Tuesday, April 23, 2013

இன்னம்பூராருக்காக!





 இன்னம்பூராருக்காக!
Geetha Sambasivam Tue, Jan 26, 2010 at 12:02 PM

மின் தமிழில் சந்திரா இன்னாம்பூர் நடராஜர் ஸ்வாமிமலையில் தான் இருக்கிறார் என ஒரு ஆருத்ரா தரிசனம் போது குறிப்பிட்டதில் இருந்தே இன்னாம்பூர் போகணும்னு ஆசைதான். அதுவும் ஸ்வாமிமலைக்கு எத்தனை முறை போயிருக்கோம்?? இப்படி ஒரு விஷயம் கேள்விப்பட்டதே இல்லை. சந்திராவுக்கே தற்செயலாத் தான் தெரிஞ்சிருக்குனு நினைக்கிறேன். இம்முறை ஊர்ப்பக்கம் சென்றபோது வெள்ளியன்று 22-1-10 மாலை இன்னாம்பூருக்கும், திருப்புறம்பயத்துக்கும் சென்றோம். ஆட்டோக்காரர் ரொம்பக் கிட்டத்தான் என்று சொன்னாலும் கொஞ்சம் தூரம் போகத் தான் வேண்டி இருக்கு.  காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. ஸ்வாமிமலை செல்லும் வழியில் அங்கிருந்து சற்றே வடகிழக்கே அமைந்துள்ளது.

சிறிது நேரத்தில் ஊரின் சிவன் கோயில் வாயிலில் கொண்டு விட்டுவிட்டார் ஓட்டுநர். கோயில் மிகப் பழமையான கோயில். திருப்பணி வேலைகள் நடைபெற வேண்டும். எப்போ நடக்கும்னு தெரியலை. இறைவன் பெயர் எழுத்தறிவித்த நாதர் என்று சொல்கின்றனர். இங்கே பேச்சு வராத குழந்தைகளுக்கும், பேச்சு வரும் வயதில் உள்ள சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும், நெல் முனையாலோ, கொஞ்சம் வயது சென்ற குழந்தையானால் செம்பருத்திப் பூவின் காம்பாலோ நாக்கில் எழுதுகின்றனர். நாங்கள் செல்லும்போது ஒரு பெற்றோர் தங்கள் பெண்குழந்தைக்கு (ஐந்து, ஆறு வயதிருக்கும்) நாக்கில் எழுதப் பிரார்த்தித்துக் கொண்டு வந்திருந்தனர்.

கோயிலில் அம்மன் நித்யகல்யாணியின் (கொத்தார் பூங்குழலி என்றும் பெயர்) சந்நிதி வாயிலில் கும்பகோணத்தில் இருந்து வந்திருந்த வைதீகர் ஒருவர் தன் குழந்தையோடு அமர்ந்து பாராயணம் செய்து கொண்டிருந்தார். முதலில் அவர்தான் குருக்கள் என நினைத்து அவரிடம் விபரங்கள் கேட்டோம். அவரும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தச் சமயம் குருக்களே வந்துவிட்டார். கோயிலுக்கு என நிலங்கள் இருக்கின்றன என்றும், வருமானம் சரிவர வருவதில்லை என்றும் சொன்னார். இந்த ஊர் நடராஜர் ஏன் ஸ்வாமிமலை சென்றுவிட்டார் என்று கேட்டேன். பாதுகாப்புக் கருதி சென்றிருப்பதாகவும், இந்தக் கோயிலும் ஸ்வாமிமலை தேவஸ்தானத்தின் கீழ் வருவதாகவும், குருக்களுக்கு மாதச் சம்பளம் 550ரூ என்றும் சொன்னார். வரும் பக்தர்கள் போடும் பணத்தை வைத்து மற்றச் செலவுகளைச் சரிக்கட்ட வேண்டி இருப்பதாகவும் கூறினார். பல விண்ணப்பங்கள் கொடுத்தும் அன்றாட வழிபாட்டுக்குத் தேவையான பொருட்கள் சரிவரக் கிடைக்கவில்லை என்றும் வருத்தத்துடன் கூறினார். என்றாலும் கோயிலில் நித்திய வழிபாடுகளும், நாலு கால பூஜைகளும் நடந்து வருகின்றது.

