அன்றொரு நாள்: ஏப்ரல் 28
தாக்ஷிணாத்ய கலாநிதி
இன்று மஹாமஹோபாத்யாய தக்க்ஷிணகலாநிதி ‘தமிழ்த்தாத்தா’ முனைவர். உத்தமதானபுரம் வேங்கடசுப்பைய்யர் சாமிநாதையர் அவர்களின் அஞ்சலி தினம். தமிழுக்கு தென்பு ஊட்டிய அவர் ஏப்ரல் 28, 1942 அன்று தன்னுடைய 87 வது வயதில் சிவலோல ப்ராப்தியடைந்தார். இன்று அவரை பற்றி பல விஷயங்களை மீண்டுமொருமுறை கற்றுணர்ந்த பின், அவரை பற்றி அசோகமித்திரன் அவர்கள் எழுதிய பூர்ணமான கட்டுரையை, அவருக்கு நன்றி நவின்று, காப்புரிமை கட்டியம் கூறி, உசாத்துணை அளித்து, இணைப்பது தான் சாலத்தகும் என முடிபு செய்து, அவ்வாறே செய்கிறேன். உங்கள் ஆதரவு தொடரட்டும்,
இன்னம்பூரான்
27 04 2012
***
மாணாக்கனும் ஆசானும்
அசோகமித்திரன்
உ.வே. சாமிநாதய்யர் ஒரு பண்டிதர். ஆரம்ப முதலே தமிழ்ப் பெரியோரிடம் முறையாக முழு நேர மாணாக்கனாகக் கல்வி கற்றவர். அவருக்குத் தமிழைத் தவிர வேறெந்த மொழியும் தெரிந்திருக்க அவர் வாய்ப்பளிக்கவில்லை என்றே கூற வேண்டும்.
காலத்தால் குறைபட்ட, சிதையுண்ட பண்டைய தமிழ் இலக்கியப் பிரதிகள் அன்று அவரால் முடிந்த அளவு பூரணமாகவும் பொருள் பொதிந்ததாகவும் படிப்போர் ஓரளவு எளிதாக அணுகக்கூடிய முறையிலும் பதம் பிரித்தும் பதிப்பிக்கும் பணியே அவருக்கு முழு மனநிறைவு அளித்திருக்கிறது. அவருக்கிருந்த சிறு நண்பர் குழாமையும் அவருடைய பணியை ஒட்டியே அமைத்துக்கொண்டார். தமிழ் இலக்கிய ஆய்விலிருந்து வேறெந்த ஈடுபாடும் தன்னைப் பிரிப்பதற்கு அவர் இடம் தரவில்லை.
சாமிநாதய்யர் தன் வாழ்வின் இரண்டாம் பகுதியில்தான் சுயமாகப் படைக்கத் தொடங்குகிறார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு அவருக்கு ஒரு திருப்புமுனை. உண்மையில் அவர் சுயமாக எழுதிய சிறிய மற்றும் பெரிய உரைநடைப் படைப்புகள், அவர் சொல் சொல்லாகத் தேடி ஆராய்ந்து பொருள் அறிந்து பதிப்பித்த பண்டைய நூல்களைவிட ஏராளமானோர் அணுகி அனுபவிக்க வாய்ப்பளித்தன. இரு பத்திரிகைகள் குறிப்பாக இத்துறையில் பங்கேற்றன. ஒன்று கலைமகள். இன்னொன்று ஆனந்த விகடன். கலைமகள் அவரை ஆரம்ப முதலே சிறப்பாசிரியராகப் போற்றிப் பாராட்டியது. தீவிர அறிவாளிகள், விஞ்ஞானிகள் அப்பத்திரிகையின் ஆலோசகர்களாக இருந்ததால் சாமிநாதய்யரின் பங்கு வியப்பளிக்கக்கூடியதல்ல. ஆனால் ஆனந்த விகடனின் இலக்கும் தன்மையும் கலைமகளிலிருந்து மாறுபட்டது. கலைமகள் மாத ஏடு. அது பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த அனைத்துமே நிதானமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டியவை. ஆனால் ஆனந்த விகடன் வார இதழ் பரபரப்பு, அன்றாடக் கவலைகள், அக்கறைகள், பிரச்சினைகளையே பிரதானமாகக் கொண்டது. பரவலான வாசகர்களை எட்டுவது அதன் முக்கிய இலக்காதலால் அது கொண்டிருக்கும் கதை, கட்டுரைகள் எளிமைப்படுத்தப்பட்டவை. ஆனால் அத்தகைய இதழும் சாமிநாதய்யரைப் பங்கு கொள்ளவைத்தது. அவரும் எத்தரப்பினரும் மனத்தாங்கல் அடையாத விதத்திலும் அதே நேரத்தில் மொழி, பொருள் இரண்டும் உயர்ந்த மதிப்பீடுகளையே சார்ந்ததாகவும் இயங்கினார். இதை எழுதினோமே, இப்படி எழுதினோமே என்று அவர் சிறிதும் மனக் கிலேசம் அடைந்திருக்க வழியில்லை.
