கீழே உள்ள கட்டுரை இன்றைய ஜூனியர் விகடனில். காப்புரிமை அவர்களதே. இங்கு திவாஜியின் 'ப்ரச்னத்திற்கு' ஒத்துப்போவதால், நன்றியுடன் ஒட்டப்படுகிறது. இன்னம்பூரான்-----
'பகீர்' தணிக்கை புகார்... |
|
துணை முதல்வரான மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக உள்ளாட்சித் துறை ஜோராக கோலோச்சிக் கொண்டிருப்பதாக தமிழக அரசு, பெரிய பட்டியலை நீட்டுகிறது. ஆனால், உள்ளாட்சித் துறையில் ஆண்டுதோறும் தணிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்கும் இந்திய தணிக்கைத் துறை, 2007-08-ம் ஆண்டுக்கான அறிக்கையை பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ந்து ஏகப்பட்ட குளறுபடிகளைக் கண்டறிந்து பட்டியலிட்டுள்ளது!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை கணக்காய்வுத் தலைவரான சங்கர் நாராயண் நம்மிடம், ''ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான அறிக்கையை இந்திய கணக்கு தணிக்கைத் துறை
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும். இப்போது 2007-08-ம் ஆண்டுக்கான அறிக்கையையும் அது அளித்திருக்கிறது. 2007-08-ம் ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த வருவாய் வசூல் ரூ.1,368 கோடியாகும். இதற்கு முந்தைய ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 12-வது நிதி ஆணைய மானியங்கள் இரண்டு முதல் 316 நாட்கள் வரை தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு வட்டி செலுத்தவில்லை.
ஜனவரி 2004 முதல் மார்ச் 2008 வரையிலானகாலகட் டத்தில், 196 காற்றாலை களிடமிருந்து சொத்துவரி, உரிமக்கட்டணம் மற்றும் அரையாண்டு கட்டணம் ஆகியவற்றை பனங்குடி பேரூராட்சி வசூலிக்கத் தவறியதால் ரூ.3.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 53 பேரூராட்சிகளில் 99.17 லட்சத்துக்கான குடிநீர் வரி விதிக்கவில்லை. நான்கு பேரூராட்சிகளில் போதிய நிதி இருந்தும், உலக வங்கி மற்றும் வேறொரு நிதி நிறுவனத்திடமிருந்து பெற்ற கடனை முன்கூட்டியே தீர்வு செய்யாததால்ரூ.15.75 லட்சம் தவிர்க்கக்கூடிய வட்டியைச் செலுத்தியுள்ளன. பயனாளர்களை அடையாளம் காணாததால், ஸ்வர்ண ஜெயந்தி ஷஹாரி ரோஜ்கர் யோஜனா மற்றும் ஊரக ஏழை மக்களின் உறுதியற்ற வீடுகளை தரமுயர்த்துதல் தொடர்பான ரூ.1.20 கோடி நிதியை பேரூராட்சிகள் பயன்படுத்தத் தவறிவிட்டன.
ஐந்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், மாதாந்திரம் சொத்து வரி வசூலை கண் காணிக்கவும், மேம்படுத்தவும் சந்திப்புக் கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். மேலும், வரி வசூல் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட நகராட்சி நிர்வாக ஆணையத்தின் ஏழு அதிகாரிகள் மண்டல அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் வசூலிக்கப்பட வேண்டிய சொத்துவரியின் நிலுவை 2005-06-ம் ஆண்டில் ரூ. 221.87 கோடியாகவும், 2006- 07-ம் ஆண்டில் ரூ.217.21 கோடியாக வும், 2007-08-ம் ஆண்டில் ரூ.223.97 கோடியாகவும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
ஒவ்வொரு லட்சம் மக்கள் தொகைக்கும் ஒரு நகர்ப்புற தொடக்க நல்வாழ்வு மையம் வழங்க சென்னை மாநகராட்சி தவறிவிட்டது. மலேரியாவுக்கான துடிப்பான கண்காணிப்பு இருக்க வில்லை. அந்த நோயை கண்டறியவும், மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கவும், சென்னை மாநகராட்சி 12 குவான்டிடேடிவ் பஃபி கோட் அனலைசர் கருவியை ரூ.56.65 லட்சத்துக்கு வாங்கியது. இதன்பிறகு மலேரியா நோயை கண்டறிய தேவையான நுண்ணிய இழை போன்ற 10 ஆயிரம் குழாயை ரூ.5.90 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது. 2004-05, 06-ம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட குழாய்கள் முழுவதும் பெறப்பட்ட ஒரு மாதத்துக்குள் பயன்படுத்தப்பட்டன. எனவே, குழாய்கள் இல்லாததால், 56 லட்சத்துக்கு வாங்கப்பட்ட மருத்துவக் கருவிகள் வீணாகக் கிடக்கிறது.