ஊர்மக்களும் கோயிலுக்கு வருகின்றார்கள். கோயிலின் வாயிலும் சரி, அர்த்தமண்டபத்தின் வாயிலும் சரி, கருவறையின் வாயிலும் சரி மிக மிகப் பெரியதாக இருந்தது. உள்ளே மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆவுடையார், அதன் மீது லிங்க பாணம், தழும்புகள் பாணத்தில் இருப்பதை என் கணவர் சுட்டிக் காட்டினார்.  சுயம்பு லிங்கம். இவ்வளவு பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்கம் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தான் பார்த்திருக்கிறேன். அங்கே லிங்க பாணமும் பெரியது. இங்கே பாணம் அதைவிடச் சின்னது. அர்ச்சகரிடம் காரணம் கேட்டேன்.  வந்திருக்கும் குழந்தைக்குப் பிரார்த்தனை வழிபாட்டை முடித்துவிட்டுச் சொல்வதாய்க் கூறினார்.

இந்தக் கோயில் சூரியன் வழிபட்ட தலம் என்றும் சொன்னார்கள். அகத்தியருக்கு இங்கே தமிழ் இலக்கணம் இறைவனால் போதிக்கப் பட்டதாம். அதனாலும் எழுத்தறிவித்த நாதர் என்ற பெயர் ஏற்பட்டதாய்க் கூறினார். மேலும் இந்திரனின் யானையான ஐராவதம் ஈசனைத் தினமும் வந்து வணங்க வேண்டி முயன்றபோது, கருவறை சிறியதாக இருந்ததால் அதனால் உள்ளே நுழையமுடியவில்லையாம். அது மனம் வருந்தி ஈசனை வேண்ட, ஈசனும் கருவறையைச் சற்றே நெம்பினாராம், கருவறை யானை நுழையும் அளவுக்குப் பெரிதாக ஆயிற்று. ஐராவதம் உள்ளே நுழைந்து வழிபட்டு வந்ததாம். இப்போது அவ்வண்ணமே யானை நுழையும் அளவுக்குப் பெரிய வாயிலோடு கூடிய கருவறையைக் கொண்டிருக்கிறது. மேலும் ஐராவதம் வணங்கியதை நினவூட்டும் வண்ணம் விமானமும் கஜப்ருஷ்ட விமானமாக இருக்கிறது. பிராஹாரம் சுற்றி வந்து சற்றே தள்ளி நின்று பார்த்தால் யானை முதுகைப் போன்ற விமானம் கண்குளிரக் காட்சி அளிக்கிறது.

சுதன்மன் என்னும் கணக்காளன் இந்தக் கோயில் கணக்கை நிர்வகித்து வந்தபோது, சோழ மன்னனுக்கு அவன் மீது சந்தேகம். சுதன்மன் என்னமோ கணக்குகளில் ஒழுங்காகத் தான் இருந்து வந்தான். ஆனாலும் மன்னனின் சந்தேகம் தீரவில்லை. கணக்குகளைச் சரிபார்க்கும்பொருட்டு சுதன்மனை சபைக்கு வரச் சொல்லி மன்னன் உத்திரவிட, ஈசனே சுதன்மன் போல் அங்கே போய்க் கணக்குகளைக் காட்டி, முறையாக விளக்கவும் மன்னன் சந்தேகம் தீருகின்றது. சுதன்மன் கனவில் ஈசன் வந்து தான் போய்க் கணக்கைத் தீர்த்துவிட்டதாய்க் கூற, சுதன்மன் நெக்குருகிப் போனான். உண்மை தெரிந்த மன்னன் எழுத்தறிவித்த நாதரையும், சுதன்மனையும் போற்றி வணங்கினான். இதுதான் இந்தக் கோயிலின் தலவரலாறு எனச் சொல்லப் படுகிறது.