அய்யரவர்களுக்கு இரு ஆசான்கள். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இரண்டாவது, வித்துவான் தியாகராசச் செட்டியார். செட்டியார் அவர்கள்தான் அய்யரவர்களைக் கல்லூரியாசிரியராகப் பணியாற்றப் பாதையும் ஊக்கமும் தந்தவர்.
தியாகராசச் செட்டியாரே திருமணத்திற்குப்பின் கல்விக்கூடங்களில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரிசிரபுரத்தில் பட்டாளம் பகுதி என்று இன்றும் உள்ளது. திருச்சிக் கோட்டை அப்பகுதியைச் சேர்ந்ததுதான். பட்டாளத்தாருக்கு உள்ளூர் மொழிப் பரிச்சயம் ஏற்படத் தமிழ் கற்பிக்கப்பட்டது. தியாகராசச் செட்டியார் ஏற்றுக்கொண்ட மாதச் சம்பள ஆசிரியப் பணி அந்தப் பள்ளியில்தான். சம்பளம் மாதம் பத்து ரூபாய்.
சாமிநாதய்யர், தியாகராசச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறு சிறு கோர்வையான கட்டுரைகளால் கலைமகள் மாத இதழில் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் எந்த இடத்திலும் தொய்வு தோன்றாதபடியும் கூறியதையே திரும்பக் கூறும் தவறு இல்லாதிருத்தலும் வியப்பளிக்கிறது. சாமிநாதய்யர் தன் மனத்தில் தன் ஆசானின் வாழ்க்கை வரலாற்றை எவ்வளவு தெளிவுடனும் கோர்வையுடனும் உருவகித்துக்கொண்டிருந்தார் என்பதற்கு வித்துவான் தியாகராச செட்டியார் நூல் சிறந்த எடுத்துக்காட்டு. இதே பண்பு பின்னர் அவர் ஆனந்த விகடனில் என் சரித்திரம் எழுதியபோதும் வெளிப்பட்டிருக்கிறது. முதிர்ந்த வயதில் காலம் மற்றும் காட்சிகள் கலைந்து, வரிசை மாறியும் தகவல்கள் மாறியும் மனத்தில் தோன்றும் என்பார்கள். ஆனால் வித்துவான் தியாகராச செட்டியார், என் சரித்திரம் ஆகிய நூல்கள் இன்றைய கணிணிகள் உதவியுடன் இயற்றியதுபோல அவ்வளவு சீராக உள்ளன.
