எப்படி ஆடினரோ! -1
இது மீனா முத்து ஸ்பெஷல். அவர் கடவுள் துணை நாடியதற்கு நன்றி நவிலல் எனலாம். எத்தனை தூரம் ஓடினாலும், அவ்வப்போது ஒரு ஆட்டம் போடுவதும் நாடக மரபு. இக்காலத்து தமிழ் சினிமாவானால், ஒரு மரத்தையே பூந்தோட்டமாகப் பாவிகம் செய்து, சுற்றி ஓடுவார்கள், ஆடுவார்கள், தற்காலிகத் தலைவனும், தலைவியும். வேறு யாரோ பாடுவார்கள், சினிமா மொழியில்; தமிழ் என்பார்கள். இது நிற்க.
‘தில்லானா மோஹனாம்பாள்’ பார்த்த ஞாபகம் வருதே! எல்லாமே ஸூபர், அந்த திரைப்படத்தில். மங்காத நினவலைகள். கிட்டத்தட்ட உடன்போக்கு தான், பல இன்னல்களுக்கு நடுவில். நாகரீகமாக, அவ்வப்போது, ‘மறைந்து இருந்து பார்ப்பதின் மர்மம் என்ன?’ என்று பத்மினி குறிப்பால் உணர்த்தியும், கண்ணசைவில் சிவாஜி கணேசன் தலைவியை அலக்கழித்தும், ‘ஸடன்’ பாங்கி ஜில்ஜில் ரமாமணி கலக்கியும்! அடடா! பிரமாதம். அந்தக்காலத்தில், பேபி/குமாரி/செல்வி கமலா சிறிது காலம் தான் கொடி கட்டி, பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம் தன் பெயர் சூடி, ஆதிக்கம் செலுத்தினார். பத்மினியும், வைஜயந்திமாலாவும், ரிலே ரேஸில், கொடியை, மாறி மாறி பிடித்தனர். லலிதா, ராகினி சுமார் தான். யாமினி கிருஷ்ணமூர்த்தி ரொம்ப ஜோரா குச்சுப்பிடி ஆடுவார். ஒரே குறை. அவரின் தந்தை இடை விடாமல் பேசி, பேசி, டார்ச்சர் பண்ணுவார். என்னைக்கேட்டா, பத்மினியின் அடவும், முத்திரையும், அரை மண்டியும், நிகரற்ற பரதநாட்டியம். அவள் ஆட.
இப்படியாக, இந்த தரணி உருண்டு பிரண்டு வரும் போது, ஒரு நாள் ஒரு திவ்ய தரிசனம் கிட்டியது. பாலசரஸ்வதி அவர்கள் ( வயதாகி விட்டது) அபிநயம் பிடித்தார். ஒரு காட்சி: ‘கிருஷ்ணா! நீ பேகனே பாரோ’. பாம்பு பிடாரன் மகுடி ஊதியபோது போல, சபையே மயங்கிக் கிடந்தது. சொன்னா நம்பமாட்டீங்க. நாங்கள் எல்லாரும் இந்த மாயக்கூத்தனை விழுந்து விழுந்து தேடினோம்.
“...துன்னிய பிணைமலர்க்கையினர் ஒரு பால்/ தொழுகையர் அழுகையர் துவன்கையர் ஒரு பால்... (திருவாசகம்)
என்று துவண்டு கிடந்தோம். கிருஷ்ணா! வாடா!
ஒரிஸ்ஸாவில் இருந்தபோது, சஞ்சுக்தா பாணிக்கிரஹியின் நட்பு கிடைத்தது. அற்புதமான ஒடிஸி நடனம். அவருடைய கணவர் ரகுநாத் பாணிக்கிரஹி மாதிரி பதம் பாட ஆள் பிறக்கவேண்டும். எங்கள் கொடுப்பினை என்னவெனின், அவருடைய ஆசான் குரு. கேளுச்சரண் மஹாபாத்ராவின் நடனத்தை ஒரு பிரத்யேக நிகழ்வில் கண்டு வியக்க முடிந்தது. ஒரு நாள் பிருகு மஹராஜின் கதக் நடனம் பார்த்து மகிழ்ந்தோம். சுத்தோ சுத்தோ என்று சுற்றினார். பாயிண்ட் என்னவென்றால், ஆண் பெண் எல்லாரையும் கவர்ந்து விட்டார்.
தற்கால கதக் சிரோன்மணி ஷோவனா நாராயண் என்னுடன் சக உத்யோகஸ்தர். எங்கள் துறைக்கே பெருமிதம். அலஹாபாத்தில் வந்து தன் நாட்டியத்திற்கு அழைத்தார். கவின் நிறைந்ததாக அமைத்திருந்தது, அவரின் பெளத்த நாட்டிய நாடகம். அவரின் சிறுமகன் (மூன்று வயதிருக்கும்) குழந்தை ராகுல் ஆக நடித்து, அற்புதமாக நடனம் ஆடினான். எங்கோ ஆரம்பித்து எங்கோ போகிறது? சொல்ல வந்தது, ருக்மணி தேவி அருண்டேல் அவர்களையும், கமலா தேவி சட்டோபாத்யாயவையும் சென்னை வந்த போது சந்தித்தது, பற்றி. கமலா தேவி சரோஜினி நாயுடுவின்/ஹரீந்தரனாத் சட்டோபாத்யாவின் சஹோதரி. இருவரும் வெகு நேரம் பேசினர். அதெற்கென்ன இப்போ? அப்போது தெரியாது, என் பேத்திக்கு ருக்மணி என்று (பாட்டிக்கு பாட்டி பேர் ஆச்சு. கலாக்ஷேத்ராவின் ஸ்தாபகர் பேரும் ஆச்சு) பெயர் வைப்போம் என்று. அற்புதமாக பரதநாட்டியம் ஆடுகிறாள், அம்மாவைப்போல. ஆடுக. ஆடுக.
சங்கக்காலத்தை பற்றி கேட்டால், பீடிகை பலமாக இருக்கிறதே என்றா கேட்கிறீர்கள்? அக்காலத்தில் நாட்டியம் மங்கலம் நிறைந்து வாழ்ந்தது. ஆடல் இலக்கணம் காண வேண்டுமா?
“...its baroque splendour and by the charm and magic of its lyrical parts belong to the epic masterpieces of the world...”
Kamil Zvelabil (1956) Tamil Contribution to World Literature.
(தொடரும்)
No comments:
Post a Comment