தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை! [2]
அப்படி இப்படி ஒரு மாதம் ஓடிவிட்டது, ரங்கனார் ஒரு யூ-டர்ன் அடித்து
எட்வெர்ட் சையது பக்கம் திரும்பி ரொம்ப பிசியாக இருப்பதால்.
‘தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற இழையும் காணோம்! சரி.
ஸ்வாமி விவேகானந்தர் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்த போது, ஒரு
வரவேற்புக்குழு காத்துக்கொண்டிருந்தது. 32 அங்கத்தினர்கள் கொண்ட
அக்குழுவின் தலைவர்: மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர்
அவர்கள். சமீபத்தில் சாரதா ஶ்ரீசக்ரம்மாவை பற்றி எழுதிய இடுகையில்
குறிப்பிடப்பட்ட டாக்டர். எம்.சி.நஞ்சுண்ட ராவ் அவர்களும், ரங்கனார் ஒரு
இடுகையில் குறிப்பிட்ட யோகி. எஸ். பார்த்தசாரதி ஐயங்காரும், அக்குழுவில்
உள்ளனர். ஸ்வாமிஜியை சென்னைக்கு முதலில் கொணர்ந்த அக்கவுண்டண்ட் ஜெனெரல்
மன்மதநாத் பட்டாச்சார்யாவையும் காண்கிறோம். இது நிற்க.
மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் யார் என்று
விசாரிப்போம். சென்னை வந்த காந்திஜீ இரண்டு சுப்ரமண்ய ஐயர்களை
பணிவன்புடன் தரிசித்தார். ஒருவர் இந்தியாவிலேயே பெண்ணியத்தை போற்றிய
ஜீ.எஸ். மற்றொருவர், இவர். 1869ல் ஹைக்கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து
கொண்ட இந்த மதுரைக்காரின் தொண்டுகள், பல துறைகளில் கணக்கில் அடங்கா.
நீதியரசர், ஓய்வுக்கு பின், அன்னி பெசண்டின் சுய உரிமை இயக்கத்தின் கெளரவ
தலைவர். சுதந்திரம் நாடிய தேசபக்தன். ஞானி. ஆங்கிலேய அரசு, இவரை மதித்து
விருதுகள் பல வழங்கின. தேசபக்தர்களும், சனாதனிகளும் இவரை தொழுதனர்
என்றால் மிகையாகாது. இந்திய திரு நாட்டின் தலை விதியை நிர்ணயித்த
மஹான்களில் ஒருவர். சுத்தமாக அவரை மறந்து விட்டது, தமிழகம்.
மதுரை முனிசிபல் கமிஷனர், மீனாக்ஷியம்மன் கோயில் அறங்காவலர், அரசு
வக்கீல் [1888] சட்டசபை உறுப்பினர் [1884] சென்னை மாகாணத்தில் முதல்
இந்திய முதன்மை ஹைக்கோர்ட் ஜட்ஜ் [1899, 1903 and 1906] அதற்கு முன்,
தொடக்கத்திற்கு முன்பே, இந்திய நேஷனல் காங்கிரஸுக்கு வித்திட்டவர்.
திலகருடனும், காந்திஜியுடனும் இவரை ஒப்பிட்டு அக்காலமே பேசப்பட்டது.
இந்திய வரலாற்றிலேயே, ஆங்கிலேய அரசின் மேல் தனக்கு உள்ள செல்வாக்கை,
ஆக்ஷேபணைகளை புறக்கணித்து, நாட்டுப்பற்றுக்கு வித்திட்ட சான்றோன், இவர்.
அரசு, இவர் சொல்லுக்கு மதிப்பு வைத்தது யாவரும் அறிந்ததே. இவரின்
மஹாத்மியத்தின் ரகசியம், வெறும் தேசபக்தி மட்டுமல்ல. பகவத் கீதை வழி
நடந்த வாழ்க்கை நெறி. வேதாந்தி என்று தான் அவர் அறியப்பட்டார். ‘’
ஸ்வாமிஜியின் போதனையார் ஈர்க்கப்பட்டவர் இவர்” என்று ஒரு குறிப்பு
கூறுகிறது.
இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகளை கூற விரும்புகிறேன்.
ஆனால், என்னுடைய ஆவணங்களே எனக்கு கிடைக்காத நிலையில் அல்லல் படுகிறேன்.
பொறுத்தாள்க.
(தொடரும்)
இன்னம்பூரான்
05 12 2010
No comments:
Post a Comment