வித்துவான் தியாகராச செட்டியார் நூலில் சாமிநாதய்யர் செட்டியார்பால் கொண்டிருந்த பெருமதிப்பு அவர் தகவல்கள் அடுக்கிக்கொண்டு செல்லும் விதத்தில் தெரிகிறது. அவர் மிகை என்று தோன்றக் கூடியது எதையும் பயன்படுத்தியதில்லை. ஆத்திகர்கள் உயர்வு நவிற்சியைப் பயன்படுத்தும் இடத்தில்கூடச் சாமிநாதய்யர், மேற்கத்திய மதசார் பற்றப் பார்வை, உரைநடையில் ஏற்படுத்தியிருந்த சிறு சிறு மாற்றங்களை, உலகத்து மொழிகளில் மிகப் பழைமையானதாகிய தமிழில் அன்றே பயன்படுத்தியிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் ஆங்கிலத்தில் தன் பெயர் எழுதக்கூடிய அளவுதான் பரிச்சயம் அடைந்திருந்தார்!
சாமிநாதய்யர் எழுதிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் இரு பாகங்களில் 1933-34இல் வெளிவந்தது. சாமிநாதய்யரின் உரைநடை, தொடக்கத்திலிருந்தே நவீனமாகவும் எளிதாகவும் இருந்தாலும் மகாவித்துவான் வரலாறு எளிதான நூல் அல்ல. சாமிநாதய்யரின் குருபக்தி விசேஷமானது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி ஆசாரங்கள் எவ்வளவு கடுமையாக அனுசரிக்கப்பட்டிருக்க வேண்டும்! ஆனால் சாமிநாதய்யர் பிள்ளையவர்களின் முடிவுவரை பக்கத்திலேயே இருந்திருக்கிறார். நள்ளிரவுக்கு மேல் நெடுநேரம் நினைவிழந்த ஆசிரியர் பக்கத்திலேயே கண்விழித்திருக்கிறார். ஆசிரியர் கண்விழித்து ஏதோ சொல்ல வாயெடுத்திருக்கிறார். அது திருவாசகமென்று புரிந்து கொண்டு சாமிநாதய்யர் திருவாசகத்தில் அடைக்கலப் பகுதியை வாசித்தார். சவேரிநாதப் பிள்ளை மகாவித்துவானைத் தமது மார்பில் தாங்கிக்கொண்டார். அவர் நெற்றியில் விபூதி இடப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிர் ஸ்தூல உடலிலிருந்து விடுதலை பெற்றது.
சாமிநாதய்யர், மகாவித்துவான் சரித்திரத்தில் பயன்படுத்தியிருக்கும் உரைநடைக்கும் அதற்குப் பிந்தைய படைப்புகளில் உணரப்படும் உரைநடைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முந்தையதில் ஓர் இறுக்கம் காணப்படுகிறது. பல செய்யுள்கள் எடுத்துக்காட்டப்படுவதால் வாசிப்போர் தம் மனநிலையை அடிக்கடி மாற்றிக்கொள்ளத் தேவைப்படுகிறது. வித்துவான் தியாகராச செட்டியார் நூலிலும் சில செய்யுட்பகுதிகள் நேர்ந்தாலும் பொதுவில் ஒரு சரளம் இருக்கிறது. இதை அவர் செட்டியார் அவர்களிடம் கொண்டிருந்த அந்நியோன்யம் சாத்தியமாக்கியது என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.
சாமிநாதய்யரின் இரு ஆசான்களும் மகாவித்துவான்கள் என்றாலும் தியாகராசச் செட்டியார் அன்று நாட்டில் மாறிவந்த நாகரிகத்தின் சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. ஓரிடத்தில் மாதச் சம்பளம் பெறுவதான நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசிரியர்களுக்குப் புதிய அனுபவம். சீடர்கள் வரும் நேரத்தில் கற்பிப்பதும் சீடர்கள் பணிவிடை செய்துவரும்போது சூசகமாக அறிவூட்டுவதும்தான் நாட்டில் காலம் காலமாக இருந்துவருவது. குறித்த நேரத்தில் தனி உடை அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்று, மணியடித்துத் தொடங்கி மணியடித்து முடிக்கும் வகுப்புகளை நடத்த ஒரு புது மனநிலை கொள்ள வேண்டியிருத்தது. தியாகராசச் செட்டியார் அவர்களுக்கு இது சாத்தியமான அளவுக்கு மகாவித்துவான் பிள்ளையவர்களால் முடிந்திருக்குமா என்பது உறுதியாகக் கூற முடியாது. தியாகராசச் செட்டியார் காலத்தில் தமிழ் கற்பிக்கும் பாதை ஒரு புதிய திசையில் செல்ல நேர்ந்தது என்பதில் தவறில்லை. இதைப் பின்னர் சாமிநாதய்யரும் இன்னும் ஏராளமான தமிழ் அறிஞர்களும் பின்பற்றி உலக மக்களிடையே தமிழ் அறிவைப் பரப்பினார்கள்.