பல கல்வெட்டுக்கள் இருந்தாலும் முக்கியமானதாய்ச் சொல்லப் படுவது சோழன் ராஜகேசரி வர்மனின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டும், விஜயநகர மன்னரின் காலத்து வீர கம்பண்ண உடையார் காலத்திலும் பொறிக்கப் பட்ட இரண்டே முக்கியமாய்ச் சொல்லப்  படுகிறது. அந்நியர் படை எடுப்புக் காலத்தில் இந்தக் கோயில் பூட்டப் பட்டு நாற்பதாண்டுகளுக்கு மேல் வழிபாடுகளின்றி இருந்திருக்கிறது. அது குறித்த கல்வெட்டும் இருப்பதாய்க் கூறுகின்றனர்.

அடுத்தது நம்ம இன்னாம்பூராரின் குல தெய்வமும் இஷ்ட தெய்வமுமான பெருமாள் கோயில். அது ஊருக்குள் நுழையும் இடத்திலேயே முதலிலேயே திரும்பி இருக்கணும். எங்களுக்கு முதலில் தெரியவில்லை. சிவன் கோயிலுக்கு வந்திருந்த ஓர் அம்மாள் சொன்னார் தான் அழைத்துச் செல்வதாய். அதற்குள் ஆட்டோ ஓட்டுநர் திருப்புறம்பயம் போயிட்டுத் திரும்பி வரும்போது போகலாம் என்றும் திருப்புறம்பயத்தில் சீக்கிரம் நடை சார்த்திவிடுவார்கள் என்றும் கூற திருப்புறம்பயம் சென்றுவிட்டுத் திரும்பும்போது மீண்டும் இன்னாம்பூர் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். முதலில் கொஞ்சம் வழி புரியவில்லை. அப்புறமாய்க் கேட்டுக் கேட்டுக் கொண்டு போய்ச் சேர்ந்துவிட்டோம். வாயிலிலேயே பெரிய இரண்டு சக்கர வண்டி இருக்க, பட்டாசாரியார் உள்ளே தான் இருக்கிறார் என்ற நிம்மதி வந்தது. என் கணவர் உடனே வேகமாய் உள்ளே போக சந்நிதியை மூடிவிட்டு பட்டாசாரியார் வந்து கொண்டிருந்தார். முதலில் இப்போ முடியாது என்று சொல்லிவிட்டார். அப்புறம் என்ன நினைச்சாரோ, மீண்டும் போய் சந்நிதியைத் திறந்தார்.

திரு இன்னாம்பூராரைப் பற்றியும், ஹிந்து பத்திரிகைக் காரங்க செய்யும் கைங்கரியம் பற்றியும் கேட்டேன். இன்னாம்பூரார் பற்றித் தெரியவில்லை என்றாலும் ஹிந்து பத்திரிகைக்காரர்கள் கைங்கரியம் பற்றிச் சொன்னார். பட்டாசாரியார் பாபுராஜபுரத்தில் இருந்து தினமும் வந்து போகிறாராம். ஆகவே அவசரத்தில் வேறே இருந்தார். என்றாலும் பெருமாளைத் திவ்ய தரிசனம் செய்து வைத்தார். பெருமாள் விக்ரஹம் நாவலப்பாக்கம் என்னும் இடத்தில் சில வருடங்கள் இருந்ததாகவும், இவர் திருமலையில் இருந்து வந்ததாகவும் கூறினார்.