எரித்ரோமைசின், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ, ஆம்பிக்ளாக்ஸ், பென்சிலின் போன்ற இன்றியமையாத மருந்துகள் குறைவான கொள்முதலால் மக்களுக்கு கிடைக்கவில்லை. பள்ளி நல்வாழ்வு திட்டங்கள் திறம்பட நடைமுறைப் படுத்தப் படவில்லை. கழிவு பதப்படுத்துதல் மற்றும் தீர்வு செய்யும் வசதிகள், டிசம்பர் 2003-க்குள் அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தபோதும், இன்னும் அமைக்கப்படவில்லை. மாநகராட்சி மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவ அலுவலர்கள் இல்லை.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 72 பிரிவுகளில், 36-லும், மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 72 பிரிவுகளில் 19-ல் மட்டுமே வீடு வீடாகச் சென்று கழிவு சேகரித்தல் அமைக்கப்பட் டிருந்தது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் உண்டாக் கப்பட்ட கழிவுகளில் 9 சதவிகிதம் மட்டுமே பிரித் தெடுக்கப்பட்டிருந்தது. மதுரை மாநகராட்சியில் பிரித்தெடுத்தல் செய்யப்படவே இல்லை. கோயம்புத்தூர் மாநகராட்சியில் கழிவு பதனிடும் வசதி இல்லாததால் பிரித்தெடுக்கப்பட்ட கழிவுகளும் பிற கழிவுகளுடன் கலக்கப்பட்டது. நவீன இறைச்சிக்கூடங்களை அமைப்பதில் மாநகராட்சிகள் பின்தங்கியுள்ளன. (சென்னை உள்பட) மூன்று மாநகராட்சிகளில் உள்ள இறைச்சிக்கூடங்களின் எண்ணிக்கை போதாமலிருந்தது. இவற்றையெல்லாம் அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெரிவித்திருந்தோம். பதில் வரவில்லை. சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிகளில், புரமோட்டர்களால் திறந்தவெளி ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்கப்பட்ட 32 ஆயிரத்து 69 சதுர மீட்டர் நிலம் பூங்காக்களாக மேம்படுத்தப்படவில்லை.
குளச்சல், மயிலாடுதுறை, நெல்லிக்குப்பம், பெரியகுளம், புதுக்கோட்டை நகராட்சிகள் குடிநீர் வழங்கல் இணைப்புக்கான வைப்பீட்டுத் தொகை யை வசூலிக்கவும், குளச்சல் நகராட்சி உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை அமல்படுத்தவும் தவறியதாலும் மொத்தம் ரூ.3.67 கோடி இழப்புகள் ஏற்பட்டுள்ளது. போதுமான தண்ணீர் கிடைக்கப்பெற்றும், புதிய குடிநீர் இணைப்புகளை வழங்கத் தவறியதால் பல்லடம் நகராட்சிக்கு 1.89 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அரசுக்கு 2008-ம் ஆண்டு டிசம்பரில் தெரிவிக்கப்பட்டது, ஆனால், அரசு பதில் கூறவில்லை. சிவகாசி நகராட்சி வணிக வளாகம் கட்டுவதற்கு முன் அதற்கான சரியான இடத்தை தேர்வு செய்யாததால் ரூ.74.57 லட்சம் செயலற்ற முதலீடாக முடிந்தது. தேவையை மதிப்பீடு செய்யாமல், அரூர் பேரூராட்சியால் கடைகள் கட்டப்பட்டதில் ரூ.17.07 லட்சம் செயலற்ற முதலீட்டில் முடிந்தது.
கம்ப்யூட்டர்கள் வாங்குவதற்காக மத்திய அரசு எல்காட் நிறுவனத்துக்கு ரூ.60.32 கோடி வழங்கியது. ஆனால், இதில் 51.64 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு நவம்பர் 2007-ல் திரும்ப அளிக்கப்பட்டது. இந்த பணம் வங்கி சேமிப்பு கணக்கில் வைக்கப்பட்டது. இதை பயன்படுத்தவோ, மத்திய அரசுக்கு திருப்பியளிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிக்கு 80 லட்சம் வழங்கப்படும். ஆனால், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆறு மாவட்டங்களில் (கோவை, ஈரோடு, மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி) இலவச தொலைக்காட்சி பெட்டி, காஸ் அடுப்பு வழங்கியது, கடன் வழங்கியது போன்ற தகுதியற்ற இனங்களைப் பொருத்தி 120.98 கோடி ரூபாய் அளவு சாதனையாகக் காட்டப்பட்டது.
2006-08 கால கட்டத்தில் தகவல், கல்வி மற்றும் செய்தித் தொடர்பு ஆகிய பிரிவுகளின் கீழ் ரூ.38.22 லட்சம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ரூ.23.94 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஐந்து சமுதாயக் கூடங்கள் மின் இணைப்பு வழங்கப்படாததால் பயன்படுத்தப்படாமலிருந்தது' என்று விளக்கமாக புகார் பட்டியலை முடித்தார், சங்கர் நாராயண்!
இதற்கெல்லாம் காரசாரமாக ரியாக்ஷன் கொடுக்க ஆளுங்கட்சி தயாராகிறதாம்...
|
|
|
|
No comments:
Post a Comment