சீடர்களோ நண்பர்களோ எந்த அளவுக்கு ஆசிரியரின் குடும்பத்திலும் இல்லத்திலும் பங்கு பெறலாம் என்பது கேள்விக்குரியது. என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இந்த முரண்பாட்டை உணர வேண்டியிருந்தது. நான் பல மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து செல்லப்போகிறேன்; அப்போது நிறைய நண்பர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை அவர்களுக்கே கிடைத்த பெருமையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் என் மனைவிக்கோ என் குழந்தைகளுக்கோ தெரிந்தவர்கள் அல்ல. உண்மையில் அன்று என் குடும்பத்தாருக்கு நான் மிகவும் முக்கியமாகக் கூற வேண்டிய தகவல்கள் சொல்லப்படாமலேயே போய்விட்டன.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் இறுதிக் கணத்தில் அதே கூரையடியில் அவருடைய வாழ்க்கையே தன் வாழ்க்கையாகக் கொண்ட அவருடைய மனைவியாரும் மகனும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பிள்ளையவர்களின் இறுதிக் கணங்களில் அவரை நெருங்க முடியாதபடிதான் இருந்திருக்கும் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. கடைசிக் காலத்தில் சைவர்கள் நெற்றியில் விபூதி இடுவது ஆண்டாண்டுக் காலமாக இருந்து வரும் பழக்கம். ஆனால் அது பிள்ளையவர்களின் குடும்பத்தாருக்குக் கிட்டவில்லை. சாமிநாதய்யர் எழுதியதில் பிள்ளையவர்களின் அந்தரங்க உறவுகள், தனிப்பட்ட செயல்கள் இடம் பெறவில்லை. அவருடைய புலமை, கவித்துவம், மாணாக்கர்பால் அவர் கொண்டிருந்த அன்பு, இவைதான் இடம் பெறுகின்றன.
தியாகராசச் செட்டியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எழுதப்பட்ட விரிவு அவருடைய மறைவு குறித்து அல்ல. சாமிநாதய்யர் 'சரம தசை' என்று தலைப்பிடப்பட்ட அத்தியாயத்தில் இதை எழுதியிருக்கிறார் (இறுதிச் சடங்குகளின்போது வடமொழியே பயன்படுத்துவோர்கூட 'சரம சுலோகம்' என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.) பத்து வரியில் முடிவு தெரிவிக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையான செட்டியார் அவர்களின் பேச்சும் மங்கிவிட்டது. முன்பே ஏற்பாடு செய்திருந்தபடி ஒருவர் தேவாரம் படிப்பதற்காக வந்திருந்தார். ஒரு கட்டத்தில் செட்டியார் கையைத் தட்டினார். அதன் குறிப்பு சிலருக்கே விளங்கியது. வேறொரு அன்பர் சரியாகப் படிக்கத் தொடங்கினார். இறுதிக் கணத்தில்கூடச் செட்டியார் அவர்களுக்குத் தமிழ் பிழையாகப் படிக்கப்படுவதை உணர முடிந்து அதைத் தடுக்க முடிந்திருக்கிறது.
இங்கும் நாம் அக்காட்சியை முழுமையாக ஊகிக்க முடியவில்லை. ஆசான், சீடன் இருவருக்கும் தமிழ் ஒன்றுதான் அதிமுக்கியமாக இருந்திருக்கிறது. இந்த மொழிப் பற்று அவர்களை இன்னும் மேன்மையானவர்களாக்கியது என்பதில் ஐயமில்லை.