பாஸ்கர க்ஷேத்திரம் என இது அழைக்கப் படுவதாயும் கூறினார். கருவறைக்கு முன்னால் சூரியன் இருப்பது இங்கே தான் என்றும் காட்டினார். அதனாலேயே இந்த ஊருக்கு இன்னாம்பூர் என்ற பெயர் வந்ததாகவும் சொன்னார். விஜயநகரப் பேரரசின் காலத்தில் அவர்களின் உறவினர்களில் ஒருவரான வீராவலி கிருஷ்ணமாசாரியார் என்பவர் இந்த விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு இந்த ஊருக்கு வந்ததாகவும், இங்கே பிரதிஷ்டை செய்யும் முன்னர் சில காலம் நாவலப் பாக்கத்தில் இருந்ததாகவும் கூறுகின்றனர். வேறு சிலர் அந்நியப் படை எடுப்பின்போது அங்கே ஒளித்து வைக்கப் பட்டதாகவும் சொல்கின்றனர். வீராவலி கிருஷ்ணமாசாரியாருக்கு உதவிய ராகவன் ஐயங்கார் தான் ஹிந்து பத்திரிகைக் குடும்பதினரின் மூதாதையர்கள் என்றும் கேள்விப்பட்டேன்.  மூலவரும் திருப்பதிப் பெருமாள் போலவே காட்சி கொடுக்கிறார்.  பட்டாசாரியாருக்கு ஊருக்குத் திரும்பவேண்டும் என்பதால் பிராஹாரங்கள் சுற்ற முடியலை. தரிசனம் முடிச்சுட்டுத் திரும்பிட்டோம். இன்னொரு முறை சென்றால் காலை வேளையில் சென்று கொஞ்சம் நிதானமாய்ப் பார்த்துக் கொண்டு வர ஆசை.



meena muthu Tue, Jan 26, 2010 at 12:15 PM

கீதா, இன்னாம்பூர் பற்றி வழக்கம்போல விரிவாக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்!
படித்ததும் இன்னம்பூராரின் தாயார் நினைவு!


Tthamizth Tthenee Tue, Jan 26, 2010 at 12:57 PM

கீதாம்மா  அருமையாக  எழுதி இருக்கிறீர்கள்

நான்  சென்று தரிசித்த  பல திருத்தலங்கள்  அதே போல நீங்கள் தரிசித்த பல  திருத்தலங்கள்

அனைத்துக்கும்  இருக்கும் ஒரு ஒற்றுமை  மனதுக்கு மிகவும் வருத்தமாக  இருக்கிறது

இந்துமதத்தைப் ;போற்றும்   இறையைப் போற்றும்

நம் நாட்டின் திருத்தலங்களில்  அந்த திருத்தலங்களுக்கென்றே  பழைய மன்னர்கள்  ஏராளமாக  சொத்துக்கள்  அளித்திருந்த போதும்  இன்று வரை  அந்த சொத்துக்கள்  திருத்தலங்களுக்கு    பயன்படாமால்  யாரோ  அனுபவித்து வருகின்றனர்


அர்ச்சகர்கள்  சம்பளம் போதாமையால்  வாழ்க்கைத்த்ரம் உயராமலே  இருக்கிறார்கள்  என்பதே

நம் அரசு  அரசாங்க முத்திரையாகவே  ஸ்ரீவில்லிபுத்தூர்  கோபுரத்தை தான் பயன்படுத்துகிறது

ஆனால்  கோயில்களைக்  கவனியாமல்  ,அங்கு பணிபுரிவோரைக் கவனியாமல் இருக்கும் நிலைதான்  வருத்தம்,அளிக்கிறது

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது கூட  இவ்வளவு மோசமில்லை  என்றே தோன்றுகின்றது

அன்புடன்
தமிழ்த்தேனீ

Innamburan Innamburan Tue, Jan 26, 2010 at 2:51 PM
January 26, 2010
க்ஷேமம்

கீதாமீனாகிருஷ்ணாவுக்குஅநேக ஆசீர்வாதம். உபயகுசலோபரி. இப்பவும்போர்ட்ஸ்மத்தில் இருக்கிற துறைமுகத்தில் கப்பல் (ஓட்டை இல்லைபாத்திண்டேன்.) ஏறி,காவேரி சங்கமம் ஆகிற இடத்தில்,காவேரியில் உள்புகுந்துகுடமுருட்டியில் பயணித்துதிருமலைராஜன் வாய்க்காலில் மிதந்துஇன்னம்பூர் வந்தேனாபாத்தாஇன்னமும் மிதந்துண்டுருக்கேன்சந்தோஷத்தில். எல்லாம் கீதா கைவண்ணம். என்னமா எழுதியிருக்கா!. கையைப்பிடிச்சு இழுத்துண்டூஇதை பாருஅதைக்கேளுண்ணு சொல்லீண்டே கையிலெருந்து உருண்டை சாதம் போட்டுண்டேகதை சொல்லற மாதுரி! எத்தனை நாள் அப்டி சாப்டுருக்கேன் என்ன சந்தோஷமா  இருந்தாலும்நான் மூழ்கிறது இல்லை. மூச்சு திணறுமே! மொதக்கறது தான்மீனா வேறேஅம்மாவைக்கூட்டுண்டு வந்துட்டாங்களாநினைவலைகள் வேற தாலாட்டகிறங்கிப்போய்ட்டேன். அம்மாவுக்கு இன்னம்பூர் தானே புக்காம் (புகுந்தவீடு). 

