அன்றொரு நாள்: ஏப்ரல் 26
ஜகதலபிரதாபன்
கத்தியும், கபடாவும் எடுத்துண்டா தான் பிரதாபமா? இல்லெ. உலகம் சுற்றிய வாலிபன் தான் ஜகதலபிரதாபனா? போயும், போயும், ஒரு டிராமாக்காரனைப்போய், தலைக்கு மேலெ வச்சுண்டு இப்படி கூத்தாடலாமா? அதுவும் ஆங்கிலேயன். சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் எப்பவோ வந்து விட்டனவே. என்ன தான் இருந்தாலும் எங்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பனைப்போல் ஆகுமோ? இல்லெ. மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் படிச்சிறக்கயாடா நீ? அது தான் போறது. குருதேவ் ரவீந்தரநாத் தாகூர் என்னம்மா எழுதியிருக்கார்? அவருக்கு நோபல் பரிசு கொடுத்தா. உங்க ஜகதலபிரதாபனுக்கு என்ன கிடச்சது? அவன் என்ன அப்படி எழுதிக் கிழிச்சுட்டான்? இதெல்லாம் ஒரு ஜோடனை, ஸ்வாமி.
சார்! இன்று உலகில் ஒரு நடிகனாக வாழ்க்கையை தொடங்கிய ஒரு முந்திரிக்கொட்டை, (18 வயதில், தன்னை விட ஆறு வயது மூத்த பெண்மணியை மணம் செய்து கொண்டான். ஆறே மாதங்களில், கையில் குழந்தை!), கிட்டத்தட்ட ஐநூறு வருடங்களாக, உலகை ஆளுகிறான். இறவாவரம் வாங்கி வந்த வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த தினம் சரியாக தெரியவில்லை. அவர் ஞ்னானஸ்நானம் செய்துவிக்கப்பட்ட தினம் ஏப்ரல் 26, 1564. இனி அவரை மறக்கமாட்டீர்கள்.
முதலில் ஒரு அனுபவப்பாடம். அவருடைய படைப்புகளை எளிய ஆங்கிலத்தில் இந்திய ஹவுஸ் ‘புகழ்’ சார்லஸ் லாம்ப் எழுதியிருக்கிறார், மேரி லாம்புடன் இணைந்து. அது இணைய தளத்தில். வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய 38 நாடகங்களும்,154 சானெட் (14 வரி) கவிதைகளும், இரு நீண்ட கவிதைகளும், பற்பல கவிதைகளும், ஒரு தனி மனிதனின் சாதனையா என்று நம்மை பிரமிக்க வைக்கின்றன. எல்லாம் இணைய தளத்தில். இவற்றை எல்லாம் அனுபவித்துப்படிக்க வாழ்நாள் முழுதும் வேண்டும். ரிட்டயர்ட் ஆன பிறகு செய்யலாம். ஆனால், சிறுவர்கள், இன்றே முடிந்ததை தவணை முறையில் படிக்கத்தொடங்கினால், ஆறே மாதங்களில், இங்கிலீஷ் வெளுத்துக்கட்டலாம். ஐ ஏ எஸ் (புது சிலபஸ்) பாஸ் செய்வது எளிது. அத்தனை எளிமை. அவருடைய நாடகங்கள் எல்லாம், கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ரிகார்ட், சார். அந்த அளவுக்கு, இன்றளவும், உலகெங்கும் அவை நடிக்கப்படுகின்றன. திரைப்படங்கள் வேறு.
உலகின் பல தேசங்களில் பாடப்புத்தகங்கள், இவை. நான் முதலில் (1948) படித்த ஜூலியஸ் சீஸர் நாடகம் நினைவிலிருந்து அகலவில்லை. அது தான் வில்லியம் ஷேக்ஸ்பியர். அது பற்றி ஒரு நாள் எழுதுவதாக இருந்தேன். ஸுபாஷிணியின் சிபாரிசுக்குக் காத்திருக்கிறேன்.
சரி தான் ஐயா! மாபெரும் இலக்கிய படைப்பாளர் என்று சொல்லிவிட்டுப் போங்களேன். இது ஒரு குரல். அது தான் இல்லை. அவர் ஒரு சிந்தாந்தி, தத்துவ போதகர், கருத்து மன்னர், சிந்தனையாளர், மனோதத்துவ வல்லுனர் (அதுவும் கற்பனையை அலசி) இத்யாதி. அவரை பற்றி, அவருடைய படைப்புகளை அலசி, அவரை பற்றிய ஹேஷ்யங்களை ஊதி, ஆயிரக்கணக்கான நூல்கள் வந்துள்ளன. வில்லியம் ஹேஸ்லிட் 1817லியே, ‘வில்லியம் ஷேக்ஸ்பியர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; அவர் ஒரு தத்துவ ஞானி’ என்று உரைத்தார்.
வில்லியம் ஷேக்ஸ்பியரிடமிருந்து சில வரிகளின் மொழியாக்கம்;
~ ‘மனதில் பட்டதைச் சொல்; அதற்கு வேலி போடாதே..’ (கிங்க் லியர்)
~ ‘கப்பல் ஏறுவதற்கு; மாலுமிகளும் மனிதர்களே; கட்டாந்தரையிலும் சரி, கடலிலும் சரி எலிகள் இருப்பது போல், இரண்டிலும் திருடர்கள் உண்டு..’ (தெ மெர்ச்செண்ட் ஆஃப் வெனிஸ்)
~‘இந்த முட்புதரிலிருந்து, பத்திரமாக மலரை பறி.(ஹென்றி 4 பார்ட் 1)
~ அன்பு,கொட்டும் மழைக்கு பின் வரும் சூரியவெளிச்சம் போல், ஆறுதல் தரும். (வீனஸ் & அடோனிஸ்)
~‘அழகிய ஆப்பிள்குவியலில் எதையப்பா பொறுக்குவது! (டேமிங்க் ஆஃப் தெ ஷ்ரூ)
~ ‘நான் உன் தந்தையின் ஆவி..’ (ஹாம்லெட்) (இந்த ஒரு வரிக்கு 50 பக்க விமரிசனம் ரெடி செய்யலாம்.)
வழக்கம் போல் சில உசாத்துணைகளை கொடுத்து விட்டு இடத்தை காலி செய்கிறேன். வில்லியம் ஷேக்ஸ்பியரை பற்றி எழுத ஆரம்பித்தால், குறைந்தது 2000 பக்கம் ஓடும். நூலகம் எப்படி இருக்க வேண்டும் என்று நீதிபதி சந்துரு அருமையான தீர்வு ஒன்று வழங்கினார். அங்கு என்ன செய்கிறார்களோ தெரியாது. இங்கு ஒரு வில்லியம் ஷேக்ஸ்பியர் கார்னர் தடபுடல், நூலகத்தில்.
இன்னம்பூரான்
26 04 2012
உசாத்துணை:
Greenblatt.S.(2001) Hamlet in Purgatory: NY: Princeton
Katherine Johnson (2010) The Gentleman Poet: NY:Avon (H & C)
McGinn.C.(2006) Shakespeare’s Philosophy: NY: Harper & Collins.
|
No comments:
Post a Comment