சாமிநாதய்யர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்களைத் தந்தையாகப் பாவித்தார் என்றால் தியாகராசச் செட்டியார் அவர்களை மூத்த அண்ணனாகக் கருதினார். "என் ஆசிரியரிடம் (மகாவித்துவான்) எனக்கு முன் படித்தவராதலின் இவர் எனக்கு முன்னவர்; என் பால் அன்பு வைத்துப் பழகியமையின் என் நண்பர்; இன்ன இன்னபடி மாணாக்கர்களிடம் நடந்துவர வேண்டுமென்பதையும் சில நூற்பொருள்களையும் வேறு விஷயங்களையும் எனக்கு அறிவுறுத்தியமையின் என் ஆசிரியர்களில் ஒருவர்; எனக்குத் தம் உத்தியோகத்தை அளித்துப் பிறர் கையை எதிர்பாராத நிலையைச் செய்வித்தமையின் ஒரு வள்ளல்."
(சாமிநாதய்யர் இதை ை ஒரே வாக்கியமாக எழுதியிருக்கிறார். ஹென்றி ஜேம்ஸ் என்ற ஆங்கில இலக்கிய நாவலாசிரியரை 'மாஸ்டர் ஆஃப் செமிகோலன்' என்பார்கள். அதாவது அரைப்புள்ளி பயன்படுத்துவதில் வல்லவர். சாமிநாதய்யரின் மேற்கண்ட வாக்கியத்திலும் இத்தேர்ச்சி காணப்படுகிறது. ஓலைச்சுவடி எழுத்திலிருந்து அச்சுச் சாதனத்துக்கு எவ்வளவு இயல்பாக மாறித் தேர்ச்சியும் அடைந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.)
அய்யரவர்களின் வாழ்க்கையில் சீவக சிந்தாமணி பதிப்பு பல்வேறு அனுபவங்களுக்கு உட்படுத்தியது. அது நச்சினார்க்கினியரது உரையுடன் வந்தால்தான் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று 1886இல் இந்து பத்திரிகையில் ஓர் அனாமதேயக் கடிதம் வெளியாயிற்று. சி.வை. தாமோதரம் பிள்ளையும் சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கப்போவதாகச் செய்தி வெளியிட்டிருந்தார். அவர் புதுக்கோட்டையில் நீதிபதியாக நியமனம் பெற்றவர். அப்படிப்பட்ட பெரியோரிடம் மனவருத்தம் ஏற்படும்படியாகிவிட்டதே என்று சாமிநாதய்யர் வருந்தினார்.
சீவக சிந்தாமணி பதிப்பு சாமிநாதய்யருக்கு நிறையப் புகழ் கொணர்ந்தாலும் மனம் வருந்தும்படியாகவும் சில விளைவுகள் இருந்தன. அவர் ஆயுள் பரியந்தம் வருந்தக்கூடியதொரு பிழைக்கு அவரே காரணமாகிவிட்டார்.
அச்சு வேலை முடிந்து முதலில் நூறு பிரதிகள் நூல் தயாராகி அய்யரிடம் கிடைத்தன. கும்ப கோணத்தில் நூலுக்காகக் கையொப்பம் செய்தவர்களுக்கு விநியோகம் செய்ய ஒரு நண்பரிடம் கொடுத்தார். பின்னர் திருவாவடுதுறை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலும் தானே விநியோகம் செய்து திருச்சிக்குச் சென்றார்.
திருச்சிராப்பள்ளி சென்று உறையூர் அடைய இரவு இரண்டு மணியாகியிருக்கிறது. அந்த நேரத்தில் செட்டியார் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார் (அந்த அளவு இருவருக்கும் நெருக்கம் இருந்திருக்கிறது). செட்டியார் அதற்குள் நூலைப் பார்த்திருக்கிறார்.
"என்ன வேலை செய்திருக்கிறீர்கள்! . . . உங்களுக்கும் மகாவித்துவான் அவர்களுக்கும் திருவாவடுதுறை மடத்தாருக்கும் எனக்கும் பெரிய கீர்த்தியைச் சம்பாதித்து வைத்துவிட்டீர்கள்," என்று தியாகராசச் செட்டியார் மகிழ்ந்தார்.
