எப்படி ஓடினரோ-6
‘ஓடிப்போறது = eloping: உடன்போக்கு = Eloping.‘ ஆங்கிலத்தில் பெரிய/சிறிய எழுத்துக்கள் குறிப்பால் உணர்த்த உதவுகின்றன. யார் கண்டார்கள்? ஒருகாலம், தமிழ் எழுத்துக்களும் அவ்வாறு திருத்தப்படலாம், போறப்போக்கைப் பார்த்தால்! இது நிற்க.
தற்காலம் ‘ஓடிப்போறது‘ அன்றாட செய்தி. யார், யார் கூட ஓட்றது என்பது விவஸ்தை இல்லாமல் போய்விட்டது என்று ஜூனியர் விகடன், அவள் ரிப்போர்ட்டர், தினத்தந்தி வகையறா மூலம் அறிகிறோம். மாற்றான் மனைவியையும், மாற்றாள் கணவனையும் இழுத்துக்கொண்டு... என்று தகவல்கள். ‘துறவிகளுக்கு‘ சுயம்வர தகுதி அதிகமாம். ஆறாங்க்ளாஸ் கிராமப்பொண்ணு கூட எஃப்.ஐ. ஆர். போடுது! ஆட்டோ ட் ரைவர்கள் ஆட்டோமாட்டிக்க காதல் வயப்பட்றோங்கோ. சுளுவா, ஒருவனை கழுவி, மற்றோருவனை தழுவுறாக. பாட்டியைக்கேட்டா, ‘கலி முத்திப்போச்சு’ங்க்றா. அவள் காலத்து கதையை எடுத்து விட்றா! பொக்கைவாயை திறந்து விஷமமா சிரிக்கிறா. எனக்கென்னமோ, இது அப்பீல் ஆகல்லை. விவஸ்தையும் இல்லை; சுவாரஸ்யமும் இல்லை. காமம் மிகுந்தால், மையல் பறந்து விடும். எனக்கு, ‘முக்கோல் பவர்களை‘ போல ஒரு திருப்தி. வனஜாவும், வனஜனும் ஓடவில்லை. உடன்போக்கினர். They Eloped. அது சங்கக்காலப்பண்பு. இதை விளக்க ‘முக்கோல் பவர்களிடம் செல்லவேண்டும்.
நம்பியகப்பொருளில், நாற்கவிராச நம்பி, நற்றிணை, குறும்தொகை, கலித்தொகை வழி நடந்து, தஞ்சை வாணன் யதேச்சையாக ஒத்து ஊத, ‘உடன்போக்கை’ ஆறு கிளவித்தொகைகளில், 18 விரிகளில், அத்துடன் உடன்பட்டு, விவரிக்கிறார். களவாணித்தனமா, காட்டிலும், பூந்தோட்டத்திலும் தலைவியை கூடி மகிழ்ந்த தலைவன், இரவில் வீட்டுக்கே வந்து விடுகிறான். அப்பெல்லாம் குழாயடி கிடையாது. ஊர்க்கேணி அருகிலே மகளிர் மன்றம் கூடி இவள் மேல் அலர் (பழி) தூவுவார்கள். தகப்பன் தடி எடுப்பானே, அண்ணன்மார் வாள்மறவர்கள் ஆச்சுதே என்று அஞ்சி, அன்னை அவளை இற்செறிப்பாள் (வீட்டில் சிறை), வேறு மணவாளன் தேடுவாள். ‘ஐயோ பாவம்’ என்று, பாங்கி, தலைவன் அவளை Elope செய்ய சூழ்ச்சி செய்வாள். அவள் கூற்று, தஞ்சை வாணன் கோவை 305 ல்
“ வெற்பா! ...எம் ஐயன்மார்...நீ கடல் சூழ்ந்த உலகத்தையே தந்தாலும் கொள்ளார்...இவளை நின் ஊருக்கு உடன்கொண்டு செல்வாயாக...வேறு வழியில்லை...”
அவன் கில்லாடியாச்சே. வழி முள்ளும் கல்லும் நிறைந்தது என்பான். பாங்கி அதி புத்திசாலி: “...நீர்க்கால் யாத்த நிரையிதழ்க் குவளை...இனியவாம் நும்மோடு வரினே..” (குறுந்தொகை -388) என்பாள். சென்னை தமிழில், ‘ நீ எதுக்கண்ணா இருக்கே’?. இங்கு தான் மென்மையான காட்சி. வழியிலே ‘கண்டோர்’ ‘இவ்விருவரும் புவியின் கண் உறையும் மானிடரோ? அல்லது விண்ணுலகின் கண் உறையும் தேவரோ’ என்று மாய்ந்த்து மாய்ந்து வியந்து போவார்களாம். அதாவது, உலகம் மையலின் எனிமி அல்ல. மையலின் மயங்குறவைக்கும் மையல் அவர்களை ஆட்க்கொள்ளும்.
செவிலியின் ஆற்றாமையை ஏற்கனவே கண்டோம். அவள் இப்போது தெய்வத்திடம் வேண்டுவது யாதெனில்:
“ஞாயிறு காயாது, மரநிழல் பட்டு,/....சுடர்வாய் காளையோடு/மடவரல் அரிவை போகிய சுரனே..” (குறுந்தொகை, 378)
பெருமானே! இவர்களுக்கு எல்லாமே இனியதாக அமையட்டும்.
இனிமேல் தான் ஆஸிட் டெஸ்ட். செவிலி முக்கோல் பவரை ( முக்கோலையும், கமண்டலத்தையும் ஏந்திய முனிவர்கள்) கண்டு வினவுகிறாள். அவர்கள் அருமை சாற்றினார்கள், இந்த உடன்போக்கு முறையானதே என்று! அதற்கு கலித்தொகைக்கு செல்ல வேண்டும்.
“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை/ மலையுள் பிறப்பினும் மலைக்கு அவை தான் என் செய்யும்?/ சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை/ நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை என் செய்யும்?/ ஏழ்புனர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை/ யாழுலே பிறப்பினும் யாழ்க்கு அவை தான் என் செய்யும்?/ சூழுங்கால் நும்மகள் நுமக்கு ஆங்கு அனையளே...”
ஒரு போடு போட்டார்கள். ‘பெண்ணை பெற்றால், அவளை கவர ஒருவன் வருவான்’ என்று.
நம் கதைக்கு திரும்புவோம்: இது ஓடிப்போனது அல்ல. இது உடன்போக்கு.
கதை மாந்தர்கள்:
தலைவி: வனஜா
தலைவன்: வனஜன்
அன்னை: விசாலம்
செவிலி: குப்புசாமி
முக்கோல் பவர்: கபூர், குப்தா, யான், மின் தமிழ் வாசகர்கள்
நன்றி, வணக்கம்
இன்னம்பூரான்
No comments:
Post a Comment