெட்டுக்குட்பட்டு, மன்னார்சாமி யானை வாஹனத்தில் ஊர்வலம் வரும்போது, ‘சாபவிமோசனம்’ பிரணதார்த்திஹரன் ஐயா கோஷ்டி பஜனை பண்ணுவாங்க. சத்சங்கம் ரகசியமாகக்கூடுதுங்க. இப்பெல்லாம், சண்டை, சச்சரவுக்குனு ஆட்கள் காத்திருக்காங்க இல்லெ. அதான். சத்லீக் ஆனா சொல்றேங்க. டும்! டும்! டும்!
எது எப்படியோ? தெருக்கூத்து ஜோரா இருக்குங்க. கடம்பூர் கந்தசாமி பாய்ஸ் & கேர்ல்ஸ் டிராமா கம்பெனி ஆட்றாங்க சாமி. புராணம், ஆன்மீகம், சரித்திரம், கட்டுக்கதை, நாட்டுப்பாடல், நாட்டு நடப்பு எல்லாம் கலந்த மிக்சருங்க. எல்லாரும் வரணுங்க. நோ டிக்கெட். எல்லாருக்கும் ஃப்ரீ பாஸ் உண்டுங்க. தர்மகர்த்தா ஐயா கொடுப்பாருங்க. டும்! டும்! டும்!
*
நோட்டீசு:
அண்ணா சாலை வருவதற்கு முன்னால் மவுண்டு ரோடு. அதற்கும் முன்னால், கல் தோன்றி கான்கிரீட் தோன்றுவதற்கு முன்னால், மண்ணையெல்லாம் இந்த அரசியல்-கம்- காண்டிராக்டர்கள் தோண்டி காசாக்கி தின்பதற்கு முன்னால், சுயம்புவாக தோன்றிய மன்னார் சாமி கோயிலில் கொடியேற்றம். திருவிழா. பஜனை, சத்சங்கம், தெருக்கூத்து எல்லாம் விமரிசையாக நடக்கப்போகிறபடியால், அனைவரும் வருக. இளைப்பாறுக. பெருமானின் அருளேற்றம் உமக்குக் கிடைக்கட்டும்.
விளம்பரத்துக்கு அணுகுக. தொலை பேசி: 23867438; கைபேசி: 9876034567;
நன்கொடை: தொலை பேசி: 23687438; கைபேசி: 9876043567;
உபயம் & விளம்பரம்: தொலை பேசி: 23867348; கைபேசி: 9876034657.
புஷ்ப காண்டிராக்ட், பந்தல் காண்டிராக்ட் வகையறா: நேரில் வரவும்.
டிஜிடல் பேனர்:
அருள்மிகு தர்மாம்பாள் உடனுறையும்
அருள்மிகு மன்னார் சாமியின் பேரருள் திகழ,
தர்மகர்த்தா வேணுகோபால் நாயுடுகாரு அவர்களின் ஆர்வமும் திகழ,
அறங்காவலர் குழுவின் பக்தி பரவசம் திகழ.