என் மேலே தான் தப்பு. அம்மன் கோயிலைப்பத்தி சொல்லிருக்கணும். பாட்டிக்கு வேண்டப்பட்டவ. வாரி வாரி வரம் கொடுப்பாளாம். சொன்னேனோ நடந்த கதையை? என் பிள்ளைக்கு முடியிறக்க (ஐம்பது வருடம் முன்னால்) போனோம். தடபுடல். அப்பு அத்தான் [தாத்தாவோட ஜன்மவைரி] சர்க்கரைப்பொங்கல் தளிகை அவரே பண்ணார்.  அப்பா! வண்டியை நிறுத்துஅம்மன் கோயிலுக்குபோணும்னேன். பன்னெண்டு திருமண் அத்திம்பேர் கூடாதுன்னுட்டார். தத்க்ஷணம் 'லடாங்க்ணு காரோட ஆக்ஸில் முறிஞ்சுப்போச்சு. மாத்து வண்டி வரவரைஅவர் அம்மன் கோயில் வாசல்லே தேமன்னு உக்காந்திண்டு இருந்தார். அவளோ கொள்ளை சிரிப்பு.போங்கள்.

நம்மூர் சிவன் கோயில் பாடஸ்தலமாச்சே. ஒரு நா போறேன் ஒத்தருமில்லே. ஒரு மாமி எட்டிப்பாத்துட்டு, 'அவா கும்போணம் போயிருக்கா. பையனை அர்ச்சனைப்பண்ன சொல்லவான்னு கேட்டா. தமிழ்த்தேனீ சொல்றமாதுரிஅவாளுக்குகெல்லாம் என்ன வருமானம்சரின்னேன். மூணு வயசு குழந்தே அற்புதமா அர்ச்சனைப்பண்ணான். தூக்கிண்டு நினைச்சுண்டேன். சீர்காழிய்லே அப்போ திராவிடசிசு. இப்போ நீ இங்கேன்னு. கீதா சொன்னதுக்கு மேல அழகா சொல்ல எனக்குத்தெரியாது.

நாவல்பாக்கம் ஃப்ரண்ட் சீனிவாசன் தான்சொன்னார்இன்னம்பூர் பெருமாள் அங்கே எழுந்தருளியதைப்பற்றி. இன்னம்பூர்க்காரா வந்து அவரை இன்னம்பூருக்கு ஏளப்பண்ணிண்டுப்போகச்சநாவல்பாக்கமே அழுததாம். பெருமாள் என்ன அழகு பாத்தேளோ. அவருக்கு இடுப்புலே ஒரு கட்டாரி இருக்கு. தெரியுமோ. ஹனுமான் ரொம்ப விசேஷம். நம்ம பாபுராஜபுரம் பட்டருக்கு மறதி போல. இப்போ தானே இன்னொரு இன்னம்பூரான் (அப்பு அத்தான் பேரன்ரொம்ப கோபக்காரனாம்இன்னம்பூரான் காரணப்பெயராம்!) கல்யாணத்திலே பாத்தேன்அவரை. செளந்தரராஜன்ன்னு சொல்லிப்பாத்தேளோ?

இன்னிக்கு சோகமே வடிவாக உட்கார்ந்துருந்தேன். பயோடாட்டவையா தந்தியா அடிக்கும் மதுரபாரதி கூட (கீதாவும் தான்) 'ச்சில் ச்சில்ரினோ ஜவான் ஸிம்லாவை கண்டுக்கலை. மாங்கு மாங்குனு 'அரசை உருப்படியாக்க...குடியரசு ஸ்பெஷல் எழுதினா (ரொம்ப நீளம்;போர்)அதை ஃஃபிஃபித் பில்லர் அடிச்சுண்டு போயிடுத்துனு.