சாமிநாதய்யர் நூலிலிருந்து சுவை மிக்க சில பகுதிகளை அவரே படித்துக் காட்டினார். சில சொற்களின் உருவத்தைக் கண்டுபிடிக்க சாமிநாதய்யர் அடைந்த கஷ்டங்களைக் கேட்டுச் செட்டியார் மிகவும் வருந்தினார்.
"இப்படிக் கேட்டு வந்த அவர், கடைசியில் ஒரு விஷயத்தைச் சொன்னார். . ." என்று சாமிநாதய்யர் துவங்குகிறார். செட்டியார் மேற்கொண்டு பேசுகிறார்: "இதில் பல பேருடைய உதவிகளைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே, எந்த இடத்திலாவது என் பெயர் வந்திருக்குமென்று எதிர்பார்த்தேன். நீங்கள் எழுதவில்லை. இந்த விஷயத்தில் உங்களிடத்தில் சிறிது வருத்தம்தான்."
சாமிநாதய்யர் ஒரு காரணம் உண்டு என்கிறார். அது உலகுக்குத் தெரிய வேண்டாம் என்றும் முடிவு செய்திருக்கிறார். ஆனால் சுயசரிதத்தில் வருத்தம் தெரிவித்ததோடு அவர் 'தவறு'க்கு மூன்று வகையில் ஈடு செய்ததாகக் கூறுகிறார். ஐங்குறுநூற்றுப் பதிப்பைச் செட்டியாருக்கு உரிமையாக்கினார். கும்பகோணம் கல்லூரியில் பட்டப் படிப்பில் தமிழ் படிக்கும் ஒரு சைவ மாணவனுக்கு ஆண்டு தோறும் செட்டியார் பெயரில் (அந்த நாளிலேயே) ஆண்டுக்கு நாற்பத்தெட்டு ரூபாய் நிதியுதவி பெறுவதற்கு ஏற்பாடு செய்தார். அவருடைய வீட்டிற்குத் 'தியாகராச விலாசம்' என்று பெயரிட்டார்.
சாமிநாதய்யருக்கு 19ஆம் நூற்றாண்டில் மகத்தான தமிழ் ஆசான்கள் கிடைத்தார்கள். அவரும் அவர்கள் பெருமைக்குப் பெருமை சேர்ப்பாராக விளங்கினார். ஒவ்வொரு கட்டத்திலும் தன் ஆசான்களையும் தன்னைப் போஷித்தவர்களையும் வணங்கியே இயங்கினார். சீடனாக இருப்பதையே சாதனையாகக் கொண்டு வாழ்ந்தார்.
சாமிநாதய்யர் சாதாரண வாசகர்களும் பங்கு கொள்ளக்கூடியதாக நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால் இந்தியப் பாரம்பரியம் ஒரு வித அனாமதேய உணர்வில்தான் இயங்கிவந்திருக்கிறது. உண்மையில் மகத்தான கலைப் படைப்புகளை யார் உருவாக்குகிறார்கள் என்று இன்றுவரை நாம் உறுதியாக அறிய முடியவில்லை. பெருமளவுக்கு நாம் இலக்கியாசிரியர்களின் சிறப்புப் பெயர்களையே அறிந்திருக்கிறோம். சாமிநாதய்யர் தன்னைப் பற்றியும் இன்னும் பலரைப் பற்றியும் எழுதியிருந்தாலும் அடிநாதமாக ஒரு அனாமதேய சுருதியிருக்கிறது. எல்லாம் தெரிந்ததுபோலவும் இருக்கும். ஆனால் நிறைய ஊகங்களுக்கும் இடம் இருக்கும். அந்த விதத்தில் சாமிநாதய்யர் இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியத்தில் அங்கம் வகிப்பவராகிவிடுகிறார்.
**********
உசாத்துணை:
No comments:
Post a Comment