~ மன்னார்சாமி பக்தர் சத்சபை
-.-
தெருக்கூத்து:
கரீக்டா நடு நிசியில், பலத்த மின்வெட்டு இருளை பரப்ப, நான்கு கேஸ் லைட்டுகள் தீவகமாக, அங்குமிங்கும் ஒளி பரப்ப, கோயில் வாசல் சதுக்கத்தில், கடம்பூர் கந்தசாமி பாய்ஸ் & கேர்ல்ஸ் டிராமா கம்பெனி ப்ரோப்ரைடரிக்ஸ் (முதலாளி அம்மா & கந்தசாமி பேத்தி) மனோன்மணி அம்மாள் செய்த பிரகடனம்:
பொது மக்களுக்கு வந்தனம் ஐயா. போனஸாக தர்மாம்பாளையும், மன்னார் சாமியையும் கும்பிட்டுக்கிறேன். ( சலசலப்பு; மென்மையான சிரிப்பு). எங்க டிராமா கம்பெனியின் முதல் ஆட்டமே இந்த கோயிலில் தான் நூறு வருஷம் முன்னாலே. (கை தட்டல்). நாங்க உங்களை மாதிரி படிச்ச மேதாவி இல்லை. ( ‘உச்’ கொட்டறார்கள்.) ஏதோ நாட்டு நடப்பை பேசி வவுத்தை களுவிக்றோம். (‘த்சொ’) ஆனால், பரம்பரையை விட்டுக்கொடுக்கமாட்டோம். ( யாரோ ஒத்தர் மட்டும் ‘ஹிப்! ஹிப் ரே!’ என்று கத்த, இந்த அம்மணி முறைக்க, அவர் பொட்டிப்பாம்பாக அடங்கினார்.) நான் சைதாப்பேட்டை பகுத்தறிவு கழகத்திலும் அச்சாரம் வாங்கி இருப்பதால், விலகிச்செல்ல அனுமதி கொடுங்கள். அதி மேதாவி கோமாளியார் மேடை ஏறுவார்.
*
மனோன்மணி: டேய்! கசுமாலம்! கண்ணாயிரம். வாடா மேடைக்கு. நான் சுருக்கல போவணும். இப்பவே பொழுது விடிஞ்சு போயிடும் போல இருக்கு. மணி மூணுடா.
கண்ணாயிரமும் கனஜோரா ,கனகசபையில் ஆடலரசன் ஆடிய நேர்த்தியை கண் முன் வைத்து, ‘கான மயிலாட‘ அதை தானாக பாவித்த வான்கோழியாய், கோமாளி வேஷத்தை சமாளித்துக்கொண்டு, அட்டகாசமாக மேடை ஏறி சொல்கிறார்; கேளும்.
“ தர்மகர்த்தா ஐயாவே! அறங்காவலர் குழு மெம்பர்களே!,என் மதிப்புக்குரிய மகாஜனங்களே, மறந்துட்டேனே! தர்மாம்பாளையும், மன்னார் சாமி தெய்வங்களே! (இளிக்கிறான்; எல்லாரும் கை தட்டல். தெய்வம்னா அத்தனை இளப்பம்!). அன்று பக்த குசேலாவை மெச்சினோம். இன்று நவீன சகுனியை வரவேற்கிறோம். அன்று பொழுது போக, பாண்டவர்களும், கெளரவர்களும் பகடை உருட்டினார்கள். இன்று நவீன சகுனி துட்டுருட்ட, பந்துருட்டறாரு. அபிமன்யூ வீரன் ஒத்துக்கிறேன். இன்று கண்ட கண்ட களுதைகளையெல்லாம் கில்லிதண்டா வீரர்கள் என்கிறார்கள். (பாடுகிறார்.)
“இது தகுமோ, ஐயா?
இது பந்தோ இல்லை சூதோ?
ஸ்பாட் ஃபிக்ஸ் செய்யலாமோ?
ஸ்பேட் ராசாவோ இல்லே நம்ம ஜனங்க ஃபூல்ஸோ!
என் உள்ளம் உருகதையா”
தன்னுடைய பாடலின் அருமையை மெச்சி, அவரே எக்காளமிட்டுச் சிரிக்க, விடலை பசங்க விசில் அடிச்சாங்கோ. இன்று டி.எம்.எஸ். மறைந்ததால், ஈற்றடி எல்லார் மனதையும் உருக்கியது. கொஞ்சம் கலவரம். அதற்குள் நவீன சகுனி நல்லச்சாமி மகாதேவன் எஸ்கேப்பு.
(முடிஞ்சா நாளை இரவு எட்டு மணி அளவில்; அடாது மின் வெட்டினாலும், விடாது ஆட்டம் நடை பெறும்.)
இன்னம்பூரான்
25 05 2013
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: http://iniyatamil.striveblue.com/tamilnews/wp-content/uploads/2012/05/Karthi-in-Saguni.jpg
No comments:
Post a Comment