இன்னம்பூர் சமாச்சாரம் டானிக் மாதிரி வந்தது. எல்லாம் பகவத் சங்கல்பம்.

இப்படிக்கு,

தாஸன்,

சுதன்மன்
இன்னம்பூரான்

Tthamizth Tthenee Tue, Jan 26, 2010 at 4:25 PM

அதை ஃஃபிஃபித் பில்லர் அடிச்சுண்டு போயிடுத்துனு.

இன்னம்பூர் சமாச்சாரம் டானிக் மாதிரி வந்தது. எல்லாம் பகவத் சங்கல்பம்.

ஹஹஹஹஹஹ்ஹஹாஆஆஆஅ

எல்லாம்  பகவத் சங்கல்பம்
அன்புடன்
தமிழ்த்தேனீ


vishalam raman Tue, Jan 26, 2010 at 5:00 PM

அன்பு கீதா அந்த ஊரைப்பற்றியும் கோயில்களைப்பற்றியும்
பல தகவல்கள் தெரிந்தன நன்றி
[Quoted text hidden]

devoo Tue, Jan 26, 2010 at 6:57 PM

கீதாம்மா, இத்தனை க்ஷேத்ரங்களுக்குப் போய் வந்தீர்கள்
அய்யம்பேட்டை திருத்தலம் பற்றி ஒரு வரி இல்லையே !
எவ்வளவு ஆர்வத்தோடு படிக்க உட்கார்ந்தேன்

தேவ்


Geetha Sambasivam Wed, Jan 27, 2010 at 1:20 AM

//(கீதாவும் தான்) 'ச்சில் ச்சில்ரினோ ஜவான் ஸிம்லாவை கண்டுக்கலை.//

ஊருக்குப் போனதிலே நிறைய மடல்கள் சேர்ந்திருக்கு. இன்னும் சரியாப் பார்க்கமுடியலை. உடம்பும் சரியில்லை. ஜுரம்! இன்று மத்தியானம் பார்த்துடறேன். 

Geetha Sambasivam Wed, Jan 27, 2010 at 1:21 AM


Geetha Sambasivam Wed, Jan 27, 2010 at 1:21 AM
நன்றி விசாலம்.


Geetha Sambasivam Wed, Jan 27, 2010 at 1:22 AM

நன்றி மீனா.


Geetha SambasivamWed, Jan 27, 2010 at 1:23 AM

நானும் திருமதி ருக்மிணி அம்மாவை நினைத்துக் கொண்டேன்.
]

Geetha Sambasivam Wed, Jan 27, 2010 at 1:23 AM

தேனீ அவர்களுக்கும் என் நன்றி.
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Jan 27, 2010 at 1:22 AM

ஐயம்பேட்டைக்குப் பல வருஷங்கள் முன் சென்றது. நெருங்கிய  உறவினர் இருக்கார், சந்தர்ப்பம் கிடைத்துப் போகும்போது அங்கே சென்று பார்த்துவிட்டு எழுதறேன். நன்றி.


vj kumar Wed, Jan 27, 2010 at 1:50 AM

அருமையான வர்ணனை. படங்கள் உண்டா ? சிற்பங்கள் இருந்தால் தனி மடலில் எனக்கு அனுப்புங்கள்.

நன்றி
விஜய் 
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


devoo Wed, Jan 27, 2010 at 5:06 AM

 Jan 26, 7:22 pm, Geetha Sambasivam
> ஐயம்பேட்டைக்குப் பல வருஷங்கள் முன் சென்றது. நெருங்கிய  உறவினர் இருக்கார்,
> சந்தர்ப்பம் கிடைத்துப் போகும்போது அங்கே சென்று பார்த்துவிட்டு எழுதறேன்.<
‘அய்யம்பேட்டை வேலை’  என்பது இங்கு அடிக்கடி பேசப்படும் பரிகாச
வார்த்தை;
அதை மனத்தில் கொண்டு எழுதினேன் என்றாலும் அய்யம்பேட்டை சிவஸ்தலம்.
தேவாரப் பெயர் ‘திருச்சக்கரப்பள்ளி’
சுவாமி பெயர் – ஆலந்துறை ஈசுவரர்,
தேவியார் - அல்லியங்கோதையம்மை.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில
விதிகளைக் கூறுகின்றது. நாற்பது வயதுக்கும் மேற்பட்டவரே ஊர்ச்சபை
உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் முன்னர் பத்து ஆண்டுகளுக்கு
உறுப்பினர் பதவிக்கு நிற்காதவராக இருக்க வேண்டும் என்றும் ஊர்ச்சபை
விதிகள் இருந்தன.

மணக்கால் அய்யம்பேட்டை என்னும் பெயரிலும் தலம் உள்ளது;
’திருப்பெருவேளூர்’ என்பது தேவாரப்பெயர்


Hari Krishnan Wed, Jan 27, 2010 at 5:15 AM


அய்யம்பேட்டையைச் சொல்லிட்டு அம்மாபேட்டைய விடலாமா?

இந்தக் கும்பகோணம்லாம் இங்க வாண்டாம் என்று ஒருகாலத்தில் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.  இந்தப் பேச்சு வழக்கு அப்படியே ஆங்கிலத்திலும் நுழைந்தது.  ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் கும்பகோணம் என்ற பத விளக்கமாய் fraudulent activities என்று சேர்த்துவிட்டார்களாம்.  இதை எதிர்த்து கும்பகோணத்துக்காரர்கள் நீதிமன்றத்துக்குப் போய் அந்த நுழைவை நீக்கச் செய்ததாக ஒரு கர்ண பரம்பரை உண்டு.  ரொம்ப காலமாகச் சொல்லி வருகிறார்கள்.  ஐயம்பேட்டையை நினைத்ததும் கும்பகோணம் நினைவுக்கு வந்தது.  

Tthamizth Tthenee Wed, Jan 27, 2010 at 7:38 AM
எந்த் ஊருக்கு பயணப்பட்டாலும்  வழியில்  நாம் கவனித்திருப்போம்

பாடி  ,,   குப்பம்,   டோல்கேட்,பாக்கம்,  குளம் , மலை   என்னும் பெய்ர்களைச் சேர்த்துக்கொண்டு பல ஊர்கள் இருக்கும்

ஒவ்வொன்றிர்க்கும்  ஒரு காரணப் பெயர் காரணமாக  அமைந்திருக்கும்
உதாரணம்     (ஐவர்பாடி,   சென்னீர்க்குப்பம்,  கேளம்பாக்கம்,  தல்லாகுளம்,  சின்னமலை,)

அது போல  ஐயம்பேட்டை  என்பதும்  ஒரு காரணப் பெயரே

இவை போன்ற  ஊர்களை  எடுத்து  அந்தந்த ஊர்களின்  பெயர்க் காரணங்கள் ஏற்பட்ட  விதங்களை  அலசலாம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

V, Dhivakar Wed, Jan 27, 2010 at 11:27 AM

இன்னாம்பூர்ல இத்தினி விஷயம் இக்குதா..
ரொம்ப டாங்ஸ்.. அட்த்தமுறை நானும் கண்டுக்கறேன்..
 
ஐராவதம் யானையும் ஈசனும் : இந்த சிவன் இருக்காரே,, இவர் நினைச்சா அந்த யானையை சின்னதாகச் செய்து அவரை உள்ளே அழைத்திருக்கலாம். ஆனாலும் பக்திக்காக தானே பெரிதாகி யானைக்கு அருளியது கூட நமக்குப் பாடம்தான். பக்தருக்கு எளியோன் (பத்துடை அடியவர்க்கு எளியவன்).
 
தி
____________________________
சித்திரத்துக்கு நன்றி: http://farm8.staticflickr.com/7112/7445494580_9abf014f59_m.jpg
இன்னம்பூரான்

No comments:

Post a Comment